murali

காணாமல் போனோர்; ‘வலி’ புரியுமா முரளிதரனுக்கு? – மாரீசன்!

விளையாட்டுக்கள் மனங்களைப் பக்குவப்படுத்துகின்றன என்று சொல்வார்கள். அவை மனித மனங்களின் மனித நேயத்தை செழிப்படைய வைப்பதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. ஆடுகளத்தில் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக வைத்து மோதும் இரு அணியினர் விளையாட்டு நிறைவு பெற்றதும், வென்றவர் தோற்றவர் என்ற பேதமின்றி கூடிக்களிப்பதும், விருந்துண்டு மகிழ்வதும் காலம் காலமாக பின்பற்றப்படும் வழமையாகும். அங்கு போட்டி எவ்வளவு கடுமையாக இருந்த போதிலும் நட்புறவு தொடர்ந்து பேணப்படும்.

விளையாட்டுக்களால் மனப்பக்குவம் ஏற்படுகிறது என்று இதனால் தான் சொல்வதுண்டு. அங்கு போட்டி எவ்வளவு கடுமையாக இருந்த போதிலும் மனித நேயம் மேலோங்கி நிற்கும்.

உலகக் குத்துச்சண்டை சம்பியனாக பல வருடங்கள் தொடர்ந்து வெற்றியீட்டிய முகமது அலி என்றழைக்கப்படும் கேசியஸ் கிறே வியட்நாமில் அமெரிக்கா செய்த கொடுமைகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். தனது பெயரையே முகமது அலி என மாற்றியதுடன் தனது தலைவர் எகிப்தியப் பிரதமர் நாசர் தான் எனப் பிரகடனம் செய்தார். கட்டாய இராணுவ சேவையில் இணையமறுத்து 5 வருட சிறைத்தண்டனையை ஏற்றுக்கொண்டார். அவரின் விளையாட்டு எதிரியை அடித்து விழுத்தும் குத்துச்சண்டை. ஆனால் அவர் வியட்நாம் மக்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட கொடுமைகளை பகிரங்கமாக எதிர்க்கும் மனித நேயம் மிக்கவராக விளங்கினார்.

இலங்கையில் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் ஒரு விளையாட்டு வீரர். இவரும் உலகப்புகழ் பெற்றவர் தான். ஆனால் இவரோ ஒரு விளையாட்டு வீரருக்குரிய மனிதாபிமான உணர்வைத் தூக்கியெறிந்துவிட்டு மஹிந்த அரசு தமிழ் மக்கள் மீது இழைக்கும் அநீதிகளை நியாயப்படுத்துமளவுக்கு நிலை தாழ்ந்துவிட்டார். அது மட்டுமன்றி தனது இழிநிலையை சர்வதேச அரங்கிலும் அம்பலப்படுத்திவிட்டார்.

பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கை வந்திருந்த பிரிட்டிஷ் பிரதமர், முத்தையா முரளிதரனைச் சந்தித்தபோது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துக்களை அவரிடமே மறுதலித்துள்ளார். இது தொடர்பாக லண்டன் ரெலிகிராப் பத்திரிகை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனை முரளி சங்கடத்தில் ஆழ்த்திவிட்டார் எனத் தெரிவித்திருக்கிறது.

அது மட்டுமன்றி சனல் 4 இக்கு முரளி கருத்துவெளியிடுகையில் யாழ்ப்பாணத்தில் 10பெண்கள் படங்களை வைத்துக்கொண்டு அழுவதைப் பார்த்துவிட்டு பிரிட்டிஷ் பிரதமர் கருத்துவெளியிட்டார் எனவும் அவர் இலங்கையின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று பார்க்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இங்கு தான் முரளீதரன் ஒரு விளையாட்டு வீரனுக்குரிய மனிதாபிமானத்தை இழந்து ஆட்சியாளர்களின் அடிவருடும் ஊது குழலாக மாறியிருக்கிறார்.

பெண்கள் படங்களை வைத்துக் கொண்டு கதறுவது ஒரு சிறிய விஷயமாகப்படுகிறது. அவர்களின் துயரத்தை பிரிட்டிஷ் பிரதமர் புரிந்துகொண்டது மாபெரும் தவறாகப்படுகிறது.

அது மட்டுமன்றி பழையனவற்றை மறப்போம் மன்னிப்போம் என்ற வகையில் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

காணாமற் போனோர் திரும்பிவந்தால் அல்லது எங்கு இருக்கின்றார்கள் என்றாவது தெரியவந்தால் பாதிக்கப்பட்டவர்களின் மனம் சற்று ஆறுதலடையும். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா என்று தெரிவிக்கக்கூட அரசு தயார் இல்லை. இந்த நிலையில் எப்படி மறுக்க முடியும்? எப்படி மன்னிக்க முடியும்?

உறவுகளைப் பிரிந்தவர்களின் வலியை மனிதாபிமானம் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்! அவர்கள் உயிரோடு உள்ளார்களா இல்லையா? என்று தெரியாத தவிப்பினை மனித நேயம் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

காணாமற் போனவர்களின் உறவுகள் தங்கள் பிள்ளைகளின் படங்களை வைத்துக்கொண்டு கதறியழுவது முரளிதரனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

முரளிதரன் ஒரு தமிழராகவோ, ஒரு இலங்கையராகவோ இப்பிரச்சினையை பார்க்கும்படி கேட்கவில்லை. ஒரு மனிதநேயமுள்ள ஒரு மனிதனாக பார்க்கும்படிதான் கேட்கிறோம்.

பாவம்! முரளிதரன் தனது சுய உருவத்தைக் காட்டியதன் மூலம் இலங்கை வாழ் தமிழ் மக்களிடம் மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்களிடமும், மனிதாபிமானிகளிடமும் வெறுப்பைச் சம்பாதித்துவிட்டார்.

ஒருவரின் அடியைவருடுவதற்கு இன்னொருவர் முடியைப் பிடிக்க முயன்றால் இதுதான் கதி!

– தமிழ்லீடருக்காக தாயகத்திலிருந்து மாரீசன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*