maaree-kooli

காக்கிச் சட்டை நிழலின் கீழ் கூலிக்குரல்கள் – மாரீசன்

“எங்க பிள்ளைங்கள இஞ்சை வந்து யார் பிடிச்சாங்க? ஆமி, பிடிச்சாங்களா? பொலிஸ் பிடிச்சாங்களா? யாரு பிடிச்சாங்க? பதினாலு பதினைஞ்சு வயசுப் பொடியன்களை எல்லாம் புலியள் தானே புடிச்சாங்க?
ஒரு ஒரு கூக்குரல்!

அனந்திடை புருஷனைக் காணாட்டி அவ தேட்டடும். அவங்கவங்க தங்கட புருஷங்கள காணாட்டி அவங்க போய்த் தேடட்டும். இஞ்ச வந்து நாம சமாதானமாவும் நிம்மதியாவும் வாழுறதைக் குழப்பாதேங்க; காணாமல் போனவங்கள தேடுறம் எண்டு சொல்லி அரசியல் செஞ்ச நாங்க விடமாட்டம்!

இது அடுத்த கூக்குரல்!

விக்கினேஸ்வரன் ஐயா இஞ்சை வந்தால் இடம்பெயர்ந்து கஷ்டப்படுற எங்களப் பாத்தாரா? ஜனாதிபதி எங்களுக்கு வீடு தந்து வீட்டுத்திட்டத்தையும் துறந்து வைச்சிருக்கிறாரு. விக்கினேஸ்வரன் ஐயா எங்கள வந்து பாத்து எங்கட குறையளக் கேக்காம கொக்கிளாய்க்கு மீன் வேண்டப் போனாரா?

இது இன்னொரு கூக்குரல்!

இப்படி இப்படி எத்தனையோ கூக்குரல்கள்!

முல்லைமாவட்ட அரச அதிபர் செயலகத்தின் முன்பு காணாமற் போனோரின் உறவுகள், காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் காணாமற் போனோர் பற்றிய விபரங்களை வெளியிடும்படியும் கோரி ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்திய போது, அங்கு இரண்டு பேருந்துகளில் வந்து குதித்தவர்கள் சிலர் எழுப்பிய கூக்குரல்கள் இவை!

கூக்குரலுடன் அவர்கள் வாங்கிய கூலிக்குரிய பணி முடிந்துவிடவில்லை. கவனஈர்ப்புப் போராட்டத்தை நடத்தியவர்களைத் தாக்கவும் முயன்றனர். தகாத வார்த்தைகளைப் பாவித்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் மேல் பாய முயன்றனர். அனந்தியை தகாத வார்த்தைகளில், ஆபாசமான முறையில் திட்டித் தீர்த்தனர். ரவிகரனுக்கும் சவால் விட்டனர்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்களும் மக்களும் இணைந்து அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுத்து அவர்களை வெளியேற்றினர்.

அவ்வாறு வெளியேறும் போது மீண்டும் அனந்தி மீது எழுத்துக்களால் குறிப்பிடப்பட முடியாத அளவிற்கான கேவலமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இரண்டு பேருந்துகளில் கொண்டு வந்து குவிக்கப்பட்டவர்கள் நடத்திய பண்பற்ற மிருகத்தனமான ஒரு காட்சி அது. காணாமற் போனோரைத் தேடிக் குரலெழுப்பும் உரிமை கூட தமிழ் மக்களுக்கு இல்லை என்பதை ஏவற் பேய்களை விட்டு அவர்கள் மூலம் பிரகடனம் செய்துள்ளது இலங்கையின் காக்கி உடைச் சர்வாதிகாரம்.

முல்லைத்தீவில் நடக்கும் கவனஈர்ப்புப் போராட்ம் கேப்பாபுலவில் இராணுவத்தின் வீட்டுத்திட்டத்தில் இருக்கும் அவர்களின் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் குழப்பிவிடுமாம். அப்படியானால் முதலமைச்சர் கேப்பாபுலவுக்கு பயணம் செய்தால் அவர்களின் அமைதியும், சந்தோசமும் குழம்புபாதா? இது பொருள் விளங்காப் புதிர்தான்!

எனினும் அதையும் அமுத பானத்தின் ஆர்ப்பரிப்பில் விட்டுவிடுவோம்!

காணாமற் போனோரை மீட்டுத்தரும்படி கோர அவர்களின் உறவினர்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவ்வகையில் தான் அவர்களின் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அந்த மனுவை காலம் தாழ்த்தாது துரிதமாக விசாரணை செய்து தீர்வு வழங்குமாறு தானே அங்கு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது!

அந்த ஆர்ப்பாட்டம் கேப்பாபிலவு படை முகாமில் அடிவருடும் ஒரு சிலரின் சமாதானத்தைக் கெடுத்தது. அந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் ஆர்ப்பாட்டம் நடத்துவது அமைதியைக் காப்பாற்றும் அற்புத நடவடிக்கையா?

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தைப் பார்க்க வராமல் முதலமைச்சர் கொக்கிளாய்க்கு மீன்வாங்கப் போய்விட்டாரா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இப்படியெல்லாம் கீழ்த்தரமாக பேசக் கற்றுக்கொடுத்தவர்கள் மனிதப் படுகொலைகளை நடத்தி வெறியாட்டம் போட்டவர்கள் தான் என்பதைக் கூலிக்கு குரலெழுப்பும் இந்த அப்பாவிகள் மறந்துவிட்டனர்.

ஜனாதிபதியின் வீட்டுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தாங்கள் காலம் காலமாக வாழ்ந்த கேப்பாபுலவு மண்ணைப்படையினருக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததற்காகவும் பெருமைப்படலாம். ஆனால் கொக்கிளாய் மக்கள், கொக்குத்தொடுவாய் மக்கள் தங்கள் பாரம்பரிய நிலத்தைப் பறிகொடுக்கத் தயாரில்லை.

அவர்களை முதலமைச்சர் சந்தித்ததையும் இவர்களால் பொறுக்க முடியவில்லை.

அவர்களின் அநாகரிக மொழியிலேயே நாங்களும் திருப்பிக் கேட்பதானால் முதலமைச்சர் கொக்கிளாய்க்கு மீன் வாங்கப் போகிறார். கேப்பாபிலவுக்கு ஜனாதிபதி பூக்கண்டு நடுவதற்கா வரவேண்டும்? எனக் கேட்கலாமல்லவா?

புலிகள் பிள்ளைகளை பிடித்திருந்தால் அதனை படையினரால் பாதிக்கப்பட்ட காணாமற் போனோரின் உறவினர்களிடம் ஏன் கேட்கவேண்டும்.

முடிந்தளவிற்கு கேவலமாக அந்தக் குழு நடந்துகொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் மனித வர்க்கத்தில் ஜனநாயக் குரல் எழுப்ப முடியாத நிலையில் சர்வதேசத்திலேயே தமிழினம் மட்டுமே உள்ளது என்பதையே முல்லைத்தீவுச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

– தமிழ்லீடருக்காக மாரீசன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*