sam-1024x682

துரோகிகளுக்காக தியாகிகளை கொச்சைப்படுத்தும் ‘சம்பந்தன்?’

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வா அவர்களின் 37ஆவது நினைவு நிகழ்வுகள் கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்பில் இவரின் நிலைப்பாடு தொடர்பாகச் சில கேள்விகளை எழுப்பியுள்ளன. அது மட்டுமன்றி இவர் அலங்காரமான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலட்சியங்களை திசை திருப்பி விடுவாரோ என்ற அச்சத்தைம் ஏற்படுத்தியுள்ளன. அவ்வுரையின் போது இவரால் அழுத்தம் கொடுக்கப்பட்ட இரு விடயங்கள் இவரின் நோக்கங்கள் தொடர்பிலான பல வேள்விகளை எழுப்பி நிற்கின்றன.

இவர், விடுதலைப்புலிகள் அமைப்பு தம்மை திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக நிரூபித்த போதிலும் ஜனநாயகப் பண்புகளையும், மனித உரிமைகளையும் அப்பட்டமான முறையில் மீறிச் செயற்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

சிங்கள ஒடுக்குமுறையாளர்கள் எப்படி விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என வர்ணித்து எப்படி தமக்கு உதவியாக அணி திரட்டினார்களோ அவ்வாறே சம்பந்தனும் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகக் காட்ட முயல்கிறார்.

கொடிய ஆயுத ஒடுக்குமுறையின் முன்பு ஜனநாயக வழியிலான போராட்டங்கள் எவ்வித பயனுமற்றவையென்ற நிலையிலேயே ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது என்பதை சம்பந்தனே தனதுரையில் ஒப்புக்கொண்டுள்ளார். அடக்குமுறைப் பயங்கரவாதம் முனைப்புப் பெற்ற போது எதிர் ஆயுத நடவடிக்கைகள் ஜனநாயக வழிமுறைகளை மீறுவது தவிர்க்க முடியாததாகின்றன. அது ஒடுக்குமுறையாளர்களைப் பொறுத்தவரையில் பயங்கரவாதம். ஒடுக்கப்படும் மக்களைப் பொறுத்தவரையில் அது விடுதலைப் போராட்டம்.

இது அரசியல் அனுபவம் வாய்ந்த சம்பந்தனுக்குப் புரியாத விடயமல்ல. ஆனால் ஒடுக்குமுறையாளர்களின் குரலில் அவர் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் எனக் குற்றம் சாட்டுவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், இந்திய அரசையும் திருப்திப் படுத்தும் ஒரு நயவஞ்சக நோக்கம் கொண்டதென்றே நாம் கருதவேண்டியுள்ளது.

இவர் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் எனச் சுட்டிக்காட்டும் சில நடவடிக்கைகள் காரணமாகவே விடுதலைப்புலிகள் பலம் பெற்றிருந்த காலத்தில் தென்னிலங்கையில் எந்தவொரு இனக்கலவரமும் மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் அழிக்கப்படவில்லை. வடக்கிலோ கிழக்கிலோ எந்த ஒரு சிங்களக் குடும்பமும் குடியேற்றப்படவில்லை. 1984ஆம் ஆண்டு மாவலி அபிவிருத்திச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அங்கு குடியேற்றப்பட்ட சிங்களவர் ஓயாத அலைகள் நடவடிக்கைகள் தொடங்கிய போதே அந்த இடங்களைவிட்டு ஓடிவிட்டனர்.

இவர்கள் வர்ணிக்கும் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை தொடர்பான அச்சம் காரணமாகவே தென்னிலங்கையில் தமிழ் இன அழிப்போ, வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களோ அத்துமீறிய நில ஆக்கிரமிப்போ இடம்பெறவில்லை என்பதை சம்பந்தனால் மறுக்க முடியுமா? இன்று விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாத நிலையில் சகல கொடுமைகளும் இடம்பெறுவதை சம்பந்தன் கூறும் ஜனநாயகப் பண்பின் மூலம் தடுத்து நிறுத்த முடிந்ததா?

விடுதலைப் போராட்ட காலத்தில் சில தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அடிக்கடி சம்பந்தனும் அவருடைய நெருங்கிய சகாக்களும் தெரிவித்துவருகிறார்கள். ஆனால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் நபர்கள், சிங்கள ஆட்சியாளர்களுடனும் இந்தியத் தரப்பினருடனும் சேர்ந்து, தியாகத்தாலும், இரத்தத்தாலும் முன் கொண்டு செல்லப்பட்ட விடுதலைப் போராட்டத்தை அழிக்கச் சதி செய்யவில்லையா? இந்த அறிவு ஜீவிகளாகச் சொல்லப்பட்டவர்கள் நாடு நாடாக அலைந்து தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்படாத பாடு படவில்லையா?

இப்படியான படு துரோக நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேறு எதாவது மாற்று வழி சம்பந்தனிடம் இருந்ததா?

யசீர் அரபாத்தையும், நெல்சன் மண்டேலாவையும் ஒரு காலத்தில் பயங்கரவாதிகளாச் சித்தரித்த சர்வதேச நாடுகள் இன்னொரு கட்டத்தில் அவர்களை உலகத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டு கொண்டாடியதை சம்பந்தன் போன்றவர்கள் தேவை கருதி மறந்தோ, மறைத்தோ விடுகிறார்கள்.

“விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மாலை நேரப் பொழுது போக்கோ அல்லது இரவு நேர விருந்துபசாரமோ அல்ல, அது அவற்றைப் போன்று ஒழுங்கானதாக, நாகரிகமானதாக இருக்க முடியாது. அது ஒருவரை ஒருவர் வெல்ல முயலும் இரத்தம் சிந்து போராட்டம்” இது 70 கோடி சீன மக்களை விடுதலை செய்த சீனத் தலைவர் மா ஓ சேதுங் அவர்களின் தத்துவக்கருத்து.

ஆனால் சம்பந்தனோ விடுதலைப் புலிகள் ஒழுங்காகவும் நாகரிகமாகவும் நடக்கவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்.

மாறாத இலட்சிய உறுதியுடனும், ஒப்பற்ற தியாக சிந்தனையுடனும், அளப்பரிய உயிர்க்கொடைகளுடனும், விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்துவதற்கு என்ன அருகதை சம்பந்தனுக்கு உள்ளது? என்பதை பகிரங்கமாக கேட்கவிரும்புகிறோம்.

விடுதலைப்புலிகளின் வீரமும், தியாகமும் நிறைந்த வரலாற்றை எவராவது மாசுபடுத்த முயன்றால் நிச்சயமாக அவர்கள் தமிழினத் துரோகிகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.

அடுத்து தமிழ் மக்கள் வன்முறைப் பாதையை முற்றாக நிராகரிப்பதாகவும் பிரிக்கப்படாத நாட்டுக்குள் நியாயமான அரசியல் தீர்வைப் பொற்றுக்கொள்ளவே ஆணை வழங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார் சம்பந்தன்.

மக்கள் வன்முறைகளை விரும்புவதில்லை என்பது உண்மையென்றாலும் அதை அவர்கள் என்றுமே நிராகரித்ததில்லை. அவர்கள் வன்முறையில் இறங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பது தான் உண்மை. ஒடுக்குமுறை வன்முறையிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாக்க எதிர்வன்முறையைப் பாவிக்கின்றனர். தமிழ் மக்கள் வன்முறையை நிராகரிக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் சிங்கள ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை வன்முறையை தலைகுனிந்து ஏற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

இவ்வாறான ஒரு நிலையில் சம்பந்தன் வெளிட்ட கருத்து எதனைப் பின்புலமாகக் கொண்டது என்பது பட்டவர்த்தனமாகின்றது.

தமிழ் மக்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு – கிழக்கு இணைந்த உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரப் பகிர்வுக்குத் தான் ஆணை வழங்கினரே தவிர, சம்பந்தனும் சுமந்திரனும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வுக்கல்ல.

ஜனநாயக வழிமுறையில் அது தான் சாத்தியம் என்பதால் அதற்கு ஆணை வழங்கினரேயொழிய தமிழ் ஈழக் கோரிக்கையை நிராகரிக்க ஆணை வழங்கவில்லை.

விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைமைப் பங்கையோ, விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தையோ, தமிழ் ஈழக் கோரிக்கையையோ தமிழ் மக்கள் என்றும் நிராகரித்ததில்லை. நிராகரிக்கப் போவதுமில்லை. அது தமிழ் மக்களின் இறுதி இலட்சியம்.

ஆனால் தற்சமயம் சில இடைக்காலத் தீர்வு முயற்சிகளை மேற்கொள்வதற்காகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அதன் அர்த்தம் அடி பணிந்து போவதல்ல.

தொடர்ந்து சம்பந்தன் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு சிங்கள இனவெறி அரசுக்கு சாமரம் வீசுவாரானால் தமிழ் மக்களிடமிருந்து மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தே புறமொருக்கப்படும் நிலையே எழும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தனதோ, சுமந்திரனதோ தனிச் சொத்து அல்ல, அது தமிழ் மக்களின் இன்றைய கால கட்டத்தின் தலைமை சக்தி. இது தானாக் தோன்றியது அல்ல. கடந்தகாலங்களில் நிகழ்த்தப்பட்ட ஈகங்களது விடுதலைக்கான உயிர்க்கொடைகளினதும் தொடர் பரிணாமம், அதை எவரும் பிழையாக வழிநடத்த அனுமதிக்க முடியாது.

– தமிழ்லீடர் ஆசிரியர்பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*