தமிழருவி-பர்வீன்1

டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ ஏற்படுத்திய பாதிப்பை நீந்திக்கடந்த நெருப்பாறும் ஏற்படுத்தும்!

டால்ஸ்டாயின் போரும் அமைதியும் ரஸ்ய மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்பை அரவிந்தகுமாரனின் நீந்திக்கடந்த நெருப்பாறும் ஈழமக்களிடையே நிச்சயம் ஏற்படுத்தும் என ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ நாவலுக்கு தமிழருவி மணியன் அவர்கள் வழங்கிய அணிந்துரையில் தெரிவித்துள்ளார்.

தமிழருவி மணியன் அவர்கள் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலுக்கு வழங்கிய அணிந்துரையின் முழுவடிவம் வருமாறு:

ஒரு இனம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போரின் மூலம் மூர்க்கத்தனமாக அழிக்கப்படுவதை செய்தித்தாள் வழியாக அறியும் போது ஒரு வாசகனின் இதயம் கொஞ்சம் வலிக்கும். அந்த வெறித்தனமான அழிவுப்படலத்தைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தால் நெஞ்சம் முழுவதும ரணமாகி விடும். போர்க்கள பூமியில் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடும் சூழலில் எங்கு நோக்கினும் அவலக்குரல் காற்றில் கலந்தும் கரைந்தும் பிணவாடை போட்டியிடும் நிலையில் ஒருவர் அனைத்துக்கும் உயிருள்ள சாட்சியாய் அந்தக் களத்திலேயே நேர்பட நின்று உள்வாங்கிய கசந்த அனுபவங்களை எழுத்தில் வடிக்க முயன்றால் அதைவிட உலகத்தின் ஆன்மாவை உலுக்கி விடும் ஆவணம் வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.

அரவிந்தகுமாரனின் நீந்திக்கடந்த நெருப்பாறு ஈழ நிலத்தில் அரங்கேறிய இரக்கமற்ற ஊழிக்கூத்தை, தமிழினத்தின் ஜீவமரணப்போராட்டத்தை, இந்த நூற்றாண்டு கண்ட மிக மோசமான மனித குலப்பேரழிவை, விடுதலைப்புலிகளின் தன்னிகரற்ற தீரம் செறிந்த தியாகத்தை , விடுதலைவேட்கையில் எம் இன மக்கள் நடத்திய வேள்வியை வெறும் தகவல்களின் திரட்டாய, புள்ளி விவரப்பட்டியலாய், சம்பவங்களின் தொகுப்பில் வெளிப்படும் சரித்திரமாய் பதிவு செய்யவில்லை. அப்படிப்பட்ட பதிவுகளால் பெரிய பாதிப்பு எதுவும் நேர்ந்துவிடப்போவதில்லை.

ஈழ வரலாற்றில் என்றும் புதையுண்டு போகாமல் காலந்தோறும் தலைமுறை தலைமுறையாக முள்ளிவாய்க்கால் பகுதி முழுவதும் சிதறிக்கிடந்த சடலங்களும், ஓடிப்பெருகி மண்ணைச் சிவப்பாக்கிய குருதிப்புனலும், விடுதலைப்புலிகளின் தனித்தமிழீழ வேட்கையும், இடப்பெயர்வுகளில் எம் இனம் சந்தித்த சொல்லில் அடைபடாத சோகங்களும் ஒவ்வொரு தமிழரின் நினைவுகளிலும் நிழலாடும் வகையில் ஓர் அரிய படைப்பிலக்கியமாக ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ உருப்பெற்றிருக்கிறது.

டால்ஸ்டாயின் போரும் அமைதியும் ரஸ்ய மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்பை அரவிந்தகுமாரனின் நீந்திக்கடந்த நெருப்பாறும் ஈழமக்களிடையே நிச்சயம் ஏற்படுத்தும். நம் கண் முன்னால் நடந்தேறிய இன அழிப்பு நடவடிக்கைகளை, அவற்றைத் தின்மையுடன் எதிர்கொண்ட ஈழமக்களின் போர்க்குணத்தை ஒரு புதினத்தின் உருவமும் உள்ளடக்கமும் கொண்டு அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கும் அரவிந்தகுமாரனின் ஆற்றல் வியக்க வைக்கிறது.

நிலத்திற்கு அடியில் ஓடும் நீரோட்டம் போன்று சோகம் செறிந்த இந்தப்படைப்பு முழுவதும் சுந்தரம் – முத்தம்மாள் . கணேஸ்-ரூபா என்ற இரண்டு காதல் சோடிகளின் ஆன்மாவை ஊடுருவி அன்பு செலுத்தும் கண்ணீர்க்காதல் இழையோடி நம் விழிகளை ஈரமாக்குகிறது.

‘எங்கடை வாழ்க்கை சாவும் இடப்பெயர்வுமாய் போச்சுது’ என்ற ஒற்றை வரியில் எம் இனம் அடைந்த இன்னல்களின் சுமை முழுவதையம் இறக்கி வைக்கும் அரவிந்தகுமாரன் ‘உலகத்தில் எந்த விடுதலைப்போரட்டமும் தோற்றுப்போனதில்லை. தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டாலும் அது மீண்டும் முந்தியை விட அதிக வேகத்தோட வெடிச்சுக் கிளம்பும்’ என்று தன் படைப்பில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
உண்மைதான் இரவு எவ்வளவு நீண்டு கிடந்தாலும் வை

கறை விடியல் வந்தே தீரும். தமிழினத்திற்கென்று ஈழநிலத்தில் ஒரு தேசம், ஒரு கொடி, ஒரு தேசிய கீதம், ஒரு அரசமைப்புச் சட்டம், ஒரு சுதந்திரமான சுயேட்சையான ஜனநாயக சமதர்ம சமத்துவ ஆட்சி விரைவில் மலரும். அதற்கான பயணத்தை விரைவுபடுத்தும் இந்த அற்புதமான படைப்பிலக்கியம்.
அன்புடன்
தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*