mandela2

புரட்சித் தலைவனுக்கு விடை கொடுப்போம்…!

“உலகின் தலைசிறந்த புரட்சிவாதிகள் பயங்கரவாதிகள் எனவும் கலகக்காரர்கள் எனவும் அவர்கள் வாழ்நாளில் பிற்போக்காளர்களால் தூற்றப்படுகின்றனர். ஆனால் அதே சக்திகள் புரட்சிவாதிகளை அவர்களின் இறப்பின் பின்பு யேசுவாகவும், புத்தராகவும் காட்டி அஹிம்சாமூர்த்திகள் எனக் கூறி அவர்களுக்கு மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்த முனைகின்றனர்” இவை உலகின் தலைசிறந்த புரட்சிவாதிகளில் ஒருவரும் உலகில் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசியலதிகாரத்தை நிறுவியவருமான மாமேதை லெனின் கூறிய வார்த்தைகள்.

தங்கள் வாழ்நாளில் திட்டித்தீர்க்கப்பட்ட விடுதலை வீரர்கள் அவர்களின் இறப்பின் பின்பு அவர்களின் வடிவங்கள் மாற்றப்பட்டு போற்றப்படுவது நாம் காலம் காலமாகக் கண்டுவரும் அனுபவம் தான்!

அதே நடைமுறை தென்னாபிரிக்க மக்களின் ஒப்பற்ற தலைவன் நெல்சன் மண்டேலாவுக்கும் ஏற்பட்டுள்ளது. இன்று அவரை ஒரு காந்தியவாதியாகவும், எதிரிகளையும் மன்னிக்கும் இயல்பு படைத்த யேசுநாதராகவும் தனிமைச் சிறையில் தவம் செய்து ஞானம் பெற்றவராகவும் காட்டப் பலர் முயன்று வருகின்றனர். அந்த முயற்சியைச் சாதகமாக்க அவரின் போராட்டத் தோழியும் இரண்டாவது மனைவியும், தீவிர புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்கியவருமான திருமதி. வின்னி மண்டேலாவை நெல்சனின் வரலாற்றுப் பதிவுகளிலிருந்து லாவகமாகத் தவிர்த்து வருகின்றனர். வின்னி விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய பாரிய பங்களிப்பை மறைத்து விடவே முயல்கின்றனர்.

எனினும் உண்மை தாமதித்தாலும் கூட வலிமையானது என்பதால் அதை எவரும் அழித்துவிட முடியாது.

2008ஆம் ஆண்டு வரை நெல்சனைத் தமது பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருந்த அமெரிக்காவின் அதிபர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பல நூறு ஆண்டுகளாக ஆபிரிக்க மக்களை அடிமை கொண்டிருந்த பிரிட்டனின் பிரதமர் அஞ்சலியில் பங்குகொண்டுள்ளார்.

எந்த இன ஒடுக்குமுறையையும், இனப்படுகொலையையும் எதிர்த்து நெல்சன் மண்டேலா போராடினாரோ அதே இன ஒடுக்குமுறையையும், இனப்படுகொலையையும் இன்றுவரை தொடரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

இவர்களெல்லாம் தங்களை மாற்றிக்கொண்டு ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்குக் குரல் கொடுப்பவர்களாக உருவெடுத்துவிட்டார்களா?

நிச்சயமாக இல்லை!

நெடிதுயர்மிக்க அந்தக் கறுப்பு மனிதனின் வடிவத்தை மாற்றி புத்தராகவும் யேசுவாகவும் காத்தியவாதியாகவும் உருவகித்து வழிபட ஆரம்பித்துவிட்டனர். அது நெல்சனின் உலக மக்களிடையேயுள்ள செல்வாக்கை விடுதலைப் பாதைக்கும் புரட்சிகர நடவடிக்கைகளுக்கும் திசை திருப்ப முயலும் ஒரு கண்கட்டி வித்தை!

அடிப்படையில் நெல்சன் தென்னாபிரிக்க விடுதலைப் பயணத்தில் ஒரு புரட்சியவாதியாக விளங்கினார். ஆபிரிக்கத் தேசிய விடுதலை இராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதனை வழி நடத்தினார்.

நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க அரசின் இன ஒடுக்கல் கொள்கைகளுக்கு எதிராக ஆரம்பத்தில் ஜனநாயக வழியிலான போராட்டங்களை நடத்தினார். அவை ஆயுத வன்முறை மூலம் அடக்கப்பட்டன. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகள் விசாரணையின் பின்பு அவர் விடுதலை செய்யப்பட்டார். காங்கிரஸ் மீதான தடையும் நிராகரிக்கப்பட்டது.

மீண்டும் அறவழிப் போராட்டங்களை நடத்தினார். இப் போராட்டங்களின் போது ஜொகர்னஸ் பேர்க் நகரில் ஒரே நாளில் ஆயுத மேந்திய இனவெறியர்களாலும் பொலிஸாராலும் 69 கறுப்பின மக்கள் கொல்லப்பட்டனர். மீண்டும் அவர் சிறை செய்யப்பட்டார்.

ஜனநாயகப் போராட்டங்களின் பயனின்மை காரணமாக தென்னாபிரிக்கா எங்கும் ஆயுத எழுச்சிகள் இடம்பெற்றன. சிறையிலிருந்து வெளிவந்த நெல்சன் மண்டேலா இந்த ஆயுதக் குழுக்களை ஒன்றிணைத்து தேசிய விடுதலை இராணுவத்தை உருவாக்கி அதைத் தலைமை தாங்கி வழிநடத்தினார்.

அவரின் தலைமறைவு வாழ்க்கை ஆரம்பமானது. தென்னாபிரிக்க மக்களின் விடுதலைக்கு ஒரே வழி ஆயுதப் போராட்டமே என்ற முடிவுடன் அதை வலுப்படுத்தினார்.

எனினும் அவர் மாறுவேடத்தில் வந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு ஆயுட்காலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். அவர் ராபன் தீவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறை வாசத்தால் அவரின் புரட்சிகர இலட்சியத் தாகத்தைச் சிதைக்கமுடியவில்லை. பல தடைகளையும் தாண்டி அவரைச் சந்திக்க வரும் அவரின் காதல் மனைவி வின்னி மூலம் வழிகாட்டல்களை வழங்கினார். 27 ஆண்டுகள் அவர் சிறையிலிருந்த காலத்தில் அவரின் புரட்சிகர இதயம் தென்னாபிரிக்க விடுதலை இராணுவத்தை வின்னி மூலம் வழிநடத்தியது.

நாடெங்கும் எழுச்சி பெற்ற ஆயுதப் போராட்டங்கள் உகின் பார்வையைத் தென்னாபிரிக்கா பக்கம் திருப்பியது.

நெல்சன் விடுதலை செய்யப்பட்டார். 1994ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

அப்போது அவர் ஆற்றிய உரையில் அவர் தெளிவாகவே, “எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நாம் மன்னிக்கிறோம், ஆனால் மறக்கமாட்டோம்”, எனக் குறிப்பிட்டார்.

மன்னிப்பது அவரின் பெருந்தன்மை! மறக்காமல் இருப்பது அவரின் புரட்சிகர உளப்பாங்கு.

ஒரு புரட்சிவாதி மன்னிக்கும் தன்மை கொண்டவன். ஏனெனில் அவன் மனித குலத்தை நேசிப்பவன்! மனித குலத்தை நேசிக்கும் காரணத்தினால் தான் அவன் மனித குல விடுதலைக்காகக் களமிறங்குகிறான்.

நெல்சன் மண்டேலா புத்தரல்ல; யேசுவல்ல; காந்தியுமல்ல! மக்களின் விடுதலைக்கு ஆயுதமேந்திப் போராடிய ஒரு புரட்சிவாதி.

நாம் அவரை ஒரு புரட்சிவாதியாக, ஆயுதப் போராளியாக, மக்களின் தலைவராக அஞ்சலிக்கிறோம்.

ஒரு புரட்சிகர வீரத்தலைவனுக்கு, ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் குரலான ‘தமிழ்லீடர்’ தன் வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

– தமிழ்லீடர் ஆசிரியர்பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*