தென்னாபிரிக்காவில்-நடந்தது-என்ன

கூட்டமைப்புடன் சென்ற சிங்களவர்; தென்னாபிரிக்காவில் நடந்தது என்ன?

ஜெனீவாப் போர்க்களத்தில் ஏதோ ஒருவகையில் தோல்வியைச் சந்தித்து சர்வதேச விசாரணையை எதிர்கொண்டுள்ள அரசு, குறித்த விசாரணைக்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் நவிப்பிள்ளை அம்மையாரின் நாய்க்குக் கூட இலங்கை வர அனுமதியில்லை என்றும் பகிரங்கமாகவே மார் தட்டி வருகிறது. இந்த இடத்தில் தாயகத்தில் வாழும் மக்கள் சாட்சியமளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல்களும் அடிக்கடி வெளியாகிவருகின்ற நிலையில் சிங்கள அரசு கொண்டிருக்கின்ற அடாவடித்தனம் புலப்பட்டு நிற்கிறது. இதனிடையே அரசு தமிழினத்துக்கு எதிராக மேற்கொள்கின்ற சூழ்ச்சி நடவடிக்கையில் எம்மவர்களும் துணைபோகின்றமை தொடர்பில் பல தடவைகள் சுட்டிகாட்டியுள்ள போதிலும் இடைவிடாத இன விரோதச் செயல்கள் நடைபெற்றுவருகின்றமை எமது மக்களை அங்கலாய்க்க வைக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவுக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந் நாட்டில் முக்கிய பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களில் ஈடுபட்ட அதேவேளை தென்னாபிரிக்கக் குழு விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தனர். கூட்டமைப்பு தென்னாபிரிக்கா பயணம் மேற்கொண்ட சம்பவங்கள் தொடர்பிலான மேலோட்டமான சில தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் உண்மையில் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சில அதிர்ச்சி தரும் விடயங்கள் தொடர்பிலான தகவல்களும் வெளிவந்திருக்கின்றன.
முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் உறுப்பினர்கள் சுரேஷ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பயணமாகியிருந்த போதிலும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பயணத்தில் பங்கேற்றதாக தகவல்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. இந்த நிலையில் அங்கு சென்ற குழுவில் மாவை சேனாதிராஜாவை இணைப்பதற்கு பயணச் செலவுக்காக பணம் இல்லை என்று காரணம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சேனாதிராஜாவுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கிறது. ஆனால் இதில் அதிர்ச்சி தரும் விடயம் கூட்டமைப்பின் நால்வர் அடங்கிய குழுவில் டிலான் என்கின்ற ஒரு சிங்களவர் இடம்பெற்றிருந்தமை தான். ஜெனீவா உட்பட்ட பயணங்களுக்கு தன்னுடனேயே சுமந்திரனால் அழைத்துக் கொண்டு செல்லப்பட்டு வரும் குறித்த டிலான் என்ற நபர் யார்? அவர் என்ன தேவைக்காக தம்முடன் அழைத்துவரப்பட்டார் என்ற விடயங்கள் சுரேஷ் பிறேமச்சந்திரனுக்கோ, செல்வம் அடைக்கலநாதனுக்கோ தெரிந்திருக்கவில்லை என்று தென்னாபிரிக்காவில் உள்ள முன்னணி தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் ஒருவர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
குறித்த சிங்கள நபர் கூட்டமைப்பினர் தென்னாபிரிக்காவில் பங்கேற்ற அனைத்து சந்திப்புக்களிலும் பங்கு கொண்டிருந்ததாகவும் அறிய முடிகிறது. உண்மையில் குறித்த நபர் அரசினுடைய புலனாய்வு அமைப்பினைச் சேர்ந்தவராகவே இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மாவை சேனாதிராஜாவை நிராகரித்து அவரிலும் முக்கியத்துவம் பெற்ற ஒரு நபர் கூட்டமைப்பு நடவடிக்கைகளில் பங்குகொண்டதாக முன்னைய காலங்களில் தெரியவந்திருக்கவில்லை.
தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவாக வெளித் தெரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழின விரோத சக்திகளை அதி உயர் பீட நடவடிக்கைகளில் மிக அருகாக வைத்துக் கொண்டு அரசியல் செய்வதும் அதற்கு சாணக்கியம் எனப் பெயர் சூட்டுவதும் அருவருக்கத் தக்க சம்பவங்களாகவே அமைந்துவருகின்றன.
இன விடுதலைப் போருக்காக பல்லாயிரம் மாவீரர்கள், பல இலட்சம் மக்களின் உயிர்கள் வீண்போனமை தொடர்பிலான எந்த வலியும் புரியாதவர்கள், எந்த துயரும் அறியாதவர்கள் மிகப் பெரிய இன விடுதலையை குட்டிச்சுவராக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது தமிழ் மக்களை கொதிப்படைய வைக்கிறது. தென்னாபிரிக்காவிற்கான பயணம் மேற்கொண்ட கூட்டமைப்புக்குழு, மக்கள் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்புக்களில் ஈடுபட்டிருக்கின்றது.
குறித்த சந்திப்புக்களில் தமிழர் தாயகம் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைகள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ் உணர்வாளர்களும் ஊடகவியலாளர்களும் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளன. தனிநாட்டு தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் அதனை முற்றாக நிராகரித்தாகவும் ஐக்கிய இலங்கைக்குள் பிரிக்க முடியாத இன ஐக்கியத்தை வலியுறுத்துவம் வகையிலான தீர்வையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பதுடன் தம்மால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றையாட்சி அடிப்படையிலான தீர்வினை தாம் வலியுறுத்தியதாகவும் அதனை ஏற்றுக்கொண்டே தமிழ் மக்கள் வாக்களித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்விகண்டதாகவும் அவர்கள் முன்வைத்த கோரிக்கையினை தமிழ் மக்கள் நிராகரித்ததாகவும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்ததாக தென்னாபிரிக்காவிலுள்ள தமிழ் உணர்வாளர்கள் கவலை பொங்க தெரிவித்தனர். இந்தச் சந்திப்பில் பங்கு கொண்ட செல்வம் அடைக்கலநாதன் தனது வழமையான பாணியிலான மௌனம் காத்தலை அங்கும் கடைபிடித்ததாகவும் சுரேஷ் பிறேமச்சந்திரன் பொதுவாக்கெடுப்பு என்பது நல்ல முயற்சி என்றும் அதன் மூலம் மக்களின் நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியிருந்த போதிலும் அது தனது தனிப்பட்ட கருத்து என அவர் கூறியதாகவும் தென்னாபிரிக்காவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நிகழ்வில் பங்குகொண்ட உணர்வாளரக்ளின் அடிப்படையில்,
தமிழ் மக்களுக்கு வலுவான தீர்வு எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் சம்பந்தன் – சுமந்திரன் ஆகியோர் மிகத் தெளிவாக இருப்பதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கின்றனர். இதேவேளை தனி நாட்டுக் கோரிக்கை தொடர்பிலான கடந்த காலப் போராட்டங்கள் தோல்வி கண்டதாக சம்பந்தன் தெரிவித்ததாகவும் இந்த முயற்சி வீணானது என்று அவர் குறிப்பிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று வந்து நிற்கும் இடம் சரியான ஒரு இராஜதந்திரியின் பார்வையாக இருந்தால் மிகத் தெளிவான ஒரு நிலைப்பாட்டில் எமது விடுதலையை கொண்டு செல்லக்கூடிய ஒரு படி நிலை வளர்ச்சியாகவே கருதப்படவேண்டியது. ஆனாலும் மூத்த பழுத்த அரசியல் வாதிகளாகவும் எடுத்ததெற்கலாம் அரசியல் சாணக்கியம் எனச் சொல்லிக்கொள்வதுமாக தமது தவறான அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் இரா.சம்பந்தன் எமது போராட்டத்தின் கடந்த கால அர்ப்பணிப்புக்கள், நகர்வுகளின் தொடராகத் தான் தாம் இருக்கும் நாடாளுமன்றக் கதிரை கிடைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவில்லையா? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
அரசியல் சாணக்கியம் என்ற பெயரில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என பரப்புரை செய்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முடிந்தளவு பாடுபட்ட சம்பந்தன் இறுதியில் கிழக்கு சபையை சிங்களப் பேரினவாதிகளுக்கு தாரை வார்த்ததை ஒரு சிறிய உதாரணமாகச் சொல்ல முடியும். அது ஒருவேளை அரசியல் சாணக்கியமான விடயமாகக் கூட இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. கிழக்கு மாகாண சபையை ஆளுந்தரப்பே ஆட்சி செய்யவேண்டும் என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் நடவடிக்கைகளில் இறங்கினாரா சம்பந்தன் என்ற வகையிலும் நோக்கமுடியும். இவ்வாறான தூர நோக்கற்ற சின்னத்தனமான நகர்வுகளை முன்னெடுக்கும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர், உலகச் சுழற்சியில் எமது இனத்திற்கு கிடைக்கவிருக்கும் மிக நீண்ட விலை ஊடான விடுதலையை தடுத்து நிறுத்த சூழ்ச்சி செய்யவுள்ளார்களா? என்றே அஞ்சத் தோன்றுகின்றது.
உண்மையில் ஒரு சரியான அரசியல் இராஜதந்திரம் பெற்றவராக சம்பந்தன் இருந்திருந்தால், எமது போராட்டம் ஆயுத வழியில் நசுக்கப்பட்டாலும் சர்வதேச ரீதியில் அது கொண்டு சேர்க்கப்பட்டுள்ளமை, புலத்தில் தமிழ் மக்கள் பெற்றிருக்கின்ற வெற்றிகள் என்பவற்றைக் கொண்டு எமக்கான விடுதலைப் பயணத்தின் அடுத்த கட்டத்தினை மிக நேர்த்தியாகவே நகர்த்திச் செல்ல முடியும். சந்திக்கின்ற ஒவ்வொரு நாட்டு இராஜதந்திரிகளிடமும் ‘தனிநாட்டுக் கோரிக்கை சாத்தியமற்றது’ ‘தனிநாட்டுக்கான முனைப்புக்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன’ போன்ற வசனங்களை திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்வதில் தமது நேரத்தைக் கழிக்க வேண்டிய அவசியமில்லை.
சிங்கள அரசு நினைப்பதை செய்து முடிப்பதில் தீவிரம் காட்டும் சம்பந்தன், தனது அரசியல் சாணக்கியம் தொடர்பிலோ தமது வயது தொடர்பிலோ சுய பரிசீலனையில் ஈடுபட்டால் அது தமிழினத்துக்கு செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக அமைந்துவிடும் என்றே கொள்ள முடியும். இதனைவிடுத்து தமிழினத்திற்கான தீர்வு தொடர்பிலான பேச்சுக்களில் பங்கேற்பதற்காக தனித்தோ அல்லது சுமந்திரனை மட்டும் அழைத்துச் செல்வதோ, அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் சிங்கள இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவிடம் ஆலோசனை பெறுவதோ, தமிழின விரோத சக்திகளாக தம்மை அடையாளப்படுத்தி வருகின்ற டிபிஎஸ் ஜெயராஜ் போன்றவர்களிடம் ஆலோசனைகள் பெறுவதோ, மிக முக்கிய சந்திப்புக்களுக்கு டிலான் போன்ற சிங்களவர்களை துணையாக அழைத்துச் செல்வதோ தமிழ் மக்களுக்கு எந்த வித நன்மையையும் தந்துவிடப் போவதில்லை.
இன விடுதலைக்காக கொடுக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்விலைகளும் அளவிட முடியாதவை, அவை ஒவ்வொன்றும் அளவிட முடியாத தியாகங்களோடும் வரலாறாய் எழுதப்பட்டவை. அந்த உயிர் விலைகளுக்கு காலம் கொடுக்கப்போகும் வெகுமதியை இடையில் புகுந்து கெடுத்துவிடாமல் விடுவதற்காக சம்பந்தன் – சுமந்திரனுக்கு தமிழ் மக்கள் என்ன விலை கொடுக்கவேண்டும் என்பதை யார்தான் கண்டறிந்து சொல்வார்கள்?
-தமிழ்லீடர் ஆசிரியர்பீடம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*