viki

ஏறிவந்த ஏணிகளை உதைத்துத் தள்ளும் விக்கி – தமிழ்லீடருக்காக மாரீசன்

வடக்கு அரசியலில் தமிழ்த் தேசிய வாதியாகத் தன்னை இனம்காட்டி உள் நுழைந்த அவர் அதே தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களின் நியாய ரீதியான உணர்வுகளுக்கு எதிராகவும் தன் உண்மை முகத்தை வெளிக்காட்டுவது இது தான் முதல் தடவையல்ல.

தேர்தல் மேடைகளில், தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை ஒரு மாவீரன் என முழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அதே வாயால் தலைவர் அவர்களை ஒரு சர்வாதிகாரி என வர்ணித்து தன் அடிமனதை வெளித்திறந்து காட்டியவர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு சகோதரச் சண்டை என்றும் இந்தியத் தமிழகம் அதில் தலையிட்டுக் குழபங்களை ஏற்படுத்தக்கூடாது எனவும் கூறி மஹிந்த ராஜபக்ஷவை மனம் குளிரவைத்தவர். அவர் 1958 தொடக்கம் இன வெறியில் எமது மக்கள் இலட்சம் இலட்சமாக கொல்லப்பட்டமை, அந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் பார்வையில் சகோதரச் சண்டை.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது மக்களுக்கு அஞ்சலி செய்யப் பிடிவாதமாக மறுத்தவர் அவர். சுடரேற்றும் நிகழ்வில் கலந்து கொள்ள மறுத்து அந்த மக்களின் தியாகத்தை அலட்சியப்படுத்தியவர் அவர். அஞ்சலியுரையாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்த போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு பொது இடங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற தொனியில் குறிப்பாக வடக்கு மாகாண சபையில் நினைவு நிகழ்வு நடத்தியது தவறு என்று நிறுவும் வரையில் அவர் உரையாற்றியிருந்தார். இவ்வளவு மிகப் பெரும் அழிவுக்குக் காரணமாக அரசினையோ அரச படைகளையோ குற்றம்சாட்டுவதை தவிர்க்கவேண்டும் என்பதில் வடக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட விக்கினேஸ்வரன் மிகத் தெளிவாக இருந்துகொள்வார்.

வரிசை வரிசையாக இப்படி அவர் வெளிக்காட்டி வந்த தமிழ் மக்களுக்கு விரோதமான திமிர்த்தனமான போக்கின் அடுத்த கட்டத்தை இப்போது அவர் ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.

கோத்தாபயவும், கெஹலிய ரம்புக்வலவும் மறைமுகமாக ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஏந்தும் ஆயுதங்களை சி.வி.விக்னேஸ்வரன் வெளிப்படையாக கையில் எடுத்துவிட்டார்.

எல்லோரும் ஏறிவிழுந்த குதிரையில் இப்போது சக்கடத்தார் ஏறிவிட்டார். இந்தச் சக்கடத்தார் ஏறியது மட்டுமல்ல ஏறிய ஏணியையும் எட்டி உதைத்து தள்ளிவிட்டார்.

தூக்குத் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்துவிட்டு தன் பாவங்களைக் கழுவிக் கோவில் குளம் எனத் தாடி வளர்த்து அலைந்து திரிந்து ஒரு மனிதனை அவரின் உரைகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டு ஒரு தமிழ் தேசியவாதிகளாக தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவை ஊடகங்கள் தான்.

அவர் இன்று வகிக்கும் முதலமைச்சர் பதவியும் அவரை அந்த சிம்மாசனத்துக்கு ஏற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிவராம் போன்ற ஒரு சில ஊடகவியலாளர்கள் போட்ட பிச்சை தான்.

அந்தப் பிச்சையில் கிடைத்த அரியாசனத்தில் ஏறி இருந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிரான போரை ஆரம்பித்துவிட்டார் முன்னாள் நீதிபதி.

ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் முரண்பட்டு நின்று தமிழ் கட்சிகளையும் தமிழ் ஆயுத குழுக்களையும் இராப்பகலாக ஓடித்திரிந்து ஒன்றிணைத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் சக்தியாக உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர் ஊடகப் போராளி சிவராம்.

அந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற மந்திரம் தான் இன்று தமிழ் மக்களை ஒரே அணியில் திரட்டி இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் அரங்கில் நிலைநிறுத்தி நெஞ்சை நிமிர்த்த வைத்துள்ளது. அதற்கு எமது ஊடகங்கள் ஊட்டி வளர்த்த தமிழ்த் தேசிய உணர்வு நீரூற்றி செழிக்க வைத்து சக்தி கொடுத்தது.

அப்படியெல்லாம் இருந்தும் கூட –

இனி தனது வாசஸ்தலத்தில் நடைபெறும் சந்திப்புக்கள் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை என்று விக்கினேஸ்வரன் அறிவித்துவிட்டார்.

அவர் கூறும் காரணம் ஊடகவியலாளர்கள் அமர்வதற்கு இடநெருக்கடியாம்.

ஆனால் உண்மைக்காரணம் இடநெருக்கடியல்ல. மாகாண சபையில் விக்கினேஸ்வரனின் நெருக்கமானவர்கள் சிலருக்கு ஏற்பட்ட மன நெருக்கடி தான்.

முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் அடியாள் ஒருவர் சில ஊடகவியாள்கள் மீது கெடுபிடி மேற்கொண்டு அவர்களின் ஒளிப்படக் கருவிகளையும் உடைக்க முயன்றமை தொடர்பில் எழுந்த எதிர்ப்பினை அடுத்தே ஊடகவியலாளர்கள் மீது எழுந்துள்ள கெடுபிடி என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஒரு மாகாணத்தை நிர்வகிக்க வந்துள்ள ஒரு நபர் தனிப்பட்ட ஒருவருக்காக ஒட்டுமொத்த ஊடக சமூகத்தையே தூக்கி வீசும் அவரின் தனிப்பட்ட மனோ நிலையினையே பிரதிபலிக்கின்றார்.

பாவம் –  காற்றும் புக முடியாத இடங்களிலும் ஊடகவியலாளர்களின் காதுகளும், கண்களும் பாய்ந்து விடும் என்பதை அறியாத பரிதாபத்துக்குரியவர்கள் இவர்கள்.

மாகாணசபையில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நடந்த போதும், மாகாண சபை முன்றலில் சுடரேற்றிய போது இடம்பெற்ற சம்பவங்களின் போதும் ஒவ்வொருவரும் நடந்துகொண்ட விதங்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தியது உண்மை.

அது ஊடகங்களின் கடமை!

ஒருவர் தாடி வளர்த்து சந்தனப் பொட்டு வைத்தவர் என்பதால் ஊடகங்கள் உண்மையை மறைத்துவிடமுடியாது.

அதனால் சிலரின் வெளிவேடங்கள் அம்பலப்பட்டதும் முகமூடிகள் கிழிக்கப்பட்டதும் உண்மை.

அதற்கான பழிவாங்களும் இணைந்து இப்போது ஊடகங்கள் மேல் பாய்ந்திருப்பதாகவே தெரிகிறது.

தண்டிக்கப்பட வேண்டியவர்கள் குற்றவாளிகள்!

இப்போது குற்றங்களை வெளியே கொண்டு வந்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்!

இது வியப்புக்குரிய விடயமல்ல!

விஷம் பரவும் அபாயத்தின் அறிகுறி!

எனவே – ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ்த் தேசிய உணர்வுகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் பொது மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழுத்தத்தின் காரணமாக திரு.இரா.சம்பந்தன் சுமந்திரனை கூட்டமைப்புக்குள் இறக்குமதி செய்தார். பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவுடன் ராஜபக்ஷவும் இந்தியத் தூதுவர் சின்ஹாவும் இரா.சம்பந்தனும் இரகசிய பேச்சு நடத்தி சி.வி.விக்னேஸ்வரனை மாகாண சபைக்குள் இறக்குமதி செய்தனர்.

இன்று இரா.சம்பந்தனும் சுமந்திரனும், சி.வி.விக்னேஸ்வரனும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்களை திசைதிருப்பும் வேலையில் இறங்கிவிட்டனர். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவு படுத்தும் மஹிந்தவின் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

எனவே, இன்று இந்த மூவரையும் தனிமைப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தையும், பலத்தையும் கட்டிக்காக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

போரில் உயிர்துறந்த பல இலட்சம் மக்களுக்கும், பல்லாயிரம் போராளிகளுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி எமது இலட்சியத்தையும், எமது பலத்தையும் சிதையாமல் காப்பது ஒன்று மட்டுமே.

–    தமிழ்லீடருக்காக மாரீசன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*