mandela2

விடுதலையின் அடையாளம் ‘மண்டேலா’ – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

“இன ஒடுக்குமுறையாளர்கள் எம் மீது இழைத்த அநீதிகளை நாம் மன்னித்துவிட்டோம். ஆனால் அவற்றை நாம் என்றுமே மறக்கப்போவதில்லை” இது தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக கறுப்பின மக்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய நெல்சன் மண்டேலா அவர்கள் ஆற்றய சொற்பொழிவின் ஒரு பகுதி.

இவை ஒரு பதவியேற்பின் போது வெளியிடப்பட்ட வெறும் அலங்கார வார்த்தைகளல்ல.

மக்களுக்காகவும் தான் பிறந்த மண்ணுக்காகவும் தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த ஒரு விடுதலைப் போராளியின் அடி இதயத்திலிருந்து வெளிவந்த இலட்சிய உறுதியும், பெருந்தன்மையும் கொண்ட சுதந்திரக்குரல்.

மன்னிப்பது மனித குலத்துக்குரிய பெருந்தன்மை. மறக்காமல் இருப்பது கடந்த கால அனுபவங்களை மனதில் நிறுத்தி அவற்றிலிருந்து பாடங்களைக் கற்று மீண்டும் அப்படியான அநீதிகள் முனைப்பெடுக்க விடாமல் பாதுகாப்பதற்கான உறுதி மிக்க வேலி.

அவன் மன்னிப்பதில் ஒரு பரந்துபட்ட மக்களின் தலைவனாகவும், மறக்காமலிருப்பதில் என்றும் விலை போய்விட முடியாத புரட்சிவாதியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

மண்குடிசையில் ஏழ்மையின் தாலாட்டில் பிறந்த மண்டேலா சிறுவயதில் மாடுகளை மேய்த்தே தன் கல்வியைத் தொடர்ந்தவர். தனது உழைப்பையே மூலதனமாக்கி அவர் கற்ற கல்வி அவரை ஒரு சுரங்க நிறுவனத்தின் மேற்பார்வையாளராக்கியது.

அங்கு தான் புரட்சியின் முறைகள் அவருள் மெல்ல மெல்ல வேர் விடத்தொடங்கின. நாளொன்றுக்கு பதினான்க மணிநேரம் வேலை வாங்கப்படும் தொழிலாளர்களும், அவர்கள் சந்தித்த நிற அடிப்படையிலான ஒடுக்குமுறைகளும், பல வகைகளிலான நெருக்கடி மிக்க சுகாதாரமற்ற குடியிருப்புக்களும் இளவயதிலேயே அவர்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பதும் அவரின் ஆழ் மனதில் ஒரு தார்மீக கோபத்தை மெல்ல மெல்ல மூட்டியது.

இயற்கையோடு இயைந்து செழிப்பாக வாழ்ந்து ஆபிரிக்க பழங்குடி மக்களை ஆயிரமாயிரமாகக் கொன்றுகுவித்து அவர்களின் வளமான நிலங்களைக் கைப்பற்றியும், ஏராளமானோரை அடிமைகளாகப் பிடித்து விலங்கிட்டு ஆடு, மாடுகள் போல் கப்பல் கப்பலாகத் தென்னமெரிக்காவுக்கு ஏற்றியமையையும் சிறு வயதில் மண்டேலா தனது பாட்டனார் கதைகளாகக் கூறும்போது கேட்டிருக்கிறார்.

சுதேசிகளிடம் அபகரித்த அதே நிலங்களில் தங்க சுரங்கங்களையும், நிலக்கரிச் சுரங்கங்களையும் அமைத்து அதே மக்களையே அங்கு தொழிலாளர்களாக வேலை வாங்கி வெள்ளையினத்தவர்கள் புரிந்த அட்டூழியங்கள் அவரின் நெஞ்சில் நெருப்பை மூட்டின.

கறுப்பர்கள் சில சில ஒதுக்குப்புறமான, பகுதிகளில் மட்டுமே வாழ அனுமதிக்கப்பட்டமையும் வெள்ளையர் பழகும் சில இடங்களில் நடமாட அனுமதிக்கப்படாமையும் மேலும் மேலும் ஒரு மாற்றத்திற்கான தாகத்தை அவருக்குள் வளர்த்தன.

இந் நேரத்தில் சில கறுப்பினக் கல்விமான்களின் தலைமையில் தென்னாபிரிக்க அரசின் இன ஒடுக்கல் கொள்கைகளுக்கு எதிராக ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸை அமைத்து குரலெழுப்பப்பட்டது. நெல்சன் மண்டேலா அதில் இணைந்து கொண்டது மட்டுமன்றி, வெகு விரைவிலேயே அதன் தீவிர செயற்பாட்டாளராக மாறினார். அவர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற போதே பல மாணவர் போராட்டங்களுக்குத் தலைமையேற்று வழி நடத்தினார்.

எனினும் நாளாக நாளாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கைக் கொண்ட மிதவாதப் போக்கு கறுப்பின மக்களை விடுதலையை நோக்கி பயணிக்க போதுமானதல்ல என்பதை அவர் புரிந்து கொண்டார். தம்போ, ஜேக்கப் சுமோ போன்ற தீவிரமான இளைஞர்களுடன் இணைந்து ஆபிரிக்க தேசியக் காங்கிரஸின் தலைமையில் தென்னாபிரிக்க தேசிய விடுதலை இராணுவம் என்ற ஆயுத அமைப்பை உருவாக்கினார்.

இது தென்னாபிரிக்காவின் தேசிய விடுதலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வெள்ளை நிற வெறியர்களினதும், பொலிஸாரினதும் கறுப்பின மக்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகப் பதிலடிகள் விழ ஆரம்பித்தன. இக்காலப் பகுதியில் அவர் தனது குடும்பப் பெயரான மண்டேலாவின் முன்பு பிரித்தானியைவே கலங்க வைத்த நெல்சனின் பெயரை இணைத்துக்கொண்டார்.

இந் நிலையில் நெல்சன் மண்டேலா தலைமறைவாக வேண்டிய நிலை ஏற்பட்ட போதும், நெல்சன் மண்டேலாவின் பெயர் கறுப்பின மக்களின் விடுதலையின் குறியீடாக மாற ஆரம்பித்தது.

இக்காலப் பகுதியில் இவரின் இரண்டாவது மனைவியான வின்னி மண்டேலா இவரின் புரிட்சிகர நடவடிக்கைகளுக்கு துணை நின்றது மட்டுமன்றி ஆபிரிக்க தேசிய விடுதலை இராணுவத்தை வழி நடத்துவதிலும் பிரதான பங்குவகித்தார்.

நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் ஆயுட்காலச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறார். நீதிமன்றில் அவர் ஆற்றிய உரை தென்னாபிரிக்காவின் முழு கறுப்பின மக்களையும் ஒடுக்குமுறைகளுக்கெதிராக கிளர்ந்தெழ வைக்கிறது. எங்கும் போராட்டங்கள் வெடிக்கின்றன.

ஆனால் தென்னாபிரிக்க வெள்ளையின அரசு அப்போராட்டங்களை துப்பாக்கிமுனையில் அடக்க முனைகிறது. பெண்கள், குழந்தைகள், முதியோர் என மக்கள் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்படுகின்றனர். வெள்ளை நிற வெளி ஆயுததாரிகள் கறுப்பின மக்களின் குடியிருப்புக்களுக்குள் புகுந்து கொலை வெறியாட்டம் நடத்தியமையுடன் அவற்றை எரி ஊட்டியும் அட்டகாசம் புரிகின்றனர்.

அதுவரை மௌனம் காத்த உலகம் மெல்ல மெல்ல விழித்துக் கொள்கிறது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் கண்டனக்குரல்கள் எழுகின்றன. உலகின் பெரும் நகரங்களிலெல்லாம் தென்னாபிரிக்க வெள்ளையின அரசின் நிறவெறிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வெடிகின்றன.

95 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அந்த விடுதலைவீரன் தனது வாழ் நாளில் 27 ஆண்டுகளை தனியாக ஒரு தீவில் தனிமைச் சிறையில் கழிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கு அவர் கல்லுடைப்பது போன்ற கடுமையான வேலைகளுக்கு உட்படுத்தப்படுகிறார். அவரை அவரின் மனைவி சந்திப்பதற்கே பல தடைகள் விதிக்கப்படுகின்றன. எனினும் வின்னி படகேறிச் சென்று முடிந்தவரை அவரைச் சந்தித்து ஆலோசனை பெறுகிறார்.

10 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட ஒரு சிறை அறை! வலுவான இரும்புக் கம்பிகளிலானா கதவு! அதைப் பிணைக்கும் பலமான புட்டு; வெளியே இரு காவலர்கள் இது நெல்சன் மண்டேலாவின் கொடிய சிறை வாழ்வு;

ஆனால் அந்தக் கொடிய வாழ்வு  வறும் சிறைக் கூண்டுகுள் அடங்கிப் போய்விடவில்லை.

அது சிறைக்கம்பிகளையும் கடந்து, கடல்களையும் கடந்து, மலைகளையும் கடந்து, வனங்களையும் தாண்டி மாபெரும் சக்தியாக தென்னாபிரிக்க மக்களின் இதயங்களில் நெருப்பு மூட்டியது. அவர் அனுபவித்த ஒவ்வொரு துன்பமும் வெடி குண்டுகளாகவும் துப்பாக்கி ரவைகளாகவும் மாறி ஆபிரிக்க தேசிய விடுதலை இராணுவத்தை சென்றடைந்தன.

இன வெறியரை நடுநடுங்க வைக்குமளவுக்கு நாடெங்கும் போராட்டங்கள் நடத்தின. சில சுரங்கத் தொழிலாளர்கள் இனவெளிக்குழுவினரால் கொல்லப்பட்டதைக் கண்டுத்து ஜோகன்னஸ் பேர்க்கில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறுவர்கள், சிறுமியர் உட்பட பலநூறு மக்கள் கொல்லப்பட்டனர்.

உலக ஊடகங்கள் கொதித்து எழுந்தன. பற்பல கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுந்தன. ஜோகன்னஸ் பேர்க் கொடுமைகளுக்கு எதிராகப் பல்லாயிரம் கவிதைகள் பிறந்தன.

தென்னாபிரிக்கா பொதுநலவாயத்திலிருந்து நீக்கப்பட்டது, உலக நாடுகள் பல பொருளாதாரத்தடை, வர்த்தகத்தடை விதித்தன. உலக விளையாட்டு வீரர்கள் கூட தென்னாபிரிக்க அணிகளுடன் விளையாட மறுத்தன.

நெல்சன் மண்டேலா 1988ல், காச நோயில் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். மன்னிப்புக் கேட்டால் விடுதலை செய்ய முடியும் என்ற அரசின் அறிவிப்பை மண்டேலா நிராகரித்துவிட்டார்.

இந் நிலையில் நாட்டின் விடுதலைப் போராட்டம் மேலும் மேலும் வலுப்பெற்றது! வின்னி தலைமறைவாக நின்று போராட்டத்துக்கு பங்கு வழங்கினார். இளைஞர் அணியை அவரே தலைமை தாங்கி வழிநடத்தினார்.

இறுதியில் நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தின் வலிமை காரணமாகவும் உலக நாடுகளின் கண்டனங்களின் அழுத்தம் காரணமாகவம் 27 வருடங்களின் பின்பு 1990ல் நெல்சன் மண்டேலா கிளார்க் அரசினால் விடுவிக்கப்படுகிறார்.

பின்பு இடம்பெற்ற பேச்சுக்கள் காரணமாக உடன்பாடுகள் எட்டப்படுகின்றன.

1994இல் இடம்பெற்ற தேர்தலில் மிகப்பெரும்பான்மையான வாக்குகளால் நெல்சன் மண்டேலா அவர்கள் தென்னாபிரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு  செய்யப்படுகிறார்.

1998இல் ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நெல்சன் மண்டேலா தனது அரசியல் வாழ்விலிருந்து ஓய்வுபெறவில்லை. தனது பணியை உலக அளவில் விரித்தார். சர்வதேச சிரேஷ்ட தலைவர்கள் அமைப்பின் மூலம் உலக மக்களின் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்.

அவரின் இழப்பால் வருந்தும் அவரது குடும்பத்தினருடனும், தென்னாபிரிக்க மக்களுடனும் தமிழீழ தேசிய விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் மக்களாகிய நாமும் பங்குகொள்கிறோம்.

தென்னாபிரிக்க மக்களைப் போன்றே நாமும் அழிவுகளையும் துன்ப துயரங்களையும் எதிர்கொண்டவர்கள்; விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக இன்றுவரை விலை கொடுத்துவருபவர்கள்!

அதனால் தான் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்ததுடன் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்த போது அவருக்கு தனது ஆறுதலை வெளியிட்டு கடிதம் அனுப்பினார்.

“நெல்சனின் போராட்ட வாழ்வு எமக்கு உத்வேத்தைத் தரும் ஒரு அற்புத ஊக்கி என்பதை நாமறிவோம். விடுதலைக்குப் போராடும் எல்லா மக்களையும் போன்றே நெல்சன் மண்டேலா என்ற ஒப்பற்ற தலைவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்”

“எங்களுக்கும் உங்களுக்குமிடையே
உயர்ந்த மலைகள் இருக்கலாம்
ஆழமான கடல்கள் இருக்கலாம்
எங்கள் நிலங்கள் நாடுகளாகவும் கண்டங்களாகவும்
பிரிந்து கிடக்கலாம்
எனினும் –
எங்கள் கரங்கள் இறுகப்பற்றப் படுகின்றன.
எங்கள் இதயங்கள் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன
எனவே –
நாங்கள் நீங்களாகவும்
நீங்கள் நாங்களாகவும்
எங்கள் பயணம் என்றும் தொடரட்டும்”

– தமிழ்லீடர் ஆசிரியர்பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*