mareesan

சர்வதேசத்துக்கு சவால் விடும் இலங்கை – மாரீசன் –

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவாலும் அதன் நட்பு நாடுகளாலும் ஒரு கண்டனத் தீர்மானம் முன்வைக்கப்படவுள்ள வேளையில் இலங்கையின் தருமபுரம் பகுதியில்  வைத்து இரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவர் தென்பகுதி மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்சி பெர்ணாண்டோ, மற்றையவர் அமைதிக்கும் சமாதானத்துக்குமான அமைப்பைச் சேர்ந்த அமைதிபுரம் பிரதேசப் பங்குத்தந்தை வண.பிரவீன் மகேசன்.
இருவரும் சர்வதேச மட்டத்திலான மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்.
இறுதிப் போரின் போது காணாமற் போன இளைஞனின் தாயாரான பாலச்சந்திரன் விமலகுமாரியும் அவருடைய 13 வயது மகளான விபூசிகாவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து அது தொடர்பான தகவல்களை அறிய அவர்கள் அங்கு சென்றிருப்பதாக தெரியவருகிறது.
அது மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில் அவர்களின் கடமை.
எனினும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சர்வதேச அளவிலும் முனைப்படைந்திருக்கும் இவ் வேளையில் கூட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது மனித உரிமைகளுக்கு விடுக்கப்பட்ட சவால் மட்டுமல்ல மனித உரிமைககள் பற்றி அக்கறை காட்டும் அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட சவாலாகும்.
இலங்கை அரச தரப்போ, பாதுகாப்பு பிரிவோ செய்யும் எந்த ஒரு கொடுமைக்கும் எதிராக வாய் திறக்கக்கூடாது அப்படித் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இலங்கையில் எழுதப்படாத சட்டம்.
ஆனால் இப்போது கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரும் வாய் திறக்கும் முன்பே கைது செய்யப்பட்டுவிட்டனர்.
எனினும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் சீற்றம் கொண்டுள்ளது. அது இந்த அத்துமீறல் தொடர்பாக தனது கடும் அதிர்ப்தியைத் தெரிவித்ததுடன், இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீவிரமான முறையில் கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண அந்த இருவரும் தருமபுரம் பகுதிக்குச் சென்று அங்கு மக்களிடையே குழப்பங்களை விளைவிக்க முயன்மையினாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறிவிட்டார்.
அவர் அப்படித்தான் செய்வார். பொலிஸ், இராணுவப் பேச்சாளர்கள் என்றால் அப்படித்தான் செய்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம். ஆனாலும் இறுதியில் அவர்கள் குற்றம் எதனையும் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
மேல் மாகாணத்திலுள்ள ஹவ்வெல்லை என்ற இடத்தில் உள்ள ரப்பர் தொழிற்சாலையால் அப்பகுதியின் குடிநீர் மாசடைவதால் அதை மூடும்படி கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். உடனடியாகவே பொலிஸ் பேச்சாளர் அந்த ஆரப்பாட்டம் சர்வதேச சதி எனக் கூறிவிட்டார். அவர்கள் மேல் கண்ணீர்ப் புகை, தடியடிப் பிரயோகம் என்பன நடத்தப்பட்டு இருபதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
குடிநீர் ஒரு சிங்கள மக்கள் வாழும் பகுதியில் கூட மாசடைவதைத் தடுக்க சர்வதேசம் வந்து சதி செய்யவேண்டியளவுக்கு இங்கு மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறாரா அவர்.
இதே பாணியில் இப்போது ருக்சி பெர்ணான்டோவும் மகேசன் அடிகளாரும் குற்றம்சாட்டப்படுகின்றனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாலச்சந்திரன் விமலகுமாரி காணாமற் போன ஒரு இளைஞனின் தாயார். அவரும் அவரின் மகள் விபூசிகாவும் காணாமற் போனோர் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொள்வதுண்டு.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு என்பவற்றின் முன்பு அவர்கள் கதறியழுது சாட்சியமளித்ததுண்டு. அதிலும் அந்த மகள் தனது சகோதரனை படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் கொண்ட ஒரு புகைப்படத்தில் அடையாளம் காட்டியுள்ளார். அது படையினரிடம் சரணைந்தோர், அல்லது படையினரால் கைது செய்யப்பட்டோர் காணாமற் போயுள்ளனர் என்பதற்கு வலுவான சாட்சியமாகும்.
இந்தத் தாயார் கைது செய்யப்படுவதற்கும் சில நாட்கள் முன்பு சனல் – 4 ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தன்னை இனம் தெரியாத சிலர் பின் தொடர்வதாகவும் தான் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இப்போது அவர் தேடப்படும் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கென புசாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். புசாவில் விசாரணைகளும், அங்கு எப்படி ஒப்புதல் வாக்குமூலங்களும் பெறப்படுகின்றன என்பதும் எல்லோரும் அறிந்த சங்கதிகள் தான்.
தருமபுரத்தில் நடந்தவை பற்றி மக்கள் நேர் விரோதமாகவே பேசிக் கொள்கின்றனர். அது ஒரு திட்டமிட்ட சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட கைது என்றே தகவல்கள் வெளிவந்துள்ளன.
எனவே உண்மைகளைக் கண்டறிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அங்கு சென்றனர்.
இப்போ பாதிக்கப்பட்ட தாயும் சிறையில், அது பற்றி அறியச் சென்ற மனித உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
அடிப்படையில் உண்மைகளை மூடி மறைக்க ஒரு தொடர் நாடகம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
இங்கு தான் ஒரு கேள்வி எழுகிறது!
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடர் இடம்பெறும் போதே அதற்குச் சில உண்மைகள் போய்விடக்கூடாது என்பதற்காக மீண்டும் அப்பட்டமாக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகச் சர்வதேசம் எனன் செய்யப்போகிறது?
சர்வதேசத்துக்கு இலங்கை விடும் சவாலுக்கு சர்வதேசத்தின் பதில் என்ன?
வெறும் கண்டன அறிக்கைகள் மட்டும் தானா? அல்லது அழுத்தங்களுடன் முடிந்துவிடுமா?
இப்போதெல்லாம் இலங்கை அரசும், அரச படைகளும் தங்களின் மனித குல விரோத நடவடிக்கைகளின் உயிருள்ள சாட்சியங்களாக வெளிப்பட்டு விடுகின்றனர்.
ஒரு மூன்றாம் தர தெருச் சண்டியன் பாணியிலான ஒரு காட்டாட்சி இன்று கட்டவிழ்த்து விடப்படுகிறது.
காலம் கடந்த நீதி என்பது இல்லாமற் போன நீதிக்கு சமன் என ஒரு பழமொழி உண்டு.
எனவே இன்று இலங்கையால் சர்வதேசத்துக்கு சவால் விட்டு நடத்தப்படும் அநீதிகளுக்கு எதிரான நியாயங்கள் தற் சமயம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலேயே நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் வலுவான கோரிக்கையாகும்.
தமிழ்லீடருக்காக மாரீசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*