Sampanthan-3

அன்றும் இன்றும் மும்மூர்த்திகள் – மாரீசன்

இந்து சமயக் கடவுள்களில் மும்மூர்த்திகளே பிரதான தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர். பிரமா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் முறையே படைத்தல், காத்தால், அழித்தல் என மூன்று கருமங்களையும் செய்பவர்களாகக் கருதப்படுகின்றனர். எனினும் இவர்கள் இப்பணிகளுக்கு அப்பால் தமது பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பல திருவிளையாடல்களை மேற்கொள்வதுண்டு.

நரியை பரியாக்கி, அரிவர்த்தன பாண்டியனை ஏமாற்றயிமை சரியான கருத்துக்காக விடாப்பிடியாக உறுதியாக நின்ற நக்கீரன் மேல் நெற்றிக்கண்ணை திறந்து வெப்பத்தில் அவதிப்படவைத்தமை உட்பட சிவனின் திருவிளையாடல்கள் ஏராளம்.

இவ்வாறே விஷ்ணுவும் தனது கண்ணன் அவதாரத்தின் நயவஞ்சகமாகக் கர்ணன் பலத்தைப் பறித்து அருச்சுணனை வெல்ல வைத்தமை, வாமண அவதாரம் மூலம் மூன்று வரம் கேட்டு மாபலிச் சக்கரவர்த்தியை வஞ்சகமாக வீழ்த்தியமை உட்பட பல கைங்கரியங்களை மேற்கொண்டுள்ளார். அதேபோன்று தானே முழுமுதற்கடவுளாகும் நப்பாசையில் பிரமன் சிவபெருமானின் முடியைக் கண்டுவிட்டதாகப் பொய் கூறி தாமரை மலரைக் காட்டி ஏமாற்ற முயன்ற கதையும் உண்டு.

இவையனைத்தும் நேர்மையற்ற, ஒரு பக்கச் சார்பான நடவடிக்கைகளாக இருந்த போதிலும் இந்து சமய இதிகாசங்கள் இவற்றைத் தெய்வங்களின் திருவிளையாடல்கள் எனவும், ஆற்றல் மிகுந்த தந்திர நடவடிக்கைகள் எனவும் போற்றிப் புழகப்படுகின்றன. இன்று தமிழ் மக்கள் மத்தியிலும் மும்மூர்த்திகள் உருவாகித் தமிழ் மக்களைத் தங்கள் பாதையில் வழி நடத்த முயன்று வருவது போன்ற ஒரு தோற்றப்பாடு தென்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரே இந்த மும்மூர்த்திகளின் நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர். இவர்கள் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து தடம் மாறும்போதெல்லாம் ராஜதந்திரம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் மாய்மாலம் கொட்டும் நிலையை அவதானிக்க முடிகிறது.

வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் போது அதன் பின்னணியில் இந்தியத் தூதுவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இருந்தமை அம்பலப்பட்டதை நாமறிவோம். இவ்வாறே வடமாகாண சபையின் அமைச்சர்கள் தெரிவிலும் கூட மாகாண முதலமைச்சரால் தன்னிச்சயைான முடிவே எடுக்கப்பட்டது.

எனினும் இந்த முடிவுகள் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கோ, உரிமைப் போராட்ட இலட்சியங்களுக்கோ நேரடியாகக் குந்தகம் விளைவிக்காதவை என்ற வகையில் தமிழ் மக்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஆனால் தற்சமயம் அவர்களின் தன்னிசையான போக்கு தமிழ் மக்களின் இலட்சியப் பாதையையே மழுங்கடித்து விடுமோ என்று அச்சம் ஏற்பட வைத்துள்ளது. இவர்கள் என்ன தான் இராஜதந்திரம், அரசியல் சாணக்கியம் எனப் புசி மெழுக முயன்றாலும் இந்தியக் கொள்கைவகுப்பாளர்களால் இவர்கள் திசைதிருப்பப்படுவது துல்லியமாக வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான மிகக்கடுமையான ஒரு தீர்மானம் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்படியான ஒரு நெருக்கடியிலிருந்து தப்ப இலங்கை பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகிறது. ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும் ஏனைய பல அமைச்சர்களும் நாடு நாடாக ஓடித் தமக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். உள் நாட்டிலும் காணாமற் போனோர் பற்றி விசாரணைக்குழு போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளையும் முழுக்கி விட்டுள்ளனர்.

அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கூட ஜெனீவாவில் முகம் கொடுக்க வேண்டியுள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க ஒரு கவசமாகப் பாவிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்திருந்தார். திரு. இரா.சம்பந்தனும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தப் போவதாகத் தெரிகிறது.

ஆனால் இந்த அழைப்பு ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளில் ஈடுபடுவதாக ஜெனீவாவில் ஒரு ஏமாற்றத்தை முன்வைக்கும் உள்நோக்கம் கொண்டது என்பதை ஒரு சிறுபிள்ளை கூடப் புரிந்து கொள்ளும். ஆனால் எமது மும்மூர்த்திகளில் ஒருவரான சம்பந்தன் அரசியல் சாணக்கியம் என்ற பேரில் அந்த வலையில் விழத்தயாரானார்.

ஆனால் ஒரு சில நாட்களுக்குள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் மக்கள் பிரதிநிதிகளின் தீர்மானத்தை அலட்சியம் செய்து ஜனாதிபதியைச் சந்தித்து மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர்.

இப் பேச்சின் மூலம் இவர்கள் எதையுமே பெற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமன்றி, குறைந்த பட்சம் மாகாணசபை தலைமைச் செயலரைக் கூட மாற்ற முடியவில்லை. முதலமைச்சரால் ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூட்டம் கூட்டமாக ஒப்பாரி வைக்கவே முடிந்துள்ளது.

தற்சமயம் திருமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுவாக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இத் தீர்மானம் தொடர்பாக எமது மும்மூர்த்திகள் எவ்வளவு தூரம் விசுவாசமாக நடப்பார்கள் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனீவா செல்வதற்கு முன்பு இந்தியா சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை களமுனையில் தோற்கடிப்பதில் இலங்கை அரசின் பங்காளியாக விளங்கியது இந்தியா. 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீர்த்துப் போக வைத்து இலங்கைக்கு வாய்ப்பான நிலைமையையும் ஏற்படுத்தியது இந்தியாவே!

இப்போதும் கூட இந்தியா அதே நிலைப்பாட்டை எடுக்கும் என்பதில் சந்தேகப்பட இடமில்லை.

எனவே மன்மோகன்சிங்கை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் சந்திக்கும் போது சில பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏதோ ஒரு வகையில் மஹிந்தவின் கவசமாகப் பயன்படும்படி அழுத்தங்கள் கொடுக்கப்படும்.
அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை என்ன?

இந்திய அழுத்தத்தை எதிர்த்து திருமலை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தில் உறுதியாக நிற்பார்களா? அல்லது ராஜதந்திரம், சாணக்கியம் எனச் சொல்லி பணிந்துபோவார்களா?

இங்கு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனையவர்கள் மடக்க மும்மூர்த்திகளின் நெற்றிக் கண் திறப்பது முதல் நரியைப் பரியாக்கும் திருவிளையாடல் வரை அரங்கேற்றப்படும்.

கர்ணனின் கவசகுண்டலத்தைப் பறித்த கதையும் இடம்பெறக்கூடும்.

ஆரம்ப காலத்திலிருந்து தமிழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பாடுபட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இந்திய வலையில் விழுந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்த போது செல்லாக்காசாகி விட்டமையை எவரும் மறந்துவிட முடியாது. மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் தலைவனாக விளங்கிய ஆனந்தசங்கரி துரோகப் பாதையில் இறங்கியமையால் இன்று எந்த ஒரு தேர்தலிலும் கூட குறைந்த பட்ச வாக்குகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாமல் நிராகரிக்கப்பட்டார்.

எனவே மும் மூர்த்திகளின் திருவிளையாடல்களில் தமிழ் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. தொடர்ந்தும் ராஜதந்திரம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் தமிழ் மக்களை ஏமாற்ற முயன்றால் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல், உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல் என்பவற்றில் மக்கள் வழங்கிய ஆணையை நிராகரிக்கும் எவரும், அவர் எவ்வளவு உயர்ந்த மட்டத்தில் இருந்தாலும் சரி, அதன் பலனை அனுபவிக்கவேண்டிவரும்.

-தமிழ்லீடருக்காக மாரீசன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*