leader

“நெஞ்சில் நிலைத்த உயிரோவியங்கள்” – தமிழ்லீடர் ஆசியர்பீடம்

‘நவம்பர் – 27′

ஒப்பற்ற தியாகங்களாலும் ஈடிணையற்ற அர்ப்பணிப்புக்களாலும் ஒளியேற்றப்பட்ட உன்னதத் திருநாள்; தாயக விடுதலை என்ற விலைமதிக்க முடியாத இலக்கை எட்டுவதற்காகத் தமது உயிரையே விலையாகத் தந்து எமது மக்களின் மனங்களில் நிலைபெற்றுவிட்ட உத்தமர்களை நினைவு கூரும் அற்புதத் திருநாள்;

மனித வாழ்வில் சாவென்பது இயற்கையானது. அந்த வாழ்வை மக்களுக்கான வாழ்வாக வாழ்வது, அந்தச் சாவை மக்களுக்காகவே சாவது என்பது வரலாறே தலைவணங்கும் ஒரு உயரிய வேள்வியாகும். அந்த வேள்வியில் தாமாகவே விரும்பிக் குதித்து விடுதலைச் சக்கரத்தை முன் தள்ளும் பணியில் தம்மை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள்.

மாவீரர்களின் தியாகம் என்பது அவர்களின் வீரச்சாவுடன் மட்டுப்படுத்தப்படுவதல்ல. அவர்களின் வாழ்வு கூட வியர்வையாலும் கண்ணீராலும் சாதாரண மனித சக்தியை விட உயர்ந்த உழைப்பாலும் புடம்போடப்பட்டது தான். பசி அவர்களை பாதையைத் தடை செய்ததில்லை. தூக்கமின்மை அவர்கள் வேகத்தைத் துவண்டுவிட வைத்ததில்லை. மழையும் பனியும் வெயிலும் சோர்வடைய வைக்க முடியவில்லை. கட்டாந்தரையில் படுத்துறங்கினார்கள்; கல்லிலும் முள்ளிலும் நடந்தார்கள். கலங்கிக்கிடந்த சேற்று நீரைப் பருகித் தாகம் தீர்த்தார்கள்.
கொட்டப்படும் விமானக் குண்டுகள் மத்தியலும், சீறிவரும் எறிகணைகள் மத்தியிலும் பாய்ந்துவந்த துப்பாக்கி ரவைகள் மத்தியிலும், டாங்கிகளும் கவசவாகனங்களும் பொழியும் நெருப்பு மழையின் மத்தியிலும் விடுதலை என்ற உன்னத இலட்சியத்தை சிரமேற்றி நிமிர்ந்த நெஞ்சுடனும், தளராத உறுதியுடனும் நடந்தவர்கள்.

எமது மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தமது வாழ்வையும் சாவையும் அர்ப்பணித்த அந்த மகத்தான பிறவிகளை இன்று நாம் நெஞ்சில் நிலைநிறுத்தி, எங்கும் சுடரேற்றி அஞ்சலிக்கிறோம்.

ஆட்சியாளர்களாலும் அவர்களின் அடிவருடிகளாலும் நாம் எமது மாவீரர்களை விளக்கேற்றி அஞ்சலிக்க விடாமல் பல முனைகளிலும் தடைகளை விதிக்கின்றனர். வீதியெங்கும் துப்பாக்கி எந்திப் படையினர் விளக்கேற்றுபவர்கள் மேல் பாயக் காத்து நிற்கின்றனர். வீதிகளில் ரோந்து செல்லும் இராணுவத்தினர் எங்கள் ஆலய மணிகளை ஒலிக்கவிடாமல் தடுக்க வெறிகொண்டு அலைகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மூடி அங்கு மாவீரர் சுடர் ஏறிவிடாதபடியான நிலையை உருவாக்குகின்றனர்.

கடந்தகாலங்களிலும் இப்படிப் பல தடைகள் போடப்பட்டன. வேட்டை நாய்களாக இராணுவம் எங்கும் குவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் –

அஞ்சலிகள் இடம்பெறத்தான் செய்தன; சுடர்கள் எரியத்தான் செய்தன; மணிகள் ஒலிக்கத்தான் செய்தன;

நவம்பர் 27 மாலை ஆறுமணிக்கு எங்கும் பரவிய மாவீரர் நினைவுகளையும், மகத்தான அஞ்சலிகளையும் எவ்வழிகளிலும் தடுக்க முடியவில்லை.

ஏனெனில் உதிரம் சிந்தி உயிர்க்கொடை தந்த மாவீரர்கள் எமது மக்களின் உதிரத்தில் பிரிக்க முடியாதவாறு கரைந்துவிட்டவர்கள். எமது குருதியின் ஒவ்வொரு துளியும் எமது இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் மாவீரர் நினைவாகப் புடம்போடப்பட்டவை. அவர்கள் ஏந்திய இலட்சியத் தடத்தில் எம்மை வழிபிரிக்காது அழைத்துச் செல்பவை.

எமது ஒவ்வொரு துளி இரத்தத்திலும் சுடரேற்றி எமது ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் மணி ஒலிக்கிறது; நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அந்த விடுதலை வேட்கை தடம் பதிக்கிறது.

நாம் எமது மாவீரர்களை உளமார எந்தத் தடைகளையும் உடைத்தெறிந்து அஞ்சலிக்கிறோம்; இன்றும், என்றும் இதய சுத்தியுடன், மலர் தூவி அஞ்சலிக்கிறோம்.

– தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*