Jaffna-leader

‘சினிமா மோகம்’; ஆபத்தை நோக்கி தமிழ்ச்சமூகம்!?

மன்னாரில் மனிதப் புதைகுழியிலிருந்து இடைவிடாது மனித எச்சங்கள் மீட்கப்பட்டுவருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் சினிமா நடிகர் ஒருவருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தொடர்பிலான செய்திகளும் இலத்திரனியல் ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

பல்லாயிரம் உயிர்கள் பிய்த்தெறியப்பட்ட இனவிடுதலைப் போராட்டம் நடைபெற்ற ஒரு மண்ணில் உலகத்தமிழர்களுக்கான ஒரு அடையாளமாக விளங்குகின்ற யாழ்ப்பாணத்து மண்ணில் திரைப்படம் ஒன்றிற்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமையும் அதற்கு ஆதரவாக சிலர் கருத்துச் சொல்ல முற்படுகின்றமையும் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையைத் தோற்றுவித்திருக்கின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு முற்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் ‘தீனா குறூப்’ என்ற பெயரில் ஒரு குழுவினர் மக்கள் மத்தியில் மேற்கொண்ட சினிமாப் பாணியிலான வன்முறைகள் சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளில் தலையீடுகளால் முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.

போருக்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் வித்தியாசமான கலாசாரம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தலைதூக்க தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது. குறிப்பாக புதிய படங்கள் வருகின்ற போது திரையரங்குகளில் வெடி கொழுத்திக் கொண்டாடுவது, நடிகர்களின் பெரிய அளவிலான ஒளிபடங்களுக்கு பாலால் அபிஷேகம் செய்வது, சினிமாப் பாணியில் வாழத் தலைப்படுவது என்ற மோசமான ஒரு நிலையை நோக்கி இளம் சமூகம் உந்தப்படுவதாகவே கடந்த காலச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் பிடிபட்டிருக்கும் ‘ஆவா’ எனப்படுகின்ற வன்முறைக்குழு முற்றுமுழுதாக பதினெட்டு தொடக்கம் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை உள்ளடக்கியதாகும். அந்தக் குழுவும் தனது நடவடிக்கைகளை சினிமாப் பாணிகளைக் கைக்கொண்டே செயற்பட்டுவந்திருந்தமை அம்பலமாகியிருக்கின்றது.

யாழ்.இந்துக்கல்லூரியில் க.பொ.த உயர் தரத்தில் பரீட்சைக்குத் தோற்றி பரீட்சைப் பெறுபேறு வருவதற்கு முன்பாகவே உயிரிழந்த ஒரு மாணவனுக்கு மருத்துவக் கற்கைக்கான பெறுபேறு கிடைத்திருந்த அவலமும் அண்மையில் நிகழ்ந்திருந்தது குறித்த மாணவன் கொலையும் இவ்வாறான சினிமாப்பாணியிலான குழு ஒன்றாலேயே நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதேவேளை மட்டக்களப்பு செங்கலடியில் கடந்த வருடம் பதினாறு வயது இளம் பெண் ஒருவர் தனது நண்பர்களின் துணையுடன் தன்னைப் பெற்றெடுத்த தாயையும் தந்தையும் ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்திருந்தார். குறித்த இரட்டைக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உத்தியும் தமிழ் சினிமாவில் பார்த்து தாம் தேர்ந்தெடுத்ததாகவே அவர்களும் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள்.

எனவே தமிழ்ச் சினிமா என்பது பொழுது போக்கிற்கானது என்பதைக் கடந்து எங்களுடைய வாழ்வியலுடன் ஒன்றித்த விடயமாகப் கொள்ளத் தலைப்படுகின்ற ஒரு இக்கட்டான நிலையாகவே பார்க்கப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

உலகை ஆட்கொண்டிருக்கும் ஊடகங்களில் சினிமாத்துறை மிக முக்கிய பாத்திரத்தினைப் பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. சினிமா ஊடாக மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்த முடியும். ஒரு இன அழிப்பை, இனத்திற்காக விடுதலைத் தேவையை, இன்னும் சமூகம் சார் ஆழமான பதிவுகளை மேற்கொள்வதற்கு சினிமா உகந்தது என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது.

சர்வதேச அளவிலும் தென்னிந்திய திரைத்துறையிலும் ஈழத்தில் நடைபெற்ற இனக்கொலை, இன விடுதலைப் போராட்டம், மக்களின் விடுதலைக்கான வேட்கை போன்றவற்றை பதிவு செய்வதற்கு பலர் முண்டியடித்துவருகிறார்கள். காரணம் எமது விடுதலைக்காக எமது இனம் கொடுத்த வீரம், தியாகம், அர்ப்பணிப்பு இன்னும் சொற்களுக்குள் அடக்கிவிட முடியாத மிகப் பெரும் சாதனைகள். இவை ஒவ்வொன்றும் திரையில் இடம்பெற்றவை அல்ல மாறாக உண்மையாக கண்முன்னே நிகழ்ந்தேறியவை. இவ்வாறான பெறுமதி மிக்க சாதனைகளை நிகழ்த்தி மறைந்த மற்றும் வாழ்ந்து வருபவர்களை சர்வதேசமும் வெளிநாடுகளும் நோக்கிவருகின்ற நிலையில் நாங்கள் எங்களது பெறுமதியை புரிந்துகொள்ளவேண்டும்.

தென்னிந்தியத் திரைத்துறையினர் எம் மீதும் எமது மண் மீதும் கொண்டிருகின்ற அன்பும் அக்கறையும் எந்தளவிற்கு காத்திரமாக உள்ளன என்பதை கடந்த காலப் போராட்டங்களும் இலங்கையில் இனவாதிகள் மேற்கொள்கின்ற நிகழ்வுகளுக்கான அழைப்புக்களை ஒட்டுமொத்த தமிழ்த் திரைத்துறையும் புறக்கணித்துவருகின்ற சம்பவங்கள் வெளிப்படுத்திநிற்கின்றன.

ஆனாலும் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவம் தமிழ் மக்களை முகம் சுழிக்கவைத்திருக்கிறது,

யாழ்.கஸ்தூரியார் வீதியில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றின் முன்பாக பத்துக்கும் உட்பட்ட இளைஞர்கள் தென்னிந்தியத் திரைப்படம் ஒன்றின் பதாதையை பின்னணியாக வைத்துக் கொண்டு சில கோசங்களை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இந்த விடயம் யாழ்ப்பாணத்திற்கு புதியது. காரணம் இதுவரையில் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காக, சொந்த நிலத்துக்காக, காணாமல் போனோருக்காக இவ்வாறான போராட்டங்களே நடத்தப்பட்டுவந்திருந்தன. எமது தேசம் இன்னமும் தொலைத்துவிட்ட நினைத்துப்பார்க்க முடியாத இழப்புக்களிலிருந்து மீண்டெழவில்லை. இந்த நிலையில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுவதை அவதானித்த சமூகத்தில் உயர் நிலைகளிலுள்ள யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதி ஒன்றிலுள்ள வங்கி ஒன்றின் முகாமையாளர் ஒருவர், இலங்கையின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் குடாநாட்டிற்கான உயர் நிலை அதிகாரி ஒருவர் உட்பட்ட சிலர் இளைஞர்களை நாடி இவ்வாறான போராட்டம் நடத்தப்படுவதற்கு காரணம் என்ன? என்று கேட்டிருக்கின்றனர்.

அதற்கு பதிலளித்த அவர்கள் தமக்கு பிடித்த நடிகர் ஒருவருடைய படம் தொடர்பில் வெளியாகியிருக்கின்ற விமர்சனத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் அதற்கு கண்டனம் தெரிவித்தே தாம் போராடுவதாகத் தெரிவித்திருக்கின்றனர். இதற்கு பதிலளித்த சமூகப் பிரநிதிகள் இந்த விடயத்தினை நீங்கள் அறிக்கை மூலம் எழுதி குறித்த பத்திரிகை நிர்வாகத்திடம் கையளிப்பதன் மூலம் பிரச்சினையை முடித்துக்கொள்ளலாமே? யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஒரு போராட்டம் நடைபெறுவது எமதுக்கு அழகல்ல எனக் கேட்டிருக்கின்றனர்.

அதன் போது பதிலளித்த குறித்த இளைஞர்கள் குறித்த நடிகரின் பெயரைக் குறிப்பிட்டு அந்த நடிகரின் கால் தூசுக்கு நீங்கள் வருவீர்களா? சம்பவ இடத்தினை விட்டு நகருங்கள் என மிரட்டியதன் பின்னர் குறித்த அதிகாரிகள் அங்கிருந்து அகன்றிருக்கின்றனர். இதனை அடுத்து வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்திற்கு குறித்த சம்பவம் பாதிக்கப்பட்ட அதிகாரிகளால் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

அங்கு சென்ற விவசாய அமைச்சர், நாட்டின் தற்போதைய நிலை, காணாமல் போனோருக்காக உறவுகள் அலைந்து திரிகின்ற நிலை போன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டி இவ்வாறான ஒரு போராட்டத்தில் ஈடுபடுவதனை நிறுத்துமாறு வலியுறுத்தியிருக்கின்றார். இதனை அடுத்து அங்கு கட்டப்பட்டிருந்த பதாதையினை அவிழ்த்துக்கொண்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற முற்பட்ட போது அங்கு சென்ற நபர் ஒருவர் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது, அவர்களை ஆர்ப்பாட்டத்தினை தொடருமாறு தூண்டிருக்கின்றார். பத்திரிகையில் வெளிவந்த அறிக்கைக்கு பதிலாக மாற்றுக் கருத்தினை எழுதி பத்திரிகை நிர்வாகத்தில் ஒப்படைப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று அவருக்கு பதிலளிக்கப்பட்டிருக்கின்றது.

இதனிலும் மிக முக்கிய விடயம் ஒன்றினைக் குறிப்பிடவேண்டும். குறித்த ஆர்ப்பாட்டக் காரர்கள் அங்கு நின்றிருந்த போது காணொளிக் காட்சிகளைப் பதிவு செய்வதற்காக ஒருநபர் நின்றிருந்ததாகவும் அவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை அந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளத் தொடங்கிய நேரம் முதல் அங்கு செய்தி சேகரிக்கச் செல்லுமாறு புலனாய்வாளர்கள் தமது பிரதிநிதிகளாக செயற்படும் சில செய்தியாளர்கள் ஊடாக ஏனைய ஊடகர்களைத் தூண்டியதாகவும் தெரியவருகின்றது.

இறுதியில் ஆர்ப்பாட்டக் காரர்களின் முயற்சி முடிவுக்கு வந்திருந்தாலும், இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் நிழல் போல சில சக்திகள் செயற்படுவதை குறித்த இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஈழத்தைப் பொறுத்தவரையில் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இன விடுதலை தொடர்பிலான சிந்தனைகளைச் சிதைப்பதற்கு இவ்வாறான திசை திருப்பல் நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கு ஆளும் தரப்பு உந்துதலாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. இனிவரும் காலங்களிலும் எமது சமூகத்தை தவறான பாதைகளுக்கு இட்டுச் சென்று அவர்களின் இனம் தொடர்பிலான விடுதலை தொடர்பிலான ஓர்மத்தை சிதைப்பதற்கு முற்படுபவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் இவ்வாறான இளைஞர்கள் தங்களை அறியாமலேயே சிக்குண்டுபோகின்ற அபாயச் சூழலை இனிவருங்காலங்களிலும் அனுமதிக்கக் கூடாது. ஒரு சமூகத்தை தாங்கவல்ல அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கவல்ல இளம் சந்ததி தனக்கான பொறுப்புணர்ந்து செயற்படுவதன் மூலம் எமது இனத்துக்கு எதிரானவர்களின் மறைமுகச் சூழ்ச்சிகளிலிருந்து தம்மைக் காத்துக்கொள்வதுடன் எமது சமூகத்தையும் காத்துக்கொள்ளலாம்.

– தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*