Modi

மோடியின் இலங்கைப் பயணம்: கேந்திர, அரசியல் பரிமாணங்கள்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம்தான் கொழும்பு அரசியலில் இன்றைய ‘ஹொட் ரொப்பிக்’. மோடியின் விஜயத்துக்கு முன்னோடியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த வாரம் கொழும்பு வந்து சென்றிருக்கின்றார். அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து சுஷ்மா பேசியிருக்கின்றார். கொழும்பில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகளை முழுமையாக நாடிபிடித்துப் பார்ப்பதுதான் சுஷ்மா மேற்கொண்ட இந்தப் பேச்சுக்களின் நோக்கம். மோடியின் காய்நகர்த்தல்களுக்கு அவை தேவைப்படும்.

மோடியின் வருகை தமிழர் தரப்பிலும் எதிர்பார்ப்புக்களை அதிகப்படுத்தியிருக்கின்றது என்பது உண்மை. இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு வருகைதருவது இதுதான் முதல்முறை என்பதும் அந்த நம்பிக்கைக்குக் காரணம். இலங்கையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் இயல்புநிலையை மீளக்கொண்டுவருவது, இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு விடயங்களில் மோடியின் வருகை அழுத்தத்தைக் கொடுக்கும் என தமிழர்கள் ‘வழமைபோல’வே நம்புகின்றார்கள்.  மோடியின் பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் அவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பு வந்திருந்தார். அவருடைய விஜயத்தின் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் இரு தரப்பு விஜயமாக இலங்கை வருவது இதுதான் முதல்முறை.  மன்மோகன் சிங் அவருடைய பதவிக்காலத்தில் இலங்கை வந்திருந்தாலும், அது சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட விஜயம்.

28 வருடங்களுக்கு முன்..

1987 இல் ராஜீவின் இலங்கை விஜயத்துக்கும் இப்போது 2015 இல் அதாவது 28 வருடங்களுக்குப் பின்னர் மோடி இலங்கை வருவதற்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. சில முரண்பாடுகளும் உள்ளன.  இந்த இரண்டிலுமே இந்தியா தன்னுடைய பிராந்திய கேந்திர நலன்களை மையப்படுத்தித்தான் காய்களை நகர்த்தியது. தமிழர்கள் அப்போதும் சரி இப்போதும் சரி பகடைக்காய்கள்தான்.

1980 களில் இலங்கையில் அதிகாரத்திலிருந்த ஜெயவர்த்ன அரசாங்கம் அமெரிக்க சார்புக் கொள்கையைப் பின்பற்றியது. Cold War எனப்படும் கெடுபிடி யுத்தம் உச்சத்திலிருந்து காலம் அது. உலகம் அமெரிக்கா – சோவியத் என இரண்டாகப் பிரிந்திருந்தது. இந்தியா சோவியத் பக்கத்திலிருந்தது. இலங்கை அரசு அமெரிக்க பக்கம் சாய்ந்திருந்தது.

04

இந்திய – இலங்கை ஒப்பந்தம்: ஜெயவர்தனவும் ராஜீவும் கைச்சாத்திடுகின்றனர் 1987

அமெரிக்காவின் நலன்களைப் பேணக்கூடிய வகையில் திருமலை சீனன்குடாவிலுள்ள எண்ணெய்க் குதங்கள் அமெரிக்கா சார்பான கம்பனி ஒன்றுக்கு ஜெயவர்த்தன அரசால் வழங்கப்பட்டது. புத்தளத்தில் வோய்ஸ் ஒப் அமெரிக்கா அஞ்சல் நிலையம் அமைக்க இடமளிக்கப்பட்டது. இது போன்றவை இந்தியாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன.

ஜெயவர்த்தனவை வழிக்குக் கொண்டுவர இந்தியாவுக்கு அப்போது கிடைத்த துரும்புச் சீட்டுதான் தமிழ்ப் போராளிகள். புவியியல் காரணங்களால் தமிழகத்தை தமது பின்தளமாகப் பயன்படுத்திய தமிழ்ப் போராளிகளை இந்தியா பயன்படுத்தியது. ஜெயவர்த்தனவை அடிபணியச் செய்தது. அதன் மூலமாக உருவானதுதான் இலங்கை – இந்திய உடன்படிக்கை. அதில் கைச்சாத்திடத்தான் ராஜீவ் காந்தி 1987 ஜூலையில் கொழும்பு வந்தார்.

இனநெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதுதான் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் நோக்கம் எனக் கூறப்பட்டது. ஆனால், அந்த உடன்படிக்கையில் தமிழர் ஒரு தரப்பாக இருக்கவில்லை. இந்தியா தன்னுடைய நலன்களுக்கு இசைவாக உடன்படிக்கையை உருவாக்கியது. ஜெயவர்த்தன அதிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவையும் புலிகளையும் மோதவிட்டர்.

இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனா

இப்போதும், அதேநிலைதான். கெடுபிடி யுத்தம் இப்போது இல்லை. பிராந்திய ரீதியான கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதுதான் இன்றைய சர்வதேச அரசியல். ஆசியாவில்,  குறிப்பாக தெற்காசியாவில் இந்தியாவும் சீனாவும் கேந்திர ரீதியான இராணுவப் போட்டியில் இறங்கியுள்ளன. பட்டுப்பாதைத் திட்டத்தின் மூலம் இந்தியாவை சுற்றிவளைப்பது சீனாவின் உபாயம். இதற்கு இலங்கைக் கடற்பகுதி சீனாவுக்கு அவசியமாகியது.

மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் இதற்கு தாராளமாக இடமளிக்கப்பட்டது. அம்பாந்தோட்டை முறைமுகம், நுரைச்சோலை அனல் மின் நிலையம் என்பன சீனாவிடம் கையளிக்கப்பட்டுவிட்டது. கொழும்பில் பாரியளவில் துறைமுக நகரம் ஒன்றை சீனா அமைக்கத் தொடங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி சீனாவின் நீர்மூழ்கிகள் கொழும்பில் வந்து தரித்து நின்றன. இலங்கைக்கொடியுடன் மீன்பிடிப்பதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவையனைத்தும் இந்தியாவின் கேந்திர நலன்களுக்கு ஆபத்தானது.

chinese_sumarine

இலங்கை வந்த சீன நீர்மூழ்கி

இது தொடர்பில் கொழும்புக்கு பல தடவை புதுடில்லியாவில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம் தொடர்பில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கோதாபாய ராஜபக்‌ஷவை டில்லிக்கு அழைத்த இந்திய அரசாங்கம் தமது கடுமையான ஆட்சேபனையை வெளிப்படுத்தியிருந்தது. ராஜபக்‌ஷ நிர்வாகம்  அதனைப் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில்தான் இலங்கையில் அட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் மேற்குலகின் திட்டத்தில் இந்தியாவும் இணைந்துகொண்டது. ராஜபக்‌ஷவை வீட்டுக்கு அனுப்பும் விடயத்தில் கொழும்பிலுள்ள இந்தியத் துதாரகம் பிரதான பங்கு வகித்தது இரகசியமானதல்ல.

புதிய அரசாங்கத்தை தமக்குச் சாதகமாக வைத்திருக்க வேண்டிய நிலையிலேயே மோடியின் இலங்கைப் பயணம் இடம்பெறுகின்றது. இந்தியாவுடனான உறவுகளுக்கு முன்னுரிமை என்பதை மைத்திரி அரசாங்கம் ஏற்கனவே வெளிப்படையாகச் சொல்லிவிட்டது. ஆனால், ராஜபக்‌ஷ காலத்தில் உருவாக்கப்பட்ட பொருளாதார ரீதியான உடன்படிக்கைகள் பலவற்றிலிருந்து சீனாவை வெளியேற்றுவது மைத்திரி அரசுக்கு இலகுவானதாக இல்லை. குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இது தற்போது இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், இதனைத் தொடர வேண்டும் என்பதற்கான அழுத்தங்களை சீனா தொடர்ந்தும் கொடுத்துவருகின்றது. இது போன்ற திட்டங்களைக் கைவிடுவது இலங்கைக்கு பொருளாதார ரீதியில் பாதகமானது.

3 நாடுகளில் 5 நாட்கள்

இந்தப் பின்னணியில்தான் பாரிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கான உதவிகளுடன் மோடி கொழும்பு வருகின்றார். சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை முற்றாக விடுவிப்பது அவருடைய நோக்கம்.

மோடியின் தற்போதைய விஜயத்தைப் பார்க்கும் போது ஒரு விடயம் தெளிவாகிறது. இந்து சமுத்திரத்திலுள்ள கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த தீவுகளை இலக்கு வைத்தே தன்னுடைய பணயத்தை செவ்வாய்கிழமை மோடி ஆரம்பித்தார். ஷெசெல்ஸ் தீவுகள், மொறீஷியஸ் அதனைத் தொடர்ந்து இலங்கை என்பதுதான் அவரது பயணத் திட்டம். இவை சிறிய நாடுகளாக இருந்தாலும், இந்தியாவின் கேந்திர நலன்களைப் பொறுத்தவரையில் முக்கியமானவை. இநதியாவைச் சுற்றிவளைக்கு சீனாவின் முத்துமாலைத் திட்டத்தில் இந்த மூன்று நாடுகளுடன் மாலைதீவும் முக்கியமானது. மாலைதீவில் இடம்பெறும் அரசியல் குழப்பங்களால் அந்த நாட்டுக்கான பயணத்தை மோடி ரத்துச் செய்திருக்கின்றார்.

3

சீன ஜனாதிபதி Xi Jinping 2014 செப்டம்பரில் இலங்கை வந்திருந்த போது முன்னாள் ஜனாதிபதியுடன் துறைமுக நகரத் திட்டத்தை பார்வையிடுகின்றார்

அரசியல், பொருளாதார ரீதியிலான உறவுகளை இந்த நாடுகளுடன் வலுப்படுத்திக் கொள்வது என்பதற்கு அப்பால், கடல்சார்ந்த பாதுகாப்பு உறவுகளை இந்த நாடுகளுடன் வலுப்படுத்திக் கொள்வதுதான் மோடி விஜயத்தின் முக்கிய நோக்கம். மூன்று நாடுகளுக்கான தன்னுடைய ஐந்து நாள் விஜயத்தில் அதிகளவு நேரத்தை இலங்கையில்தான் மோடி செலவிடப்போகின்றார். இதன்போது பல உடன்படிக்கைகள் கைச்சாத்தாகப்போகின்றன.

அமெரிக்காவின் பிடியிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்காக 1987 இல் ராஜீவ் காந்தி இலங்கை வந்தார். சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்பதற்காக மோடி இப்போது இலங்கை வருகிறார்.

தமிழர்களை திருப்திப்படுத்த..

இதன்போது தமிழகத்தைச் சமாளிப்பதற்காகவும், புலம்பெயர்ந்த தமிழர்களின் அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு, மீள்நல்லணக்கம் போன்ற விடயங்களையிட்டு இலங்கைத் தலைவர்களுடன் மோடி பேசுவார் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான். 13 ஆவது திருத்தத்தையும் அவர் வலியுறுத்தலாம். இதற்கு மேலாக இலங்கைத் தமிழர்களைத் திருப்திப்படுத்துவதற்காக வீடமைப்புத் திட்டம், ரயில் பாதை அமைப்பு போன்றவற்றை மோடி ஆரம்பித்துவைப்பார். இவற்றின் மூலம் இலங்கைத் தமிழர்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியா முற்படும்.

இனநெருக்கடியின் அடிப்படையில் மீண்டும் ஒரு போராட்டம் உருவாகுவதை இந்தியா விரும்பவில்லை. இந்து சமூத்திரப் பிராந்தியத்தை அமைதியாக மைத்திருப்பதன் மூலமாகவே தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என டில்லி கருதுகின்றது. இங்கு உருவாகக்கூடிய பிரச்சினை அல்லது போராட்டங்கள் வெளியாரின் தலையீடுகளுக்கு வழிவகுக்கும் என்பது இந்தியாவின் அச்சம். அதனைவிட ஈழத் தமிழர்களின் கொந்தளிப்பு தமிழகத்திலும் பிரதிபலிக்கும். இதனையும் டில்லி விரும்பவில்லை.

இலங்கையில் மீண்டும் தமிழ்த் தேசியவாதம் மேலோங்குவதைத் தடுக்க வேண்டுமானால் இரண்டு விடயங்கள் முக்கியம் என்பது இந்தியாவின் கணிப்பு.

ஒன்று: ஏற்கனவே இருக்கின்ற இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்குள் தீர்வைக் கொண்டுவர வேண்டும்.

இரண்டு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். அதன் மூலமாகவே கூட்டமைப்பை மீறி மற்றொரு சக்தி உருவாகுவதையோ செல்வாக்கைப் பெறுவதையோ தடுக்க முடியும். அதனால்தான், ஒற்றுமையைப் பலப்படுத்துங்கள் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு கடந்த வாரச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுரை கூறியிருந்தார்.

ஆக, மோடியின் வருகை இலங்கைத் தமிழர்களுக்குக் கொண்டுவரப்போவது எதனை?

– கொழும்பிலிருந்து தமிழ் லீடருக்காக ராஜயோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*