cameron

‘கமரூன் பயணம்’ கூட்டமைப்பு செய்தது சரியா? – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்!

இனவிடுதலைக்காக போராடும் இனங்களுக்கு நல்ல தலைமைகள் கிடைக்கும் போது தான் அந்த இனம் தனக்கான சுதந்திர இலக்கை நோக்கி நேர்த்தியாக பயணிக்க முடியும். நூற்றாண்டு கால தொன்மை வாய்ந்த தமிழினம் தற்போது வரையில் விடுதலை நோக்கிய கரடுமுரடான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தலைமை தாங்கவேண்டிய தலைமை சக்திகள் அந்தப் போராட்டங்களுக்கே எதிராக செயற்படுகின்ற அவலம் நிறைந்த சம்பவம் தொடர்பில் தமிழ்லீடர் ஆராய முற்படுகின்றது.

பொதுநலவாய மாநாட்டினை நடத்துவதற்காக அடம்பிடித்த இலங்கை அரசாங்கம் இறுதியில் அந்த மாநாட்டினை ஏன் நடத்தினோம் என்று விரக்தி அடையும் நிலையினை எதிர்கொண்டிருக்கின்றது. மாநாட்டிற்காக இலங்கை பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானியப் பிரதமரும், பிரித்தானிய ஊடகர்களுமே இலங்கை அரசினை நெருக்கடியான நிலைக்குத் தள்ளியிருந்தனர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் நடத்திய உணர்வுப்போராட்டம் சர்வதேச ஊடகங்களை வெகுவாக ஆக்கிரமித்ததுடன் பொதுநலவாய மாநாடு தொடர்பிலான செய்திகளின் முக்கியத்துவத்தினையே மறைத்துவிடும் நிலையினையே தோற்றுவித்துவிட்டது.

போருக்கு முன்னரும் போரின் இறுதியிலும் சரணடைந்து காணாமல் போனவர்களது உறவினர்கள் பல வருடங்களாக எண்ணிப்பார்க்க முடியாத துயருடன் அலைந்து திரிகின்றனர். காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? சித்திரவதைப்படுவார்களா? நலமாக இருப்பார்களா? அல்லது உயிரிழந்திருப்பார்களா? இவ்வாறு பல்லாயிரம் கேள்விகளை காணாமல் போனோரின் உறவினர்கள் நாளாந்தம் தமக்குள் கேட்டுக்கொண்டே காலத்தை கடத்துகின்றனர். நரக வேதனை என்பதை அந்த உறவுகள் தான் உண்மையில் அனுபவிப்பார்கள். இந்த வலி அனைவராலும் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியதல்ல. குடும்பத்தில் யாராவது ஒருவரை பறிகொடுத்திருந்தால் அந்த வலி இலகுவில் புரிந்துவிடும்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்ட போது யாழ்.நூலக வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்திருந்தார். குறிப்பாக அந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரை கமரூன் சந்தித்திருந்தார். குறித்த சந்திப்பு நடைபெறுவதற்கு நான்கு நாட்கள் முன்பாகவே வலி.வடக்கு மக்களின் நிலம் மீட்புத் தொடர்பிலான தொடர் போராட்டம் மாவிட்டபுரத்தில் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தினைக் குழப்புவதற்கும் அரச இயந்திரம் மிகத்தீவிரமாக செயற்பட்டிருந்த போதிலும் போராட்டம் சோர்வடையாது தொடர்ந்தது. அந்தப் போராட்டத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை வடக்கில் காணாமல் போனோரின் உறவினர்கள் பொதுநலவாய நாடுகள் முன்பாக தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்காக பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த காணாமல் போனோரின் உறவினர்கள் இடைவழியில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். இருந்த போதிலும் இடைவிடாது தொடர்ந்த தமது உறவுகளைக் கண்டறியும் உணர்வுப் போராட்டம் யாழ்ப்பாணம் செல்லும் கமரூனிடம் தாம் நேரடியாக மன்றாடி மனு ஒன்றையாவது கையளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினை நோக்கித் தள்ளியது. இதன் பலனாக யாழ்.பொது நூலகத்திற்கு கமரூன் செல்வார் என்பதை அறிந்து நூலகத்துக்கு முன்பாக காலை முதல் பிற்பகல் வரையில் மக்கள் காத்திருந்தனர்.

கமரூன் சந்திப்பினை அடுத்து மக்கள் கமரூனை சந்திக்க விடாது தடுப்பதற்காக பொலிஸார் கை கோர்த்து பாதுகாப்பு வேலி ஒன்றினை அமைத்திருந்தனர். அதேவேளையில் கமரூனுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் ஆளுந்தரப்பு ஏற்பாடு செய்து அந்தப் பகுதியில் நடத்துவதற்கு முற்பட்டிருந்தது. சந்திப்பு நடைபெற்று முடிந்ததை உணர்ந்து கொண்ட காணாமல் போனோரின் உறவுகள் பொலிஸாரின் தடையினைத் தாண்டி பொதுநூலக வளாகத்தினை நோக்கிச் செல்வதற்கு எத்தனித்திருக்கின்றனர். இதனை அவதானித்த சனல் 4 ஊடகவியலாளர் ஒருவர் காணாமல் போனோரின் உறவினர்கள் நின்றிருந்த இடத்திற்குச் சென்றிருக்கின்றார். அவரைக் கண்டு கொண்ட மக்கள் அவரைக் கட்டி அணைத்து கதறி அழுது தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அந்த ஊடகருக்கு தமிழ் தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. அதேபோல அந்த மக்களுக்கு அவருடைய மொழி புரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் மக்களுக்கும் அந்த ஊடகருக்கும் தொடர்பு மொழியாக கண்ணீர் மட்டுமே விளங்கியிருக்கின்றது. மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழ அந்த ஊடகரும் அழுதிருக்கின்றார். அந்த நிகழ்வில் நின்றிருந்த ஒரு அரசியல் பிரமுகர் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ்லீடருக்கு கருத்துத் தெரிவிக்கையில், “சாவு வீடு ஒன்றிற்கு நெருங்கிய உறவினர் ஒருவர் வரும் போது வீட்டில் உள்ளவர்கள் அவரைக் கட்டி அணைத்துக் கதறி அழுவது போல இருந்தது” என்றார். ஆக, மேற்குலகில் பிறந்து மேலைத்தேய வாழ்க்கை வாழ்ந்த பல்லாயிரம் விடயங்களை ஊடகங்களில் கையாண்ட ஒரு மூத்த ஊடகவியலாளரே எமது மக்களை அணைத்துக் கண்ணீர் விடும் நிலை இருந்தும் கூட எமது மக்களால் எமது தலைவர்கள் என தெரிவு செய்யப்பட்டவர்கள் நடந்து கொண்ட அருவருக்கத்தக்க சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பொலிஸாரின் பாதுகாப்பு அரணை உடைத்துக்கொண்டு மக்கள் முன்னேற அவர்களுக்கு முன் நின்றிருக்கவேண்டியவர்கள் உண்மையில் அரசியல்வாதிகள் தான். ஆனாலும் அந்தப் பணியினைச் செய்தவர்கள் ஆன்மீக வாதிகள் என்பதுதான் மிக முக்கியமான விடயம். ஆன்மீகத்தில் மட்டும் நாட்டம் செலுத்தவேண்டிய அந்தப் புனிதர்கள் மக்களுக்காக வீதியில் இறங்கினார்கள். சிங்களப் பொலிஸாரைக் கடந்து முன்னேறிய கத்தோலிக்க மதகுருமார் மக்களுக்கு பாதை ஏற்படுத்திக் கொடுத்தனர். பொலிஸார் மதகுருமார் என்றுகூடப் பார்க்காது அடித்து உதைத்தனர். ஆனாலும் நீதிக்கான போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. மக்கள் முன்னேறினர். பொலிஸார் பெண்களைக் கூட விட்டுவைக்கவில்லை. வேதனையில் வாடி வாடி வாழ்க்கையைக் கடத்தும் அந்தப் பெண்களை இனவாதப் பொலிஸார் பின்னோக்கித் தள்ளிய சம்பவங்கள் பார்ப்பவர்களை முகம் சுழிக்கவைத்தன. ஜனநாயக வழியில் தமது உறவுகளுக்காகப் போராடும் மக்கள் ஒரு ஜனநாயக நாட்டின் தலைவரிடம் மனுக்கொடுக்கச் சென்றபோது அதற்கு பாதை ஏற்படுத்திக் கொடுப்பதில் என்ன தவறிருக்க முடியும்?

அந்த மக்கள் கைகளில் தமது சொந்தங்களின் படங்களைத் தாங்கிக் கொண்டு ஓடி ஓடி அலைந்து வெளிப்படுத்திய ஓலக்குரல்கள் கமரூனுடன் அங்கு வந்திருந்த சர்வதேச ஊடகவியலாளர்கள் அனைவரையும் நிலைகுலையைச் செய்துவிட்டன. கமரூன் வலி.வடக்குக்கு சென்றிருந்த போதிலும் காணாமல் போனோரின் உறவுகள் நடத்திய எழுச்சிப் போராட்டமே சர்வதேசத்தினை உலுக்கிவிட்டிருந்தது.

கமரூன் அணியில் இடம்பெற்றிருந்த ஊடகர்கள் சம்பவ இடத்திலிருந்து விலகியதும் அந்த வழியாகச் செல்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சொகுசு வாகனத்தில் நூலக வளாகத்திலிருந்து வெளியேறியிருக்கின்றார். சம்பந்தன் வருகையை உணர்ந்த மக்கள் சம்பந்தனிடம் தமது நிலைப்பாடு தொடர்பில் கருத்துரைக்க முற்பட்டிருக்கின்றனர். காணாமல் போனோர் தொடர்பில் இதுவரையில் நடைபெற்ற எந்தவித போராட்டங்களிலும் பங்கேற்றிருக்காத சம்பந்தன் அந்த மக்களுடன் பேசுவதற்கு தயாராக இருக்கவில்லை. மாறாக மூடிய கண்ணாடிகளுடன் பயணித்த வாகனத்திலிருந்து வெளிவராமல் வாகனத்தினை முன்கொண்டு செல்வதற்கு தனது சாரதிக்கு பணித்திருக்கின்றார். இதனை உணர்ந்து கொண்ட மக்கள் சம்பந்தனின் வாகனத்தினைச் சூழ்ந்திருக்கின்றனர். அந்த மக்கள் ஆத்திரம் அடங்கும் வரையில் திட்டித்தீர்த்திருக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பித் தெரிவு செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் பாதுகாவலர் வாகனத்தின் பின் கதவால் இறங்கியிருக்கின்றார்.

இறங்கிய வேகத்தில் தனது பிள்ளையைத் தொலைத்துவிட்டு ஏக்கத்துடன் அங்கு நின்றிருந்த ஒரு தாயின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளியிருக்கின்றார். அந்த வேகத்தில் வாகனம் பின்நோக்கிச் சென்று நூலகத்தின் பின் வாசல் வழியாக வெளியேறியிருக்கின்றது. அந்த மக்களுக்காக ஒரு வார்த்தை ஆறுதலுக்காக கதைத்திருந்தால் சம்பந்தன் குறைந்து போய்விடுவாரா? அல்லது சம்பந்தன் தன்னை அரசாங்கத்தின் ஒரு முக்கியஸ்தராகக் கருதிக் கொள்கிறாரா? அதேபோல விக்னேஸ்வரனும் பின்வாசல் வழியாகவே வெளியேறியிருக்கின்றார். தமிழகப் போராட்டங்களையும் புலத்தில் உள்ள போராட்டங்களையும் விமர்சிக்கும் வடக்கு முதல்வர் தனக்கு வாக்களித்த மக்களுடன் ஓரிரு வார்த்தைகளை ஆறுதலுக்காவேனும் கதைப்பதில் என்ன தப்பிருக்க முடியும்?

நவிப்பிள்ளை அம்மையார் இலங்கைக்கான பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்று யாழ்.பொது நூலகத்தில் சந்திப்பில் ஈடுபட்டபோதும் காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அம்மையார் பின்வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் இம் முறை கமரூன் முன் வாசல் வழியாக வெளியேறிய போதிலும் கூட்டமைப்பினர் பின்வாசல் வழியாகவே வெளியேறியிருக்கின்றனர். ஆக, நவிப்பிள்ளை அம்மையாரை வெளியேற வைப்பதற்கான ஆலோசனையை அப்போதே இவர்கள் தான் வழங்கினார்களோ? என்றிருக்கிறார் அந்த நிகழ்விற்குச் சென்றிருந்த உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர்.

இது இவ்வாறு இருக்க, டேவிற் கமரூன் யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டிருந்த போதிலும் கொழும்பு செயற்பாட்டாளர்களாகக் கருதப்படுகின்ற இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், சுமந்திரன் ஆகியோர் மட்டுமே அவரைச் சந்திக்க முடிந்திருக்கிறது. ஏனைய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எவரும் கமரூனை சந்திக்கவில்லை. சந்திப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. ஜனாதிபதி மஹிந்தவுடனான சந்திப்புக்களின் போதும் சம்பந்தன் தரப்பு இவ்வாறான நடவடிக்கைகளையே கையாண்டு வருகிறது.

வலி.வடக்கில் நடைபெற்ற உண்ணாவிரத நிகழ்வில் கூட்டமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்த போதிலும் இறுதியில் கமரூன் வலி.வடக்கிற்கு செல்லவில்லை. அவரை அங்கு செல்லவிடாது தடுத்ததும் சுமந்திரன் தரப்பா? என்ற கேள்வியை கூட்டமைப்பின் ஒரு சாரார் எழுப்பியிருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் காணாமல் போனோர் நடத்திய போராட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருமே பங்குகொண்டிருந்ததாக தெரிகிறது. ஏனைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களுக்கோ அந்த மக்களின் வலி புரியவில்லையா? அல்லது புரிந்தும் புரியாமல் இருந்தார்களா? என்பது புரியவில்லை. நூலகத்தின் முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களும் அந்தக் கட்சியின் இளைஞர்களும் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் தீவிரம் காட்டியதனை அவதானிக்க முடிந்தது. அவ்வாறு அரசின் அரசியல் அந்தஸ்துப் பெறாத அவர்களே வீதியில் இறங்கி பொலிஸாருடன் நேரடியாக மோதும் போது, அரசின் அரசியல் அந்தஸ்துப் பெற்ற கூட்டமைப்பு பிரதிநிதிகள் அந்த நிகழ்வினைப் புறக்கணித்தது ஏன்? என்பது புரியவேயில்லை.

மதகுருமார் தாக்கப்பட்டமை, பெண்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட வன்முறைகள் என்பவை தொடர்பில் சர்வதேச ஊடகங்களும் உள்ளுர் ஊடகங்களும் மிகப்பிரமாண்டமாக செய்திகளை தொடர்ந்தும் வெளியிட்டுவருகின்ற நிலையிலும் இன்றுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வார்த்தை கூட அதற்கு எதிராக வெளியிடவில்லை என்பது வேதனை தருகிறது. மாறாக கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாத்திரம் குறித்த போராட்டம் பற்றி சர்வதேச தமிழ் இணையத்தளம் ஒன்றுக்கு கருத்துவெளியிட்டிருக்கின்றார்.

அவருடைய கருத்தின் சாராம்சம்,

வலி.வடக்கில் நிறைய மக்கள் கலந்து கொண்ட ஒரு போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொது நூலகத்தின் முன்பாக நடத்தப்பட்ட காணாமல் போனோரின் போராட்டம் தேவையற்ற ஒன்று. இந்தப் போராட்டத்தினை நடத்தவேண்டாம் என்று தான் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனிடம் தெரிவித்ததாகவும், வேண்டுமானால் மனுவினைத் தாருங்கள் தான் அதனை பிரித்தானியப் பிரதமரிடம் ஒப்படைத்துவிடலாம் எனவும் தெரிவித்தாகவும் கூறியதுடன், இவ்வாறான போராட்டங்கள் பிரித்தானியப் பிரதமரின் பயணத்தினை இடையூறு செய்வதாக அமைந்துவிடும் என்பது தான் தனது நிலைப்பாடு என்றும் கூறியிருக்கின்றார்.

அவருடைய கருத்து ஓட்டத்தின் அடிப்படையில் அவர் தான் ஒரு இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே செயற்படுவதாக தோற்றங்காட்ட முற்படுவதை அவதானிக்கமுடிகிறது. கொழும்பு வாழ்க்கை வாழ்ந்தவரை எந்த விலையும் இன்றி வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதியாக இறக்குமதி செய்யப்பட்டிருப்பதால் அவரிடம் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது தான். வரலாற்றின் மிக முக்கிய கட்டத்தில் பல இலட்சம் உயிர்களின் மேல் நின்று கொண்டு அரசியல் செய்ய முற்படும் இவ்வாறான போலி முகம்கள் மிகப் பெரிய சாபகங்களாகவே கொள்ளப்படவேண்டியவை.

டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்தின் இயற்கை எழிலை இரசிப்பதற்கு பயணத்தினை மேற்கொள்ளவில்லை. வலி.வடக்கில் வீதிகளில் இறங்கி மக்களின் வீடுகளுக்குள் நுழைந்த அவருக்கு காணாமல் போனோரின் உறவுகள் வீதியில் நிற்கிறார்கள் என்ற ஒற்றை வசனத்தினைச் சொல்லியிருந்தால் போதும். அவர் அந்த மக்களைச் சந்தித்திருப்பார். அல்லது அவருக்கு தெரிவித்தோம் அதனை அவர் ஏற்கவில்லை என்ற செய்தியையாவது மக்களுக்கு கூட்டமைப்பினர் சொல்லியிருக்கலாமே? அவ்வாறு சொல்லாததன் மூலம் அந்த மக்கள் பற்றி கூட்டமைப்பினர் கதைக்கவேயில்லை என்பது புலனாகிறது அல்லவா? அந்த மக்கள் தொடர்பில் ஒரு சிறிய தயவான வேண்டுதலை முன்வைக்க அவர்கள் ஏன் தயங்கினார்கள்? தற்போதும் விடுதலைப்புலிகளைப் பழிவாங்குகிறோம் என்ற எண்ண ஓட்டத்தில்தானா சம்பந்தன் தரப்பு செயற்படுகின்றது?

பழம் நழுவி பாலில் விழும் என்றோ, சந்தர்ப்பம் வீடு தேடிவரும் என்றோ காத்திருப்பவர்கள் உண்மையான தலைவர்கள் ஆகிவிட முடியாது. கிடைக்கும் சந்தர்ப்பத்தினை எமக்ககாப் பயன்படுத்தி சாதிப்பவர்களே வரலாற்றால் போற்றப்படுவார்கள். காணாமல் போனோர் தொடர்பில் உறவுகள் முன்னெடுத்த போராட்டத்தில் கூட்டமைப்பினரும் ஒன்றிணைந்து அந்த மக்களைப் பிரதிபலித்திருந்தால் அதன் வீரியம் இன்னமும் வலுப்பெற்றிருக்கும். கூட்டமைப்பினரின் எதிர்ப்பினையும் மீறி அந்த மக்கள் நடத்திய போராட்டமே சர்வதேசத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

வலி.வடக்கிலும் ஒரு போராட்டம் நடைபெற்றது. அங்கு நிறைய மக்கள் இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். காணாமல் போனோரின் உறவினர்களை மக்களாக சுமந்திரன் கண்ணுக்குத் தெரியவில்லையா? காணாமல் போனோர் போன்ற பலர் தங்கள் உயிர்களைக் கொடுத்துக் கொடுத்த பிச்சைப் பாத்திரம் தான் சுமந்திரன், சம்பந்தன் வைத்திருக்கின்ற நாடாளுமன்ற உறுப்புரிமை என்கின்ற கௌரவம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்களா? அல்லது கூட்டமைப்பு என்ற ஒற்றைச் சொல்லுக்கு ஆகாயத்திலிருந்து வந்த அதிசய சக்திதான் தமது வெற்றிக்குக் காரணம் என்று எண்ணிக்கொள்வார்களா?

வலி.வடக்குக்கு கமரூன் செல்லாமைக்கு காரணம் காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம் தான் என்றும் சுமந்திரன் சொல்லியிருக்கின்றார். யாழ்.பொது நூலகத்தின் முன்பாக அரச தரப்பின் ஏற்பாட்டிலான ஒரு கூட்டமும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்ததே சம்பவத்தினை நேரடியாகப் பார்வையிட்ட கத்தோலிக்க மதகுருமார்களே தெரிவித்திருக்கின்றனரே? இது தொடர்பில் சுமந்திரன் கண்களுக்கு ஏன் தெரியவில்லை?

எங்கள் இனத்தினை காலம் காலமாக அழித்தவர்கள் சிங்களவர்கள் என்று தோற்றங்காட்டினாலும் அதற்கு நிகராக எமது இனத்தவர்களுக்கும் பாரிய பங்கிருக்கின்றது என்பது தான் கடந்த கால வரலாறு.

எமது மக்களை எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் என்றுமே வரலாற்றால் மன்னிக்கப்படப்போவதில்லை.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*