inraiyabaratham

‘மே 18’ அன்றைய பாரதம் இன்றதன் ஞாபகம்!

கைலை மலையின் தெய்வத்திருமணம்!

பரமசிவனுக்கும் உமாதேவிக்கும் நடக்கும் திருமண வைபத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவகணங்களும், அசுரர்களுமெனப் பல கோடி ஜீவன்கள் கைலையங்கிரியை நிறைத்துவிட்டன.

பூமாதேவி பாரம் தாங்க முடியாத நிலையில் வடக்கு தாழ ஆரம்பித்துவிட்டது. தெற்கு உயர ஆரம்பித்துவிட்டது. தன் சம நிலை குலைவதை உணர்ந்த பூமித்தாய் அலறியடித்துக் கொண்டு ஓடிச்சென்று ஆதிசிவனிடம் முறையிட்டாள்.

அவர் ஒரு புன்னகையுடன் அகத்தியரை அழைத்து தெற்கே போகும்படி கட்டளையிடுகிறார். அவரும் ஆண்டவன் கட்டளைக்கமைய பொதிகையை அடைகிறார்.

பூமி சமநிலையடைகிறது!

கோடிக்கணக்கான தேவர்கள், அசுரர்கள், கணங்கள் எல்லாவற்றின் நிறைக்கும் சமமாக பூமியைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறான் குறு முனிவன் அகத்தியன்.

எல்லாம் வல்ல இறைவனுக்குப் புரியும் அகத்தியன் வலிமை. எல்லோரையும்  கொல்லும் கொடியோருக்குப் புரியுமா? அவரின் பெருமை!

மே 18ல்

தெற்கே மாத்தறை மாநகரில் மாபெரும் போர் வெற்றி விழா. ஒரு சில நாட்களில் ஒரு இன அழிப்புக் கொரூரத்தை அரங்கேற்றி பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட பெருமையை உலகுக்கு எடுத்தியம்பும் ஒரு அகங்காரத்திருவிழா!

இராணுவ அணிவகுப்புக்கள், விமானப் படையின் சாகங்கள், அலங்காரத் தோரணங்கள், மின்சார அலங்கரிப்புக்கள், போக்குவரத்து வசதிகள், கண்காட்சிகள், போரில் பங்குகொண்டோரைப் புகழ்பாடும் கலைநிகழ்வுகள், வெற்றி நாயகன் மஹிந்த ராஜபக்ஷவுக்கான துதிப்பாடல்கள் என மாத்தறை மாவட்டமே புதிய பொலிவில் பூத்துக்குலுங்கும்.

மஹிந்த, கோத்தாபய சகோதரர்களின் வெற்றிப் பெருவிழாக்காண சிங்கள மக்கள் இலட்சம் இலட்சமாக தெற்கிற்கு இறக்குமதி செய்யப்படுவர். அனைத்து வல்லமை பெற்றவரின் ஆசி பெற அடிவருடிகள் கூட்டம் இலவச பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்யும்.

ஒரு சில நாட்களில் பல்லாயிரம் உயிர்களைத் தின்றுவிட்ட ஏப்பம் எங்கும் பரவிப் பெருவிழாவாக பரிணமித்துள்ளது.

பல்லாயிரம் மக்கள் கூடிய போதும் தென்னிலங்கை தாழவில்லை. மகத்தான மஹிந்தவிடம் அனுப்புவதற்கோ அகத்தியரும் இல்லை. கிழக்கில் இருந்த ஒரேயொரு பாடல் பெற்ற அகத்தியர் கோவிலையும் அங்கு இருக்கவிட இனவெறியர்கள் ஏற்கவுமில்லை.

எனினும் அன்று வந்த அகத்தியனின் வலிமை பிறப்பித்த அகத்தியம் இங்கு ஏற்கனவே நிலை பெற்றுவிட்டது.

அது அகல் விளக்குகளாகி ஆலயங்களிலும், இல்லங்களிலும் சுடரேற்றி ஒளிவீசும்.

இன்று நாம் உயிரிழந்த உறவுகளுக்கு ஏற்றும் சுடர் அன்று அகத்தியன் பொதிகையில் நின்று உலகைச் சமநிலையை வைத்த ஆற்றலுக்கு நிகரானது.

தெற்கில் உயிர் குடித்தவர்களின் பெருமையைப் பறை சாற்ற நடத்தும் வெற்றி விழாவை நாம் உயிரிழந்தவர்களுக்காக ஏற்றும் சுடர்கள் சமநிலைப்படுத்தும் வல்லமை பெற்றவை. எமது இழப்புக்கள், நாளைய உயிரிழப்பின் கருவுலங்கள் என்பதை உலகுக்கு பிரகடனம் செய்யும் உன்னத ஒளிச்சுடர்கள்.

பாண்டவர்கள் சூதில் தோற்றது உண்மை! நாடு நகரங்களை இழந்து அநாதைகளானதும் உண்மை, துரியோதனன் அரசவையில் பாஞ்சாலியின் துயில் களையப்பட்டதும் உண்மை.

பாண்டவர்களுக்குப் பன்னிரண்டு வருட வனவாசகம். அது முடிய ஒரு வருட அஞ்ஞாத வாசம். அவர்கள் இறுதியில் ஐந்து நாடு கேட்டனர்! கிடைக்கவில்லை! ஐந்து ஊர்கள் கேட்டனர், கிடைக்கவில்லை! ஐந்து வீடுகள் கூடக் கேட்டனர் எதுவுமே கிடைக்கவில்லை!

விரிந்தது – குருஷேத்திரப் போர்!

வீரன் அபிமன்யு களத்தில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டான்!

போர் தொடர்ந்தது!

பாண்டவரின் வெற்றியை நோக்கிப் படிப்படியாக நகர்ந்தது!

அபிமன்யுவின் இழப்பு பாண்டவரை சோர்வடைய வைக்கவில்லை. அருச்சுனன் வில்லும், வீமனின் கதையும் விரோதிகளை நாசம் செய்தன!

இறுதியில் கௌரவர்கள் முற்றாகவே அழிக்கப்பட்டனர்.

நீதி நிலை பெற்றது!

பாண்டவர்களும், கௌரவர்களும் துரோணரிடமே போர் வித்தை கற்றுவந்தனர். ஒரு நாள் துரோணர் பாண்டவரிடம் ஒரு சிறு தொகைப் பணத்தையும், கௌரவர்களிடம் அதே அளவு பணத்தையும் கொடுத்து அவர்கள் தங்குமிடத்தை நிறைவாக வைக்கும்படி கூறினார். கௌரவர்கள் சிறு தொகையை வைத்து எப்படி வீட்டை நிறைப்பது என யோசித்துவிட்டு மலிவான வைக்கோலை வாங்கி வீட்டை நிறைத்தனர். பாண்டவர்கள் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி மலர் தூவி, சாம்பிராணி போட்டு வீட்டை நிறைவடைய வைத்தனர்.

ஐந்து வீடு கூட வழங்கத் தயாரற்றவர்கள், ஒரு பிடி மண் கூட இல்லாது அழிந்து போனர்கள்,

நாம் அகதி முகாம்களில் செட்டிகுளத்தில் வனவாசம் முடித்துவிட்டோம். தடுப்பு முகாம்களில் நச்சுப் பொய்கை நீரருந்தினோம்.

இப்போ அஞ்ஞாத வாச காலம்!

அஞ்ஞாதவாச காலத்திலும் எமது அஞ்சலிகள் சுடராக எரியும்!

அடக்குமுறைகளால் தடுக்க முடியாதபடி ஒளிரும்!

பாரதப் போரில் பாண்டவர்கள் வென்றனர். அநீதி அழிந்தது!

அன்றைய பாரதம் – இன்றைய ஞாபகம்!

இன்றைய சுடரொளி – நாளைய விடியலின் பேரொளி!

முள்ளிவாய்க்கால் நினைவு என்பது ஒரு பொறி தான்!

அந்த ஒளி பொறி காட்டுத்தீயை மூட்டும்!

அதில் சகல ஒடுக்குமுறைகளும் வெந்து சாம்பலாகும்.

–    தமிழ்லீடர் ஆசிரியர்பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*