leader

சனநாயகவெளி : கூட்டமைப்பு பயன்படுத்துகின்றதா? பயப்படுத்துகின்றதா?

இந்தியப்பிரதமரின் இலங்கை விஜயம் எதிர்பார்த்ததை போலவே அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்தது. 27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைத்தீவுக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திரமோடியின் பயணம் பல்வேறு வகையில் முக்கியமானதாக அமைந்திருந்தது.

இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்து பிராந்திய வல்லரசு என்ற பெரியண்ணன் அந்தஸ்தை நிலைநிறுத்தவேண்டிய தேவை இந்தியாவுக்கு எப்போதுமே இருந்துவந்தது. பிராந்திய ஒத்துழைப்பு என ஆரம்பிக்கும் இந்த உறவுநிலை பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கே எப்போதும் முன்னுரிமை கொடுத்துவந்தது.

சிறிலங்காவைப் பொறுத்தவரை இந்தியாவை கையிற்குள் வைத்திருப்பதன் மூலமே சர்வதேசத்தை தனது கையிற்குள் கொண்டுவரலாம் என்பது தெரிந்தவிடயம். இந்தியாவின் கையை மீறி சர்வதேச வல்லாண்மை நாடுகள் ஒருங்கு சேர்ந்தாலும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை மட்டுமே செல்லமுடியும் என்பதற்கும் தற்போதைய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை கண்காணிப்புக்குழுவால் நடாத்தப்பட்டுவவரும் சிறிலங்கா மீதான விசாரணைக்குழுவின் செயற்பாடுகளை ஒப்பீடு செய்தால் புரிந்துகொள்ளமுடியும்.

எனவேதான் இந்தியப்பிரதமரின் இலங்கை வருகை முக்கியமானதாகும். இந்தியப்பிரதமரின் வருகையின்போது குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தாடலோ அல்லது அதற்கான தந்திரோபாய நகர்வுகளோ அன்றி வழமைபோலவே மௌனம் காத்து மோடி சொல்வதை கேட்டு பொறுமைகாக்க முடிவெடுத்துள்ளது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு.

இந்தியப்பிரதமர் வருகைக்கு முன்னரே பிரதமர் வரும்போது 13 ஆம் திருத்தச்சட்டத்திற்குள் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணசபை முறைமை என்பது போதுமானதல்ல. அதற்கு மாற்றான போதிய அதிகாரப்பகிர்வு கொண்ட ஒரு தீர்வு ஒன்றை முன்னெடுப்பதற்கான உந்துதலை செய்யுமாறு வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஷ்வரன் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் கூட்டமைப்பு எந்தவித கருத்துக்களையும் சொல்லியிருக்கவில்லை.

நரேந்திரமோடியோ புதிய மைத்திரி அரசாங்கத்தின் செயற்பாடுகளை வரவேற்பதாகவும் விரைவாகவும் முழுமையாகவும் 13வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி அதற்கு அப்பாலும் சென்று அதிகாரப்பகிர்வை செய்வதே நிலையான வளர்ச்சிக்கு உதவும் என தனது முதலாவது உரையிலேயே பதிவுசெய்திருந்தார்.

இதற்கும் மேலாக நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, தான் 13 ஆண்டுகள் மாநிலத்தின் முதல்வராக இருந்ததாகவும் ஒரு வருடமே பிரதமராக இருந்ததாகவும் மாநிலங்களுக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்கி “இணைப்பாட்சி” என்ற Cooperate Federalism ஊடாக நாடு நல்ல முன்னேற்றத்தை காணமுடியும் என குறிப்பிட்டார்.

இத்தகைய கருத்துக்கள் சிங்கள பேரினவாதிகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல.

இப்படி முக்கியமான பல விடயங்களை பதிவுசெய்த நரேந்திமோடி, யாழில் கூட்டமைப்பினரை சந்தித்திருந்தார். அங்கு கூட்டமைப்பினரை “பொறுமைகாக்குமாறு” கேட்டுக்கொண்டதாக கூட்டமைப்பினால் சொல்லப்படுகின்றது.

இது கூட்டமைப்பின் தலைமையின் விருப்பத்தை மற்றவர்களுக்கு மறைமுகமாக திணிக்கும் ஒரு உத்தியாக கருதுவதா? அல்லது உண்மையாகவே மௌனம் காக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்பது முக்கியமானது. ஏனெனில் கூட்டமைப்பின் ஊடான சந்திப்பின் முக்கிய விடயமாகவே அடக்கிவாசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவே கூட்டமைப்பால் சொல்லப்படுகின்றது.

எப்போதுமே மோடிக்கு அருகில் சம்பந்தர் இருப்பதும் மற்றயவர்கள் சாட்டுபோக்குக்கு அழைக்கப்பட்டவர்கள் போல தூரத்தேயிருந்து பெருமூச்சு விடுவதுதான் வழமையான இந்தியப்பிரதமரின் சந்திப்பு நடைமுறையாக இருந்துவருகின்றது.

எனவே சம்பந்தர் சொல்வதுதான் மோடி சொல்வதாக சொல்லப்படலாம்.

தற்போதுள்ள 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணசபை தீர்வுத்திட்டத்திற்கு பதிலாக, முழுமையான ஒரு அதிகாரப்பகிர்வை இந்தியாவும் சிறிலங்கா அரசும் வடக்கு-கிழக்கு மாகாண அரசுகளும் இணைந்துதான் தீர்வைக்காண முன்வரவேண்டும் என வடக்கு மாகாணமுதல்வர் விக்கினேஸ்வரன் நரேந்திரமோடியிடம் நேரடியாகவே வேண்டுகோள் விடுத்தார்.

13ம் திருத்தச் சட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவில்லை எனவும், இந்தியப் பிரதமரிடம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ் பொதுநூலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போதே வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்தச் சட்டம் இறுதித் தீர்வுத் திட்டமாக அமையாது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ளாது, மாகாணசபைமுறைமையும் 13 ஆம் திருத்த சட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு நின்றுவிடாமல் இனிமேல் தீர்வுத்திட்டம் தொடர்பில் இலங்கை – இந்திய மற்றும் இரு மாகாணசபை அரசாங்கங்களும் உள்வாங்கப்படவேண்டும் எனவும் விக்கினேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இப்போது கூட்டமைப்பின் உள்ளக பிரச்சனை வெளிக்குள் வரப்போகின்றது. அதாவது மாகாணசபை உட்பட்ட பிரச்சனைகளை மாகாணசபை உறுப்பினர்கள் கவனிக்கவேண்டும். தேசிய சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்பதே கூட்டமைப்பின் குறிப்பாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாகும்.

இறுதியாக நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் கூட்டத்திலும், இவ்விடயம் காரசாரமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிகின்றது. வடக்குமாகாண நாடாளுமன்ற ஆசனங்கள் குறையப்போகின்றது என்ற செய்தியுடன் கூடிய கலக்கத்துடனே, இவ்வாறான வேளைக்குமுந்திய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது வெள்ளிடைமலை.

இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை கொண்டுவந்த வடமாகாணசபையின் முதல்வரிடம் அடக்கிவாசிக்குமாறு கேட்டிருந்ததாக விக்கினேஸ்வரன் சொல்லவில்லை.

ஆனால் கூட்டமைப்பு சொல்கின்றது.

தற்போது உங்களுடன் இருப்பவர்களின் வாயை அடக்கிவைத்திருக்குமாறு சொன்னதாக இன்னொரு ஊடகம் சம்பந்தரின் நெருக்கமான தொடர்புகள் ஊடாக உறுதிப்படுத்துகிறது. அல்லது அப்படியான ஒரு செய்தியை மலரும் என விடுகின்றது.

அப்படியானால் தமிழ்த்தேசியத்தின் கூட்டமைப்பு உண்மையில் இப்போது என்ன செய்கின்றது? அதன் உண்மையான நோக்கம் என்ன? இருக்கின்ற சனநாயகவெளியை பயன்படுத்துகின்றதா அல்லது உறுதியுடன் முன்னேவருபவர்களை பயப்படுத்துகின்றதா?

– தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*