leader

‘வித் யூ வித்தவுட் யூ’ – தமிழகத்து ஈழ உணர்வுகளைச் சிதைக்கும் முயற்சியா?!

தமிழக மாற்று இரசனை உலகம் கொதிப்படைந்திருக்கிறது. வழமையாக தமிழகத்துக்குள்ளேயே இருந்துவருகின்ற சினிமா, எழுத்து போன்றவற்றை வைத்து எழுப்பிக்கொள்ளும் சர்ச்சைகளை இந்தச் சம்பவம் முறியடித்துள்ளது. முதன் முதலாக பிறநாட்டு படைப்பு ஒன்றின் மீதான சர்ச்சையை தமிழகமும் தமிழக ஊடகங்களும் எதிர்கொண்டுள்ளன. அதுவும் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நூற்றாண்டுக்கணக்கான எதிரியாகவிருந்த ஒருவரின் படைப்பை வைத்து இந்த சர்ச்சை எழுச்சி நிகழ்ந்துள்ளது.

இதனை தொடக்கிவைத்தவர் ‘தமிழ்ஸ்ரூடியோ அருண்’. இவ்விடத்தில் அருண் பற்றிய சிறு அறிமுகத்தையும் எமது ஊடகம் சார்பாக எம் வாசகர்களுக்கு தரவேண்டியிருக்கிறது,

தமிழகத்தில் நல்ல சினிமா, மாற்று ஊடகம், இலக்கியம், இயற்கை மற்றும் விவசாயம் என பல துறைகளிலும் ஆளுமை பெற்றுவிளங்குபவர் அருண். இதில் ஒவ்வொரு துறைக்காகவும் பலதரப்பட்ட விமர்சனங்களையும் வசைவுகளையும் தாண்டி தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருப்பவர். ஆனாலும் குறித்த படத்தினை கையிலெடுத்தன் மூலம் சிக்கலுக்குள் தன்னை மாட்டிக்கொண்டிருக்கிறார்.

படம்குறித்து, ஈழத்தவர்களாகிய எமக்கு பல்வேறு விமர்சனங்கள் உண்டு. நாம், வெறும் தமிழக – அமெரிக்க சண்டைப்படங்களை மட்டும் பார்த்து இரசனைக் குட்டிச்சுவர்களானவர்கள் அல்லர். சிங்கள சினிமா குறித்தும் அதன் போக்குக் குறித்தும் ஆழமாகவே தெரிந்தவர்கள். எமக்கு தமிழகத்தைவிட சிங்களம் தான் அருகிலிருக்கின்றது. எனவே சிங்களவர்களின் நாடித்துடிப்பை அதிகம் அறிந்தவர்கள் நாம். அதிலும் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னரான சிங்களவர்களின் நாடித்துடிப்பின் சத்தம் இப்போதும் எங்களுக்கு கேட்டுக்கொண்டேயிருக்கின்றது. ராஜபக்ஷ ஆட்சிலேறும்வரைக்கும் தம்மை இடதுசாரிகளாகவும் தமிழ் மக்கள் மீது ஆழமான கரிசனை உள்ளவர்களாகவும் காட்டிக்கொண்ட வாசுதேவ நாணயக்கார, டி.யு.குணசேகர போன்ற இடதுசாரிகளின் இன்றைய இனவாதப் போக்கை உலகம் நன்கறியும். தமிழக இடதுசாரிகளும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஏதோ ஒரு வகையில் சிங்களவர்கள் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஒருமயப்பட்டிருக்கிறார்கள். அதாவது ‘நான் சிங்களவன்’ எனக்கு இந்த நாடுசொந்தம். நான் மட்டுமே ஆளப்பிறந்தவன். என்ற சிந்தனை ஆழமாகவே புதைந்திருக்கின்றது.

ஆனால், சிங்கள கலையிலக்கிய படைப்புலகில் இயங்கும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் தமிழருக்கு இருக்கின்ற பிரச்சினைகளை வேறுவிதமாகவே அணுகத்தொடங்கியிருக்கின்றனர். எல்லாப் புரட்சித் தோல்விகளுக்குப் பின்னரும் பெரும் பேசுபொருளாக மாறும் உள்ளக ஜனநாயக மீறல்கள், மனித உரிமைகள், மனித நேயம், ஒற்றுமை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவற்றை முதன்மைப்படுத்தி படைப்புக்களை உருவாக்குவது பொதுத் தன்மையாகும். அதுவே தான் இதுவும். தம்மை, இடதுசாரிகளாகவும் நடுநிலைவாதிகளாகவும் காட்டிக்கொள்ளும் இவர்கள் 2009இல் போர் உக்கிரம் பெற்றிருந்த வேளையிலும் அதற்கு முன்னரான ஆட்சியாளர்களின் காலத்தில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட காலத்திலும் படைப்புலகைவிட்டு எங்கே போயிருந்தார்கள்? அமைப்பு சார்ந்து இயங்கிய அதிகார சக்திகளுக்கு துதிபாடிக்கொண்டிருந்தவர்களும் பதவிகளை அனுபவித்தவர்களுமே இன்றைய இடதுசாரிகள். இவர்கள்தான் இராஜபக்சக்களின் நிழலிலிருந்துகொண்டு போருக்குப் பின்னரான ஈழம் குறித்து பேசத் தொடங்கியிருக்கின்றனர். இதில் தமிழ், சிங்களவர் என்ற விதிவிலக்கெல்லாம் இல்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல ‘நான் சிங்களவன்’ என்ற மமதை அற்றவர்களை இலங்கையின் தெற்கை நேரில் தரிசிக்கும் ஒவ்வொருவரும் அனுபவிக்க முடியும்.

இனி, படத்துக்கு வரலாம்,

வித்யு வித்தவுட் யு குறித்து போதியளவு இணையத்தளங்களும் சமூக வலைத்தளங்களும் தத்தமது கருத்துக்களை பதிவிட்டுவிட்டன. ஆகவே படத்தின் கதை சகலருக்கும் தெரிந்த விடயம் தான். படத்தின் பின்னால் இருக்கும் அரசியலை பார்க்கலாம்,

ஈழம் சாம்பலாக்கப்பட்ட பின், இராஜபக்ஷ கொம்பனியினருக்கு தமிழர் தரப்பிலிருந்து அதிக எதிர்ப்புத் தரும் திசைகள் என்ற இரு பக்கங்கள்தான் உண்டு. ஒன்று புலம்பெயர் தளம். மற்றொன்று தமிழகம். புலம்பெயர் தளம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இராஜபக்சவினரது புலனாய்வு அணிகள் எட்டுத்திக்கும் பரந்து, தமிழர் இயக்கங்களை சிதைத்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரத்தெட்டுக் கிளைகளும் அமைப்புக்களும் ஈழப்போராட்டத்தை சிதைவின் உச்சத்துக்கே கொண்டுவந்துவிட்டன. விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஒழுங்காக இருப்பது தமிழகம் மட்டுமே. தமிழக மக்கள் அனைவருமே சாதி, மத வேறுபாடு கடந்து ஒன்றுகூடும் ஒரே ஒரு விடயமெனில் ஈழப்பிரச்சினை மட்டும் தான். அத்துடன், ஜெயலலிதாவும் இலங்கைக்கு பெரியதொரு சவால். ஜெயலலிதாவின் அனுசரணையில் அல்லது கவனிக்காத போக்கினால் எழுச்சி கொள்ளும் இளைஞர் அணியையும் மாணவர் அணியையும் பார்த்து ராஜபக்ஷ குடும்பத்தினர் கிலி கொண்டிருக்கின்றனர். ஆகவே தமிழகத்தை இந்த உணர்விலிருந்து திசைதிருப்ப ஒரு வழி அவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதற்கு கிடைத்த இலகுவான ஒரு சரக்குத் தான் சினிமா. தமிழக மக்கள் அதிகம் ஆட்படுவது சினிமாவில் தான். ஆகவே, ஈழம் தொடர்பிலும் சிங்களவர் தொடர்பிலும் தமிழகத்தினர் கொண்டிருக்கின்ற எண்ணத்தை முற்றாகத் திசை திருப்ப சினிமாவை ஒரு ஆயுதமாகவே எடுத்திருக்கிறது ராஜபக்ஷ அணி.

இதற்கு நாம் வலுவான சான்றுகளை முன்வைக்க முடியும்,

கடந்த ஆண்டு, ‘மெட்ராஸ் கபே’ ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு கொச்சைபடுத்தும் நோக்குடனும், ராஜிவ் காந்தி கொலையை மீள நினைவுபடுத்தி தமிழக இளைஞர்கள் மத்தியில் உருவாகியிருந்த ஈழ ஆதரவு எழுச்சியை சிதைக்கும் நோக்குடனும் வெளியாகியிருந்தது. தமிழர்களின் விழிப்புணர்வினால் அது சாத்தியமற்றுப் போனது. உடனடியாகவே மலையாள தேசத்திலிருந்து வந்தது அடுத்த படம் ‘இனம்’ தமிழர்களின் கதையைச் சொல்வதாக புறப்பட்ட மலையாளி சந்தோஷ் சிவம், முழுக்க முழுக்க சிங்கள இராணுவத்துக்கு வக்காளத்து வாங்கி சிங்கள இராணுவம் மீது நற்பெயரை ஏற்படுத்த முயற்சித்தார். லிங்குசாமிக்கு தமிழகத்தில் விழுந்த அடியினால் அதுவும் எடுபடவில்லை. இந்த மூன்று படங்களின் தயாரிப்புப் பின்னணியில் சிங்களப் பேரினவாத சக்திகளின் ஆதரவு இருப்பதை பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இப்போது நேரடியாகவே தமிழகத்துக்குள் வந்திருக்கின்றது இராஜபக்ஷ அணி. அதுவும் அரசியல், எதிர்கால முதல்வர் என்று அதிகம் கனவு காணும் அதேவேளை ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்து வந்த இளைய தளபதியையே விலைக்கு வாங்கியிருக்கிறது இராஜபக்ஷவின் நேரடிப் பங்களிப்பில் இயங்கும் தயாரிப்பு நிறுவனம். ஆகவே தமிழ் சினிமாவின் உச்சமான நடிகர்களையும் இயக்குநர்களையும் வைத்து சினிமாவின் ஊடாக ஈழப்போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களை விதைக்கவும் தமிழக உணர்வுகளைச் சிதைக்கவும் ராஜபக்ஷ அணியினர் களத்தில் இறங்கிவிட்டனர். அடுத்து சூரியாவையோ, அஜித்தையோ, கமலகாசனையோ, ரஜினியையோ வைத்து ராஜபக்ஷ படம் தயாரிக்க முயற்சிக்கலாம். அதில் வெற்றியும் காணலாம்.

இந்த இடத்தில், சம நேரத்தில் தமிழகத்தில் படைப்பாளர்கள், மாற்றுச் சிந்தனையாளர்கள் அதன் பின்னணியில் இயங்கும் ஊடகவியலாளர்களையும் சிங்களவர் பக்கம் இழுக்கவேண்டிய தேவை சிங்கள அரசுக்கு உண்டு. ஏனெனில் இந்தத் தரப்பினரைத் தம் பக்கம் ஈர்ப்பதன் மூலமே தமிழகத்தின் கருத்தியல் தளத்தில் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும். அதற்கான ஒரு துருப்புச் சீட்டுத்தான் பிரசன்ன விதானகேயும், அவரின் வித் யூ வித் அவுட் யூ வும்.

இந்தப் படத்தினை தமிழகத்தில் வெளியிடத் துணை நின்றவர்களைப் பார்த்தால், அவர்களின் பின்னணி குறித்து ஆழமாக விசாரித்தால் இதற்குப் பின் ஒழிந்திருக்கின் ராஜபக்சவினரின் அரசியல் தெரியவரும். லீணா மணிமேகலை, வ.ஐ.ச. ஜெயபாலன் இருவரும் யார்?

கெமராவுடன் வெளியே உலவுவதே ஆபத்தானதாக மாறும் இலங்கைக்கு முழுச் சுதந்திரத்துடன் வந்து ஆவணப்படம் (அதுவும் காணாமல்போனோர் குறித்து) எடுத்துப் போகும் வாய்ப்பை வாங்கியவர் லீணா மணிமேகலை. லீணா இலங்கைக்கு வந்ததற்கு சமகாலத்தில் தமிழகத்திலிருந்து வந்த ஊடகவியலாளரான தமிழ் பிரபாகரனுக்கு நேர்ந்த நிலமைகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். பிரபாகரன் காவலரணுக்கு அருகான காணியைப் படம் புகைப்படம் பிடித்தமைக்காகவே கைது செய்யப்பட்டார். சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டார். ஆனால் யாருக்கும் தெரியாமல் ஒரு அணியாகவே இலங்கை வந்து, (இரணைப்பாலை ) போர் இறுதியாய் நடைபெற்ற பகுதி தொடக்கம் ராஜபக்சவின் ஊர் வரைக்கும் வீடியோ பதிவு செய்யுமளவுக்கு சுதந்திரத்தை அனுபவித்தவரெனில் அவருக்குள்ள ராஜபக்சவினரின் செல்வாக்கை புரிந்துகொள்ள முடியாதா? ஆவரின் ஆவணப்படத்தில் நேரடியாகத் தோன்றி சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்பு குறித்து இதுவரை ஏதாவது யோசித்திருப்பாரா லீணா? அதில் தோன்றியவர்களின் எதிர்காலம் குறித்து என்ன உத்தரவாதத்தை இவரால் தரமுடியும். ஆந்த உயிர்கள் கடத்தப்பட்டு காணாமல்போனாலோ, சுடப்பட்டாலோ அதற்கான முழுப்பொறுப்பையும் லீனா ஏற்கவேண்டும்.

கேட்பவர் எல்லாம் கேணயர் என்றால் கேள்வரகில் நெய்வடியும் கதையாக அவர் விடும் அறிக்கைகளை அப்படியே நம்பிவிட தமிழகத்தில் இருக்கும் படைப்புலகக் கூட்டம் இந்தத் திரையிடலையும் அப்படியே ஏற்றிருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியலைப் பற்றி அருண் கூட யோசித்திருக்கவில்லை. பிரசன்ன விதானகே கேட்டவுடன் சடுதியாகவே தயார்படுத்;தியதாக எழுதுகிறார. சினிமாவை சினிமாவாக அரசியலின்றி பார்க்க வேண்டுமென்கிறார். முழுக்க முழுக்க போருக்குப் பின்னர் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் சிங்கள உளவியல் ஆதிக்கத்தை நியாயப்படுத்தும் படத்தை எப்படி அரசியலின்றி பார்க்க முடியும்? சினிமாவாக, கலையாக, படத்தில் காட்டப்படும் மலையகத்தின் அழகையும், ஜன்னலையும் மட்டுமே ரசிக்க முடியும். கதையை அல்ல. கதையில் நாம் அழிக்கப்படுவதை நியாயப்படுத்தி, இனக்கலப்புக்குள்ளாவதை அங்கீகரித்திருக்கிறார் பிரசன்ன விதானகே.

அதற்கு வக்காளத்து வாங்குபவர் நோர்வே வாசியான வ.ஐ.ச. ஜெயபாலன். ஈழத்தை வைத்து அடையாளம் தேடியது போதாதா? ஈழத்தை பிரதிபலிக்கும் ஒரு படைப்பாளர் என்ற நிலையைக் கடந்து அடுத்த கட்டத்துக்குச் சென்றதன் நோக்கம் என்ன?  ஏன் எங்களை விற்கவும், அழிக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கொண்டு தடுமாறுகிறார் ஜெயபாலன். புலிகள் இருக்கும் வரைக்கும், 2009 இல் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போதும் தமிழகத்தில் நடந்த எந்த எதிர்ப்பு போராட்டங்களிலும் ஜெயபாலன் கலந்துகொண்டீர்களா? இப்போது மட்டும் எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது இந்த இனவுணர்வு? இந்த நரித்தனங்களை கைவிட்டு, தமிழகத்தில் பிழைப்பதற்கு வழியை சரியாய் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இவ்விடத்தில் இன்னுமொரு கேள்வியையும் முன்வைக்க வேண்டும். இதே மாதிரியான ஒரு படத்தை எல்லா எல்லைகளையும் கடந்து இலங்கையில் தமிழர் ஒருவரால் எடுக்க முடியுமா? ஆதற்கான படைப்பு சுதந்திரத்தை கோத்தபாய கொடுப்பாரா? அப்படி தமிழர் படம் எடுக்க முடியுமென்றால், அதனை தமிழகத்தில் திரையிட்டு இதுபோன்றதொரு சர்ச்சையை இந்த மாற்று சிந்தனையாளர்கள் உருவாக்கியிருப்பார்களா? இதற்குப் பதில் ஆம் எனில் புகழேந்தி தங்கராஜாவின் படம் தடைசெய்யப்பட்ட போது நீங்கள் எந்த அறைக்குள் பதுங்கியிருந்தீர்கள்? ஈழ மக்களுக்கும், அவர்களின் போராட்டத்துக்கும் சார்பாக வருகின்ற படங்களுக்கு தடை விழுகின்ற போதெல்லாம் கள்ள மௌனம் காக்கும் உங்கள் மாற்றுப் புத்தி, ஈழத் தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் சமாளிக்கும் சிங்களவரின் படைப்பைக் கொண்டாட எத்தனிப்பதன் உள்நோக்கம் என்ன?

இந்தப் படத்தை வெறும் சினிமாவாக மட்டும் பார்த்துவிட்டு ரசித்துவிட்டுப்போவது தவறு. இதற்குள் இருக்கின்ற அரசியல் பற்றிய புரிதல் நிகழவேண்டும். எங்களை மிலேச்சத்தனமாக அழிப்பார்கள். ஆண்களை களைவார்கள். அகப்பட்ட பெண்களை சூறையாடுவார்கள். மிஞ்சிய பெண்களை திருமணம் செய்துகொள்ளவும், அவர்களோடு புணரவும், சிங்களக் குழந்தை பெற்றுக் கொள்ளவும் ஆசைப்படுவார்கள். செய்த அழிப்பை சமாளிக்க மன்னிப்புக் கேட்டால் எங்களுக்கு சுதந்திரம் கிடைத்ததாக ஆகிவிடுமா? உங்களின் விவாதப்படி சிங்களவர்களில் சிலபேர் தமிழர்களிடம் மன்னிப் கேட்கவும், தமிழ் பெண்களை கலியாணம் செய்துகொள்ளவும் ஆசைப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அளுத்கம வில் முஸ்லிம்கள் கடந்த வாரங்களில்தானே அடித்து நொருக்கப்பட்டார்கள். தமிழ் பெண்கள் சிங்கள இராணுவத்தால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்கிற செய்தி ஒவ்வொரு நாளும் தானே உங்கள் காதுகளுக்கு வருகின்றது. இதைத் தடுக்க எதையாவது செய்தார்களா? எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டினார்கள். இவ்வளவு பெரிய சினிமாவை எடுத்து விருதுகளை அள்ளிக்கொள்ளும் நட்சத்திரங்களான உங்களை கடத்தவோ, சுட்டுப் போடவோ ராஜபக்சவினர் முன்வரமாட்டார். அப்படியிருந்தும் ஏன் நீங்கள் எமக்காய் எதுவும் செய்யவில்லை. சினிமாவில் பதிவு செய்தோம் என்று தப்பித்துவிடுவீர்கள். உங்கள் உள் மனதுக்குத் தெரியும் வித் யூ வித் அவுட் யூ உங்களுக்காக எடுக்கப்பட்டதா? எங்களுக்காக எடுக்கப்பட்டதா என்று. சிங்களவரோடு வாழாத தமிழக மாற்று சிந்தனையாளர்களுக்கு இந்தப் படம் எங்களை ஆசீர்வதிப்பதாக, ஆதரிப்பதாக அமையலாம். ஆனால் எங்களுக்குள் அந்த எண்ணத்தை விதைக்க ஒரு துரும்பளவிலும் நீங்கள் பாடுபடவில்லை.

அப்படிப் பாடுபட்டிருப்பின் 2010 இல் ஆரம்பித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பை வடக்கில் தொடங்கியிருக்க வேண்டும். போரில் காயப்பட்ட கட்டிடங்களையும், பாதியான தமிழ் மனிதர்களையும், கக்கூசு வாசலில் கூட காவல் காக்கின்ற உங்கள் சகோதர சிப்பாயையும், குதறிவீசப்பட்ட சிறுமிகளின் பிண வாசத்தையும், உங்களவர்களால் கடத்தப்பட்ட தாய்மார்களின் கண்ணீரையும், போராட்டத்தையும் படத்தி;ல் கதை நிகழ்வுக் களத்தின் பின்னணியாகவாவது காட்டியிருந்தால் எங்களின் பிரச்சினையை எப்படியாவது வெளியுலகிற்கு எடுத்துப் போகிறீர்கள் என்று நம்பியிருப்போம். நீங்கள் ஏவியபோரில் வறண்ட எங்கள் நிலத்தை உங்கள் கெமராக்களால் அழகியல் உணர்வோடு படம்பிடிக்கமுடியாதா? ஏன் குளிர்ச்சியான மலையகத்துக்குள், உங்கள் கிராமங்களுக்குள் எங்கள் பெண் கதையை இழுத்துப் போனீர்கள்? நூற்றாண்டுக் கணக்காக தமிழர் வாழ்ந்த பகுதிகளிலேயே சிங்கள மொழியையும், புத்தனையும் அத்துமீறிக் கட்டாயமாகக் குடியேற்றும் நீங்கள், படத்தில் மட்டும் தமிழ் முருகனையும், கந்த சஸ்டிக் கவசத்தையும் ஒலிக்கவிட்டது உலகத்தை ஏமாற்றவா? ஈழத் தமிழன் சுதந்திரமாக அழகிய இலங்கைக்குள் வாழத் தொடங்கிவிட்டான் என்பதை உலகிற்கு சொல்லவா? இடதுசாரித்தனம் உங்கள் இனத்துக்குச் சார்பாக இருப்பதல்ல. எல்லா மனிதர்களுக்கும் நேர்மையாகவும், நடுநிலைமையாகவும் இருப்பதுதானே இடதுசாரியம்.

போருக்காக, தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்காக வருந்தி பிரயச்சித்தம் தேட முனையும் சிங்களவனிடமே பெண் உடல் குறித்த வன்மம் எவ்வளவு இருக்கின்றது என்பதை பெண்ணிய மாற்று சிந்தனையாளர்கள் பார்க்கத்தவறிய மர்மம் என்ன?

இப்படிப் படம் முழுதும் ஆயிரம் கேள்விகளும், சந்தேககங்களும் இருக்கின்ற வேளையில், சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் என்று தப்பித்துக் கொள்வது எவ்விதத்தில் நியாயம். சிங்களவர்களே மோசமானவர்கள் என்ற எண்ணமுடையவர்களாயிருந்தவர்கள் மத்தியில், இந்தப் படத்தைப் பார்த்த பின்பு தமிழர்களுக்கு செய்த குற்றத்திற்கு சிங்களவர் மன்னிப்புக் கேட்கத் தயாராகின்றனர் என்ற எண்ண மாற்றத்தை வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளீர்கள். அந்த எண்ணம் தவறானதல்ல, யதார்த்தத்தில் அப்படியான ஒரு மன்னிப்புக் கோரும் சூழல் இருக்குமானால். ஆனால் யதார்த்தம் என்னவென்று இந்த எண்ணமுடைய அனைவரும் ஈழத்தின் வடபாகத்தை வந்து பாருங்கள். கூடவே பிரசன்ன விதானகேயை அவரின் படத்தோடு அழைத்துவாருங்கள். படத்தைப் பார்த்தவுடன் எழும் இதே சிந்;தனையுடன் இலங்கையின் வடக்கிலோ, கிழக்கிலோ வாழும் 5 குடும்பங்களிடம் சென்று கதைத்து உங்கள்எண்ணங்களைப் பரிசோதித்து பாருங்கள். அதன் பின் உண்மையைச் சொல்லுங்கள். நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம், மனந்திருந்தினான் சிங்களவனென்று.

– தமிழ்லீடருக்காக யாழ்ப்பாணத்திலிருந்து தீபன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*