nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 37

அன்று இரவு அரசியல்துறைப் படையணி வந்திறங்கியது. சிவத்தின் பொறுப்பிலிருந்த படையணியிடமிருந்து சகல காவலரண்களையும் பொறுப்பேற்றுக் கொண்டது. ரூபாவின் அணியையும் பின்நகர்த்தி அதற்குப் பதிலாக வேறு ஒரு மகளிர் அணி அந்த இடத்தில் நிறுத்தப்பட்டது.

சிவம் தனது அணி பின்னகர்த்தப்படுவதை விரும்பியிராத போதிலும் கூட ஒரு வித்தியாசமான எதிர்பார்ப்பு அவனையும் சந்தோசப்படவைக்கத்தவறவில்லை. ஏதோ ஒரு பெரிய தாக்குதலை நடத்துவதற்கோ அல்லது முகாம் தகர்ப்பு நடவடிக்கை ஒன்றை நடத்துவதற்கோ தாங்கள் காவல் வரிசையிலிருந்து பின் பகுதிக்கு அழைக்கப்பட்டதாகவே கருதினான். கட்டளைப் பீடம் தனது ஆற்றலை அங்கீகரித்திருப்பதாகவே தனக்குள் பெருமைப்பட்டுக்கொண்டான்.

அவர்கள் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் அங்கு அரசியல்துறையின் பொறுப்பாளர் சுகுணன் வந்து சேர்ந்தான்.

தீச்சுவாலை எதிர்ச்சமரின் போது சிவமும் சுகுணனும் ஒரே களத்தில் நின்றே போரிட்ட நினைவுகள் சிவத்தின் நினைவில் வந்து போயின. பல் குழல் பீரங்கிகளின் குண்டுமழையின் நடுவில் நின்று போராடுவதற்கு அபரிமிதமான துணிவும், மனித சக்திக்கு மேம்பட்ட சுறுசுறுப்பும் தேவை. ஒரு சில விநாடிகள் தாமதம் கூட ஒரு அணியையே முழுமையாக அழித்துவிடும். அதை விட குண்டுகள் விழும் இடம் தொடர்பாகத் துல்லியமான கணிப்பும் தேவை. எதிரிகள் பீரங்கிகளை நகர்த்தும் தூரங்கள் பற்றிய ஊகங்களில் விடும் பிழைகள் கூட போராளிகளுக்குப் பேரழிவை ஏற்படுத்திவிடும்.

பல்குழல் பீரங்கிகள் குண்டு மழை பொழிய ஆரம்பிக்கும் போது அதன் எல்லைக்கு வெளியே தயார் நிலையில் காத்துக்கிடக்க வேண்டும். குண்டுப் பொழிவு முடிந்ததும் அவர்கள் அடுத்த முறைக்கான குண்டுகளை பீரங்கிகளுள் போட்டு ஏவத்தொடங்குவதற்கான அந்த சிறிய இடைவெளிக்குள் புகை மண்டலத்துக்குள்ளால் புகுந்து அந்தப் பகுதியைத் தாண்டிவிடவேண்டும். அடுத்த முறை குண்டுகள் வீச ஆரம்பிக்கும் போது முன்னேறி வரும் வடையினரை எதிர்பாராத விதத்தில் புகைமண்டலத்துக்குள்ளால் முன்னேறிய போராளிகள் தாக்கி படையினரை அழித்தொழிப்பர். படையினரும் போராளிகளும் அருகருகாக நின்று போரிடும் நிலையில் எறிகணைகள் வீசுவது நிறுத்தப்படும். அந்த நேர இடைவெளிக்குள் அடுது்த போராளிகளின் அணி முன்னேறிக் களமிறங்கும். பெரும்பாலும் படையினர் பின்வாங்கி ஓடும் நிலைமையே ஏற்படும்.

இப்படியான சண்டைகள் சுகுணனுக்குக் கைவந்த கலை. போராளிகளின் இழப்பின்றியே படையினரைத் துவம்சம் செய்வான். அதற்கு அவனுடைய துல்லியமான கணிப்பும் வேகமும் முக்கியமான காரணங்களாகும்.

அருகில் வந்த அவன் போராளிகளின் தனித்துவமான ‘இராணுவ வணக்கம்’ செலுத்திவிட்டு, “என்னைத் தானண்ண இஞ்சை பொறுப்பாய் விட்டிருக்கினம்”, என்றான்.

சிவம் சிரித்தவாறே, “தெரியும்.. வலு கவனமாய் இருக்கவேணும். இஞ்சை உடைக்க விட்டமோ, பிறகு சண்டையின்ரை போக்கே திசை மாறிப் போடும், நீங்கள் செய்வியள்.. உங்களுக்கு நல்ல அனுபவமும், கெட்டித்தனமும் இருக்குத்தானே”, என்றான்.

“நான் செய்வனண்ணை! ஆனால்..”, என்றுவிட்டு சுகுணன் இடைநிறுத்தினான்.

“என்ன சொல்லுங்கோ…”

“முக்கால் வாசிப்பேர் புதுப் போராளியள்…” அதிலையும் ஒரு பகுதி கட்டாய சேவையிலை இணைஞ்சவை. இவையை வைச்சுக் கொண்டு சண்டையை நடத்திறது..”

“நீங்கள் அப்பிடி நினைக்கக் கூடாது.. நாங்களும் கூட ஒரு நாள் புதுப்போராளியளாய் தான் களத்திலை இறங்கினனாங்கள். இப்ப அணித் தலைவர்கள் மட்டத்துக்கு வளரேல்லையே?”

“உண்மை தான்.. அதாலை தான் நானும் பொறுப்பேற்க ஒப்புக்கொண்டனான். உயிர் போனாலும் உடைக்க மட்டும் விடமாட்டன்”,

அவனின் குரலில் உறுதி தொனித்தது.

சிவம் அந்த இடம் பற்றியும், படையினர் முன்னேறக்கூடிய விளாத்திக்காடு பற்றியும், மடு, பரப்புக்கடந்தான் காடுகள் பற்றி மண்ணிலேயே விரலால் கீறி சில விளக்கங்களையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

கிடங்கும் மண்ணும் அறுத்தோடிகளும் நிறைந்த பாதையில் வாகனம் மெல்ல மெல்லவே நகரவேண்டியிருந்தது. ஏற்கனவே பள்ளமடுவுக்கு வரும்படி கட்டளையிடப்பட்டிருந்ததும் வாகனம் அதையும் கடந்து இலுப்பைக்கடவையை நோக்கிச் சென்றது. பின்பு அது இலுப்பைக்கடவை மருத்துவமனை தாண்டியதும் வலது புறமாக இருந்த ஒரு மண் பாதையில் இறங்கியது. சிறிது தூரம் வயல் வெளி ஊடாகச் சென்ற அந்த வாகனம் அடத்தியான பெரு மரங்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதியில் இறங்கிச் சிறிது தூரம் சென்ற பின்பு நின்றது.

அது சில ஆண்டுகளின் முன்பு சிறுத்தைப் படையணியின் முகாமாக இருந்து பின்பு ரணகோஷ படை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட இடம் என்பதைச் சிவம் இனம் கண்டுகொண்டான்.

அங்கு ஏற்கனவே ஒரு அணி தங்கியிருந்தது. சிவத்தின் அணியினரும் இறங்கி உள்ளே சென்றனர்.

அவர்கள் சென்றடைந்த சிறிது நேரத்தில் ரூபாவின் படையணியும் அங்கு வந்து சேர்ந்தது.

அனைவரும் கைக்குண்டு, பிஸ்ரல் ஏனைய துப்பாக்கிகள் என சகல ஆயுதங்களையும் களஞ்சியத்தில் கையளிக்கும்படி கேட்கப்பட்டனர்.

மலையவனுக்கு எதுவுமே புரியவில்லை. அவன் சிவத்தின் அருகில் வந்து, “என்னண்ணை.. எல்லாம் ஒரே குழப்பமாய்க் கிடக்குது”, எனக்கேட்டான்.

“குழம்பாத.. எல்லாம் ஏதும் நல்லதுக்காய்த்தானிருக்கும்”, என்று சிரித்தவாறே சொன்னான் சிவம். உண்மையில் அவனுக்கும் எதுவுமே புரியவில்லை என்ற போதும் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் அனைவருக்கும் புரியாணி சாப்பாடு வழங்கப்பட்டது. சாப்பிட்டு முடிந்த பின்பு ஐஸ்கிறீமும் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் சிவம் சிறப்பான சாப்பாட்டை விட மேலுமொரு மகிழ்ச்சியை மனதுள் அனுபவித்தான். முன்பெல்லாம் முகாம் தாக்குதல்களுக்குப் போவதற்கு முதல் நாள் போராளிகளுக்கு அதி சிறப்பு உணவுகள் வழங்கப்படுவதுண்டு. எனவே நாளையோ அல்லது மறுநாளோ ஒரு பெரும் தாக்குதல் இடம்பெறக்கூடும் என எதிர்பார்த்தான். அப்படியான நேரங்களில் நிறைந்தளவு ‘கண்டோஸ்’ ரொபி வழங்கப்படுவதுண்டு. ஆனால் அன்று அது மட்டும் வழங்கப்படவில்லை. தாக்குதலுக்குப் புறப்படும் போது அவை தரப்படக்கூடும் என எதிர்பார்த்திருந்தான். சண்டை மும்முரமாக இடம்பெறும் நேரங்களில் சாப்பாடு, தண்ணீர் எல்லாமே இந்தக் கண்டுடோஸ், சொக்லட்டுக்கள் தான்.

திடீரென எல்லோரையும் அங்கு வெளியாக இருந்த ஒரு இடத்தில் ஒழுங்காக அமரும்படி கட்டளை வந்தது. ஐஸ்கிறீம் சுவைத்தவர்கள் கூட அதை அப்படியே வைத்துவிட்டு ஓடிப்போய் அமர்ந்து கொண்டனர்.

திடீரென அவர்கள் எவருமே எதிர்பாராத வகையில் அவர்கள் முன் தேசியத்தலைவரும் வேறு தளபதிகள் இருவரும் தோன்றினர். மலையவன் எட்டி சிவத்திடம், “அண்ணை!”, என்றான். “ஓ.. சத்தம் போடாதை”, என அவனைக் கட்டுப்படுத்தினான்.

முதலில் எல்லோரும் இரு நிமிடங்கள் மாவீரர் வணக்கம் செய்தனர். பின்பு அனைவரும் கொடிவணக்கம் செய்ய தலைவர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். எங்கும் ஒரு பெரும் மகிழ்ச்சி கலந்த அமைதி பரவிக்கிடந்தது. அனைவரும் அமரக் கட்டளைத் தளபதி அந்தக் களமுனையின் முக்கியத்துவம் பற்றியும் மாவீரர்கள் பெற்றுத்தந்த பெரும் வெற்றிகளை நாம் கைப்பறிய விட்டுவிடக்கூடாது என்பது பற்றியும் சில வார்த்தைகள் பேசினார்.

அந்த நேரத்தில் தலைவரின் கண்கள் ஒவ்வொரு போராளிகளின் முகங்களையும் தனித்தனியாக உற்று அளந்து கொண்டிருந்தன. அந்தக் கண்களின் கூர்மையான ஒளி போராளிகள் முகங்களில் படிய அவர்களின் உடலும், மனமும் சில்லிட்டு எங்கோ ஆகாய வெளியில் மிதந்தன. சிவத்தின் பக்கம் அந்தப் பார்வை படிந்த போது அவரின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பரவியது. அவன் அப்படியே உருகிப் போய்விட்டான்.

சிவத்தின் கவனம் கட்டளைத் தளபதி ஆற்றிய உரையில் செல்லவில்லை. குடாரப்பு மாபெரும் தரையிறக்க நடவடிக்கைக்குப் புறப்பட முன்பு இப்படி ஒரு கூட்டத்தில் தலைவர் சொன்ன வார்த்தைகள் அவன் நினைவில் “உங்களை இப்ப கடற்புலியள் படகிலை கொண்டு போய் இறக்குவினம் திரும்பி வரயுக்கை நீங்கள் தரையாலை நடந்து வருவியள்”

தலைவர் சொன்னது போலவே படகில் போயிறங்கிய அவர்களின் அணி பரவைக்கடல் தாண்டி, சேறும் சகதியும் கடந்து, இராணுவத்தை உடைத்து உட்புகுந்து, இரு பக்கங்களிலும் விமானக் குண்டு வீச்சுக்களுடனும் கனரக வாகனங்கள், ஆயுதங்களுடனும் அலை அலையாய் வந்த இராணுவத்தினருடன் சமராடி ஆனையிறவு முகாமைக் கைப்பற்றி பெரும் வெற்றியுடன் போராளிகள் தரையால் நடந்து வந்து ஆனையிறவில் கொடியேற்றினர். அந்த சக்தி மிக்க வார்த்தைகள் நினைவுக்கு வந்த போது தலைவரில் இருந்து ஒரு ஆத்ம ஒளி தன்னில் பாய்வது போல் அவன் உணர்ந்தான்.

தலைவர் அதிகமாக எதுவும் பேசவில்லை. போராளிகளின் வீரத்தையும், தியாகத்தையும் பாராட்டிவிட்டு அவர், “நாங்கள் இப்ப ஒரு தற்காப்புச் சமரிலை ஈடுபட்டிருக்கிறம். வலிமையான ஒரு தாக்குதல் தான் உண்மையான ஒரு தற்காப்பு. ஆனால் எப்பவும் நாங்கள் இடத்தையும் பலத்தையும் தக்க வைக்கிற மாதிரி எங்களுடைய வியூகங்களையும் அமைக்க வேணும். பலத்தை இழந்து இடத்தைத் தக்க வைச்சால் பிறகு இடத்தையும் இழக்கவேண்டி வரும். பலத்தைப் பாதுகாத்து இடத்தை இழந்தாலும் பிறகு இடத்தைப் பிடிக்கலாம். ஒரு போரிலை வீரம் எவ்வளவு முக்கியமோ, தந்திரோபாயமும் அவ்வளவு முக்கியம். ஆன படியால் நாங்கள் கூடியவரை இழப்புக்களைத் தவிர்த்து எங்கடை தற்காப்புச் சமரை நடத்தவேணும்”, எனக் கூறி முடித்தார்.

அவர் எல்லோரிடமும் விடைபெற்றுச் சென்ற பின்பும் கூட சிவத்தால், அவர் ஏற்படுத்திய உணர்வுகளிலிருந்து விடுபட முடியவில்லை. அவர் “வலிமையான ஒரு தாக்குதல் தான் உண்மையான தற்காப்பு”, எனக் குறிப்பிட்டது மீண்டும் மீண்டும் அவனின் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் வெகு விரைவில் ஒரு பெரும் தாக்குதல் நடவடிக்கைக்குக் கட்டளை வருமென எதிர்பார்த்தான்.

போய்ப்படுத்த சிவம், கண்டோஸ் கைக்கு கிடைக்கப் போகும் கனவுகளுடன் தூங்கிப்போனான்.

காலையில் மலையவன், கண் விழித்துப் பார்த்தபோது அந்த முகாமில் ஏறக்குறைய பல்வேறு அணிகளைச் சேர்ந்த இருநூறுக்கு மேற்பட்ட ஆண், பெண் போராளிகள் கூடியிருந்தனர். அதைக் கண்டதும் வெகு விரைவில் ஒரு பாரிய தாக்குதல் இடம்பெறக் கூடும் என்றே அவனும் எதிர்பார்த்தான். ஒரு வித மனத்துள்ளலுடன் காலைக் கடன்களுக்காக புறப்பட்டான்.

அந்த முகாம்களுக்கு அண்மையில் பாலியாற்றின் ஒரு சிறு கிளை ஓடிக்கொண்டிருந்தது. அது வற்றி மணலாறாகக் காட்சியளித்த போதிலும் நடுவில் ஒரு சிறிய வாய்க்கால் போன்று நீர் போய்க்கொண்டிருந்தது. மருத மரங்களைத் தடவி வந்த காலைக் காற்று உடலுக்கு ஒரு விதமான தென்பை ஏற்படுத்தியது. ஒரு நாயுருவித் தடியை முறித்து பல் தீட்டிவிட்டு, ஆற்று நீரில் முகத்தைக் கழுவி விட்டு முகாம் நோக்கி நடந்தான்.

அவன் முகாமுக்குள் போனபோது தனது அணியினருக்குத் தேனீர் எடுத்துச் சென்று கொண்டிருந்த ரூபா அவனைக் கண்டுவிட்டாள். அருகில் வந்த அவள் ஒரு குவளையில் தேனீரை ஊற்றி அவனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கி வாயில் வைக்கப் போனபோது மரத்திலிருந்த ஒரு கீச்சிட்டான் குருவி, “கீச்.. கீச்.. கீச்சா”, எனக் கத்தியது.

தேனீரை வாயில் வையாமலே திரும்பி மரக் கொப்பை பார்த்தான்.

அது வாலைப், “பட பட வென” அடித்தவாறு மீண்டும் கத்தியது. மலையவனின் கண்கள் திடீரெனச் சிவந்து கலங்கின.

“என்னடா.. என்ன.. நடந்தது..?”

அவன் ஒரு நீண்ட பெருமூச்சுடன்.. “என்ரை கீச்சிட்டான் குருவியை நான் தானே சுட்டுக் கொண்டனான்” என்றான்.  அதற்கு மேல் அவனால் பேச முடியாது அவனின் குரல் தளதளத்தது.

அவனுக்கு தான் வதனியைச் சுட்டுக்கொன்றது நினைவுக்கு வந்துவிட்டது என்பதை ரூபா புரிந்து கொண்டாள்.

“டேய்.. நீ சுடாமல் விட்டிருந்தால் ஆமிக்காரர் அவளைப் படாத பாடு படுத்திக் கொண்டிருப்பாங்கள். அவளுக்கு நீ குடுத்தது கௌரவமான வீரச்சாவு. வித்துடலையும் எடுத்து மாவீரர் துயிலும் இல்லைத்திலை விதைச்சாச்சு. இது உனக்குப் பெருமையடா!”

அவன் எதுவும் பேசவில்லை. புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

ஒரு சகோதரிக்குரிய வாஞ்சையுடன், “சரி சரி.. தேத்தண்ணியைக் குடியடா மலையாண்டி”, என்றாள் ரூபா.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*