balumahendra

சிங்களத்தால் நிராகரிக்கப்பட்டும் சிகரம் தொட்ட இயக்குநர்!

இந்திய சினிமா உலகில் தனித்துவமான ஒரு முத்திரையைப் பதித்த ஒப்பற்ற கலைஞன்  இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் பாலுமகேந்திராவின் திடீர் மரணம் கலையுலகையே அதிரவைத்துவிட்டது.

தென்னிந்திய சினிமா உலகை அவரின் பிரவேசத்தின் வெற்றி எப்படி அதிர்வலைகளை எழுப்பி புதிய திருப்பங்களுக்கு வழி வகுத்ததோ அவ்வாறே அவரின் இழப்பும் எதிர்பாராத அதிர்வை ஏற்படுத்திவிட்டது.

அன்றைய நாட்களில் தமிழ் சினிமா உலகம் இரண்டு விதமான போக்குகளுக்குள் புரண்டு கொண்டிருந்தது. ஒன்று – நட்சத்திரங்களுக்கேற்ப கதை, இயக்கம் என்பவற்றை அமைத்து அவர்களையே வர்த்தகப் பண்டங்களாக்கி படங்களைத் தயாரிக்கும் ஒரு வகை. அடுத்த போக்கும் நாடகப் பாணியிலான தயாரிப்புக்களாகவும் ஒரே வேளையில் வித்தியாசமான கதைக் கருக்கள், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைகள் என்பன மூலம் படைப்பை நகர்த்தும் போக்கு.

இவ்விரண்டு போக்குகளிலும் சினிமா மொழி என்பது மிகவும் பலவீனமாகவே காணப்பட்டது. இப்படியான சந்தர்ப்பங்களில் சினிமா ஒரு கலைப்படைப்பு என்பதைக் கடந்து ஒரு வர்த்தகப் பண்டமாக மாற்றப்பட்டிருந்தது.

இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் பாலுமகேந்திராவின் தமிழ் சினிமா உலகப் பிரவேசம் இடம்பெற்றது. சினிமா மொழி பேசிய இவரின் படைப்புக்கள் வர்த்தக அளவிலும் ஓரளவு வெற்றியைப் பெற்றன.

மட்டக்களப்பு அமிர்தகழியில் பிறந்த இவர், சென்ர்.மைக்கேல் கல்லூரியில் கல்வி பயின்று பின்பு லண்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியானார். இவர் இலங்கையில் நில அளவைத் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில்கூட அவரின் கழுத்தில் ஒரு புகைப்படக் கருவி தொங்கும்.

அக்காலத்திலேயே அவர் இலங்கை வானொலியில் ஒரு வானொலி நாடக நடிகராக விளங்கினார். இலங்கையின் சினிமாத் துறைக்குள் புகுந்து கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெற முடியாத நிலையில் இந்தியா சென்று ‘புனே’ திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலையைப் பயில ஆரம்பித்தார்.

அவர் அங்கு தயாரித்த சில குறும்படங்களைக் கொண்டுவந்து கொழும்பு லிபேட்டி திரையரங்கில் இலங்கையின் சிங்கள, தமிழ் சினிமா கலைஞர்களுக்கு போட்டுக் காண்பித்தார். எனினும் சிஙக்ளச் சினிமா உலகம் – அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கையில் வெளிவந்த குத்துவிளக்கு படத்தை இயக்கும் சந்தர்ப்பமும் கடைசி நேரத்தில் பறி போனது.

வாடைக்காற்று படத்தை தயாரித்த சிவதாசன் பாலமனோகரன் எழுதிய ‘நிலக்கிளி’ நாவலையும் பாலுமகேந்திராவிடம் கொடுத்து ஒன்றைத் தெரிவு செய்யும்படி கேட்டுக்கொண்டாராம். அவற்றை ஆழமாகப் படித்த அவர் நிலக்கிளியில் வரும் பெண் பாத்திரத்தை நடிக்க இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட நடிகைகள் இல்லையென்று கூறினாராம். கடற்கரைகள், வாடிகள், மீன மக்களுடனான உறவுகள் எல்லாமே பொருத்தமாக இருப்பதால், ‘வாடைக்காற்றை’யே தயாரிக்கும்படி கூறினாராம்.

இதிலிருந்து பாலுமகேந்திரா என்ற கலைஞன் எவ்வளவு ஆழமான ரசிகனாக இருந்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு நல்ல ரசிகனால் தான் ஒரு நல்ல கலைஞனாக உருவாகமுடியும் என்பதற்கமைய நிலக்கிளியில் வரும் அந்தப் பெண் பாத்திரத்தை முழுமையாக அவர் புரிந்து உணர்ந்து கொண்டதிலிருந்தே உணரமுடிகிறது.

அவரது உச்ச ரசனையிலின் இன்னொரு வெளிப்பாடு அவரின் ‘அழியாத கோலங்கள்’ படத்தின் இசையமைப்பாளர் தெரிவு. ‘சலீல் சௌத்திரி’ என்ற ஹிந்தி இசையமைப்பாளர் ஒரு காலத்தில் ‘மது மதி’ என்ற ‘பிமல்ராய்’ அவர்களின் வெற்றிப் படத்துக்கு இசையமைத்தவர். அதில்வரும் பாடல்கள், பின்னணி இசை என்பன ஒரு அற்புதமான காதல் வலயத்துக்குள் கேட்பவரை இழுக்கும் வலிமை கொண்டவை. ‘செம்மீன்’ படத்தில் மலையாள கிராமிய இசையை ஒவ்வொருவர் நாவிலும் தவழ வைத்த பெருமை அவருக்குண்டு.

அவரின் ஆற்றலை ஆழமாக ரசித்து அதில் லயித்துவிட்ட காரணத்தால் தான் தனது முதல் தமிழ் படத்திற்கு அவரை இசையமைக்க அழைத்தார். அவரும் பாலுவின் திறமையைப் புரிந்து கொண்டு பதின்ம வயது சிறுவர்களின் உணர்வுகளை இசையால் வடித்தெடுத்துள்ளார்.

பாலுமகேந்திரா முதன் முதலாக ஒளிப்பதிவாளராக கால் வைத்த படம் மலையாள மொழியில் வெளியான ‘நெல்லு’ அதை இயக்கியவர் ‘ராமு கரியட்’ இந்தியாவின் பிரபல கலைப்பட இயக்குனர். இவரின் படங்கள் வர்த்தக ரீதியாகவும் பெரும்  வெற்றி பெற்றன. இவரின் ‘செம்மீன்’ மொழிகளைக் கடந்து பல தரப்பு மக்களிடமும் பெரும் வெற்றி பெற்றது. செம்மீன் படத்தைப் பார்த்த ஒருவர் அதைப் பார்க்கும் போது தன்னைக் கடற்கரைக் காற்று வருடியதாகவும் கருவாட்டு மணம் தன் நாசியில் தெறித்ததாகவும் கூறினார். அந்த ராமு சரியாட் பாலுமகேந்திராவுக்கு முதல் சந்தர்ப்பத்தை வழங்கினார் என்றால் பாலுவின் திறமையை அவர் கணக்கிட்டுவிட்டார் என்றே அர்த்தம்.

பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம் கன்னட மொழியில் வெளிவந்த ‘கோகிலா’ இந்த முதல் படத்திலேயே இவர் ஒளிப்பதிவுக்கான தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்.

இவரது முதல் தமிழ்ப்படமான ‘அழியாத கோலங்கள்’ இவரின் இளமைக்கால அனுபவங்கள் என இவர் ஒருமுறை கூறியிருந்தார். இந்தப்படம் வழமையான தமிழ் படங்களிலிருந்து வேறுபட்டு முழுமையிலும் சினிமா மொழியையே பேசியது. இப்படத்தின் முழு எழுத்துப் பிரதியும் வெறும் 24 பக்கங்கள் என்றால் எவ்வாறு அதில் கமெரா பேசியுள்ளது என்பதை நாம் அறிய முடியும். இப் படத்தில் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி இறந்து போக அந்தச் சிறுவனை மீட்க ஓடிவரும் ஒருவரின் ஓட்டமும்  அதற்கு வழங்கப்பட்ட இசையும் அந்தக் காட்சியின் உணர்வை உச்சத்துக்கு ஏற்றி பாலுமகேந்திரா, சலீல் சௌத்ரியி என்ற இரு மேதைகளை வெளிப்படுத்துகின்றன. அதேபோன்று ‘மூன்றாம் பிறை’யில் கடைசிக் காட்சியில் கமலஹாசன் தன்னை ஸ்ரீதேவிக்கு நினைவுபடுத்த முயல்வதும், அவன் பிச்சைக்காரன் என எண்ணி காசு போடுவதும், அரசியல்வாதியின் ஆதரவாளர்கள் குறுக்கே வருவதும், ரயில் புறப்பட பின்னால் ஓடி கம்பத்தில் அடிபட்டு விழுவதும், படம் முடிந்ததும் ரசிகர்களை கதிரையை விட்டு எழும்பவிடாத காட்சிகள்.

இப்படியாக 21 படங்கள் இவரின் நெறியாள்கையில் வெளிவந்தன – இவர் 3 தேசிய விருதுகளையும் பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் தனது படைப்பாற்றல் தன்னுடனேயே முடிந்துவிடக்கூடாது என்ற ஒப்பற்ற நோக்குடன் ஒரு திரைப்படக் கல்லூரியை உருவாக்கி இளைய தலைமுறைக்குப் பயிற்சி வழங்கிவந்தார். அப்படி உருவானவர்களில் பாலா,அமீர்,வெற்றிமாறன், சீனு ராமசாமி முதலிய திறமைசாலிகள் அடங்குவர். வெற்றிமாறன் ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சண்டை, சாகசம், ஆட்டம் என வர்த்தகப் பாணியில் பயன்படுத்தப்பட்ட ‘தனுஷ்’ என்ற நடிகனை ஆடுகளத்தின் வெற்றிமாறனும் , அது ஒரு கனாக்காலத்தில் பாலுமகேந்திராவும் வெளிப்படுத்தியமையை எவரும் மறந்துவிடமுடியாது.

மதராஸி பட்டணம்,  ஆறாவது வனம், மைனா, ஈ போன்ற படங்கள் புதிய இயக்குனர்களால் உருவாக்கப்பட்ட துணிச்சலையும், ஆர்வத்தையும் வழங்கியவை பாலுமகேந்திராவின் படைப்புக்களும், தொடர்புகளும் தான் என்றால் மிகையாகாது.

வீடு, தலைமுறை ஆகிய படங்கள் தனது விருப்பத்துக்குரியவை என அவர் பல தடவைகள் தெரிவித்துள்ளார். தலைமுறையில் அவர் ஒரு முதியவர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் சிங்களத் திரையுலகம் அவரை நிராகரித்தது. இன்று தமிழில் மட்டுமல்ல கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளிலும் அவர் முதல் தர இயக்குனராக விளங்கிவருகிறார்.

அவர் ஒரு முறை தம்பி ஐயா தேவதாசிடம் பேசும் போது சர்வதேச தரத்திலான தமிழ்ப்படங்கள் இலங்கையில் தான் உருவாகும் எனக்கூறினாராம். அதை அவர் பார்ப்பதற்கு முன்பே எம்மைப் பிரிந்து விட்டமை ஒரு பெரும் துரதிஷ்டமே.

அவர் திறந்துவிட்ட பாதையில் அடுத்த தலைமுறை முன் செல்லும் என்ற நம்பிக்கையை அவருக்கு இறுதி அஞ்சலியாகச் செலுத்தி விடைகொடுப்போம்.

அவரின் படைப்புக்களெ பல்கலைக்கழகங்களாக எம்மிடம் நிலைத்து நிற்கும் என்பது மட்டும் நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*