sumanthiran

சிங்களத்துக்காக ஆஜராகும் ‘சின்னக்கதிர்காமர்’ – மாரீசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் நாடாளுமன்றில் ஆற்றிய உரை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பாக மட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாகவும் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் வகிக்கும் பங்களிப்புப் பற்றியும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

இவர் தமிழ் மக்களின் உரிமைக்குரலாக உரையாற்றினாரோ அல்லது இலங்கையின் இனவாத ஒடுக்குமுறை ஆட்சியாளர்களின் குரலாக உரையாற்றினாரோ என்ற சந்தேகத்தை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன.

இவர் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. ஆனால் மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமன உறுப்பினராக நாடாளுமன்றப் பதவியை பெற்றவர். அவ் வகையில் அவர் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர். ஆனால் அவர் தமிழ் மக்களின் பேரால் ஆட்சியாளர்களின் குரலாக ஒலிப்பதை தமிழ் மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவும் இல்லை. அதேவேளையில் மன்னிக்கவும் தயாரில்லை என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.

போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள், மனித குல விரோத நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச அளவில் கூடுதலான அக்கறை செலுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இது எமது மக்களின் பறிக்கப்பட்ட உயிர்கள் தொடர்பான பிரச்சினை. ஆனால் இலங்கை அரசு அப்படி எதுவும் இடம்பெறவில்லை என தொடர்ந்து மறுத்துவருகிறது. ஆனால் சர்வதேசமோ முறியடிக்கப்பட முடியாத ஆதாரங்களை முன் வைத்துள்ளது. அதாவது இலங்கை அரசு எம்மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி வந்துள்ளது.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன அழிப்பு தொடர்பில் சர்வதேசம் எழுப்பும் பிரச்சினைகளில் அவர்களுக்கு பதிலளிக்கும் விடயத்தில் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படத் தயார் எனத் தெரிவித்துள்துள்ளார்.

இவர் எப்படி இணைந்து செயற்படப் போகிறார்?

இலங்கை அரசு இங்கு போர்க்குற்றங்கள் எதுவுமே இடம்பெற்வில்லை எனவும் எவரும் காணாமல் போகவில்லை எனவும் கூறி வருகிறது. அதை ஆதரித்து சர்வதேசத்தின் முன்பாக சாட்சி சொல்லப் போகிறாரா சுமந்திரன்?

எங்கள் மக்கள் இழந்த உயிர்களையும் சிந்திய இரத்தத்தையும் விட்ட கண்ணீரையும் இழந்த உடலுறுப்புக்களையும் மறைக்கும் கவசமாகச் செயற்படப்போகிறாரா சுமந்திரன்.

கனடா பிரதமரும் பிரிட்டிஷ் பிரதமரும் எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகக் குரல் தரும் போது சுமந்திரன் அவற்றை தமிழ் மக்களின் பேரால் நீர்த்துப் போகச் செய்யப்போகிறாரா?

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை அரசு கடும் நெருக்கடிகளைச் சந்திக்கப் போவது நிதர்சனம். இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியைக் கோரவில்லை. ஆனால் இலங்கை அரசை காப்பாற்ற அதன் ஒத்துழைப்பைக் கோருகிறார் சுமந்திரன்.

இது வேதனையானதுமல்ல; வேடிக்கையானதுமல்ல;

தமிழ் மக்களின் பேரால் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் ஒரு திட்டமிட்ட நயவஞ்சகம். இது என்றுமே தமிழ் மக்களால் மன்னிக்கப்பட முடியாத கேவலமான துரோகம்.

கடந்த காலங்களில் சேர்.பொன் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் உட்பட்ட தலைவர்களைப் பற்றியெல்லாம் இவர் கேள்வி எழுப்புகிறார். தமிழ் மக்களுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த அந்தத் தலைவர்களைப் பற்றி கேள்வி எழுப்ப, மஹிந்த அரசாங்கத்தின் ஊதுகுழலாகச் செயற்படும் ஒரு நபருக்கு, இன விடுதலையின் வலி எதுவுமே புரியாத ஒரு நபருக்கு என்ன உரிமை இருக்கிறது எனக் கேட்க விரும்புகிறோம்.

சமாதானம் என்றும் ஒப்பந்தங்கள் என்றும் சிங்களத் தலைவர்கள் எமது போராட்டங்கள் முனைப்படையும் போது இறக்கிவைப்பதும், பின்பு அவற்றைக் கிழிதெறிவதும் இந்த நாட்டின் வரலாறு என்பது அவருக்குத் தெரியாதா? சிங்களத் தலைமைகள் இறங்கிவருவதும் பின்பு அவற்றைக் கிழித்தெறிவதும் இந்த நாட்டின் வரலாறு என்பது அவருக்குத் தெரியாதா? சிங்களத் தலைமைகள் இந்திய வல்லாதிக்க சக்திகள் எம்மை ஏமாற்றி அடிபணிய வைக்க முயன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது தலைவர்கள் அவற்றை நிராகரித்து தமிழ் மக்களைக் காப்பாற்றினார்கள் என்ற பெரும் உண்மையை இவர் போன்ற அடிவருடிகள் புரிந்துகொள்ளாமல் இருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

எல்லாவற்றையும் விட அவரின் உரையில் பாதுகாப்புச் செயலர் கோத்தாபயவின் குரல் ஒலித்ததை நாம் அலட்சியம் செய்துவிட முடியாது. ஒரு பிழையும் நடக்காத போரை உலகத்தில் காண முடியாது எனவும் விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையிர் சேர்த்தனர் எனவும் அரசுக்காக வக்காளத்து வாங்கியிருக்கிறார். இவர் இலங்கை அரசின் உத்தியோகபுர்வ பேச்சாளராக மாறிவிட்டாரோ என்ற கேள்வியை எமக்கு எழுப்புகிறது.

நாம் சுமந்திரனைப் பார்த்து கேட்கும் கேள்வி, விடுதலைப்புலிகள் தவறு செய்தார்களா இல்லையா என்பது வேறு விஷயம்! ஆனால் விடுதலைப்புலிகள் தவறு செய்திருந்தால் அரசு தமிழ் மக்களைக் கொன்று குவிப்பது நியாயமானதா? அதற்கான விசாரணை நடத்தப்படுவது தவறா?

இறுதியில் –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஏனைய கூட்டமைப்பினருக்கும் ஒரு கோரிக்கை; திரு.சுமந்திரனை தொடர்ந்தும் தமிழர் சார்பில் குரல்கொடுக்கும் ஒருவராக வைத்திருக்கப் போகிறீர்களா? அல்லது தமிழ் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படப்போகிறீர்களா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எமது மக்கள் வாக்குகளால் ஒரு தகுதியான இடத்தில் ஏற்றி வைத்தனர் என்றதன் அடிப்படையில் அந்த மக்களின் சார்பாக உரிமையுடன் கேட்கிறோம்,

நீதிக்காக, உரிமைக்காக கொடுக்கப்பட்ட உயிர்விலைகளின் மீது நின்றுகொண்டு எங்கள் அப்பாவி மக்களின் உயிர்களுக்காக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நீதியை குழிதோண்டிப் புதைக்காதீர்கள்.

தமிழ்லீடருக்காக மாரீசன்

சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்துக்களின் சாராம்சம் வருமாறு;-

சர்வதேசங்களால் முன்வைக்கப்படுகின்ற போர்க்குற்றசாட்டுக்கள் தொடர்பாக நாங்கள் எப்படி பதிலளிக்கமுடியும் என்ற விடயத்தில் நாங்கள் இணைந்து தீர்வை காணவேண்டும். ஐக்கியநாடுகள் சபையின் அடுத்த கூட்டத்தொடருக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்ற நிலையில் நீங்கள் இன்றே முன்வந்தால் நாங்களும் உங்களுடன் இணைந்து அதற்கான வேலைத்திட்டத்தில் இறங்கமுடியும்.

அரசாங்கமானது அதற்கு தயாராக இருந்தால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினராகிய நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவோம்.

ஒரு பிழையும் நடக்காத போரை இந்த உலகில் நீங்கள் காணமுடியாது. நாங்கள் இரண்டு தரப்பும் பல படுமோசமான தவறுகளை விட்டிருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இச்சந்தர்ப்பத்தில் தமிழர் தரப்புக்கு நான் சில கேள்விகளை முன்வைக்கவிரும்புகின்றேன்.

1931 ஆம் ஆண்டில் பூரண சுயாட்சி திட்டத்தை முன்வைத்து யாழ்ப்பாண தமிழர் காங்கிரஸ் தேர்தலை புறக்கணித்தமை தவறா? கண்டித்தலைவர்கள் சுயாட்சி திட்டத்தை முன்வைத்தபோது அதனை எமது தலைவர்கள் நிராகரித்தமை தவறா? 50 க்கு 50 என்ற யோசனையை முன்வைத்த ஜிஜி பொன்னம்பலம் தவறா? 1951 இல் சமஸ்டி திட்டத்தையும் அதன் பின்னர் 1976 இலும் தனியான நாட்டையும் தீர்வாக முன்வைத்த செல்வநாயகம் தவறா? 1981 இல் மாவட்ட அதிகார சபையை தீர்வாக ஏற்றுக்கொண்டும் அதன்பின்னர் 1987 இல் இந்தியாவால் முன்வைக்கப்பட்ட மாகாணசபை திட்டத்தை ஏற்காமல் விட்டமை தமிழர் விடுதலைக்கூட்டணி செய்த தவறா? தமிழ்தலைவர்கள் இளைஞர்களின் ஆயுதப்போராட்டத்தில் உடந்தையாக இருந்தார்களா?

தமிழர் ஐக்கியம் எங்கே? எங்களது வேறுபாடுகள் எங்களது ஐக்கியத்தை சீரழிக்க பேரினவாதத்தால் பயன்படுத்தப்பட்டதா? சகோதரப்படுகொலைகளை செய்ததில் பிரபாகரன் தவறுசெய்தாரா? தமிழ்த்தலைவர்களையும் சிங்களத்தலைவர்களையும் வெளிநாட்டுத்தலைவர்களையும் படுகொலைசெய்ததில் தவறுசெய்தாரா? பொதுமக்கள் மீதான படுகொலைகளையும் தாக்குதல்கைளையும் நியாயப்படுத்தமுடியுமா? பெளத்த மடாலயங்கள் மீதான தாக்குதல்கள் முஸ்லிம் பள்ளிவாசல்களின் உள்ளேயான தாக்குதல்களை நியாயப்படுத்தமுடியுமா?

புலிகள் பலமாக இருந்தபோது சமாதானத்திற்கான சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே வீணடித்ததை நியாயப்படுத்தமுடியுமா? 2005 தேர்தலின்போது மகிந்த ராஜபக்சவோடு இணைந்துசெயற்பட்டது சரியா? புலிகள் உட்பட ஆயுதக்குழுக்களில் சிறுவர்கள் உட்பட இணைத்தமை சரியா? காட்டிக்கொடுப்போர் பற்றி மற்றும் புலிகளில் இருந்து தற்போது அரசாங்கத்துடன் இணைந்து இருப்பவர்கள் பற்றி என்ன சொல்லப்போகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*