leader (1)

ஒரு வரலாற்று நாயகனின் பிறந்த நாள்!

எமது தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மண்ணில் வந்த மகத்தான நாள்!

இன்று எமது தலைவனுக்கு வயது 59

ஏறக்குறைய 40 வருடங்கள் மண்ணின் விடுதலையையும் தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் தன் மூச்சுக்காற்றாக்கி, தன் ஒவ்வொரு அசைவிலும் வீரம், தியாகம் என்னும் நெய் ஊற்றி அவன் ஏற்றி வைத்த விடுதலை வேட்ககை ஒளி இன்னும் எமது மக்களின் நெஞ்சில் கொழுந்துவிட்டெரிகிறது – பெரும் காட்டுத்தீயாக!

ஆம்! அது அணைக்க முடியாத இலட்சிய நெருப்பு! இலக்கு எட்டும்வரை மங்காது எரிந்து கொண்டெயிருக்கும்.

சிலர் வரலாற்றில் தமக்கென ஒரு தனியான இடத்தை தக்க வைக்கின்றனர். வரலாறு அவர்களின் வாழ்வையும் அவர்களின் சாதனைகளையும் தன்னில் அழியவிடாது பதிய வைத்துவிடுகிறது.

ஆனால் எமது தலைவனோ தமிழினத்துக்கெனப் புதியதொரு வரலாற்றைப் பதித்துவைத்திருக்கிறார். தமிழ் இலக்கியங்களிலும் காவியங்களிலும் நாம் படித்து மகிழ்ந்த வீரத்தையும் தியாகத்தையும் ஒழுக்க நெறிமுறைகளையும் தமிழினத்தின் இன்றைய வாழ்வாக்கிப் பெரும் சாதனை படைத்த ஒப்பற்ற பெருமை எமது தேசியத் தலைவருக்கு மட்டுமே உண்டு.

இது ஒரு சாதனை மட்டுமல்ல! ஒரு இனத்தின் வாழ்வியல் வழித் தடத்தைப் புரட்டிப் போட்டு மெருகு படுத்தி, புனிதப் பாதையில் வழி நடத்திய தலைமைத்துவம்!

ஒடுக்குமுறையாளர்களை நடுநடுங்க வைத்த அந்த மகிமை விடுதலைப் போராக வெடித்தெழுந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் வாசனையே பட முடியாத விடுதலைப் பிரதேசங்களை உருவாக்கியது! தரைப்படை, கடற்படை, வான்படை, கரும்புலிப்படை, புலனாய்வுப்படை என ஒரு சுதந்திர நாட்டுக்குரிய கட்டமைப்புக்களை உருவாக்கியது. எம்மை நாமே நிர்வாகம் செய்யும் ஒரு மாதிரி அரசமைப்பு உருவாக்கப்பட்டது.

அந்நிய ஆக்கிரமிப்பாளரின் சுற்றிவளைப்பின் நடுவிலும் நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வழி திறந்தவன் எமது தலைவன்!

அதனால் தான் –

எமது தலைவனின் பிறந்த நாள் தமிழினத்திற்கு ஒரு புதிய யுகம் பிறந்த நாள்!

எனவே தான் இன்றைய நாள் எமது ஒவ்வொருவரினதும் பிறந்த நாள்!

1958ல் தென்னிலங்கையில் எமது இனத்தின் மீது இனப்படுகொலைகள், சொத்தழிப்புகள், பாலியல் கொடுமைகள், உயிருடன் எரி ஊட்டல்கள் எனப் பயங்கரக் கொரூரங்கள் இடம்பெற்ற போது எமது தலைவனுக்கு அகவை நான்கு!
அறியாத பருவம்!

ஆனால் அவன் அறியும் பருவத்தை எட்டிய போது இன அழிப்பின் அடையாளங்களும் உலவிய உண்மைகளும் அவன் மனதை உலுப்பின. தமிழன் நிராயுத பாணியாக இருக்கும்வரை அவன் ஒடுக்குமுறையாளர்களால் பலி கொள்ளப்படும் பேதைகள் தான் என்ற புரிதலை அவன் இதயம் வேதமாக்கிக் கொள்ள வழி வகுத்தன.

அவன் கல்லூரிப் படிப்பைக் கை கழுவிவிட்டு கைக் குண்டுப் பயிற்சியில் இறங்கினான். அம் முயற்சியில் ஒரு முறை காயம்பட்டு கரிகாலன் ஆகினான்.

புதிய தமிழ்ப்புலிகளாக உருவெடுத்த விடுதலை அமைப்பு மெல்ல மெல்ல விரிந்து தமிழீழ விடுதலைப் புலிகளாகியது. எங்கும் பரவிய விடுதலை வேட்கைக்கு 1977, 1983 இனப் படுகொலைகள் எண்ணை ஊற்ற இலட்சியத் தீ எங்கும் பரவிப் பற்றியெரிந்தது.

எதிரிகளின் புலிவேட்டை, எம்மவரின் துரோகங்கள் கூடி நின்றவர்களின் கழுத்தறுப்புக்கள் எவையாலும் எமது தலைவனின் இலட்சியப் பயணத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அத்தனையையும் அரசியல் நகர்வுகளாலும் இலட்சிய உறுதியாலும் துப்பாக்கிக் குண்டுகளாலும் தகர்த்தெறிந்து எங்கள் தலைவன் தமிழினத்தின் தலைமையேற்று வேக நடை போட்டான். வெற்றி மேல் வெற்றிகள் குவிந்தன! இராணுவத் தளங்கள் தகர்ந்தன! விடுதலைப் பிரதேசங்கள் தோன்றின.

தலைவனின் அரசியல் சாணக்கியத்தைக் கண்டு, இராணுவ ஆற்றலைக் கண்டு உலகம் வியந்தது! இந்து மா கடலின் ஒரு புதிய தேசம் உருவாகுவதை புரிந்து கொண்டது.

பிராந்திய வல்லரசுக் கனவில் மிதந்த இந்தியா விடுதலைப்புலிகளை அழித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் இணைந்து சதிவலை விரித்தது. தமிழீழ மண்ணெங்கும் பரவியது இந்தியப்படை!

திலீபனின் அஹிம்சைப் போர் இந்தியாவின் உண்மை உருவை அம்பலப்படுத்தியது! விடுதலைப்புலிகளின் போர் வீரம் இந்தியப் படைகளை இலங்கையை விட்டு விரட்டியது! விடுதலைப்புலிகள் வெற்றியை நெருங்கும் போதெல்லாம் பேச்சுவார்த்தைகள் குறுக்கறுத்தன. மாயவலைகள் வர்ண ஜாலம் காட்டின! எவையாலும் எமது தலைவனின் இலட்சியப் பயணத்தைத் தடுக்க முடியவில்லை!
சர்வதேசக் கூட்டுச் சதி, இந்திய நயவஞ்சகம் எம்மவர்களின் கழுத்தறுப்பு அத்தனையும் ஒன்றாகி எம்மேல் கவிழ்ந்த போது எமது ஆயுதப் போராட்டம் தற்காலிகமாக மௌனித்துக் கொண்டது!

ஆம்! தற்காலிகமாக முள்ளிவாய்க்காலில் மௌனித்துக்கொண்டது!

ஆனால் எமது தலைவன் வழியில் மேலெழுந்த இலட்சிய வேட்கை, விடுதலைத்தீ

தற்காலிகமாக வடிவத்தை மாற்றிக்கொண்டது!

தாயக மண்ணில் எரிந்த தீ உலகெங்கும் பரந்தது!

உலகின் மூலை முடுக்கெங்கும் எமது தலைவனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது! ஜனநாயகப் போராட்டங்களாக வெடிக்கின்றன. உலக வல்லரசுகளே எமக்காகக் குரல் கொடுக்குமளவுக்கு எமது சக்தி பெருகிவிட்டது!

சர்வதேச அரங்கில் இந்தியச் சதிகாரர்களும் சிங்கள இனப்படுகொலையாளிகளும் திக்கித் திணறுகிறார்கள்!

இது எங்கள் தலைவனின் வலிமை! இது எமது தலைவன் கையெடுத்த விடுதலை இலட்சியத்தின் மகத்தான இயங்குசக்தி!

இன்று அந்த மகத்தான தேசியத் தலைவரின் பிறந்த நாள்!ஆம் ஒவ்வொரு தமிழனதும் பிறந்த நாள்! ஆம் – இது ஒவ்வொரு தமிழனதும் பிறந்த நாள்!

“என்றும் அணையாப் பெரு நெருப்பு – தமிழ்
ஈழ விடுதலையே எம் விருப்பு”

-தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*