leader5

எதிரிகள் நினைப்பதை எம்மவர்களே செய்துவிட வேண்டாம்! – தமிழ்லீடர்

“எதிரிகள் நினைப்பதை எம்மவர்களே செய்துவிடவேண்டாம், எமது மக்களிடத்திலோ, எமது உணர்வாளர்களிடமோ பிரிவினையைத் தோற்றுவித்து அவர்களின் வீச்சுடன் கூடிய விடுதலைப் பயணத்தில் தளர்வினை ஏற்படுத்துவதும் எமது இனத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவே பார்க்க முடியும்” என சென்னையில் வைகோ  கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழாவிற்கு  அறிமுகச் செய்தியில் தமிழ்லீடர் குழுமம் தெரிவித்துள்ளது.

வைகோ, திருமுருகன், மணியரசன் உட்பட்ட பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் நாவல் வெளியீட்டு விழாவில் தமிழ்லீடர் குழுமத்தின் அறிமுகச் செய்தி தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்டது. அச்செய்தியின் முழுவடிவம் வருமாறு:

அன்புக்குரிய தாய்த் தமிழக உறவுகளுக்கு வணக்கம்!

பல்லாயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க தமிழின வரலாற்றில் விடுதலைப்புலிகளின் சகாப்தம் என்பது தனக்கென ஒரு தனித்துவமான மேன்மையைப் பதிவு செய்த காலப்பகுதியாகும்.

கொழுந்து விட்டெரிந்த விடுதலை வேட்கையும் சரித்திரச் சாதனைகளால் நிறைந்த ஒப்பற்ற வீரமும் எந்தவித உயரிய அர்ப்பணிப்பையும் வழங்கத் தயங்காத தியாக உணர்வும் வியத்தகு ஒழுக்கமும் கட்டுப்பாடும் மண்ணெங்கும் பரந்து விரிந்து கோலோச்சிய புனிதமான சகாப்தம் அது. எங்கள் ஒப்பற்ற தலைவன் பிரபாகரன் அவர்கள் தலைமையில் எங்கள், விடுதலைப் போராட்டம் புயலாக வீசி ஒடுக்குமுறையாளர்களை நடுநடுங்க வைத்தது. எங்கள் தாயகத்தின் ஒரு பகுதியை விடுவித்து எமக்கென ஒரு தனியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கியது.

உலக வரலாற்றில் ஒரு மகத்தான தடம் பதித்த எமது விடுதலைப் போராட்டத்துக்கு எமது கரும்புலிகளும் மாவீரர்களும் போராளிகளும் மக்களும் கொடுத்த விலைகள் ஏராளம். வீர சாதனைகள் ஒரு புறமும் உயிரிழப்புக்கள், சொத்து அழிவுகள், உடல் உறுப்புக்களின் இழப்புக்கள், இடப்பெயர்வுகள் என மறுபுறம் தாங்க முடியாத இன்னல்களுமாக உடைந்துவிடாமல் எழுந்து நின்றோம்.

சர்வதேச சதியாலும் மாமன்ற அடிமைப்புத்தி படைத்த துரோகத்தனங்களாலும் நாம் முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் பின்னடைவைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எழுந்தது. நாம் பெற்ற வெற்றிகள் நிர்மூலமாக்கப்பட்டன. ஒடுக்குமுறையின் கொடிய கரங்கள் எம் மீது விரிக்கப்பட்டன.

எமது விடுதலை வேட்கை பயங்கரவாதமாக வர்ணிக்கப்பட்டது. எமது வீரம், தியாகம் என்பன மூடி மறைக்கப்பட்டன. உலக வரலாற்றிலிருந்து ஒரு நிகரற்ற விடுதலைப் போராட்டத்தின் மேன்மையையும் புனிதத்தையும் அழித்துவிட இனவாத ஆட்சிபீடத்தினராலும் அவர்களின் அடிவருடிகளாலும் எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

 நாம் வீழ்ந்தவர்கள் தான்! ஆனால் நாம் விழுந்தது அழிந்து போவதற்காக அல்ல! மீண்டும் எழுந்து முன்னிலும் வேகமாக அதே வீச்சுடன் முன் செல்ல!

எனவே எமது வீரவரலாற்றையும் தியாக சாதனைகளையும் விடாப்பிடியான இலட்சிய உறுதியையும் நாம் பதிவு செய்ய வேண்டும். நாம் கொடுத்த விலைகளை உலகம் அறிய வேண்டும். நாம் கடந்து வந்த தடங்களை எமது சந்ததி புரிந்து கொள்ளவேண்டும்.

இன ஒடுக்குமுறையாளர்கள் எத்தனை இரும்புத் திரைகளை எம்மைச் சுற்றிப்போட்டாலும் நாம் எமது வரலாற்றையும் எமது வரலாறு நிலை நிறுத்திய நியாயங்களையும் உலகின் கண்முன் கொண்டுவரவேண்டும்.

அந்த வகையில் எமது புனிதமான, நீண்ட போராட்டத்தின் ஒரு சிறு துளி தான் இந்த நீந்திக்கடந்த நெருப்பாறு. இந்த வரலாற்றுப் பதிவு வெளிக்கொண்டு வந்த எமது விடுதலைப் போரின் மகத்துவமான பதிவுகள் ஏராளம். ஆனால் இன்னும்  கொண்டுவரப்பட வேண்டியவை பல்லாயிரம்.

தமிழ்லீடர் இணையக் குழுமத்தினராகிய நாமும் இச் சிறுபணியை, எம்மால் செய்ய முடிந்ததை இட்டு மட்டற்ற நிறைவடைகின்றோம். இந்தப் படைப்பை உங்கள் ஆதரவு நோக்கி உங்கள் முன் வைக்கின்றோம்.

நாம் நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற இந்த நூலின் ஆக்கத்தையோ பதிப்பையோ அல்லது வெளியீட்டையோ ஒரு இலக்கியப்பணி என்ற அளவுக்குள் மட்டும் மட்டுப்படுத்திவிடவில்லை. எமது மக்களின் ஆணைக்கமைய நாம் ஒரு வரலாற்றுக்கடமையில் பங்களித்துள்ளோம் என நாம் திடமாக நம்புகின்றோம்.

இன்று எமது தாயக மண்ணில் சிங்கள ஆட்சியாளர்களும் அரச படைகளும் எமது நீண்ட வீரமும், தியாகமும் அசைக்க முடியாத இலட்சியப் பற்றும் நிறைந்த விடுதலைப் போராட்டத்தின் அடையாளங்களை அழிப்பத்தில் தீவிர முனைப்புக் காட்டிவருகின்றனர். எமது போராளிகளின் நினைவாலயங்களான மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டு அங்கு படை முகாம்கள் நிறுவப்படுகின்றன.

எமது தலைவன் பிறந்து வளர்ந்த வீடு முதல் அவர் போர்க்காலங்களில் வாழ்ந்ததாகக் கருதப்படும் இடங்கள் வரை இடித்து நொருக்கப்பட்டுவிட்டன. மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் நிறுவ வேண்டும் எனக் கோருபவர்கள் கைது செய்யப்படுவர் என பாதுகாப்புச் செயலர் எச்சரிக்கை விடுக்குமளவுக்கு எமது வீரவரலாற்றை மறைக்கும் முயற்சிகள் தீவிரமாகவும் கேவலமான முறையிலும் முன்னெடுக்கப்படுகின்றன.

அதாவது இலங்கையில் வரலாற்று ஏடுகளில் எமது உன்னத விடுதலைப் போராட்டத்தை ஒரு குழுவினரின் பயங்கரவாத நடவடிக்கை எனச் சிறுமைப்படுத்திப் பதிவு செய்யும் வகையில் பெரும் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன் எமது போராட்டத்தின் நியாயங்களையும் புனிதத்தையும் நிலை நிறுத்தும் தடயங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.

எதிர்காலத் தலைமுறை எமது விடுதலைப்போரின் மகிமையை உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக இனவாத ஆட்சியாளர்கள் சகலவிதமான நச்சு வலைகளையும் விரித்து வருகிறார்கள். உண்மை வரலாற்றை ஒரு பெரும் இருட்போர்வைக்குள் முடக்க முயல்கின்றனர்.

எனவே எமது விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பதிவு செய்து அதை ஆவணப்படுத்துவது என்பது ஒரு கட்டாயமான தேவையாகும். இத்தகைய பதிவுகள் எமது விடுதலைப் போராட்டம் மீண்டும் புதிய வீச்சுடன் முன்னெடுக்கப்படவும் எமது போராளிகளினதும் மக்களினதும் தியாகங்களுக்கான பலனைப் பெற்றுக்கொள்ளும் இலட்சியப் பயணத்தில் தடம் பிசகாமல் முன் செல்லவும் மிகப் பெரும் உந்துசக்தியாக விளங்கும் என்பதை தமிழ்லீடர் இணையக் குழுமத்தினராகிய நாம் திடமாக நம்புகிறோம்.

எனவே தான் இந்த நூல் வெளியீடு என்பது ஒரு இலக்கியப்பணி மட்டுமல்ல ஒரு வரலாற்றுக் கடமையும் கூட என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறோம்.

எமது விடுதலைப் போராட்டத்தைப் போன்றே இந்த நூல் வெளியீடு கூட பல நெருக்கடிகளுக்கும், இடையுறுகளுக்கும் முகம் கொடுத்தே மேற்கொள்ள வேண்டியிருந்தது.

எதிரிகளின் இடையுறுகள் ஒரு புறம், எம்மவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஒரு சில மேலாதிக்க வாதிகளின் நெருக்கடிகள் மறுபுறம் என இங்கும் ஒரு நெருப்பாறு நீந்திக்கடக்கப்பட்டது. நினைத்துப் பார்க்க முடியாத இடங்களிலிருந்தெல்லாம் எமக்கு எதிர்ப்புக்கள் கிளம்பின. எமது நூலை வாசித்துக் கூடப்பார்க்காமலேயே எமது நூலையும் எமது தமிழ்லீடர் இணையத்தளக் குழுமத்தையும் இம்சிக்கும் வகையிலான வார்த்தைகள் எம்மையும் எமது நூலாசிரியரையும் கண்ணீர்விட வைத்தன. எமது நூல் ஆசிரியர் போரை தூர இருந்து பார்த்தவர் அல்ல மாறாக போரோடு இணைந்து வாழ்ந்தவர் என்பதை நூலை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். எம்மையும் எமது நூல் ஆசிரியரையும் பொறுத்தவரையில் ஈழத்தமிழனின் விடுதலைக்காக எவர்கள் எல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களையெல்லாம் ஒன்றிணைத்துக்கொண்டு கைகோர்த்துப் பயணிப்பதன் மூலமே எமது இலக்கினை விரைவாக எட்டிவிடலாம் என்பதில் அசையாத நம்பிக்கை உள்ளது. எமது விடுதலை தொடர்பிலான அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூடிய தளராத உறுதிகொண்டவர்களாகிய நாம் ஒரு செய்தியைச் சொல்ல விளைகின்றோம், எதிரிகள் நினைப்பதை எம்மவர்களே செய்துவிடவேண்டாம், எமது மக்களிடத்திலோ, எமது உணர்வாளர்களிடமோ பிரிவினையைத் தோற்றுவித்து அவர்களின் வீச்சுடன் கூடிய விடுதலைப் பயணத்தில் தளர்வினை ஏற்படுத்துவதும் எமது இனத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவே பார்க்க முடியும்.

ஆனாலும் நாம் எமது தாய்த் தமிழக உணர்வாளர்கள் ஆதரவுடன் இந்த நூலை மட்டுமல்ல இது போன்ற பல படைப்புக்களை வெற்றிகரமாக வெளியிட்டு எமது வரலாற்றுப் பங்களிப்பை வழங்குவோம் என உறுதி செய்கிறோம்.

கடந்தகால வரலாறே எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பி என்று சொல்வார்கள் இது ஒரு முழுமையான வரலாறு அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டத்தையும் அதற்குள் வாழ்ந்த எங்கள் உறவுகளின் உணர்வுகளையும் உன்னத அர்ப்பணிப்புக்களையும் பதிவு செய்வதில் ஒரு காத்திரமான பங்கை வகித்துள்ளது என நாம் நம்புகிறோம்.

எமது நூல் எழுதப்பட்டது ஒரு இடத்திலிருந்து, அதனை ஒழுங்குபடுத்தியவர்கள் இன்னொரு இடத்தில், அச்சிடப்பட்டது தமிழகத்தில் என்பதால் இந்த நூலில் சில அச்சுத் தவறுகள் இடம்பெற்றிருக்கின்றமை தொடர்பில் முன்கூட்டியே வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் இலக்கியத்துக்கு அடையாளம் தந்த தாய்த்தமிழகத்தில் எங்கள் நூல் வெளியிடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி என்றாலும் எமது நூலில் இடம்பெற்றிருக்கின்ற தவறுகள் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்பதை நாம் அறிவோம். ஆனாலும் எமது நிலை உணர்ந்து பெருந்தன்மையுடன் எமது நூலுக்கான ஒத்துழைப்பினை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்வதுடன் விரைவில் அச்சாகவுள்ள மறுபதிப்பில் தவறுகள் திருத்தி புதிய மெருகுடன் எமது நூல் வெளிவரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்த நூலும் ஒரு சிறு வரலாற்றுப் பங்களிப்யையாவது வழங்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். “வரலாறு எம்மை விடுதலை செய்யும்” கியுபாவின் புரட்சித் தலைவர் பிடல் காஸ்ரோ அவர்களின் வார்த்தைகளை நாம் மிகுந்த நம்பிக்கையுடன் நினைவு கூருகிறோம்

அன்புக்குரிய தாய்த்தமிழகத்தின் எமது உறவுகளே!

ஈழத்தில் எமது விடுதலைப்போராட்டம் நசுக்கப்பட்டு, எமது மக்களின் சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டு அநாதரவான நிலையில் உள்ளோம் என அங்கலாய்கின்ற எமது மக்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்றாக தமிழகத்தின் பேரெழுச்சி நிமிர்ந்து நிற்கிறது. எந்த எதிர்பார்ப்புமின்றி எமக்காக தங்களை வருத்தி வீதியில் இறங்கிப் போராடும் தமிழக மாணவர்கள் ஒவ்வொருடைய விடுதலைக்கோலமும் ஈழத்தில் களத்தில் நின்ற எங்கள் போராளிகளைக் கண்முன்னே கொண்டுவந்து காட்டுகின்றன. தமிழன் வீழ்ந்துவிடவில்லை என்பதை தமிழகத்திலிருந்து ஓங்கி ஒலிக்கும் விடுதலைக்குரல் பறைசாற்றி நிற்கிறது. ஈழத்திற்காக எனும் போது, தமிழகத்தில் கட்சி பேதம் கடந்து அனைவரும் ஒன்றாய் நிற்பது நினைத்துப்பார்க்க முடியாத ஆறுலையையும் நம்பிக்கையையும் தருகிறது. இந்திய மத்திய அரசை மட்டுமல்ல சிங்களப் பேரினவாத சக்திகளையே நிலை குலைய வைக்குமளவிற்கு தமிழகத்தின் உணர்வெழுச்சி வேகம் கொண்டிருக்கிறது என்பதை ஈழத்தமிழர்களின் குரலாக உங்கள் முன் சொல்கிறோம்.

அன்பானவர்களே,

நீங்கள் தரும் பேராதரவு எம்மை மேலும் மேலும் இப்படியான வரலாற்றுப் பதிவுகளை வெளிக்கொண்டுவர எமக்கு உந்துசக்தியாக அமையும். இது நாம் கையிலெடுத்துள்ள ஒரு வரலாற்றுக் கடமையாகவே கருதுகிறோம். எத்தனை இடர் வரினும் இப்பணியை நாம் தொடர்வோம் என்பதை உறுதி செய்கிறோம்.

மகத்தான பிரான்ஸ் புரட்சி முதற்கொண்டு இன்று நடக்கும் விடுதலைப் போராட்டங்கள் வரை பேனாப் போராளிகளின் பங்களிப்பு காத்திரமானது. ஒடுக்குமுறையாளர்களால் மறைக்கப்படும் போராளிகளினதும் மக்களினதும் சாதனைகளையும் அர்ப்பணிப்புக்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து வரலாற்றைப் புனிதப்படுத்துவதில் இந்தப் பேனாப் போராளிகளே முன்னிற்கின்றனர்.

எமது வீர வரலாற்றைப் பதிவு செய்வதில் ஆயிரமாயிரம் பேனாக்கள் மேலெழ வேண்டும் என உரிமையுடன் கோருகிறோம். இது எங்கள் எல்லோரதும் வரலாற்றுக் கடமை. எங்கள் கடமையை நாங்கள் மேலும் செவ்வனவே தொடர மீண்டும் உங்களின் ஆதரவைக் கோரி இப் படைப்பை வெளியிட்டு வைக்கின்றோம்.

“மொழியால் இணைவோம்! உணர்வாய் எழுவோம்!”

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

– நன்றி –

தமிழ்லீடர் குழுமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*