vtv

‘விக்கினங்களைத் தரப்போகும் விக்னேஸ்வரன்’ – அரிச்சந்திரன்!

சாவும் அழிவுகளும் என முடிவடைந்த போரிற்கு பின்னர், தமிழ்மக்களின் தேசியத்திற்கான ஆணையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட வெற்றியென்பது முக்கியமானது. “சலுகை அரசியலுக்காக” சாதாரணமாக விழவேண்டிய வாக்குகளே இந்தத்தேர்தலில் விழாமல் போனது தமிழ்மக்களின் உறுதிக்கு சான்று.இந்தவேளையில் இப்பத்தி முக்கியமான ஒரு விடயத்தை முன்வைக்கவிரும்புகின்றது. வடமாகாண சபை தேர்தலிற்கு முன்னரும் பின்னரும் தமிழரசுக்கட்சி செய்த பிழைகள் சரிகள் பற்றியோ அல்லது ஏனைய தமிழ்க்கட்சிகளின் தமிழர்கள் நடந்துகொண்ட முறைகள் தொடர்பாகவோ இப்பத்தி ஆராயவில்லை. மாறாக விக்கினேஸ்வரன் என்ற “நல்ல மனிதர்” பற்றியும் அவர் எம்மையெல்லாம் இணைக்க வந்தவரா என்பது பற்றியுமே ஆராய முயல்கின்றது.

முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரன் முன்னிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டால், அதனை தான் சாதகமாக பரிசீலனை செய்வேன் எனச்சொல்லியிருந்தார். தனது “நேர்மையான” நிலைபாட்டை பத்துக்கு மேற்பட்ட ஊடகங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லியிருந்தார்.

இதன் மூலம் தான் அனைத்து தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்த்தேசிய கட்சிகளையும் இணைத்து, அனைவருக்கும் பொதுவான தலைவராக தான் இருப்பேன் என்பதை காட்டவிரும்பினார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அவ்வப்போது எழுந்துவந்த சலசலப்புகளை, இவ்வாறான பொதுவேட்பாளரை நிறுத்துவதன் மூலம், அதனை உண்மையான கூட்டமைப்பாக கொண்டுவர முடியும் என மக்களும் கருதினர்.

ஆனால் அதற்கு பின்னர் என்ன நடந்தது? முதலமைச்சர் ஆனவுடன் என்ன செய்தார்?   இவைதான் இன்றைய கசப்பான பதிவுகள்.

சம்பந்தர் தவிர மக்களால் நேரடியாக தெரிவுசெய்யப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், இணக்க அரசியல் என்ற கோதாவில் சரணாகதி அரசியல் செய்யவேண்டாம் எனக்கேட்டு, மகிந்தவுக்கு முன்னால் சென்று சத்தியப்பிரமாணம் செய்யாமல், தமிழ்ப்பெரியோர்கள் முன்னிலையில் செய்வோம் எனக்கேட்டனர். ஆனால் மகிந்தவிடம் தான் தனியே சென்று சத்தியப்பிரமாணம் செய்து, கூட்டமைப்பின் ஒருங்கிணைந்து வேலைசெய்யவேண்டும் என்ற, கோட்பாட்டை உடைத்தெறிந்தார்.

இச்சத்தியப்பிரமாண நிகழ்வை, தமிழர்களுக்கான நிரந்தர விடுதலைக்கான வழியின் தடைக்கல்லாகவே வரலாறு பதிவுசெய்யும் என்பதை தமிழர்களின் துயரவாழ்வை வாழ்ந்து அறியாத விக்கினேஸ்வரன் எப்படி புரிந்துகொள்ளப்போகின்றார்? கூட்டமைப்பு என்பது அனைவரின் கருத்துக்களை உள்வாங்கவேண்டும் என்ற அடிப்படை தத்துவத்தையாவது நீதியரசர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, 74 வயதான விக்கினேஸ்வரனுக்கு எப்படி சொல்லாம் இருக்கமுடியும்?

தகுதி தராதரம் அனுபவம் என்பவற்றை பொறுத்தே நான்கு அமைச்சர்களை நியமித்தோம் என ஊடகங்களுக்கு செய்தியறிக்கை அனுப்பினார் விக்கினேஸ்வரன். இதன் மூலம் ஏனைய 24 பேரையும் அப்படியான அந்த தகுதிகள் இல்லை என முடிவெடுத்தாரா என சித்தார்த்தன் கேட்பது சரியான கேள்வியாகவே இருக்கின்றது. நீங்கள் 28 பேரை தெரிவு செய்தாலும், நான்கு பேர் தான் பிரயோசனமான ஆட்களென, அவர்களை தெரிவுசெய்த மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தியாகவே, முதல்வரின் அறிக்கையை கருதவேண்டும்.

கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் பொருத்தமான கலந்துரையாடல்களை செய்யாமல், அவர்கள் சிபார்சு செய்தவர்களை புறக்கணித்தும் தனதும் சம்பந்தரினதும் சுமந்திரனினதும் விருப்பத்தின் பேரில் ஆட்களை தெரிவுசெய்தல் கூட்டணி தர்மமா? சிபார்சு செய்யப்பட்டவர் பொருத்தமற்றவர் என முதலமைச்சர் கண்டிருந்தால் இன்னொருவரை தரும்படிதானே அந்தந்த கட்சிகளிடம் கேட்டிருக்கவேண்டும். அதுதானே கூட்டணி தர்மம்.

கிழக்கு மாகாண தேர்தலின்பின்னர், முஸ்லிம் காங்கிரசுக்கு முதல்வர் பதவி தருகின்றோம். வாருங்கள் ஆட்சியமப்போம் எனப் பெருந்தன்மையோடு, விட்டுக்கொடுக்க முன்வந்த தமிழரசுக்கட்சி, வடமாகாணத்தில் அத்தகைய அல்லது ஆகக்குறைந்த பெருந்தன்மையைக்கூட வெளிப்படுத்தாதது ஏன்?

வடமாகாணத்தில் முதல்வர் பதவியும் இரண்டு அமைச்சுக்களும் தங்களுக்கேயென பங்கு பிரித்துவிட்டு, கூடிநின்ற கட்சிக்கு கொடுப்பதற்கு அமைச்சு இல்லையென்று சொல்வது எப்படி கூட்டணியாகும்?

வடமாகாணசபை உறுப்பினர்கள் பதவியேற்பு வைபவத்தில் 9 உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமல் இருந்தபோது “வெள்ளை மனசு” என அறியப்பட்ட விக்கினேஸ்வரன் அவர்களை மீண்டும் அழைத்துவர, என்ன செய்தார்?

பணத்திற்காக அலையாதீர்கள் என்றார். சொந்தம் தம்பி என அமைச்சர்களை கேட்காதீர்கள் என்றார். ஆயுதங்களை கைவிட்டுவந்த “நல்லதம்பி” செல்வம் அடைக்கலநாதன் போல அனைவரும் சனநாயகவழிக்கு வரவேண்டும் என்றாரர்.

இவ்வாறாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அனுபவமும் ஆற்றலும் உள்ளவரென அறியப்பட்ட விக்கினேஸ்வரன் நடந்துகொண்ட முறை சரியானதா?

கூட்டமைப்பை பலப்படுத்துவார் என நம்பப்பட்ட விக்கினேஸ்வரன், எமது தாயக கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளை கூர்மைப்படுத்தியதுடன், எமது உறவுகளான தமிழகமக்களின் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி இன்னொரு முரணையே உருவாக்கியுள்ளார்.

முடிவாக விழிப்போடு இருந்தாலேயொழிய விக்கினேஸ்வரன் விக்கினங்களை அழிக்கப்போவதில்லை. விக்கினங்களை அளிக்கவே போகின்றார்.

– தமிழ்லீடருக்காக அரிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*