vikneshwaran-2

“சட்டத்தால் சிந்தனைக்கு விலங்கிட்ட கனம், நீதிபதி அவர்களே…!”

“நாம் இப்போது வன்முறை காலத்தைத் தாண்டி வந்துள்ளோம் என்பதை மறக்கக் கூடாது. வன்முறைக் காலத்தில் கையில் ஆயுதங்களை ஏந்தி மக்களை எமது கைப்பொம்மைகளாக கருதி வாழ்ந்தோம். அந்தக் காலம் மலையேறிவிட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்”

“இது வரைகாலமும் நாங்கள் அதிகார அல்லது ஆயுத பலாத்காரத்துக்குப் பழகி வந்துள்ளோம். அதனை இனியாவது தவிர்ப்பது நன்மை பயக்கும் என நினைக்கிறேன். இதுவரை காலமும் எடுப்பார் கைப்பிள்ளையாக இதுவரை காலமும் மக்கள் வாழ்ந்து களைத்துவிட்டார்கள்”

                 – வட மாகாணசபை முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் –

“நாம் ஆயுதங்கள் மீது மோகம் கொண்ட இரத்தவெறி பிடித்த மனநோயாளிகள் அல்ல. எமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்குமெதிராகவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம்”

                                                                   – உலகப் புரட்சித் தலைவர் சே -குவேரா –

“ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உண்மையான ஒரு பௌத்தனாக இருந்தால் நாம் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை எற்பட்டிருக்காது”

                        – தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் –

“எங்கெல்லாம் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறதோ, அங்கெல்லாம் போராட்டங்கள் வெடிப்பது தவிர்க்க முடியாத நியதியாகும்”

                        – மாக்ஸீசத் தந்தை கார்ல் மாக்கஸ் –

ஆயுத வன்முறை பற்றிய பார்வை

உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. போர்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. பல்லாயிரம் உயிர்கள் தினமும் பலி போய்க்கொண்டேயுள்ளன. கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிந்து கொண்டேயிருக்கின்றன. இடம்பெயர்வுகளும் அவற்றின் அவலங்களும் அரங்கேறியே வருகின்றன.

எனினும் போர்கள் போர்களாலேயே முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்றன. நீண்ட போர்களினதும், அழிவுகளினதும் பின்பு மிகச் சில சந்தர்ப்பங்களில் சமாதான முயற்சிகள் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்படுகின்றன.

எப்படியிருப்பினும் போர்கள் போர்களாலேயே அதாவது போரின் ஒரு தரப்பு வெற்றியடையும் போதே போர் முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது. ஒரு நியாயமான போர், ஒரு அநியாயமான போரை இறுதி வெற்றி கொள்ளும் போதே நிரந்தரமான ஒரு சமாதானம் நிலை கொள்கிறது. போர் கருக்கட்ட ஆரம்பிப்பது தவிர்க்க முடியாத நியதியாகும்.

ஆனால் நியாயமான போர் எது அநியாயமான போர் எது என்பது தொடர்பாக எப்போதும் குழப்பமான கருத்துக்களே விதைக்கப்படுகின்றன.

அநியாயமான போரை முன்னெடுக்கும் அதிகார பீடத்தினர் நியாயமான போர்களை பயங்கரவாதமெனவும் சமாதானத்தையும் அமைதியையும் குலைக்கும்  குழப்பங்கள் எனவும் வர்ணிக்கின்றன. அவர்கள் தாமே நியாயமானவர்கள் எனவும் மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் ஆபத்தாந்தவர்களாகவும் காட்டிக்கொள்கின்றனர். அதற்கேற்ற வகையில் சட்டங்கள் கருத்துருவாக்கங்கள் என்பவற்றை உருவாக்கி ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். எனினும் போராட்டங்கள் முன்னேறிச் செல்லும் போது அம் மாயக்குதிரைகள் கிழிக்கப்படுகின்றன. அது நியாயமான போர் மூலமே சாத்தியமாகிறது.

ஆனால் இந்த நியாயமான போரின் வழி முறையான ஆயுத வன்முறை என்பது ஆகாயத்திலிருந்து விழுவதுமில்லை! நிலம் வெடித்து அதற்குள்ளிருந்து சீறி வெளிவருவதுமில்லை. ஒடுக்குமுறைகளுக்கெதிரான நியாயமான போராட்டங்கள் அதிகார வன்முறையால் அடக்கியொடுக்கப்படும் போதே ஒடுக்கப்படுபவர்கள் மத்தியிலிருந்து பதில் ஆயுத வன்முறை உருவாகிறது. எனவே ஆயுத வன்முறையின் தோற்றுவாய் என்பது அதிகார பீடங்களிலேயே கருக்கொள்கிறது. அத்தகைய அதிகார பீடங்களின் வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களின் பரிணாம வளர்ச்சியே ஆயுதப் போராட்டங்களாக வெடிக்கின்றன.

அதாவது ஆயுதம் ஏந்தாவிடில் அடங்கிப் போவது அல்லது அழிந்து போவது என்ற நிலை எழும் போதே ஆயுதப் போராட்டம் வெடிப்பதற்கான உந்துசக்தியாகிறது.

எனவே தான் ஆயுத வன்முறை என்பது ஒடுக்கப்படும் மக்களின் பாதுகாப்புக் கவசம் என்ற நிலையை எட்டுகிறது.

இன வன்முறைகள் பற்றிய பார்வை

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனங்கள் வாழும் நாட்டில் அவர்களின் மொழி, கலாசாரம், பொருளாதாரம், நிலவுரிமை போன்ற தனித்துவ அம்சங்கள் காரணமாக முரண்பாடுகள் நிலவுவது தவிர்க்க முடியாதது. அவை சாதாரண மக்களைப் பொறுத்தவரை நட்பு ரீதியான முரண்பாடுகளாகவே விளங்குகின்றன. அம் முரண்பாடுகள் பரஸ்பர நல்லிணக்கம் மூலமும் புரிந்துணர்வு மூலமும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் சமாந்தரமான பாதையில் பயணிக்கின்றன.

ஆனால் ஒரு இனத்தின் மத்தியிலுள்ள மேலாதிக்க சக்திகள் தமது அரசியல், பொருளாதார நலன்களின் அடிப்படையில் ஏனைய இனங்கள் மேல் இன ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகின்றன.

இனங்களுக்கிடையேயான நட்பு ரீதியான முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக மாற்றி இனங்களுக்கிடையே மோதல்களையும் குரோதங்களையும் ஏற்படுத்தும் வகையில் நகர்வுகளைத் திட்டமிட்டு மேற்கொள்கின்றன.

ஒரு ஜனநாயக நாட்டில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மேலாதிக்க சக்திகளே அதிகாரத்துக்கு வருவது சாத்தியமாகிறது. அவை தமது ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் பின்னால் தமது இனத்தைச் சார்ந்த மக்களை அணிதிரட்டும் வகையில் இன முரண்பாடுகளை ஊக்குவிக்கின்றனர். ஏனைய இன மக்களின் மீதான இன ஒடுக்குமுறையின் பின் தமது இனத்தைச் சார்ந்த மக்களை அணிதிரட்டுகின்றனர்.

எனவே தமது இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டங்களை உருவாக்குகின்றனர்.

அவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் ஆயுதப் படைகள், நீதிமன்றம், சிறைச்சாலை என்பவற்றின் நடைமுறைகள் வடிவமைக்கப்படுகின்றன. அவை தமக்குச் சார்பாகச் செயற்படாத நிலை உருவாகும் போது அவற்றை மாற்றியமைக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்படும்.

அதாவது முழுமையான அதிகாரங்களுக்கு மேலாதிக்க சக்திகளின் கையிலேயே குவிக்கப்படும்.

எனவே இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் பயங்கரவாத வன்முறைகளாகவும் சட்டவிரோதமான பாரதூரமான குற்றங்களாகவும் சித்தரிக்கப்படும். இன ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் தண்டனைக்குரிய குற்றங்களாகப் பார்க்கப்படும். அவற்றுக்கு எதிராக ஆயுதப்படைகள், நீதிமன்றம், சிறைச்சாலை என்பன முழு அளவில் முடுக்கிவிடப்படும்.

ஒரு போர் இடம்பெறும் காலத்தில் ஒடுக்குமுறை இராணுவத்தினர் இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் பொருளாதார மருந்துத்தடை போன்ற மனித குல விரோத நடவடிக்கைகள் காரணமாகவும் மக்கள் உயிரிழப்புக்கள் சொத்திழப்புகள், இடப்பெயர்வுகள் எனப் பலவித இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அப்படியான சந்தர்ப்பங்களில் தாம் மக்களைப் போராளிகளிடமிருந்து காப்பாற்றப் போவதாகக் கூறிக் கொண்டு போரை மேலும் தீவிரப்படுத்தி இன அழிப்பை அதிகரிப்பார்கள்.

சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஒடுக்கப்படும் மக்களின் ஆயுதப் போர் தோற்கடிக்கப்படுவதுமுண்டு. ஆனால் அது போராட்டத்தின் தோல்வியாக அமையாது. அது ஒரு தற்காலிகமான பின்னடைவாகும். ஆனால் போராட்டம் வேறு வடிவத்தில் தொடரும் அல்லது காலப்போக்கில் மீண்டும் ஆயுதப் போராட்டம் கதிர்கட்டும். ஏனெனில் அநியாயமான போர் வெற்றி பெறும் போது என்றுமே நிரந்தர சமாதானம் எட்டப்படுவதில்லை.

போராட்டத்தின் புதிய வடிவம் பற்றிய பார்வை

போராட்டத்தின் புதிய வடிவம், ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட சூழ்நிலையில் ஜனநாயக வடிவத்தையே பெறுகிறது.

எனினும் ஜனநாயக வழியிலான ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள், பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் என்பன ஆயுதப்படைகள், நீதிமன்றங்கள், ஒடுக்குமுறைச் சட்டங்கள் என்பன மூலம் முறியடிக்கப்படும் சாத்தியம் உண்டு. ஆனால் தேர்தல்கள் மூலம் மக்கள் தமது அபிலாசைகளை வெளிப்படுத்துவதை எவரும் தடுத்துவிட முடியாது. எனவே அது தடுக்கமுடியாத சக்தியாக மேலெழுகிறது.

எனவே ஜனநாயகத் தேர்தல் மூலம் மக்கள் தங்கள் அபிலாசைகளைப் பெரும் ஐக்கியத்துடன் வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் அதை ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஏற்றுள்ளனர் என்று தான் அர்த்தம். அதேவேளையில் புலம் பெயர் மக்களின் எழுச்சிகள் கூட வானத்திலிருந்து உருவானவையல்ல!

இன ஒடுக்குமுறையாளர்கள் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஆனால் சர்வதேச அழுத்தங்கள், உலக பொது அமைப்புக்களின் குரல்கள் ஓங்கும் போது ஒடுக்கப்படும் மக்களுக்குச் சாதகமான நிலைமைகளே உருவாகும்.

அந்த சர்வதேச ஆதரவின் உருவாக்கத்திற்கு ஆயுதப் போராட்டமும் அப் போராட்டத்தின் நியாயத்தன்மையும் அதில் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களுமே காரணம் என்பதை எவருமே மறுத்துவிட முடியாது.

போராட்ட வடிவம் மாற்றமடையும் போது அதன் மீது ஆயுதப் போராட்டம் விளைவித்துள்ள சாதகமான அம்சங்களை எவராவது நிராகரித்தாலோ, கொச்சைப்படுத்தினாலோ, அவர்கள் வரலாற்றுக்குருடர்களாகவே இருக்க முடியும். கடந்தகால வரலாறு தொடர்பாகக் குருட்டுப்பார்வை கொண்டவர்கள், எதிர்காலம் பற்றிய தெளிவான பாதையைப் பெற முடியாது.

ஆயுதப் போராட்டம் என்பது ஆயுத ஒடுக்குமுறைக்கு எதிராக எழும் தவிர்க்க முடியாத ஒரு புனிதப்போர்.

ஆயுதப் போராளிகள் ஒடுக்கப்படும் மக்களிடமிருந்து உருவாகிய மக்களில் முன்னேறிய சக்தி. அவர்களை மக்களே உணவுகொடுத்து, மறைவிடம் கொடுத்து வளர்த்தார்கள். ஆயுதங்களை வாங்கவும் அவர்களின் ஏனைய தேவைகளுக்கும் மக்களே பணத்தையும் உழைப்பையும் வழங்கினார்கள். என்றுமே அவர்கள் மக்களை கைப் பொம்மைகளாக நடத்தியதில்லை. அவர்கள் உயிரையும் இரத்தத்தையும் உழைப்பையும் கொடுத்து மக்களின் கவசமாகவே விளங்கினார்கள்.

பொதுவாக அரசியல்வாதிகளும், அதிகார பீடங்களுக்கு ஆசைப்படுபவர்களுமே மற்றவர்களின் குறிப்பாக எதிரிகளின் அல்லது அந்நிய உளவு நிறுவனங்களின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக மாறுவதுண்டு. மக்களுக்கு என்றுமே தமது இலட்சியங்கள் தொடர்பாகவும் வரலாறு தொடர்பாகவும் தமது பிள்ளைகளின் அர்ப்பணிப்பு தொடர்பாகவும் தெளிவான பார்வை உண்டு.

எனவே வீரமும் தியாகமும் சோகமும் நிறைந்த அந்த வரலாற்றை எவராவது கொச்சைப்படுத்த முயன்றால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுப் புறமொதுக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாததாகிவிடும்.

“கனம் நீதிபதி அவர்களே!

எனது நீண்ட உரையிலிருந்து எனது இலட்சியமும், போராட்டமும் எவ்வளவு நியாயமானது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். ஆனாலும் நீங்கள் எனக்கு நீண்டகாலச் சிறையோ அல்லது மரண தண்டனையோ வழங்குவீர்கள் என்பதை நான் அறிவேன். அதற்காக நான் உங்கள் மேல் மனவருத்தப்படவில்லை. மாறாக அனுதாபப்படுகிறேன். ஏனெனில் நீங்கள் சர்வாதிகாரி பட்டிஸ்லாவின் சட்டங்களுக்கு அமைவாகவே தீர்ப்பு வழங்க வேண்டியவர், பார்க்கப்போனால் நீங்களும் ஒரு கைதி தான். உங்கள் சிந்தனைக்கே சட்டங்களால் விலங்கு போட்டவர், நீங்கள் சுயமாக இயங்க முடியாத ஒரு கைதி என்பதை நானறிவேன்”

– கியூபத் தலைவர் பிடல் காஸ்ரோவின் நீதிமன்ற உரையிலிருந்து –

– தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*