vithiyin carna jaalam

வித்தியாதரனின் வர்ணஜாலங்கள்!

ஒருமுறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“ சில வருசங்களுக்கு முதல் எங்கள இந்தியா அவசரமாகக் கூப்பிட்டிருந்தது. ஒரு நாளை குறித்து அந்த நாள் காலையில் சந்திக்கும் இடத்துக்கு வரச் சொல்லி அறிவித்திருந்தார்கள். நாங்களும் காலை 7 மணிக்கு அங்க போயிருந்தம். உள்ள போய் பார்த்தால் கூட்டம் நடக்கப்போற அறைக்குள்ள இருந்து காலம சாப்பாட்ட சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார், முன்னாள் உதயன் – சுடர்ஒளி பத்திரிகைகளின் ஆசியரிர் வித்தியாதரன். ஒரு மனுசன் காலம ஏழு மணிக்கு முதல் ஒரு இடத்தில போய் சாப்பிடுறதெண்டால் பாருங்கோ, இந்தியாவுக்கும் அவருக்குமான நெருக்கத்த. அங்கயே படுத்துக்கிடந்து அலுவல் பாக்கிறாரோ எண்டு எங்களுக்குள்ள கதைச்சி சிரிச்சம்”

இது கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் வித்தியாதரன் குறித்து தெரிவித்த கருத்து.

வித்தியாதரனையும் இந்தியாவையும் மையப்படுத்திய இன்னொரு ஆதாரத்தையும் குறிப்பிடலாம். 2009 இல் போர் முடிவுக்கு வந்த உடன், உதயன் – சுடர்ஒளி பத்திரிகைகளின் ஆசிரியப் பணியிலிருந்தும் விலக்கப்பட்டார் வித்தியாதரன். உடனடியாக அவர் இந்தியாவுக்கே சென்றுவிட்டார். அங்கு சென்றவுடன் அவர்செய்த முதல் வேலை என்னவெனில், தமிழில் வெளியாகின்ற பருவ இதழ்களைத் தொடர்புகொண்டு, வித்தியாதரனும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன், புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஆகியோருடன் நெருக்கமாக இருந்து உணவு உண்ணும் படங்களைக் கொடுத்து, அதற்கான கவர்ஸ்டோரியை அதாவது புலிகளுக்குப் பின்னர் தனக்கே தமிழர்க்கு தலைமைதாங்கும் அரசியல் தகுதி உண்டென்பதையும், அதனை இவர் புலிகளுடன் உணவுண்டபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன என்றும் எழுதும் படிகேட்டுக்கொண்டார். முன்னணி இதழ்கள் இவரின் வேண்டுதலை நிராகரிக்கவே சிக்கினார் நடிகர் சரத்குமார். சரத்குமார் அப்போதுதான் ஒரு வாரப் பத்திரிகையை ஆரம்பித்திருந்தார். அதன் வியாபாரத்திற்கு ஈழப் பிரச்சினைகள் தேவைப்பட்டன. இப்படியொரு அருமையான வியாபாரப் படங்கள் கிடைத்ததும் குறித்த பத்திரிகை பயன்படுத்திக்கொண்டது. அதன் ஆசிரியர் குழுமம் வித்தியாதரனுக்கு நெருக்கமானவர்களாக இருந்தமையால் அடுத்த தேசியத் தலைவர், ஈழ மக்களின் அரசியல் மீட்பர் வித்தியாதரன் தான் என்ற அளவில் பரபரப்புக் கதையொன்றை எழுதித் தள்ளினார்கள்.

இதே பரப்புக் கதைக்கு இப்போதுதான் – 2015இல் தான் உயிர் கொடுத்து அரங்கிற்கு கொண்டு வந்திருக்கிறார் வித்தியாதரன். அதற்காகவே திட்டமிட்டு சில முன்னெடுப்புக்களையும், தாயக, புலம்பெயர் தேசங்களில் முன்னெடுத்து வருகிறார்.

நேர்மைமிக்க ஊடகவியலாளரா வித்தியாதரன்?

அவர் ஒருபோதும், நேர்மைத் தன்மையுடன் ஊடகப்பரப்பில் இயங்கியிருக்கவில்லை என்பதற்கு அவர் எழுதிய சுயவரலாறான “என் எழுத்தாயுதமே” தக்க சான்று. அதில் பாடப்பட்ட சுயபுராணத்தை தெளிவாக வாசிக்கின்றவர்களுக்கு ஒன்று புரியும், இவர் ஒரே நேரத்தில் கிளிநொச்சியுடனும் பேசியிருக்கிறார்- உணவுண்டிருக்கிறார், பலாலியிலும் கூடிக்குழாவியிருக்கிறார், கொழும்பிலும் கட்டித்தழுவியிருக்கிறார். நீண்டகால திட்டமிடலின்படி இவர்கள் (மைத்துனனான சரவணபவன்) இயங்குவதை புலிகளின் முக்கியஸ்தர்கள் பலதடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இறுதிப் போர் வேளையில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசனை எந்தக் காரியங்களும் செய்யவிடாது தொடர்ச்சியாக அழைப்பெடுத்து, “அடுத்தென்ன திட்டம்..அடுத்தென்ன திட்டம்” என்று வதைத்துக்கொண்டிருந்தவர் வித்தியாதரன். அந்த நேரத்தில் புலிகளின் களமுனை தளபதிகளுக்கே தெரியாதிருந்த திட்டத்தை இவர் அறிந்து என்ன செய்யப்போகிறார், இந்தியாவுக்கு கொடுக்கத்தான் வித்தி இப்படி வதைக்கிறார் என்று வன்னியில் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னரும் விடுதலைப் புலிகள் வித்தி – சரா கொம்பனியை ஒரு எல்லைக்குள்ளேயே வைத்திருந்தனர். 2002 ஆம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பை புலிகள் உருவாக்கி 22 பாரளுமன்ற உறுப்பினர்களை நடாளுமன்றம் அனுப்புவதற்கா தேர்தலை எதிர்கொண்ட போது, வித்தி – சரா கொம்பனியும் தமக்கும் ஆசனம் வேண்டும் எனக் கேட்டிருந்தது. இவர்களின் தேசிய தந்திரத்தை நீண்டகாலமாகவே அவதானித்திருந்த புலிகள் உடனடியாகவே மறுத்துவிட்டனர். எனவே புலிகளாலேயே ஒரு எல்லைக்குள் வைத்து பார்க்கப்பட்ட ஒருவர், புலிகளுக்குப் பின்னர், அந்தப் போராளிகளை தலைமை தாங்கும் தகுதி தனக்கே உண்டு என்று சொல்வதும், அதைவைத்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடத் தொடங்குவதும் எவ்வளவு தூரம் நேர்மையானது?

இவ்விடத்தில் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடவேண்டும். 2002 ஆம் ஆண்டில் ரணில் – விடுதலைப் புலிகளால் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இலங்கை அரசு- புலிகள் – நோர்வேதரப்புகளுக்கிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனவே நம்பத்தகுந்த வகையில் தகவல் கடத்துவதற்கு ஒரு தரப்பு தேவைப்பட்டது. அதற்கு பொருத்தமானவர்களான வித்தி- சரா கொம்பனி தெரிவானார்கள். காரணம், அரசியல் சாராத நடுநிலை ஊடகம் ( அப்போது) ஒன்றை சார்ந்தவர்கள் என்ற வகையில் இந்த இடத்தைக் கொடுத்தனர். அதன்படி இயங்கிய வித்தி- சரா கொம்பனி கொழும்பில் கொடுக்கப்படும் தகவல்களை சரியான வகையில் புலிகளிடம் தெரிவிப்பதில்லை. தெரிவித்தாலும், ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து பிரச்சினையை இன்னும் பூதாகரமாக்கும் வகையில் செய்திகளை தெரிவித்தார்கள். இதுவும் புலிகள் உடனடியாக போர் ஒன்றுக்கு செல்வதற்கு வித்திட்ட காரணிகளுல் ஒன்று. இப்படியாக இன்றைய முன்னாள் போராளிகளின் அவலங்களுக்கும், விழுப்புண்பட்ட போராளிகளின் வாழ்க்கை சீரழிவுக்கும், இறுதிப் போரில் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்களுக்கும் முழுத் துரோகம் செய்த ஒருவர் அவர்களுக்காக கட்சி தொடங்குகிறேன் என்பதும், அதனை செய்யவேண்டிய முழுத்தகுதியும் தனக்கே உண்டு என்று சொல்வதும் எந்த வகையான அறம்?

உண்மையில் ஊடகவியலாளன் என்பவன் யார்?

மக்களுக்கு நெருக்கமாக இருந்து அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை பெற்றுக்கொடுப்பவனும், ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக பேனாமுனையில் போராடும் போராளியுமாகவே ஓர் ஊடகவியலாளன் இருப்பான். ஆனால் வித்தியாதரனைப் பொறுத்தவரையிலும் இதற்கு நேர் மாறானவிதமாக இருக்கிறது. உதயன் நிறுவனத்தில் சாதாரண வாகன ஓட்டுநராக பணி புரிந்தவரே சுட்டுக்கொல்லப்பட இலங்கை அரசுக்கு எதிரான செய்திகள் வெளிவர காரணமாக இருந்த, அதனை பத்திரிகையில்வெளியிடுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட வித்தியாதரனுக்கு மட்டும் எந்த வில்லங்கங்களும் வந்ததில்லை. 2009இல் கைதுசெய்யப்பட்டமை கூட பத்திரிகையில் எழுதியமைக்காக அல்ல, புலிகளின் விமானப்படை கொழும்பில் குண்டு போடுவதற்கு திட்டங்களை வழங்கினார் என்ற சந்தேகத்தின்பெயரிலேயே விசாரிக்கப்பட்டார். உதயனை விட்டு வெளியேறியபின்னரும் சுதந்திரமாக திரிந்தார். உண்மையில் அச்சுறுத்தல் மிகுந்த ஊடகவியலாளர்களைப் போல எந்த நாட்டுக்கும் தஞ்சம் கோரவில்லை. தனக்கு கீழ் பணியாற்றிய சக ஊழியர்களைச் சுட்டுக்கொல்ல காரணமாகயிருந்த டக்ளஸ் தேவானந்தாவை சிறப்பு விருந்தினராகக் கூப்பிட்டு தன் சொந்த இணையதளத்தை திறந்துவைத்தார் வித்தி. இவ்வாறாக தன் தொழிலுக்கும், மக்களுக்கும் விசுவாசமில்லாது, முழு எழுத்தையும், தன் சுயநலத்துக்காக மட்டுமே பயன்படுத்திய ஒரு ஊடகவியலாளரால், இரத்தமும், சதையும் கலந்த ஈழ ஊடக வரலாற்றில் கறை விழுந்துள்ளது. இனியும் ஒரு ஊடகவியலாளர் மக்களுக்காக குரல்கொடுக்கவோ, உண்மைகளை வெளிக்கொணரவோ மக்களிடம் செல்லமுடியாத நிலையை வித்தி உருவாக்கியிருக்கிறார். இனி மக்களிடம் செல்லும் எந்த ஊடகவியலாளனையும் வித்தியை உதாரணப்படுத்தியே மக்கள் பார்ப்பார்கள், அடையாளம் காண்பார்கள்.

இதனைவிட வித்தியாதரனின் சாதாரண மனிதத் தன்மையைக் கடந்த மிகக் கேவலமான உள்ளம் படைத்த குணத்தை வெளிப்படுத்தியது அண்மையில் அவர் தொடங்கி வைத்த அமைப்பு.. தனது சுயநல அரசியலுக்காக அரசியல் கைதிகளின் உறவினர்களை வைத்து ஒரு அமைப்பு தொடங்கியிருந்தார் வித்தியாதரன். உண்மையில் தமது பிள்ளைகளுக்காக பல ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் அலைந்து திரிந்த உறவுகளை வைத்து ‘தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர் ஒன்றியம் – வடமாகாணம்” என்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கினார். தமது பிள்ளைகள் வருகைக்காகக் காத்திருக்கும் பெற்றோரும் உறவுகளும் அங்கலாய்ப்புடன் வித்தியாதரனைச் சந்தித்து அவரின் ஏமாற்றுச் சதிக்குள் சிக்கிய பரிதாபத்தை எந்த வகைக்குள் உட்படுத்தி அவர்களை ஆறுதல்ப்படுத்திக் கொள்வது?

வித்தியாதரனைப் போன்ற ஒரு தவறான அரசியல் கூலி ஈழத் தமிழர்களுக்குத் தேவையா? தமிழர்கள் சிந்திக்க வேண்டிய தருணமிது.

தமிழ்லீடருக்காக அஞ்சலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*