sampanthan-sumanthiran2

சம்பந்த(ன்) – மஹிந்த விருந்துபசாரத்துடன் முடிவுக்கு வருகிறதா இரணைமடு விவகாரம்?!

‘இரணைமடு” தமிழ் மக்களின் வாழ்வுரிமையில் இன்று பிரதான பாத்திரத்துக்கு வந்திருக்கிறது. இரணைமடு விடயத்தில் சம்பந்தப்பட்ட மக்களை விடவும் அரசாங்கம் கூடுதல் அக்கறை கொண்டிருப்பதாகவே அண்மைய நடவடிக்கைகள் புலப்படுத்தி வருகின்றன.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இரணைமடு நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்ததுடன் மாவிலாற்றினை மறித்ததால் போர் மூலம் விடுதலைப்புலிகளை அழித்ததையும் மறைமுகமாக சுட்டிக்காட்டி மிரட்டல் விடுத்திருப்பதாகவே தெரிகிறது. இந்த நிலையில் இரணைமடு விடயத்தினை அரசாங்கம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக பார்ப்பதன் பின்னணி ஏதாவது இருக்கவேண்டுமே என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும். எனவே இரணைமடு தொடர்பிலும் அதன் ஊடான அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் அதற்கான மாற்றுவழிகள் தொடர்பிலும் தமிழ்லீடர் ஆராய முற்படுகிறது.

பிரதேசவாதம் என்பது சரியானதா?

உண்மையில் இரணைமடு நீர் விவகாரத்தினை எவரும் பிரதேசவாதக் கண்கொண்டு பார்க்ககூடாது என்பதுடன் பார்க்கவும் முடியாது. காரணம் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்ந்துவருகின்ற வயல் செய்கையில் ஈடுபட்டுவருகின்ற மக்கள் அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து தொழில்நிமிர்த்தம் கிளிநொச்சியில் குடியேறியவர்களே. அவர்களின் பூர்வீகம் யாழ்ப்பாணம் என்பதுதான் உண்மையானவிடயம். அதனிலும் கடந்தகாலங்களில் இடம்பெற்ற போர்ச்சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கிளிநொச்சியில் திருமண பந்தங்களில் ஈடுபட்டதுடன் சராசரியாக கிளிநொச்சி – யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்களில் கணிசமான உறவு நிலை பிணைந்தே காணப்படுகின்றது. எனவே எந்த வகைக்குள்ளும் பிரதேசவாதத்தினை காரணம் காட்டி இரண்டு மாவட்ட மக்களையும் பிரிவினைக்கு உட்படுத்த முடியாது.

இரணைமடு நீர் போதுமானதா?
இரணைமடுக்குளம் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளால் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு வந்தாலும் கூட அதன் நீரேந்து பிரதேசம் முற்றுமுழுதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளேயே காணப்படுகின்றது. குளத்தின் தற்போதைய நீரின் அளவிற்கு ஏற்ப 22ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கே நீர்ப்பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை இன்னமும் 12ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர் வழங்கவேண்டிய தேவை உள்ளது. குளத்தின் நீர் மட்டத்தினை இன்னமும் 2 அடிகள் உயர்த்துவதன் மூலமே ஏனைய நிலப்பரப்பிற்கும் நீர்வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தான் குளத்தின் மேலதிக நீரினை யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் நிலவக்கூடிய குடிநீர்ப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் இரணைமடு குடிநீர்த்திட்டம் என்ற விடயத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இரணைமடுக்குளம் தன்னகத்தே கொண்டிருக்கின்ற நீர் இலங்கையின் எந்த மலையிலிருந்தும் வருகின்ற நதி அல்லது ஆற்று மூலமான நீரல்ல. மாறாக மழையின் போது சேருகின்ற கழிவு நீர்கள் காட்டாறுகளாக சேர்ந்து இரணைமடு குளத்தினை சேர்வதன் மூலமே அந்தக் குளத்திற்கான நீர் கிடைக்கின்றது. இதனிடையே இரணைமடுவை நோக்கி வருகின்ற காட்டாறுகளை இடைமறிக்கின்ற இரண்டு பிரதான குளங்களின் பரப்பு எல்லைகள் அதிகரிக்கப்பட்டுவருவதால் எதிர்காலத்தில் இரணைமடுவை நோக்கிய காட்டாற்று வெள்ளங்களின் அளவு இன்னமும் குறைவடைவதற்கான வாய்ப்புக்களே உள்ளன. சேமமடுக்குளம் மற்றும் கனகராயன்குளம் ஆகிய இரண்டு குளங்களையும் புனரமைக்கின்ற நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன.

இந்த நிலையில் இரணைமடுவின் நீர் மட்டம் குறிப்பாக நான்கு தொடக்கம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்களே கடந்த காலங்களிலும் நிலவிவந்திருக்கின்றன. தற்போதைய மாதம் கடும் மாரி காலமாக விளங்கினாலும் குளத்தின் நீர் மட்டம் இந்த ஆண்டு 17 அடிகள் மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெருக்கடி கொடுக்கப்போகும் இரணைமடு விமான நிலையம்

இதேவேளை குளத்தில் நீர்மட்டம் 2அடி மேலதிகமாக அதிகரிக்கும் போது நேரடியாகவே இரணைமடுவில் உள்ள இலங்கை விமானப்படையினரின் விமான ஓடுதளத்திற்கு குளத்தின் நீரேந்துபிரதேசத்தில் சேகரிக்கப்படும் நீர் மட்டம் சவாலாக அமையும் ஆகையால் குறித்த அளவிற்கு மேலதிகமாக நீரைத் தேக்கிவைப்பதற்கு விமானப்படையினரும் அனுமதிக்கப்போவதில்லை.

யாழ்ப்பாணத்தை சென்றடையும் நீர் ஆரோக்கியம் மிக்கதா?

இரணைமடுவிற்கு வந்து சேர்கின்ற நீர்பற்றி ஏலவே குறிப்பிட்டிருந்தோம். இரணைமடுவை சென்றடைகின்ற நீரில் பெருமளவானவை ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களைக்கடந்து அவற்றினைக் கழுவியே சென்று சேர்கின்றன. குறித்த வயல் பரப்புக்களில் பயன்படுத்தப்படுகின்ற இரசாயனப் பசளைகள் மற்றும் கிருமி நாசினிகளில் காணப்படுகின்ற மிக மோசமான நச்சுப் பதார்த்தங்களை சுமந்துவரும் இரணைமடு நீரையே யாழ்ப்பாண மக்கள் குடிநீராகப் பயன்படுத்தவேண்டிய நிலை நோக்கி எதிர்காலம் தள்ளப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த நச்சுப் பதாத்தங்களில் காணப்படுகின்ற இரண்டிற்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்களை எந்தவிதமான சுத்திகரிப்பு வழிமுறையைக் கையாண்டும் இதுவரையில் நீரில் இருந்து அகற்றமுடியவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. ஆக உடனடியாக அல்லாவிடினும் நீண்டகாலத்தின் பின்னர் குடாநாட்டில் வாழ்கின்ற மக்களை நிரந்தர நோயாளிகளாகவோ அல்லது அவர்களின் உயிர்களைப் பறித்தெடுக்கவோ இரணைமடு நீர் வழி செய்யும் என்கின்றனர் துறைசார்ந்தோர்.

விவசாயிகள் என்ன சொல்கின்றனர்?

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளைப் பொறுத்தவரையில் அவர்களினுடைய அச்ச நிலைக்கு காரணம் நீர்க்கொள்ளவு போதுமானதாக இல்லை. விவசாயத்தினை மட்டும் நம்பியே வாழ்வாதாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இரணைமடுவிலிருந்து மேலதிக நீரினைப் பெற்றுக்கொள்வதாகச் சொல்லப்பட்டாலும் குளத்திற்குள்ளேயே இருந்தே நீர் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறிப்பிடப்படுகின்ற அளவிலும் பார்க்க நீர் மட்டம் குறைந்தாலும் குளத்தின் நீரினை தொடர்ந்தும் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவது நீர் மட்டம் சரியான அளவினை ஒவ்வொரு ஆண்டும் எட்டப்போவதில்லை என்பது கடந்தகால வரலாறு. ஆகவே வரட்சி ஏற்படும் போது குடிநீரினைப் பெற்றவர்கள் நீதி மன்றத்தினை நாடினால், நீதிமன்றம் குடிநீரா? விவசாயமா? வாழ்வாதாரத்துக்கு முக்கியம் என்ற அடிப்படையில் பார்க்கின்ற போது குடிநீர் தான் அத்தியாவசிமானது என்று தீர்ப்பு வழங்கும் சாத்தியமே உள்ளது ஆகையால் விவசாயத்தினை கைவிடவேண்டி வரும் அதனால் தாமும் தமது குடும்பத்தவர்களும் பட்டினியால் சாகவேண்டி ஏற்படலாம் அல்லது குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்ய நேரிடலாம் என்கின்றனர் அவர்கள்.

அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் இரணைமடு நீரினை யாழ்ப்பாணம் கொண்டு செல்லவேண்டும் என்பதில் மிகத் தீவிரம் காட்டிவருகின்றது. அதன் ஒரு படியாக அரச கூட்டுக்கட்சியாகிய ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் நாடாளுமன்றில் உரையாற்றியபோது இரணைமடு நீரினை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதால் 40 நன்மைகள் கிடைக்கும் என்று உரையாற்றியிருக்கின்றார். இருப்பினும் அவரைச் சந்தித்த விவசாயிகள் இது தொடர்பில் கேட்டபோது அங்கு உரையாற்றியமையை பெரிதாக கருதவேண்டாம் என்றும் தாம் விவசாயிகள் பக்கம் தான் என்றும் தெரிவித்திருக்கின்றார். ஆக, அவர் அங்கு உரையாற்றியதன் நோக்கம் அரசாங்கம் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கின்றது என்பதை அவர் பிரதிபலித்திருப்பதாகவே தெரிகிறது.

இதனிடையே, ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான குறித்த நீர் வழங்கல் தொடர்பிலான ஒப்பந்தத்தில் விவசாயிகள் சார்பில் கையெழுத்திடவேண்டிய ஒழுங்கு விதி உள்ளமையால் இராணுவத்தினரால் வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாய ஒன்றியத்தினுடைய தலைவரிடமும் கையெழுத்துப்பெறப்பட்டிருக்கின்ற போதிலும் ஏனைய விவசாயிகளிடம் இது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை.

இதனைவிடவும், துறை சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் அரச உயர் நிலை அதிகாரிகள் விவசாயிகளைச் சந்திக்கின்ற போது, மிரட்டல் பாணியிலேயே விவசாயிகள் அணுகப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக குறித்த பணம் திரும்பிப்போகுமாக இருந்தால் விவசாயிகளே பொறுப்பு என்ற வகையில் மிரட்டப்பட்டிருக்கின்றனர். இவை ஒருவகை அச்சம் கலந்து நிலையினையே இன்றுவரையில் விவசாயிகள் மத்தியில் விதைத்திருக்கின்றன.

இதேவேளை இறுதியாக நாடாளுமன்றில் வரவு – செலவுத்திடத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது பங்குகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை விழித்து, இரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு இடையூறு வழங்கவேண்டாம் என்று தெரிவித்ததுடன்.. மாவிலாறு விடயத்தினையும் சுட்டிக்காட்டி உரையாற்றியிருக்கின்றார்.

ஆக பல இலட்சம் மக்கள் பட்டினியாலும் குண்டுகளாலும் துப்பாக்கிச் சன்னங்களாலும் செத்துவீழ்ந்த போதுகூட அக்கறை கொள்ளாத இலங்கை அரசு, இரணைமடு நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு அக்கறை கொண்டிருப்பது நேர்மையானதாக இருக்கும் என்று கருதமுடியுமா?

இவற்றுக்கெல்லாம் மிகத் தெளிவான பதில்களை முன்வைக்க முடியும்,
இரணைமடு நீரினை யாழ்ப்பாணம் கொண்டு செல்வது நீண்டகால உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கமுடியும். இரண்டுவகைக்குள் குறித்த விடயங்களை நோக்கலாம். முதலாவது ஆளுந்தரப்பினைப் பொறுத்தவரையில் நாட்டில் பயங்கரவாதம் என்று சொல்லிக்கொண்டு கடந்த காலங்களைக் கடந்த நிலையில் மீண்டும் ஒரு பிரச்சினை தேவைப்படுகின்றது. உதாரணமாக இடையே வந்து போன கிறிஸ் பூதத்தினை குறிப்பிடலாம். மீண்டும் ஒரு பிரச்சினை என்று பார்க்கின்ற போது இரண்டு தரப்புக்களாக தமிழ் மக்களை பிரித்தாள்வது, கிளிநொச்சி – யாழ்ப்பாணம் என்ற அடிப்படையில் பிணக்கினை ஏற்படுத்தினால் கால ஓட்டத்தில் இரண்டு பகுதிகளும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்படலாம். ஆக அந்த விடயங்களைக் கையாள்தல் என்ற போர்வையில் காலத்தை இழுத்தடிக்கலாம் என்பது ஒன்று.

இரண்டாவது,
இரணைமடுநீர் கிளிநொச்சி விவசாயத்துக்கே போதாது என்ற நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் நீர் கொண்டு செல்லப்படுவதன் மூலம் நீர்ப்பற்றாக்குறை என்பது உடனடியாகவே தலைதூக்கும். இந்த நிலையில் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்வருதல் என்ற போர்வையில் மகாவலி கங்கையை வடக்கை நோக்கி திசை திருப்புதல். இது மிக மோசமான உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையாகவே அமையும். மகாவலி வடக்கிற்கு வருவது நல்லவிடயம் தானே என்று யாராவது கருதினால் அது ஒரு முட்டாள்தனமான முடிவாகும். மகாவலி கங்கையை நம்பி வடக்கு வாழவேண்டிய நிலை ஏற்பட்டால் அது முற்றுமுழுதாக பேரினவாதிகளில் தங்கிவாழும் நிலையினை நோக்கியே வடக்கு மக்களைத் தள்ளும். கடந்த காலங்களில் போர், பொருளாதாரத் தடை எத்தனை நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் உள்ளுர் உற்பத்திகளே வடக்கு மக்களை நிலைகுலையாது வாழ்க்கையை முன்னெடுக்க உதவியிருந்தன. இந்த நிலையில் மகாவலியினை நம்பிய வாழ்க்கையை நோக்கி தமிழ் மக்கள் உந்தப்பட்டால் இடைநடுவே குறித்த நதி மூலத்தினை இடைநிறுத்தினால் வடக்கு மக்களின் அடுத்த கட்டம் மிக மோசமாகவே பாதிக்கப்படும். இதனால் அரசு நினைப்பதற்கு ஏற்றவகையிலேயே செயற்படும் ஒரு இக்கட்டான கட்டம் வடக்கு மக்களுக்கு ஏற்படும். இதனிடையே மகாவலி வடக்கு நோக்கி திருப்பப்பட்டால் மகாவலி ஆற்றின் ஓரங்களில் விவசாயம் என்ற பெயரில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
எனவே மிக மோசமான நிலையினைத் தோற்றுவிக்கும் ஒன்றாகவே இரணைமடுத்திட்டத்தினை கையாள்வதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் முனைப்புக்காட்டிவருகின்றனர்.

கூட்டமைப்பின் நிலைப்பாடு,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரையில் எது சரி? எது பிழை? என்பதை எத்தனை பேர் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அவற்றுக்கு சரியான விடை கிடைக்கப்போவதில்லை.

கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாண சபையினருக்கும் இடையில் நான் – நீ பெரிது என்கின்ற போட்டி நிலை இழையோடத் தொடங்கியிருக்கின்றது என்றே தெரிகிறது. உண்மையில் இரணைமடு தொடர்பில் மேலே எம்மால் குறிப்பிட்ட விடயங்கள் அடிப்படையில் பார்க்கின்ற போது இரணைமடு நீர் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகின்ற நெருக்கடிகளை கூட்டமைப்பினர் விளங்கிக்கொள்ளுதலே தமிழ் மக்களுக்கு இடையிலான பிணக்கினைத்தீர்க்கும் வழிமுறையாக மாற்றம்பெறும்.

தென்மராட்சியில் நடைபெற்ற கலை நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்த கருத்தும் அதே மேடையில் பதிலளிக்கிறேன் என்ற பெயரில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களும் பல்வேறு செய்திகளைச் சொல்லியிருக்கின்றன. அவையாவன, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்பது ஒன்று. இரண்டாவது இரணைமடு விடயத்தில் கூட்டமைப்புக்குள் இதுவரையில் எந்தவித ஆரோக்கியமான வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றிருக்கவில்லை என்பதாகும்.

இதேவேளை 24ஆம் திகதி வவுனியாவில் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இரணைமடு நீர் விவகாரம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றினை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குறித்த கலந்துரையாடல் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் என்று செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அரச அதிகாரிகளும் இரகசியமாக அழைக்கப்பட்டிருப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. இந்தக் கலந்துரையாடல் ஆரோக்கியமான முடிவுகளை எடுக்குமா? என்று ஆராய்ந்து பார்த்தால் முற்றுமுழுதாக ஒரு தோல்வியான கூட்டமாகவே முடிவுறும் என்று தெரிகிறது. காரணம் இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சரின் ஏற்பாட்டில் அவசர அவசரமாக ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் குழுவே இரணைமடு நீர் விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் என்றும் தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் வவுனியா கூட்டத்திற்கு வடக்கு முதல்வரை இழுப்பதற்கு கூட்டமைப்பின் தலைவர் பகீரப்பிரயத்தனம் மேற்கொண்டதாகவும் தெரியவந்திருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இழுபறியின் அடிப்படையிலேயே கூட்டம் முடிவுறப்போகிறது.

சம்பந்தன் – சுமந்திரன் மஹிந்தவுடன் இராப்போசனம்

தமிழ்த் தேசிய(!)க் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் மாற்றுத் தெரிவில்லாத காரணத்தினால் தமது ஏகோபித்த தெரிவாக வெளிப்படுத்திவருகின்ற போதிலும் அரசாங்கத்தின் மிக முக்கிய நம்பிக்கைக்குரியவர்களில் இரா.சம்பந்தனும் சுமந்திரனும் செயற்பட்டுவருகின்றமை தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டே வந்திருகின்றன.

கூட்டமைப்புக்குள் நெருக்கடியான முடிவுகளை எடுக்கும் நிலையிலோ அரசாங்கம் இக்கட்டான நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற நிலையிலோ கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்தவை சந்திப்பது வழக்கம். கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பிலான இழுபறி நிலவிய போதும், அதன் பின்னர் கூட்டமைப்பின் அமைச்சரவை தெரிவு இழுபறி நிலவிய போதும் ஜனாதிபதி மஹிந்தவை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்திருந்தார். இந்நிலையில் நாளை (24) வவுனியாவில் கூட்டமைப்பு இரணைமடு தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எடுக்கலாம் எனக் கருதப்படுகின்ற கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் நேற்று (22) சபாநாயகரின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருந்துபசாரம் என்ற பெயரிலான சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை தலைவர் சம்பந்தனும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் சந்தித்திருக்கின்றனர். இவ்வாறான நிகழ்வுகளுக்கு முன்னுக்கு நிற்கும் அப்பாத்துரை விநாயகமூர்த்தியைக் கூட அரசாங்கம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் காணமுடியவில்லை. எனவே இந்த நேரத்தில் சம்பந்த(ன்) சுமந்திர(ன்) சகிதம் மஹிந்தவை சந்தித்தன் பின்னர் சில முடிவுகளை எடுத்திருப்பார்கள் என்பது புலனாகிறது. அது என்ன முடிவாக இருக்கும் என்பதை அட்சரம் பிசகாமல் எழுதிக்காட்டவேண்டியதில்லை.

கூட்டமைப்பு செய்யக்கூடியது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மிகச் சிறந்த அற்புதமான முடிவுகளை முன்னெடுக்கலாம். இதற்கான முன்மொழிவுகளை கூட்டமைப்பின் யாராவது ஒரு உறுப்பினர் முன்வைக்க முனையலாம். ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கவுள்ள 2000 கோடி ரூபா பணம் திரும்பிப்போகக்கூடாது என்பது தான் இரணைமடு குடிநீர்த்திட்டத்தினை விரும்புபவர்களுடைய நோக்கமாக இருக்கலாம். வடக்கு மாகாண சபையினைக் கைப்பற்றியுள்ள கூட்டமைப்பிடம் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமாக இரண்டு அல்லது மூன்று விடயங்களைக் குறிப்பிடலாம்.

தீவகக்கடற்பரப்பில் காணப்படுகின்ற உவர்நீரினை நன்னீராக்கல் திட்டம் தொடர்பிலான ஒரு திட்ட வரைபினை மேற்கொண்டு உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், ஐ.நா உப நிறுவனங்கள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா என எந்த அமைப்பிடமோ அல்லது நாட்டிடமோ உதவி கோரமுடியும். போரால் பாதிக்கப்பட்ட வடக்கிற்கு உதவுவதற்கு மேற்குறிப்பிட்டவற்றில் ஒரு நாடோ அல்லது ஒரு அமைப்போ முன்வருவதற்கான சாத்தியப்பாடுகளே உள்ளன. அதேபோல குடாநாட்டில் குடிநீரை மாசுறுத்தும் மனிதக்கழிவுகளை அகற்றுவதற்கான ஒரு சிறந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டவரைபினை முன்வைக்கலாம்.

அதேபோல குடாநாட்டில் காணப்படுகின்ற உவர் நீர்மயப்பட்டுள்ள நீர் நிலைகளை நன்நீராக்குவது தொடர்பிலான திட்டவரைபுகளை உருவாக்குதல். மேற்குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் வடக்கு மக்களுக்கு தெளிவான செய்தியை கூட்டமைப்பு முன்வைக்கலாம்.

இரணைமடு நீர் குடாநாட்டிற்கு கொண்டுவருவதற்கு போதுமானதல்ல என்பதை சரியான ஆதாரங்களுடன் விளக்குவதுடன், குடாநாட்டு நீர் நெருக்கடியினைச் சமாளிப்பதற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தப்போகிறோம் என்ற செய்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடுமாக இருந்தால் கூட்டமைப்பில் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்னும் ஒரு படி அதிகரிக்கும் என்பதுடன், எமது மக்களுக்கு இடையிலான பிணக்குகள் அற்றுப்போகும். எதிர்காலத்தில் எங்களை நாங்களே ஆளும் நிலை ஏற்பட்டால் மத்திய அரசின் மகாவலியை நம்பி வாழ்க்கை நடத்தவேண்டிய நிலை எமது மக்களுக்கு ஏற்படாது..

-தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*