thalaivar1

தலைவரின் வீடு : இதய இருப்பிடத்தின் சரிவு!

போர் நிறுத்தக்காலத்தில் வன்னிக்கு சென்றவர்கள் அங்கு மற்றெல்லா இடங்களையும் விட புதுக்குடியிருப்பில் சில அசாதாரண அனுபவங்களைச் சந்தித்திருக்கக் கூடும். வன்னியின் ஏனைய இடங்களைவிட புதுக்குடியிருப்பை மையப்படுத்திய பிராந்தியத்தில் புலிகளின் கண்காணிப்பு நடைமுறைகள் ஒப்பீட்டளவில் இறுக்கமாக இருந்ததை உணர்ந்திப்பார்கள்.

புலிகளுக்குத் தெரியாமல் ஓர் அணுகூட அசையமுடியாது என்ற நிலைமையே இப்பகுதியில் காணப்பட்டது. இத்தகைய கடுமையான கண்காணிப்புகளுக்கான காரணம், மக்கள் என்ற போர்வையில் ஆழ ஊடுருவும் படையணியைச் சேர்ந்தவர்களோ அல்லது அரச உளவாளிகளோ வேவுபார்க்க வரக்கூடும் என்ற முன்னெச்சரிக்கைதான்.

வன்னியின் ஏனைய இடங்களை விடவும் புதுக்குடியிருப்பு சார்ந்த இடங்களில் தமது கண்காணிப்பை இவ்வளவு இறுக்கமாகப் புலிகள் ஏன் நடைமுறைப்படுத்துகிறார்கள் ? என்ற கேள்வி அப்போது எல்லோர் மனங்களிலும் எழவே செய்தது.ஆனால் அதற்கான காரணமும் அவர்களுக்கு வெளிப்படையானதுதான். புலிகளுக்கு மட்டுமல்லாது, தமிழர்களுக்கே இதயமான தலைவர் பிரபாகரன் புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியிலேயே வசிக்கிறார் என்பதுதான் அந்தக்காரணம்.

தலைவர் புதுக்குடியிருப்பில் இருக்கிறார் என்று தெரிந்தாலும் கூட, எந்த இடத்தில், எந்த வீட்டில் இருக்கிறார் என்பது அவரது வீடு படையினரால் கைப்பற்றப்படும் வரை அரச படைகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரியவரவேயில்லை. அவ்வளவு ஏன், மிக முக்கியமான தளபதிகள், தலைவரின் பாதுகாப்பு பிரிவினர் என்போரைத் தவிர மற்றைய போராளிகளுக்கு கூட தலைவரின் இருப்பிடம் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை.

பழைய மந்திரதந்திரக் கதைகளில் வருவது போன்று ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி செல்லவேண்டிய ஒரு இடம் போலவே, தலைவரின் இருப்பிடம் குறித்த தகவலின் இரகசியமும் பேணப்பட்டது. இப்படி பார்ப்பதற்கு அரிதான தலைவரின் இருப்பிடம் குறித்து பல்வேறுவிதமான ஊகங்கள் மக்கள் மத்தியில் இருந்தன.

அடர்ந்த காட்டுக்குள், நிலத்துக்கு கீழே, ஏராளமான
சுரங்கங்களைக் கொண்ட இடத்திலேயே அவர் இருப்பார் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் நினைத்ததில் அதிகம் உண்மையிருந்தது என்பதையே, கடைசியில் அவரது வீட்டைப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

ஓரளவு சனநடமாட்டம் குறைந்த இடத்தில், தலைவரின் வீடு அமைந்திருந்தது. வீட்டைச்சுற்றிலும் காவலரண்கள். அவை வெளிப்பார்வைக்கு காவலரண்கள் போல தோற்றமளிப்பதை தவிர்ப்பதற்காக மல்லிகை போன்ற கொடிவகைகளைப் படரவிட்டு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தது. அத்தோடு ஒவ்வொரு காவலரணும் ‘இரும்புக்கேடர்களால்’ கவசமிடப்பட்டிருந்தன.

ஏனைய வீடுகளைபோலவே முன்பக்கம் மல்லிகைப்பந்தலின் கீழ் ‘போர்ட்டிகோ’ அமைப்போடு அமைதியாகத் தெரிந்த அந்த வீடு, உள்ளே தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மத்தியரேகையாக இருந்தது. வழமையாக ஒரு பொதுமகனின் வீட்டின் அமைப்பை முதல் தளம் கொண்டிருந்தது. படையினரால் பச்சிளம் பாலகன் என்றும் பாராமல், பிஸ்கட்டை உண்ணக்கொடுத்துவிட்டு சுட்டுக்கொல்லப்பட்ட தலைவரின் இளையமகன் பாலச்சந்திரனின் விளையாட்டு இடம் இந்த முதல் தளம் தான். அவனின் விளையாட்டுப் பொருள்கள் சில அண்மையில் இந்த வீட்டைப்பார்வையிட படையினர் அனுமதித்திருந்த காலத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

முதல் தளத்தின் மையத்தில் கீழ்நோக்கி வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டுக்களில் இறங்கினால் நீங்கள் இன்னொரு உலகத்துக்குச் சென்றது போல உணரவேண்டியிருக்கும். இருளும் குளிரும் கலந்த சீதோஷ்ண நிலையில், இரண்டு தளங்கள் நிலத்தின் கீழ் இருந்தன. தளபதிகளுடனான சந்திப்பு, தாக்குதல் திட்டமிடல், கரும்புலிகளுடனான சந்திப்பும் இராப்போசனமும் என்பனவெல்லாம் இந்த நிலக்கீழ் தளங்களிலேயே நடைபெற்றிருந்தன. அதனால் ஒருதாக்குதல் குறித்த திட்டமிடல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, அந்தவீட்டை விமானங்கள் அதிசக்திவாய்ந்த குண்டைவீசி தகர்க்க முனைந்தாலும் கூட, உள்ளே இருப்பவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது.

ஆயினும், கிளிநொச்சியில், கிபிர் தாக்குதலில் புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த பின்னர், தலைவரின் வீட்டிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏனெனில் தமிழ்ச்செல்வன் விமானத்தாக்குதலில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட பதுங்குகுழியில் இருந்த போதும், அந்தப்பதுங்கு குழியின் இருபக்க வாசல்களையும் குறிவைத்து தாக்கி,அதனை மூட செய்து, உடலில் எந்தவொரு காயமுமின்றி, மூச்செடுக்க முடியாமாலேயே தமிழ்ச்செல்வனை அரசபடைகள் கொன்றிருந்தன.

 எனவே அவ்வாறான நிலையைத் தவிர்க்க, காற்று நிலக்கீழ் தளங்களுக்கு தாராளமாக வரக்கூடிய வகையில் பல வழிகள் உண்டாக்கப்பட்டன. அத்தோடு அவசரகாலத்தில் வெளியேறுவதற்கான சுரங்க வழிகள், ‘லிப்ட்’ வசதிகள் என்பனவும் உண்டாக்கப்பட்டிருந்தன.

இப்படியெல்லாம் ஒரு கோட்டைக்கு நிகரான வலுவோடு அமைதியாக இருந்த அந்த வீட்டை விட்டு வெளியேற கடைசிவரை தலைவர் சம்மதிக்கவில்லை. ஆனால் உலககூட்டுச் சதியால் பேரினவாத சிங்களப்படை முன்னேறிக்கொண்டேயிருந்தது. தலைவர் வராமல் புலிகள் எப்படிப் போவார்கள்?   புதுக்குடியிருப்பை படைகள் கைப்பற்றினாலும் தலைவரின் இருப்பிடத்தை அவர்களால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாதுதான். ஆயினும் எவ்வளவு நாட்களுக்குத்தான் எதிரியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட பகுதியில் இருக்கமுடியும்? போரை வழி நடத்துவது யார்?

இந்த நிலையில் தான் , புலிகளின் வரலாற்றில் நடைபெற்றிராத ஒரு மாபெரும் முறியடிப்புச்சமரை நடத்தி படைகளை பழைய நிலைகளுக்கு விரட்ட தளபதிகள் முடிவெடுத்தார்கள். தன்னைக்காக்க வேண்டும் என்ற ஓர்மத்தில் புலிகள் இன்னும் மூர்க்கமாக போரில் இறங்கி தாய்மண்ணை விடுவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தலைவர் அந்தவீட்டில் இருந்து வெளியேற மாட்டேன் என்று அடம்பிடித்தார் என்று போராளிகள் கூறுகிறார்கள்.

புலிகளின் சகல படையணிகளும், ஆயுதபலமும் ஒன்றிணைக்கப்பட்டு தளபதிகள் தலைமையில் புலிகள் பாயத்தயார். அந்தப்பாய்ச்சல் மட்டும் நினைத்தபடி நடந்திருந்தால், தாயகத்தின் தலைவிதி வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால் இங்கும் துரோகம் விளையாடியது. எப்படியோ படைத்தரப்புக்கு புலிகளின் திட்டம் கசிந்துவிட்டது. இரவோடிரவாக ஆயிரக்கணக்கான படைகள் நாலைந்து வரிசையில் புலிகளைச் சூழ ’பெட்டி” அடித்து விட்டார்கள்.

அப்படியும் சோரவில்லை வீரப்புலிகள். வெறிகொண்டு பாய்ந்தார்கள். எல்லா வரிசைகளும் தகர்ந்து போக, தேசத்தை மீட்பதற்கான ஓயாத அலைகளாக புறப்பட எத்தனித்த சமயத்தில் தான் போரியல் மரபுக்கு முரணாக பொஸ்பரஸ் குண்டுகளை வகைதொகையாக ஏவியது பேரினப்படை. பாயத்துணிந்த மறவர்கள் எரிந்து, கருகி மாண்டு போனார்கள். அப்படி இருந்தும் கூட எஞ்சிய புலிகள் தலைவரை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக பாதுகாப்பான் இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

முள்ளிவாக்காலிலே பல்லாயிரக்கணக்கில் எம்மின உயிர்களைக் குடித்து போரில் வென்றதாக மார்தட்டியது சிங்களப் பேரினவாதப்படை. எங்கள் இனப்போராட்டத்தின் தலைவிதியைத் தீர்மானித்த தலைவரின் வீட்டை முதலில் தனது தளமாக மாற்ற யோசித்த படைத்தரப்பு, பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டு சுற்றுலா மையமாக்க நினைத்தது. பொதுமக்களை பிரபாகரனின் வீட்டைப்பார்வையிட அனுமதி வழங்கப்பட்ட நாள்முதலாக கூட்டம் அலைமோதியது.

தங்களின் வெற்றியை பற்றிய விம்பமே அந்த வீட்டைப்பார்வையிடுபவர்களுக்கு ஏற்படும் என்பதே இராணுவத்தின் எண்ணம்.ஆனால் அதற்கு மாறாக தலைவரின் வீட்டைப் பார்வையிட்ட சிங்களவர்களிம் சரி, தமிழர்களும் சரி, வெளிநாட்டவர்களும் சரி எவரும் அந்த வீட்டை இராணுவத்தின் வெற்றிச்சின்னமாக கருதவில்லை. மாறாகப் புலிகலின் போரியல் ஆற்றலின் குறியீடாகவே கருதி, தம்முடைய ஆச்சரியங்களையும் வெளிப்படுத்தினர். இது புகைச்சலைக் கிளப்பியது அரசுக்கு.
மக்களின் இந்த நம்பிக்கைகள் மீண்டும் புலிகள் பற்றிய ஞாபகமூட்டல்களை வளர்த்து, அதன் விளைவாக எப்போதும் உரிமைக்குரலோடு இருக்கும் தமிழர்களின் இருப்பு தொடரக்கூடும் என்று அது கருதியது.

மாவீரர் துயிலுமில்லங்களை அழித்தொழித்து தமிழ்மக்கள் மனத்திலிருந்து மாவீரர்கள் பற்றிய நினைவுகளைத் துடைத்தழிக்கலாமென்று நினைத்த பேரினவாத அரசு, தலைவரின் வீடும் தமிழ்மக்களுக்கான எழுச்சிக் குறியீடாக மாறிவிடுமென்று அஞ்சி அதையும் அழித்துவிடத் துணிந்தது.

எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல் வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அரசின் கோபத்தைக் கிளறிவிட்டது. தேர்தலில் மரணஅடி வாங்கிய சிங்களப் பேரினவாத அரசும் அதன் அடிவருடிகளும் பொருமிக்கொண்டிருந்த காலத்தில்தான் தலைவரின் வீட்டைத் தகர்த்தழிக்கும் வேலையைத் தொடங்கியது சிங்களப்படை.

கண்ணிவெடியைச் செயலிழக்கச் செய்யப்போவதாக சொல்லி, தலைவரின் வீட்டைக் குண்டுவைத்துத் தகர்த்துள்ளது சிறிலங்கா இராணுவம். ஆனால் அந்தபகுதியில் கண்ணிவெடியகற்றல் பூர்த்தியாகி வாரக்கணக்காகி விட்டதென்றும், அதன்போது கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள்கள் யாவும் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்ட நிறுவனத்தால் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன என்பதும் மக்களுக்கு தெரியும் .

ஆயினும் உண்மையை வெளிக்காட்டாமல் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.மீளக்குடியமர்ந்த பின்னும் இடம்பெயர் வாழ்வு அவர்களை விட்டு நீங்கவில்லை. சரியாக மாலை 6.41க்கு எழுந்தது பேரோசை.
எங்கும் அதிர்வு. எங்கள் இனத்தின் நம்பிக்கையின் குறியீடாக இதயத்தின் இருப்பிடமாக இருந்த அந்தவீடு ஒற்றைவெடியில் தூர்ந்து, இடிந்து போனது.

ஆனால் வெறும் கட்டடங்களைத் தகர்ப்பதால் மக்கள் மனத்திலிருந்து அந்த எழுச்சி வடிவத்தைக் கலைத்துவிட முடியாது. மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைப்பதன் மூலமோ நினைவுத் தூபிகளை இடிப்பதன் மூலமோ தலைவரின் வீட்டைத் தகர்ப்பதன் மூலமோ தனது கோபத்தையும் வெறியையும் சிங்களப் பேரினவாதம் தணித்துக் கொள்ளலாமேயொழிய, தமிழ் மக்களின் மனங்களில் இந்த எழுச்சிச் சின்னங்களின் நினைவுகளையோ விடுதலைக்கான அவாவையோ அழித்துவிட முடியாது.

விடியலுக்கான எமது பயணத்தில் விதைகளையும் விழுதுகளையும் தமது நெஞ்சிலிருத்திப் பயணிப்பர் தமிழ்மக்கள்.

 -ஈழமுரசு அவுஸ்திரேலியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*