KOTA

‘கோயபல்ஸ்’ கோத்தாவின் ‘துப்பாக்கி மொழி’ – மாரீசன்

இலங்கை வாழ்மக்களிடையே தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகள் பாவனையில் உண்டு. இம் மும் மொழிகளை அனைவரும் கற்க வேண்டும் என ஊக்கம் கொடுப்பதற்கென்றே தனியான ஒரு நல்லிணக்க அமைச்சும் உண்டு. இவை இந் நாட்டின் மக்கள் மொழிகள் என்றே கூற முடியும்.

ஆனால் இலங்கையின் அதிகாரபீடத்தில் உள்ள சிலருக்கு இந்த மொழிகளில் சொல்லப்படும் விடயங்கள் புரியவதில்லை. அவர்களும் பேசுவது இந்த மொழிகளில் ஒன்று போல் தோன்றினாலும் அது அடிப்படையில் அப்படி இருப்பதில்லை.

அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி ‘துப்பாக்கி மொழி’

விடுதலைப்புலிகள் அவர்களுடன் அதே மொழியில் பேசினார்கள்! அப்போது அவர்களால் அந்த மொழியை விளங்கிக்கொள்ள முடிந்தது. சில சமயம் புரிந்து நடந்து கொண்டார்கள். வேறு வல சமயங்களில் புரிந்தும் புரியாதது போல் நடித்தார்கள்! அவர்களும் அதே மொழியில் பேசி போதியளவு வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்.

ஆனால், விடுதலைப்புலிகளின் துப்பாக்கிமொழி விடுதலை உணர்வில் தோய்ந்த புனிதமான மொழியாக இருந்தது. அவர்களின் துப்பாக்கி மொழியோ நயவஞ்சகத்தனமான கீழ்த்தரமான ஒடுக்குமுறைகளால் உருவாக்கப்பட்ட விஷம் வாய்ந்த மொழியாக இருந்தது.

எப்படியிருப்பினும் 2009 மே 19ம் நாளுடன் விடுதலைப்புலிகளின் துப்பாக்கி மொழி மௌனித்துவிட்டது. இப்போது அவர்களின் துப்பாக்கி மொழி சிங்களம், ஆங்கிலம் ஆகிய போர்வைகளில் மேலாதிக்கம் வகிக்கத் தொடங்கிவிட்டது.

இந்தத் துப்பாக்கி மொழிப் பாவனைக்குத் தலைமை வகிப்பவரும், தீவிரமாக அமுல்படுத்தி வருபவரும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ. அவர் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி சிங்கள மக்கள் நியாயமான போராட்டங்களை நடத்தும் போது அவர்களிடமும் இந்தத் துப்பாக்கி மொழியால் தான் பேசிக் கொள்வார். கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் போராட்டம், நீர் கொழும்பு மீனவர் போராட்டம், வெலிவேரியா குடிநீர் போராட்டம் என்பனவற்றின் போது ஆயுதப் படையினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்து சிங்கள மக்களைக் கொன்ற போதும் அவர் அதே மொழியில் தான் பேசினார். அவர் பத்திரிகையாளர் சந்திப்புக்களின் போதும் அதே துப்பாக்கி மொழியில் தான் பேசுவார்.

பாதுகாப்புச் செயலர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. குறிப்பாக, மண்டைதீவைக் கைப்பற்ற இடம்பெற்ற படை நடவடிக்கையின் போது ஐம்பதுக்கு மேற்பட்ட பொதுமக்களைக் கொன்று கிணறுகளில் போட்ட கொடுமை இவர் யாழ்பாணத்தில் படைத்தலைமை அதிகாரியாக இருந்த போது தான் இடம்பெற்றிருந்தது. அவர் அண்மையில் கூட ஊடகவியலாளர்களிடம் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய பசுமையான நினைவுகளைத் தான் இன்னும் மறக்கவில்லை எனக் கூறியிருக்கின்றார். அவரைப் பொறுத்தவரை பொதுமக்கள் கொல்லப்படுவது ஒரு பசுமையான நினைவு.

எப்படியிருப்பினும் அவரின் துப்பாக்கி மொழி என்பது தனித்துவமானது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடம் அல்ல. இலங்கை இராணுவத்தினர் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்கவர்கள், சரணடைந்த போராளிகள் எவரும் காணாமல் போகவில்லை, போரின் இறுதி நாட்களில் படையினர் மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டனர் போன்ற பல உண்மைக்கு மாறான கூற்றுக்கள் அவரின் துப்பாக்கி மொழியால் பேசப்பட்டன.

எல்லாவற்றையும் விட அண்மையில் அவர் மாவீரர்கள் துயிலும் இல்லங்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்து அவரின் அநாகரிகமான, அசிங்கமான, மனிதப்பண்பற்ற துப்பாக்கி மொழியைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

அதாவது யாராவது மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் நிறுவ வேண்டும் எனக் கோரினால் அவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவர். இன்னுமொரு வார்த்தையில் சொன்னால் விடுதலைப் போரில் மரணித்தவர்களுக்கு நினைவாலயம் அமைக்கும்படி கோரினால் அது கைது செய்யப்பட்டு சிறை செய்யப்படக்கூடிய குற்றம்.

அது அவரின் துப்பாக்கி மொழி!

போரில் இறந்தவர்கள் எதிரிகளாக இருந்தாலும்கூட அவர்களுக்கு உரிய கௌரவம் வழங்குவது சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட மரபு. இது உலகம் முழுக்க வழமையிலுள்ள மனித மொழி.

துப்பாக்கி மொழியால் துருப்பிடித்துப் போயிருக்கும் அவரின் சிந்தனைக்கு மனித மொழி விளங்கப் போவதில்லை.

வெள்ளையருக்கு எதிராக வீரத்துடன் போராடிய வீரபுறங்அப்பு கலகக்காரன் எனக் குற்றம் சாட்டப்பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்த மகாநாயக்கரும் கொல்லப்பட்டார். அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய கெப்பிட்டிப் பொலதிசாவ தேசவிரோதி எனக் கூறப்பட்டு தூக்கிலிடப்பட்டான். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே கலங்க வைத்த சூரசரதியல் கொள்ளைக்காரன் எனக் கூறப்பட்டுக் கொல்லப்பட்டான். இறுதிவரை பிரிட்டனின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய கீர்த்தி சிறீ விக்கிரமராஜசிங்கன் துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டான்.

அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக வீரப் போராட்டங்களை நடத்திய அவர்களைத் தேசத் துரோகிகள் எனப் பட்டம் சூட்டி பிரிட்டிஷ் அரசு கொன்றது.

இன்று சிங்கள அரவு அவர்களைத் தேசிய வீரர்களாகக் கொண்டாடுகிறது.

அதே அரசும், அதன் பாதுகாப்புச் செயலரும் தமிழ் மக்களின் விடுதலைக்குப் போராடி உயிர்நீத்தவர்களைப் பயங்கரவாதிகள் எனப் பிரகடனம் செய்துள்ளன.

அவர்களுக்கு நினைவாலயம் அமைக்கக் கோருபவர்கள் சிறை செய்யப்படுவார்கள் என மிரட்டுகிறது.

அதாவது கோத்தாபயவின் துப்பாக்கி மொழி தெளிவாகவே இலங்கையில் தமிழனுக்கு ஒரு நீதி சிங்களவனுக்க ஒரு நீதி என்பதை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறது.

ஆனால் எல்லாவற்றையும் விட மக்கள் மொழி வலிமை வாய்ந்தது என்பதை ஒடுக்குமுறையாளர்கள் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்றுக்கொள்ளும் நிலை வரும் போது அவர்கள் மக்களுக்கு என்ன தண்டனையை வழங்க நினைக்கின்றனரோ அதை அவர்களே அனுபவிக்கும் நிலை ஏற்படலாம்.

மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கக் கோரினால் சிறை தான் தண்டனை என்றால் மக்கள் சிறை நிரப்புப் போராட்டத்தையும் நடத்தத் தயங்கமாட்டார்கள் என்பது துப்பாக்கி மொழியை மட்டுமே விளங்கிப் பழகிய இவர்களுக்கு விளங்கப் போவதில்லை என்பது தான் உண்மை.

– தமிழ்லீடருக்காக மாரீசன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*