Sumanthiran-vandil2

சுமந்திரனின் வடமராட்சி வண்டிலும்! விக்கியின் தலைமைக் கனவும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாகப் பதிவு செய்தல், சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்காக உயர்மட்டக்குழு நியமனம் என்று கூட்டமைப்பின் திடீர் ஞானோதயத்தின் தொடராக கூட்டமைப்பு அலுவலகங்கள் திறக்கும் நிகழ்வுகளும் தொடங்கியுள்ளதன் பின்னால் உள்ள சூத்திரத்தன்மைகள் தொடர்பில் மக்களைத் தெளிவுறுத்தவேண்டிய கடப்பாடு உணரப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டத் தலைமைகளாகச் சொல்லப்படுகின்ற இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், தேசியப்பட்டியல் சுமந்திரன் ஆகியோரைத் தமிழ் மக்களின் தலைமைகளாகத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு தமிழ் மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ சிங்கள இனவாத அரசாங்கம் விரும்புகின்ற வகையிலேயே குறித்த அரசியல்வாதிகள் மூவரும் தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றனர்.

இந் நிலையில் யாழ்ப்பாணம் நெல்லியடியில் கூட்டமைப்பின் கிளைக்காரியாலயம் ஒன்று இன்று திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் நலன் சார்ந்த எந்தவித ஆரோக்கியமான காத்திரமான செயற்பாடுகளையும் இதுவரையில் முன்னெடுத்திருக்காத கூட்டமைப்பின் தலைமைப்பீடம் திடீரென நெல்லியடியில் ஒரு கிளை அலுவலகத்தினை திறப்பதற்கு முனைந்திருப்பதன் உள்நோக்கம் என்ன என்பதனை தமிழ்லீடர் அம்பலப்படுத்துகின்றது.

அடுத்த ஆண்டு எதாவது ஒரு தேர்தலை நடத்துவது என்பதில் மஹிந்த அரசு அக்கறை கொண்டிருக்கின்றது. அந்தத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாகவோ அல்லது பொதுத் தேர்தலாகவோ இருக்கலாம் என்ற குழப்பம் காணப்பட்டாலும் அது பொதுத்தேர்தலாகவே இருக்கக்கூடும் என்று சம்பந்தன் தரப்பு உணர்ந்திருக்கின்றது.

இதன் தொடராக மஹிந்தராஜபக்ஷவின் சிபார்சின் அடிப்படையில் சம்பந்தனால் தேசியப்பட்டியல் ஊடாக கூட்டமைப்புக்குள் புகுந்த சுமந்திரன் தொடர்ந்தும் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தில் இருப்பதே எதிர்காலத்தில் இலங்கை அரசு எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான இலகுவான வழிகளில் ஒன்றாக அமையும் என்பதை மஹிந்த அரசும் சம்பந்தன் தரப்பும் நன்குணர்ந்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசியப்பட்டியல் ஊடான சந்தர்ப்பம் இல்லாது போனால் சுமந்திரன் கட்சிக்குள் புகுந்துகொள்ள மாற்று வழி என்ன என்பதை சம்பந்தன் – சுமந்திரன் – விக்னேஸ்வரன் தரப்பு கூடி ஆராய்ந்திருக்கின்றது.

அதன் பலனாக சுமந்திரனை எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினராக்குவது என சம்பந்தன் தீர்மானித்திருக்கிறார். அவருக்காக தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணிப்பதற்கும் தயங்குவதில்லை என்ற முடிவுடன் திருகோணமலையில் கிடைக்கக்கூடிய ஒரு ஆசனத்தை சுமந்திரனுக்காக விட்டுக்கொடுப்பதற்கு சம்பந்தன் முடிவெடுத்திருக்கிறார். அதன் தொடராக திருமலையில் உள்ள புத்திஜீவகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இது தொடர்பிலான நாடித்துடிப்பு பரிசீலிக்கப்பட்டிருக்கின்றது. அது திருமலை தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பலத்த விசனத்தையும் அதிர்ப்தியையும் தோற்றுவித்திருக்கின்றது. சம்பந்தனின் மிகத் தீவிர விசுவாசிகளாக அவர் செய்வதெல்லாம் சரியென வாதிட்டு வந்த அவருடைய அபிமானிகள் கூட இந்த விடயத்தினை ஏற்க முடியாது என்றும் இதற்கெதிராக கடுமையாக செயற்படப்போவதாக கொதித்தெழுந்திருக்கின்றனர். இதேவேளை திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துரைரட்ணசிங்கமும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றார். துரைரட்ணசிங்கம் சம்பந்தன் காலத்துக்குப் பின்பாகத் தான் தான்  மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வரலாம் என்றாலும் அதற்காகக் காத்திருந்தார். ஆனால் சுமந்திரன் திருமலையில் வேட்பாளராவது என்ற செய்தி அவருக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்த எதிர்ப்பலைகள் சம்பந்தனைச் சென்றடைந்ததும் சம்பந்தன் தனது முயற்சியைக் கைவிட்டதாகத் தெரிகிறது. ஆனாலும் கைவிடப்பட்ட நடவடிக்கை தற்காலிகமானதா? அல்லது அது தற்போதைய சூழலைச் சமாளிக்கவா என்பது தெளிவாகவில்லை.

இதனிடையே சுமந்திரனை வடக்கில் நிறுத்துவது என்று மற்றொரு ஆலோசனையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இதனிடையே தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவை ஆலோசிக்காமலேயே முக்கிய நகர்வுகளை சம்பந்தன் தரப்பு முன்னெடுத்துவருவதாக தெரிகிறது. மாவை சேனாதிராஜாவை ஒதுக்குவதன் நோக்கம் எதிர்காலத்தில் தமிழரசுக்கட்சியின் தலைமையை விக்னேஸ்வரனுக்கும் செயலாளர் நாயகம் பதவியை சுமந்திரனுக்கு கையளிப்பதற்குமே என்று இள நிலை மாகாண சபை உறுப்பினர்கள் மட்டத்தில் பேசப்படுகிறது.

இதேவேளை சுமந்திரனை வடக்கில் நிறுத்தி தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்வைத்திருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. இரணைமடு நீர் விநியோக விவகாரத்தில் முட்டிக்கொண்டாலும் தற்போது விக்னேஸ்வரனின் மிக மிக நம்பிக்கைக்கும் அபிமானத்துக்கும் உரிய நபராக சிறிதரன் மாறியிருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில் வடக்கில் எந்தப் பகுதி மக்களை ஏமாற்றி சுமந்திரனை வெற்றி பெற வைக்கலாம் என்று தமிழரசுக்கட்சியின் சம்பந்தன் தலைமையிலான குழு தீவிரமான ஆராய்ந்ததன் அடிப்படையில் வடமராட்சியை இலக்குவைப்பதென தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

வடமராட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை என்பதால் அதனைச் சொல்லி வடமராட்சி மக்களை ஏமாற்றுவது என்பது ஒன்று, இரண்டாவது தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த மண்ணில் வெல்வதன் மூலம் எதிர்காலத்தில் சர்வதேசத்திற்கு காதில் பூ சுத்துவதற்கு, தலைவர் பிறந்த மண்ணில் வென்ற சுமந்திரன் கண்கட்டி வித்தை காட்டுவார்.

sumanthiran-vandil

மேதினத்தில் வண்டிலில் சுமந்திரன்

இவ்வாறான நிலைப்பாடு எடுக்கப்பட்டாலும் ஒரு சில மாகாண சபை உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கனவில் மண் விழலாம் என்றும் தெரிகிறது. வடமராட்சி மக்களை மையப்படுத்தி தேர்தலை எதிர்கொள்வதாக சுமந்திரன் தீர்மானித்தாலும் வடமராட்சி கிழக்குப் பகுதி மக்களின் வாக்குகளை முழுமையாகச் சூறையாடுவதே சுமந்திரன் தரப்பின் உள்நோக்கம். ஆனாலும் இதனிடையே வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களில் ஒருவரான சுகிர்தனை அந்த மண்ணின் எதிர்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாக மாற்றுவதற்கு அந்த மண்ணைச் சேர்ந்த ஆர்வலர்கள் சிலர் முனைப்புக்காட்டி வருவதாகவும் அவர்களில் ஒருவராக தேசியப் பத்திரிகையின் பிராந்திய அலுவலகம் ஒன்றின் உயர் நிலையில் உள்ள ஒருவரும் முனைப்புக் காட்டிவருவதாக அறிய முடிகிறது.

இந்த நிலையில் சுகிர்தனுக்கான சந்தர்ப்பம் மறுப்பு சுமந்திரனுக்கு ஆப்பாக மாறலாம் என்ற நிலைப்பாடும் தென்படுகிறது.

வடமராட்சியிலிருந்து சாவகச்சேரி வரையில் நேற்று நடைபெற்ற மேதின ஊர்திப் பவனியில் சுமந்திரன் ஒரு வண்டிலில் தனியாகப் பயணித்தது எதற்காக? என்பது மிகத் தெளிவாக தற்போது வாசகர்களுக்கு புரிந்திருக்கும். இதன் தொடராக இன்று வடமராட்சியில் தமிழரசுக்கட்சிக் கிளை திறப்பும் இடம்பெறுகிறது.

எது எவ்வாறோ எமது மக்களை ஏமாற்றி குறிப்பாக கல்வியில் அறிவில் சிறந்தவர்களாக காலாகாலாமாக மதிக்கப்படுகின்ற வடமராட்சி மண்ணின் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்கினைப் பெற்று அரியாசனம் ஏறக்காத்திருக்கும் சுமந்திரன் அந்த மக்களுக்கே வண்டில் விட்டு தமிழினத்துக்கு தொடர்ந்தும் குழி பறிப்பார் என்பது மட்டுமே பட்டவர்த்தனம்.

–    தமிழ்லீடர் ஆசிரியர்பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*