maree

‘மீண்டும் புலிகள்’ – வடக்கில் நடப்பது என்ன? – மாரீசன் –

கடந்த 30 வருடங்களாக இலங்கையின் இனவெறி பிடித்த அரசுகள் தமிழ் மக்கள் மீது ஒரு இன அழிப்புப் போரைக் கட்டவிழ்த்து விட்டன. ஆனால் விடுதலைப்புலிகள் தோற்றம் அவர்களின் நப்பாசையில் மண் வீழ்த்தியது.

அவர்களின் இன அழிப்புப் போரை விடுதலைப் புலிகள் இன விடுதலைப் போரால் எதிர்கொண்டனர். தட்டிக் கேட்க ஆளில்லை என்ற இறுமாப்புக் கொண்ட இராணுவம் காலத்துக் காலம் அடிக்கு மேல் அடிவாங்கி நடு நடுங்கியது.

விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியாத நிலையில் இலங்கை ஆட்சியாளர்கள் சர்வதேச உதவியை நோக்கி ஓடினர். துரோகிகளும் அடிவருடிகளும் அவர்களுடன் கை கோர்த்துக் கொண்டனர்.

புனிதமான தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வடிவம் நயவஞ்சகமான முறையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் தோற்கடிக்கப்பட்டது.

அது இலங்கையின் அரச படைகள் ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகளுடன் நடத்திய போர்.

இன்று மீண்டும் ஒரு போர் தொடங்கப்பட்டுவிட்டது.

எல்லாவற்றையும் இழந்து, இனவாத அரசின் உயிர்ப்பலிகளாலும், ஒடுக்குமுறை நடவடிக்கைகளாலும் நொந்து போயிருக்கும் ஆயுதம் ஏந்தாத எமது மக்கள் மேல் ஒரு போர் தொடங்கப்பட்டுவிட்டது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டமெங்கும் சுற்றிவளைப்புக்கள்; தேடுதல் வேட்டைகள்; கைதுகள்!

தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் உட்பட இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் கைது; அவர்களில் மூவர் பெண்கள்,

எங்கும் பயங்கரம்; எங்கும் எவரும் கைது செய்யப்படலாம் என்ற அச்சமான சூழ்நிலை!திடீர் வீதிச் சோதனைகள்!

வட பகுதி மக்கள் மீது பிரகடனப்படுத்தப்படாத ஒரு போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது! எதிர்த்துத் தாக்க எவரும் இல்லாத போதும் ஒரு தலைப்பட்சப் போர் தொடர்கிறது.

ஏற்கனவே இதற்கான காரணங்கள் பயங்கரவாதக் குற்றப் பிரிவினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.

காணாமற் போன தன் மகன் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு, காணாமற் போனோர் பற்றி விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு என்பவற்றின் முன் சாட்சியமளித்த ஜெயகுமாரியின் வீடு தருமபுரத்தில் சுற்றிவளைக்கப்பட்டது. தேடப்படும் நபரை மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவரும் கைது செய்யப்பட்டார். மறைந்திருந்த நபர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு ஓடிவிட்டார் எனவும் பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

காயமடைந்த பொலிஸாருக்கு உண்மையில் நடந்தது என்ன? அவர் தற்போது எங்கு சிகிச்சை பெறுகிறார் என்பவை எல்லாம் மர்மம் நிறைந்தனவாகவே உள்ளன.

இப்போ ஜெயகுமாரி பூசா முகாமில்; அண்மையில் பருவமடைந்த அவரின் மகள் சிறுவர் இல்லத்தில்;

ஆனால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரைத் தேடும் வேட்டை என்ற பெயரில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவ பொலிஸ் அடாவடித்தனங்கள் தொடர்கின்றன.

எங்கும் ஒரு போர்ச்சூழல் போன்ற பரபரப்பு! வீட்டில் இருப்பவரும் சரி, வீட்டை விட்டு வெளியே செல்பவரும் சரி திரும்பிவருவார்களா? என்பது வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியாது. வெளியே செல்பவர்களுக்கும் புரியாது.

ஆனால் தேடப்படும் ஒரு நபர் உண்மையில் உள்ளாரா? அல்லது அது ஒரு கற்பனைப் பாத்திரமா? என்பதற்கான தெளிவான பதில் எமது மக்களிடம் உள்ளது. மக்களின் கருத்தின் படி அவ்வாறு ஒருவர் இருப்பாரானால் அவர் ஒரு அப்பாவியாக இருக்கவேண்டும் எனவும் அரச தரப்பு அரங்கேற்றும் நாடகத்துக்கு அவர் பலிக்கடாவாக்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.

பூசாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரியோ, தனது வீட்டில் இருந்ததாக சொல்லப்படுகின்ற எந்த ஒரு நபரையும் தான் அறிந்திருக்கவேயில்லை என்றே கூறியிருக்கின்றார். ஆனால் பொலிஸாரோ அந்த நபரை ஜெயகுமாரியே மறைத்து வைத்திருந்ததாக கூறுகின்றனர்.

தமிழ் மக்கள் இப்படி எத்தனையோ நாடகங்களை கண்டும் கேட்டும் அறிந்தவர்கள்.

எப்படியிருப்பினும் –

சில விடயங்கள் மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படக்கூடியவையாக உள்ளன.
அதாவது, ஒன்று இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிலைமைகள் இறுகிவரும் வேளையில் விடுதலைப்புலிகள் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர் என்ற மாயையைப் பரப்பி தமது ஒடுக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது. மற்றையது தாமே புலிகளிடமிருந்து சிங்கள மக்களைக் காப்பாற்றும் இரட்சகர்கள் எனக் காட்டி மேல், தென் மாகாண சபைத் தேர்தல்களில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவது அதேவேளையில் சிங்களக் கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையைத் தொடர்தல்.
இந்த அரசின் கீழ்த்தரமான, காடைத்தனமான தந்திரங்களை சிங்கள மக்கள் உணர இன்னும் நீண்ட காலம் பிடிக்கலாம்.

ஆனால் சர்வதேசம் இலங்கை அரசை நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டது.

அதன் காரணமாக இலங்கை இன்று சர்வதேச அரங்கில் செல்லாக் காசாகிப் போய் நிற்கிறது.

எப்படியோ இலங்கை அரசு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விடுத்தப் போய் மாங்காயும் இல்லை கல்லும் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்படுவது மட்டுமே உறுதி.

– தமிழ்லீடருக்காக மாரீசன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*