kusumbu

‘ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதேங்கோ’ – புளியடி பூராயம்

வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள்? கனகாலமாய் போச்சுது..  ஆனாலும் பாருங்கோ உங்கள் ஒருத்தரையும் மறக்கமுடியாது தானே பாருங்கோ,

எதாவது பிரியோசனமாய் உங்களுக்குச் சொல்லக் கிடைச்சால் தான் பாருங்கோ நாங்கள் சொல்லுறத கேக்க உங்களுக்கும் ஆயையாய் இருக்கும் பாருங்கோ. அது சரி இப்ப நாட்டில நிறைய சம்பவங்கள் நடக்குது பாருங்கோ. அங்கை இருக்கிறவை எப்ப ஆருக்கு என்ன நடக்கும் எண்டது தெரியாம முழுசிக் கொண்டு தான் இருக்கினம் பாருங்கோ. சனநாயக நாட்டில இதெல்லாம் சகஜம் பாருங்கோ..

இண்டைக்கு ரண்டு கதை கட்டாயம் உங்களுக்கு சொல்லோணும் எண்டு யோசிச்சிருக்கிறன் பாருங்கோ..

படிச்சவை, விசயம் தெஞ்சவை கனபேர் இருக்கினம் எண்டு சொல்லுற யாழ்ப்பாணத்தில ஒரு பட்டறை எண்ட பெயரில ஒரு மாநாடு நடக்குதாம் அதப்பற்றிக் கேள்விப் பட்டியளோ தெரியல்ல,

‘வடக்கு மாகாண கல்வி முறைமை மறுசீரமைப்பு பற்றிய ஆய்வுப் பட்டறை’ அதுதான் பாருங்கோ அந்த பட்டறை..

ஓம் பாருங்கோ, எங்கட வடக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் தான் பாருங்கோ அந்த மாநாட்ட ஏற்பாடு செய்திருக்கிறார். உண்மை தான் பாருங்கோ, கல்வி சம்பந்தமான மாநாட்ட கல்வி அமைச்சு அதுவும் எங்கட சனம் தெரிவு செய்த கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருக்கெண்டால் எல்லாருக்கும் அது ஒரு நல்ல விஷயமாத் தான் தெரியும்.

இதுக்குள்ள என்ன அவலம் எண்டால், எங்கட கல்வி அமைச்சர் அந்த மாநாட்ட பெரீசா…. நடத்திறதுக்கு யோசிச்சவராம், அது மட்டுமில்ல அவர் மத்திய அரசில காசு கேக்கப் போய் கடைசியில அந்த மனிசன் வில்லங்கத்துக்க மாட்டுப்பட்டுப் போச்சுதாம் பாருங்கோ.

உதவி கேட்ட பிறகு, அவையள் சொல்லியிருக்கினம், ஆய்வுப் பட்டறை நடத்திறதெண்டால், ஆளுநர் மற்றது மத்திய கல்வி அமைச்சின்ர ஆலோசனைப் படிதான் நடத்தவேணும், தாங்கள் சொல்லுறது எல்லாத்தையும் கேக்கவேணும், மாகாண சபை அமைச்சர் மார், உறுப்பினர்கள் ஆருக்கும் சொல்லப்படாது. அவையள் அந்த நிகழ்ச்சிக்கு வரப்படாது  எண்டு  இறுக்கமாய் சொல்லியிருக்கினம் பாருங்கோ.

அந்த மனிசன் அவர்தான் பாருங்கோ கல்வி அமைச்சர்.. அந்தாள் ஒரு விறைச்ச மனிசன் பாருங்கோ.. அவர் பயப்பிடேல்லாயாம் எண்டால்.. அவர் துணிஞ்சு முடிவெடுத்திருக்கிறார்.. ஓம் பாருங்கோ அவர் வடக்கு மாகாண சபைக்கோ கூட்டமைப்புக்கோ பயப்பிடேல்லயாம் எண்டால் பாருங்கோவன் ஆ..

அவையள் சொல்லுறதுக்கு முழுசா கட்டுப்படுறன் எண்டு முடிவெடுத்திருக்கிறார். அவையள் எண்டால் ஆர் எண்டு தெரியும் தானே, எங்கட ஆளுநரும் மத்திய கல்வி அமைச்சர் பந்துலகுணவர்த்தனவும் சொல்லுறத் தான் கேப்பன் எண்டு அடம்பிடிச்சது மட்டுமில்ல பாருங்கோ அவரோட தெரிவு செய்யப்பட்ட மற்ற மாகாண சபை உறுப்பினர் மாரோ, அமைச்சர் மாரோ ஆய்வுப் பட்டறைக்கு வரப்படாது எண்டதில சரியான இறுக்கமாய் இருந்தவராம் எண்டால் பாருங்கோவன்.

சில நேரம் மற்ற மனிசர் ஒருத்தரும் படிச்சாக்கள் இல்லயோ எண்டும் தெரியேல்ல பாருங்கோ..!

இதுக்கிடையில இன்னுமொரு விஷயம் வெளியில தெரியாது பாருங்கோ.. நான் ஒரு ஓட்டை வாய் பாருங்கோ. தெரிஞ்சது ஒண்டையும் வெளியில சொல்லாமல் வைச்சிருக்கத் தெரியாது பாருங்கோ.. சரி பாருங்கோ.. இப்ப சொல்லப் போற விசயத்த நீங்கள் ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதேங்கோ.. சரியே?

ஓம் பாருங்கோ,

போன மாசத்துக்கு முதல் மாசம் எண்டு நினைக்கிறன் சரியா ஞாபகம் இல்ல. வயது போகப் போக எல்லாம் அயத்துப் போகுது பாருங்கோ.

யாழ்ப்பாணத்தில ஏ.எல் படிக்கிற கொஞ்சப் பெடியளுக்கும் பெடிச்சியளுக்கும் பலாலியில ஒரு பயிற்சி நடந்தது தெரியும் தானே? ஓம் பாருங்கோ தலைமைத்துவப் பயிற்சி தான் பாருங்கோ. அந்தப் பயிற்சி ஆர் செய்தது எண்டு கேக்கிறியளே? அவை தான் பாருங்கோ எங்கடை சீருடைக் காரர் தான் பாருங்கோ அந்த பயிற்சியை நடத்தினவை.

அதுக்கென்ன எண்டு கேக்கிறியளே?

அந்தப் பயிற்சி முடிவிலை சான்றிதழ் குடுத்தவையாம்.. அத வாங்கிப் பாத்த எங்கட பெடியளுக்கும் பெடிச்சியளுக்கும் தாங்க முடியாத சந்தோசமாம்..

ஏன் எண்டு கேக்கிறியளே?..

அந்தச் சான்றிதழில ஒரு பக்கத்தில எங்கட கல்வி அமைச்சரின்ர, ஓம் பாருங்கோ வடக்கு மாகாண கல்வி அமைச்சரின்ர கையெழுத்தும் இருந்ததாம், மற்றப் பக்கத்தில இராணுவத் தளபதியின்ர கையெழுத்தும்  இருந்ததாம் எண்டு பெடியள் பெடிச்சியள் பெருமையா சொல்லியிருக்கினம் பாருங்கோ..

இதுகளக் கேக்க உங்களுக்கு புல்லரிக்கேல்லயே?,

இதுதான் பாருங்கோ நல்லிணக்கம் எண்டுறது.. ஓம் பாருங்கோ அவையளை வடக்கில இருந்து வெளியேற்ற வேணும் எண்டு மேடைக்கு மேடை முழங்கினவை.. பிறகு பயிற்சியளுக்கு சான்றிதழ் வழங்கி தங்கட நல்ல இணக்கத்தை (!) காட்டியிருக்கினம் பாருங்கோ.

இவைக்காக தேர்தல் காலத்தில வேலை செய்த எத்தினை பேர் அடிவாங்கினவ. சொத்துக்கள இழந்தவை எல்லாம் பாதிக்கப்பட்டவைக்குத் தான் பாருங்கோ வெளிச்சம்.

‘படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்’, ‘ஊருக்கு உபதேசம் உக்கில்லையடி எண்டு’ அந்த நாளையில எங்கட பெரிசுகள் சும்மாயே சொன்னதுகள்.

ஆனால் பாருங்கோ எங்கட தாய்க்கட்சி தேப்பன் கட்சி எண்டு சொல்லுவினம் தானே அதுதான் பாருங்கோ தமிழ் அரசுக்கட்சி,

அந்தக்கட்சியில இருந்து தொடந்து குப்பை கொட்ட முடியாது எண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி எண்ட ஒரு கூட்டணியை உருவாக்கி, அதில இருக்கேக்கே உசிர விட்ட தந்தை இருக்கிறார் தானே, அவர் தான் பாருங்கோ தந்தை செல்வா,

அந்த மனிசன் சொன்னதாம் பாருங்கோ ‘தமிழினத்த கடவுள் தான் காப்பாற்றவேணும்’ எண்டு அது சரி பாருங்கோ, அவர் சொன்னது சரி பாருங்கோ,

ஆனால் ஒரு விஷயத்தை கவனிச்சியளே?,

தமிழனத்தக் கடவுள் ஆரிட்ட இருந்து காப்பாற்றவேணும் எண்டு அந்தப் பெரிய மனிசன் சொல்லேல்லத்தான பாருங்கோ.. இன்னும் என்ன என்ன நடக்கப் போகுது எண்டத பொறுத்திருந்து தான் பாக்கோணும் பாருங்கோ..

அதுக்கிடையில வடக்கு மாகாண சபையில இருக்கிற இன்னுமொரு பெரிய மனிசன் அமைச்சுக்காக வாங்கின காசில என்ன செய்யிறது எப்பிடிச் செய்யிறது எண்டது பிடிபடாமல் சரியா வில்லங்கப்படுதாம் பாருங்கோ.. அவர் என்ன செய்யிறார்.. அவர் ஆர் எண்டு அறிய நீங்களும் ஆவலாய்த்தான் பாருங்கோ இருப்பியள், ஆனால் பாருங்கோ அதைப்பற்றிச் சொல்லுறதுக்கு இப்ப நேரம் காணாது அடிக்கடி தமிழ்லீடருக்கு வாருங்கோ.. இன்னும் நிறைய நாட்டு நடப்புக்களப் பற்றி எதாவது சொல்லிக் கொண்டே இருப்பம் பாருங்கோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*