Puli

இந்தியாவின் ‘புலி வியாபாரம்’ – மாரீசன் –

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அந்தமான், நிக்கோபார் தீவுகளில் விடுதலைப்புலிகள் நிலைகொண்டு ஆயுதப் பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதாக அங்குள்ள யுனியன் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அப்படி ஒரு சந்தேகம் இருந்தால் அதை புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் உறுதி செய்து அப்படியான பயிற்சிகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வது தான் வழமையான நடைமுறை. ஆனால் அப்படி எந்த ஒரு விதமான தேடுதல் நடவடிக்கைகளோ, கைதுகளோ இடம்பெறவில்லை. மாறாக புலிகள் அங்கு நிலை கொண்டு பயிற்சி பெறச் சாத்தியமுண்டு என உத்தியோகபுர்வமாக இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதாவது இப்படியொரு பிரசாரம் இந்திய அரச தரப்பால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. வழமையான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் ஒரு பிரசாரம் மட்டும் மேற்கொள்ளப்படுவது ஏன் என்ற கேள்வி இங்கு எழுகிறது.

572 தீவுகளைக் கொண்ட அந்தமான், நிக்கோபார் தீவுக் கூட்டம் இந்திய பெரு நிலப்பரப்பிலிருந்து வங்காள விரிகுடாவில் 13,000 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. இவற்றில் 38 தீவுகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. அடர்ந்த காடுகளும், மலைப்பிரதேசங்களுமுண்டு.

இந்தியா, பிரித்தானியா ஆதிக்கத்தில் இருந்த போது, பல இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் உட்படப் பல நீண்ட காலத் தண்டனை பெற்ற கைதிகளை அங்குள்ள சிறைகளில் தான் அடைப்பதுண்டு. அவர்களில் பலர் விடுதலையான பின்பு அங்கேயே தங்கி அங்கேயே திருமணம் செய்து வாழ ஆரம்பித்துவிட்டனர். அதன் காரணமாக அவர்களின் வாரிசுகளாக ஏராளமான தமிழ் மக்கள் அங்கு நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்திய விடுதலைவீரர் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய தேசிய விடுதலை இராணுவத்தை அமைத்து ஜப்பானின் உதவியுடன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து மணிப்புர் உட்பட இந்தியாவில் பல பகுதிகளை விடுவித்தார்.

அவ் வெற்றிகளின் அடிப்படையில் சுதந்திர இந்தியாவைப் பிரகடனம் செய்து இந்தியக் குடியரசு அரசாங்கத்தை அமைத்தார்.

இந்திய சுதந்திரக் குடியரசின் தலைமையகம் அந்தமான் தீவில் தான் இயங்கியது.
இவ்வாறு அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் ஒரு நெருங்கிய உறவு உண்டு.

அது அந்த மண்ணின் பெருமை!

இப்போது அங்கு விடுதலைப்புலிகள் நிலைகொண்டு பயிற்சி பெறுவதாகவும், அங்குள்ள தமிழ் மக்கள் புலிகளுக்கு சகல விதமான உதவிகளையும் வழங்குவதாகவும் இந்திய உள்துறை அமைச்சு ஒப்பாரி வைக்க ஆரம்பித்துள்ளது.

அப்படியான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவோ இல்லையோ ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கடுமையான தீர்மானம் கொண்டுவரவுள்ள நிலையில் இந்தியாவால் இப்படி ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அடிப்படையில் இலங்கைக்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தவே இந்தியா புலிக் கதையை கையிலெடுத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இதில் இரு நோக்கங்கள் உள்ளன.

ஒன்று – சர்வதேச அளவில் தமிழ் மக்களின் பிரச்சினையைப் புலிப் பிரச்சினையாக்கித் திசை திருப்புவது.

மற்றையது – இந்தியாவில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக எழும் பேராதரவை புலிச் சாயம் மூலம் குழப்பியடிக்க முயல்வது.

இந்தப் புலி வர்த்தகம் இந்திய கொள்கை வகுப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டு தோல்வி கண்ட வழிமுறை தான். எனினும் அவர்கள் கைவிடுவதாக இல்லை.

அதற்குச் சமாந்தரமான இன்னொரு வேலையை இலங்கையின் ‘மௌமீம’ என்ற சிங்களப் பத்திரிகை கையிலெடுத்துள்ளது.

இது புலிகளின் ஆறு ஆயுதக் குழுக்கள் வடக்கில் இயங்கிவருவதாகவும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் விடுவிக்கப்பட்டால் இங்கு வந்து அந்தக் குழுக்களுக்குத் தலைமை தாங்கி நாட்டைப் பிளவு படுத்திவிடுவார்கள் எனவும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

அப்படி விடுதலைப்புலிகளின் ஆயுதக் குழுக்கள் இயங்கினால் ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை.

ஆனால் கைது செய்யப்பட்ட ஆவா, டில்லு, கொள்ளைக் குழுக்களின் பின்னால் கடற்படையினர் உட்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் இருந்தமை அம்பலமாகியிருக்கின்றது.

இவையெல்லாம் புலிகளைச் சொல்லி அரசியல் செய்வதன் ஒரு பகுதி தான்.

அதாவது புலிகள் மீண்டும் பலமடைந்துவிட்டனர் எனவும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படப் போகின்றன எனவும் கருத்துக்களைப் பரப்பி இலங்கைக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பலையைத் தணிக்கும் சதியின் ஒரு பகுதி தான் இவைகள்.

ஆனால் இலங்கை அரசின் ஏமாற்றுக்கள் முழுமையாக அம்பலப்பட்ட நிலையில் எத்தகைய வியாபாரங்களாலும் அதைக் காப்பாற்ற முடியாது என்பது தான் உண்மை.

– தமிழ்லீடருக்காக தாயகத்திலிருந்து மாரீசன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*