maaveerar2

சிங்களத்தைக் குற்றக்கூண்டில் நிறுத்திய புனிதர்கள்!

அன்புக்கும் மதிப்புக்குமுரிய எமது இனிய தமிழ் உறவுகளே!

இன்று மாவீரர் நாள்!

எமது உதிரத்தில் கலந்துவிட்ட மாவீரர்களை மணியொலித்து, சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்து மனம் நெகிழும் நாள்!

எமது விடுதலை வரலாற்றை ஒப்பற்ற பக்கங்களால் அலங்கரித்த எங்கள் மாவீரர்கள் எமது மண்ணின்விடுதலைக்காக தங்கள் விலை மதிப்பற்ற உயிர்களைத் தற்கொடை செய்து உயர்ந்து நிற்பவர்கள்!

இவர்கள் கடந்து சென்ற பாதை மலர்கள் தூவிய நந்தவனமல்ல! புயலும் பெருமழையும், பூகம்பமும் அதிர்ந்த அலைகுண்டங்கள்! விடுதலை வேட்கை என்ற உன்னத இலட்சியத்தைக் கவசமாகக் கொண்டு இவர்கள் நெருப்பாறுகளை நீந்திக்கடந்தனர். இரத்தமும், வியர்வையும், கண்ணீரும் சிந்தி எமது விடுதலைப்பாதையை செப்பனிட்டனர்.

கானகங்கள் இவர்களின் இல்லங்களாகின! கற்பாறைகள் இவர்கள் பஞ்சணைகளாகின! பசியும் தாகமும் இவர்கள் உணவாகின! விழிப்பு நிலை இவர்கள் ஓய்வாகியது! எதிரிகளை விரட்டியடித்து எமது தாயகத்தை மீட்க, இலட்சியவேட்கையை சுடராக ஏற்றி, இருளைக் கிழித்து ஏறுநடைபோட்டனர்.

இராணுவ முகாம்கள் சிதைந்தன! கடற்படைக் கலங்கள் நொருங்கின! குண்டுவீச்சு விமானங்கள் குப்புறக் கவிழ்ந்து விழுந்தன! எதிரிப்படைகளின் காலடி படர முடியாத விடுதலைப் பிரதேசங்கள் உருவாகின. எம்மை நோக்கி எதிரி வந்தபெரும் படையெடுப்புக்கள் நிர்மூலமாகின!

அத்தனை சாதனைகளிலும் மாவீரரின் உயிர்க்கொடைகள் ஆழமாகத் தடம் பதித்தன. ஒவ்வொரு மாவீரன் விழும்போதும் தாயக விடுதலையைத் தனது குருதியால் எழுதி வைத்துவிட்டு அர்ப்பணமாகினான்.

எனினும் –

சர்வதேச கூட்டுச்சதியும், இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் நயவஞ்சகமும் எம்மவர்களில் சிலர் மேற்கொண்ட துரோகங்களும் முள்ளிவாய்க்கால் மண்ணில் எமது ஆயுதங்களை மௌனிக்க வைத்துவிட்டன!

ஆனால் எமது மாவீரர்களின் கனவுகளை, எமது மக்களின் அடிப்படை அபிலாசைகளை எந்த ஒரு சக்தியாலும்அழித்துவிட முடியாது.  அவை வடிவங்களை மாற்றிக்கொண்டு மேலும் முனைப்படைந்து வீறுகொண்டுஎழுந்துவிட்டன.

எமது தாயக மண்ணில் நிலை கொண்டிருந்த எமது விடுதலைப் போராட்டம் உலகளாவிய அளவில்விரிவடைந்துவிட்டது.

எமது விடுதலைக்குரல் தமிழகத்தில் மாணவர் போராட்டமாக வெடித்து புதிய அத்தியாயங்களை எழுதுகிறது! தமிழகமக்களின் எழுச்சியாகி இலங்கை அரசையும், இலங்கை அரசுக்கு முண்டு கொடுக்கும் இந்திய மத்திய அரசையும் கிடுகிடுக்க வைக்கிறது! புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் போராட்டங்கள் அந்த நாட்டு அரசுகளையே எமக்காக  நீதிகேட்குமளவுக்கு முன் தள்ளிவிட்டன.

ஆம்! எமது போராட்டம் வடிவம் மாறி விட்டது! எமது போராட்டத்தின் மையம் பரந்துவிட்டது! எமது மாவீரர் சுமந்த ஒப்பந்த இலட்சியங்களை நோக்கிய பயணத்தில் இன்று உலகம் எங்களுடன் கை கோர்த்து நிற்கிறது!

இந்தப் பேரலை இன்று சிங்கள தேசத்தை நடு நடுங்க வைக்கிறது! சர்வதேச அரங்கில் குற்றக் கூண்டில் நிறுத்தி வைத்து கேள்விகளை உலகம் எழுப்புகிறது!

இது எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களில் எழுந்த பேரலை! அவர்கள் சாதனையின் தொடர்ச்சியாக மேலெழும் புதிய முளைகள்!

எனவே தான் சிங்கள தேசம் எமது மாவீரர்களை நினைத்தாலே அஞ்சி நடுங்குகிறது! அவர்களின் எச்சங்களைக் கூட அழித்துவிடத் துடிக்கிறது! அவர்களின் நினைவுகளை அகற்றப் பகீரதப் பிரயத்தனம் செய்கிறது.

எமது மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டு, முட்கம்பி வேலியிடப்பட்டு தடுக்கப்பட்டன. அங்கு இராணுவமுகாம்கள் நிறுவப்பட்டன. எமது மாவீரர் நினைவாலயங்கள் உடைத்து நொருக்கப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்கள் அருகில் தடையரண்கள் போடப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது ஆலயங்களில் மணியொலிப்பதைத் தடுக்கப் படையினர் துப்பாக்கிகளுடன் வேட்டை நாய்களாக அலைகின்றனர். நாம் சுடரேற்றுவதையும் மலர் தூவுவதையும் தடுக்க கண்காணிப்புக்கள் முடுக்கிவிடப்படுகின்றன.

பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செய்வதைத் தடுக்க பல்கலைக்கழகமே மூடப்பட்டு, மாவீரருக்கு அஞ்சலி செய்வது தண்டனைக்குரிய குற்றம் என பொலிசாராலும் படையினராலும் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது.

சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள் இறந்தவர்கள் எதிரிகளாலும் கௌரவம் செய்யும் போர் மரபை தூக்கியெறிந்து தங்கள் அநாகரிக முகத்தை வெளிக்காட்டி நிற்கின்றனர்.

நாம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடாது என்பதற்காக ஆயிரமாயிரம் கெடுபிடிகள்!

மாவீரர்கள் எமது மக்களின் விடுதலைக்காக உயிர்க்கொடை தந்து உயர்ந்து நிற்பவர்கள்! அவர்களை அஞ்சலிப்பது எமது பிறப்புரிமை! எத்தகைய ஒடுக்குமுறையாலும் எமது இந்தப் புனித கைங்கரியத்தைத் தடுத்துவிட முடியாது!

எனவே –

எங்கும் மணியொலிக்கும்! எங்கும் அக வணக்கம் நடக்கும்!

எங்கும் சுடர்கள் ஏறும்! எங்கும் மலர்கள் தூவப்படும்!

மாவீரர்கள் இலட்சியங்கள் வெகு விரைவில் நிறைவேறும்! அந்தப் புனித பணியை நிறைவேற்ற நாம் ஒவ்வொருவரும் எம்மை அர்ப்பணிப்போம் என்பதை இப் புனித நாளில் சங்கற்பம் செய்வோம்!

விடியலை நோக்கி விரைவோம்! அது எங்கள் கடமை மட்டுமல்ல! அடிப்படை உரிமையும் கூட!

நன்றி

தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*