dkleader-253x300

உயிர்களைக்கொடுத்துக் காத்த இலட்சிய நெருப்பை அணையாமல் காக்கவேண்டும் – திக தலைவர்

ஆயிரக்கணக்கான போராளிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களும் தங்கள் உயிரைக்கொடுத்து காத்த இலட்சிய  நெருப்பை அணையாமல் காக்க வரலாற்றுப் பாடங்களை நாம் தொடர்ந்து படித்தே ஆகவேண்டும். ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல; இந்த நூலைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து உலக மக்கள் அனைவரிடமும் கொண்டுசென்று, ஈழப் போராட்டத்தின் இலட்சியத்தை, அவசியத்தை, உண்மையை உணர்ந்து கொள்ளும் படியான வாய்ப்பை நாம் உருவாக்கவேண்டும் என திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலுக்கு வழங்கிய அணிந்துரையில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நவம்பர் 2ந் திகதி தமிழருவி மணியன் மற்றும் பர்வீன் சுல்தானா ஆகியோரர் கலந்துகொண்டு வெளியிட்டுவைத்த அரவிந்தகுமாரனின் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலுக்கு தி.க தலைவர் அவர்கள் வழங்கிய அணிந்துரை வருமாறு:

70 ஆண்டுகள் கடந்த பின்பும் உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் வெளிவரும் திரைப்படங்களில் இரண்டாம் உலகப் போர் குறித்த படங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உண்டு என்கின்றன தகவல்கள். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாசிப் படையால் இனப்படுகொலைக்கும் பெருந்துயரத்துக்கும் ஆளானவர்கள் யூதர்கள். இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு துறைகளிலும் முக்கிய இடங்களில் அமர்ந்திருக்க கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். திரைப்படம், படைப்பிலக்கியத் துறையிலும், யூதர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தாங்கள் பட்ட துயரத்தினை எடுத்துச்சொல்லும் விதத்திலும், தம் வருங்கால தலைமுறையினருக்கு எச்சரிக்கையும் தருவதோடு, உலகளவில் ஹிட்லர் – நாஜிக்களின் மீதான பார்வை மாறிவிடாமல் இருக்கப் பாடுபடுகிறார்கள். கடந்த நூற்றாண்டிலே தான் முதல் உலகப்போரும் நடந்திருந்தாலும், ஒப்பீட்டளவில் நோக்கும்போது இரண்டாம் உலகப்போர் பற்றிய பதிவுகளும் குறிப்பாக ஹிட்லரின் யூத எதிர்ப்பும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பதிவு செளிணியப்பட்டு நினைவூட்டப்படுவதைக் கூர்ந்து நோக்கின் நமக்கு இவ்வுண்மை புலப்படும். யூதர்களின் இந்தப் பணி பிழையானதல்ல: அவர்கள் மீண்டும் மீண்டும் இதை நினைவூட்டுவதற்கு காரணம் மீண்டும் அது போல் நடந்து விடக்கூடாது என்பதற்காவும், தம் மீதான உலகின் பார்வையைத் தக்கவைத்துக் கொள்ளவுமே!

ஆனால் அத்தகைய நாடு பிடிக்கும் பார்வையெல்லாம் மாறி நாகரீக வாழ்வை அடைந்து வருவதாகச் சொல்லிக்கொண்டு இருக்கும் சூழலிலும் அந்த நூற்றாண்டைக் காட்டிலும் ஒரு மாபெரும் இனப்படுகொலைக்கு இலக்கான இனமாக நம் தமிழினம் இருக்கிறது. எத்தனையோ கண்காணிப்பு முறைகளும், தொலைத் தொடர்பு வசதிகளும் நிறைந்திருக்கும் இந்தச் சூழலிலும் உலக நாடுகளை எல்லாம் சாட்சியாக வைத்துக்கொண்டு ஓர் இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் கதவுகளையெல்லாம் நெடுகத் தட்டியும் கூட அவற்றின் மனிதநேயக் கதவுகள் மட்டுமல்ல: கண்கள் கூடத் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கின்றன.

இலங்கை – தம் நாட்டு மக்களையே விமானத்தில் குண்டு வீசிக் கொன்றதையும், உலக நாடுகளின் அமைப்பான அய்க்கிய நாடுகளின் அலுவலகத்தையே வெளியேற்றிவிட்டு கொத்து (க்ளஸ்டர்) குண்டுகளைப் பயன்படுத்தி மக்களைக் கொன்றதையும், ஹிட்லரின் ”கான்சண்ட்ரேசன் கேம்”புக்கு நிகராக ஆடு மாடுகளைப் போல் திறந்தவெளி சிறைச்சாலையில் அவர்களை பசி, பட்டினியுடன் அடைத்ததையும் இந்த உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

முல்லை, மருதம், நெய்தல் என இயற்கையோடு அமைந்த ஈழத்தமிழரின் வாழ்வியலில் “கிபீர்களும், மிக்குகளும், கிளைமோர்களும்” கலந்து சிதறடித்திருக்கின்றன. இவற்றையெல்லாம் தொடர்ந்து நாம் பார்த்தும், கேட்டும் அறிந்தும் நெஞ்சம் கலங்கியிருந்தாலும், இந்நாவலில் படிக்கும் போது நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது.

இந்த நாவலை எழுதியுள்ள ஆசிரியர் அரவிந்தகுமாரன் ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார். போராட்டத்தை அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பது என்பது, நாம் கற்றுக்கொண்ட பாடங்களையும் அவர்களுக்குத் தெரிவிப்பதையும் சேர்த்தே! அத்தகையதொரு பாடத்தைத்தான் இந்த நாவலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார். சொந்த நிலம், விவசாயம், உறவுகள், வீடு என அத்தனையும் இழந்து, தங்கள் நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழவேண்டிய அவல நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையை எண்ணி எண்ணி நாம் குமுறிக்கொண்டிருக்கிறோம்.

போர்க்களத்தில் – விடுதலை பெற்ற நாட்டுக்கான கனவுகளோடும் எதிர்ப்பார்ப்போடும் ஈழத் தமிழர்கள் செய்த அளப்பறிய தியாகங்களும், வீட்டுக்கொருவரை விடுதலைப் போருக்குத் தந்திட்ட வீரமும் நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கின்றன. ”செல்லடியும், கிபீரடியும் பெற்றுச் சாவதற்கு, விடுதலைப் போராளியாக இருந்து சாவது நான் செய்யும் கடமை” என்று உணர்வு இளைஞர்களிடம் மேலோங்கி இருந்ததை நாவலாசிரியர் தெளிவாகக் காட்டுகிறார்.

”போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம், ஆனால் போராடினால் பிழைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்ற தம்பி பிரபாகரனின் வாசகம் தமிழர் தம் சிந்தனையில் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் களமாடி வென்ற வரலாறு உலகத்திற்கே எடுத்துக்காட்டான ஒன்றாகும். வீரத்தால் விளையாடி வித்துடலாக ஆன பின்னும், எதிரியின் கைகளில் சிக்கினால் சின்னாபின்னப்படுத்தப்படும் என்று தெரிந்தும், துணிந்து களத்தில் நின்ற வீரத்தைக் கண்டு வியக்காதோர் யார்-? பால் வேறுபாடுகளற்ற சமஉரிமை என்பது மட்டுமல்லாமல், ஒழுக்கத்தை உயிராகப் பேணிய இயக்கம் என்பதுதானே தமிழீழ விடுதலைப் புலிகளின் பெருமை. கொத்துக் குண்டுகளாலும், விமானக் குண்டு வீச்சுகளாலும், கிளைமோர் தாக்குதல்களாலும், துணை இராணுவக் குழுக்களின் கைகாட்டித் தனத்தாலும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட உணவுப் பற்றாக்குறையாலும் சிங்களப் பேரினவாத அரசு தமிழர்களைக் கொன்று கொண்டிருந்த நிலையிலும், அதற்கு எதிராகக் களத்தில் நின்ற போராளிகளோ சிங்கள மக்களை தம் இலக்காக வைக்கக்கூடாது; அப்படியொரு சிந்தனையே தோன்றக் கூடாது என்ற உயரிய கட்டுப்பாடோடு களத்தில் நின்றனர். அப்படிப்பட்ட அமைப்பைத்தான் சிலர் தீவிரவாதிகள் என்கின்றனர். உலகின் எந்த ஒரு போராட்டத்திற்கும் இத்தகைய வரலாறு இருந்திருக்க வாளிணிப்பில்லை.

ஈழத்தமிழர் வரலாறு என்பது நெடுகவும் ஓர் உரிமைப் போராட்ட வரலாறாகவே இருந்து வருகிறது. அந்தப் போராட்டத்தின் முடிவுகளெல்லாம் துரோகத்தின் விளைவால் எப்படி திசைமாறிப் போயிருக்கின்றன என்பதை நாம் காண முடியும். நம் காலத்தில் நிகழ்ந்த உரிமைப்போர் கூட துரோகத்தால் எத்தகைய பின்னடைவிற்கு உள்ளானது என்பதையும் நாம் கண்கூடாக கண்டோம் என்பது வருத்தத்திற்குரியது. ”இன்று எமக்குள்ள கவலையெல்லாம் தமிழர்களில் விபீஷணர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பது தான்” என்று தந்தை பெரியார் கவலைப்பட்டார். அந்தக் கவலை எத்தனை உண்மையானது என்பதை நாம் கண்டு வருகிறோம்.

இராவணனைப் பற்றிக் குறிப்பிடும் போது கூட புரட்சிக்கவிஞர் “வஞ்சக விபீடணின் அண்ணனென்றே தம்மை வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும் நெஞ்சகன்” என்று சொல்லுகிறார்! அத்தகையதோர் நிலையில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தலைவர் தம்பி பிரபாகரனும் இருந்தாரென்று ஒரு காட்சியினூடாக சொல்கிறார் ஆசிரியர். இப்படி எண்ணற்ற செய்திகளை நுணுக்கமாகவும், உண்மையாகவும் நாவலோடு பின்னிப் பிணைத்து உருவாக்கியிருக்கிறார் நாவலாசிரியர் அரவிந்த குமாரன்.

இதில் வரும் பரமசிவனும், பார்வதியும், சிவமும், முருகரும், சுந்தரமும், முத்தம்மாவும், கணேசும், ரூபாவும், மலையவனும், வதனியும், பகத்சிங்கும், மங்களாவும் கற்பனைக் கதைமாந்தர்கள் அல்லர். அவர்களின் பெயர்கள் மாறியிருக்கலாம்; ஆனால் அவர்கள் வீரர்களாவும் வீரங்கனைகளாவும், அப்படிப்பட்டோரை உருவாக்கியவர்களாகவும் நம்மோடு வாழ்ந்தவர்களே!

முன்னுரையில் ஆசிரியர் அரவிந்த குமாரனே குறிப்பிட்டிருப்பதால் கதையின் களத்தை நாம் குறிப்பிடுவது பிழையாகாது. இந்த நாவலின் முதல் பாகம் முள்ளிக்குளத்தில் துவங்கி கிளிநொச்சியில் முடிகிறது. நாம் பெருமையோடும் பெருமகிழ்வோடும் படிக்க – இந்தப் பயணம் வெற்றிப் பயணம் இல்லைதான். தமிழீழத்தின் தலைநகரம் என்று நாமெல்லாம் உச்சிமோந்து கொண்டாடிய கிளிநொச்சியைக் கடந்தும் தமிழர்களின் போராட்டம் பின் நகர்த்தப்பட்டது என்பதையும், அது முள்ளிவாய்க்காலில் முடியும் போது எத்தகைய கோரம் அரங்கேறியது என்பதையும் அறிந்தே தான் இதனைப் படிக்கிறோம். பாடங்கள் நமக்கு இனிப்பாக மட்டும் இருப்பதில்லை; ஆனாலும் மீண்டும் அவற்றைப் படிப்பதன் மூலம் நாம் கற்பது ஏராளம். நம் குறிக்கோளில் உறுதிகொள்ள முடியும். ஆயிரக்கணக்கான போராளிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களும் தங்கள் உயிரைக்கொடுத்து காத்த இலட்சிய நெருப்பை அணையாமல் காக்க இத்தகைய பாடங்களை நாம் தொடர்ந்து படித்தே ஆகவேண்டும். ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல; இந்த நூலைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து உலக மக்கள் அனைவரிடமும் கொண்டுசென்று, ஈழப் போராட்டத்தின் இலட்சியத்தை, அவசியத்தை, உண்மையை உணர்ந்து கொள்ளும் படியான வாய்ப்பை நாம் உருவாக்கவேண்டும். காலத்தினாற் செய்த பணியாக அரவிந்தகுமாரன் அவர்களின் இந்நாவல் இருக்கிறது. இந்நூலின் உருவாக்கத்தில் உழைத்த தமிழ்லீடர்.காம் இணையதளத் தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நம் பாராட்டுக்கள் என்பதைவிட நன்றிகள் உரித்தாகும்.

”நீந்திக்கடந்த நெருப்பாறு- இறந்த காலமல்ல;
இனி நீந்தவேண்டிய நெடுந் தொலைவு
இந்நெருப்பாற்றில் உண்டு” என்பதை உணர்ந்து பணியாற்றுவோம்.

ஆசிரியரின் அருந்திறன் ஆற்றல் மிகு எழுத்துகள் புண்பட்ட நெஞ்சுகளுக்குச் சற்று மருந்து தடவுவது போல உள்ளது.

(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*