tna

மஹிந்தவிடம் பதவி ஏற்கத் துடிக்கும் சம்பந்தன்..!

சாதாரண ஒரு சமாதான நீதவான் முன்நிலையில் செய்யக் கூடிய சத்தியப்பிரமாணத்தை ஜனாதிபதி முன்னிலையில் செய்யவேண்டும் என்று அடம்பிடிப்பதன் மூலம் மக்கள் ஆணையை கொச்சைப் படுத்த முற்படுகிறீர்கள்”இந்த கருத்தினை வெளியிட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வடக்கில் மிகப் பெரிய வரலாற்று வெற்றியினைப் பதிவு செய்திருந்தாலும் கடந்த சில நாட்களாக கூட்டமைப்புக்குள் நிலவும் இழுபறி நாளுக்கு நாள் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியையும் வெறுப்பையும் தோற்றுவித்துவருகின்றது.

ஜனாபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளுதல், கட்சிகளுக்கான அமைச்சுப் பங்கீடு ஆகிய இரண்டு விடயங்களும் கூட்டமைப்புக்குள் இழுபறியினைத் தோற்றுவித்திருக்கின்றன. அமைச்சுப் பங்கீடு என்பதற்கப்பால் பதவிப் பிரமாணத்தினை மஹிந்த முன்னிலையில் மேற்கொள்ள முற்படுவது தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் நடவடிக்கையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைப் பொறுத்தவரையில் அவரது நடவடிக்கைகள் தனிப்பட்ட ‘சம்பந்தன்’ நலன் சார்ந்ததாகவே இருந்துவருகின்றது. ஒரு தலைவன் தனது மக்களைப் பிரதிபலிப்பவனாக அந்த மக்களின் குரலாக, அந்த மக்களின் உணர்வாக இருக்கவேண்டுமே தவிர மக்களை வாக்குப் போடுவதற்கு மட்டுமேயான இயந்திரங்களாகக் கருதிவிடமுடியாது.

வடக்குத் தேர்தல் சர்வதேசத்திற்கு மிக மிக உறுதியான தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கின்றது. தமிழ் மக்கள் வழங்கிய மிகப் பிரமாண்ட வெற்றியின் பின்னரும் மஹிந்தவிடம் கூட்டமைப்பினர் பதவிப் பிரமாணம் மேற்கொள்ள முற்படுவதன் உள்நோக்கம் பலத்த சந்தேகத்தினைத் தோற்றுவித்திருக்கின்றது.

மாகாண சபை உறுப்பினர்களுக்கான பதவிப் பிரமாணம் ஜனாதிபதியிடமோ ஆளுநரிடமோ மட்டும் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சாதாரண சமாதான நீதவான் முன்நிலையில் கூட சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தினைத் தான் இந்தப் பத்தியின் தொடக்கத்தில் மாவை.சேனாதிராஜா குறிப்பிட்ட சில வார்த்தைகள் மூலம் வெளியிட்டிருந்தோம். பதவிப்பிரமாணம் தொடர்பிலான கூட்டம் ஒன்றின் போதே மாவை சேனாதிராஜா அந்த விடயத்தினைக் குறிப்பிட்டிருக்கின்றார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை தொடர்பிலான இறுதித்தீர்மானம் எடுக்கும் முக்கிய இரண்டு கூட்டங்கள் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் நடைபெற்றிருந்த போதிலும் அந்தக் கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்பட்டிருக்கவில்லை. சம்பந்தன், சுமந்திரன் மட்டுமே ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் மேற்கொள்ளவேண்டும் என்பதில் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தமது கருத்துகளுக்கு தலையாட்டும் ஒரு நபராக சி.வி.விக்னேஸ்வரனைக் கையாள முற்படுவதாகவும் தெரியவருகின்றது.

இதற்கு உதாரணமாக ஒரு விடயத்தினைக் குறிப்பிடலாம்,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் ‘உதயன்’ பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது, ஜனாதிபதியிடமோ ஆளுநரிடமோ பதவிப் பிரமாணம் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அது தொடர்பில் முதலமைச்சரால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்ட நிலையில் ஆளுநரும் அதனை ஏற்றுக்கொண்டதாக செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதன் தொடராக ஏனைய இணையத்தளங்களும் தமது பாணியில் அந்தச் செய்தியை கொப்பி செய்து வெளியிட்டிருந்தன. முதலமைச்சர் சார்ந்து வெளியிடப்பட்ட ஒரு கருத்தினை குறித்த பத்திரிகை வலுவான ஆதாரம் இல்லாமல் வெளியிட்டிருக்காது என்பது வெளிப்படையான விடயம். ஆனாலும் அந்தவிடயத்தினை, நேற்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் முற்று முழுதாக பிரட்டியிருக்கின்றார். அவ்வாறான கருத்து எதனையும் தான் வெளியிடவில்லை என்றும் சில ஊடகங்கள் திரிவுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளதாகவும் இனி வரும் காலங்களில் செய்திகள் வெளியிடும் போது கூடுதல் கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தியதாக தெரியவருகிறது. விக்னேஸ்வரன் அந்தச் செய்தி தொடர்பில் கடுந்தொனியில் கதைப்பதற்கு சம்பந்தனும் சுமந்திரனுமே காரணம் என்று கூட்டமைப்பின் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் நெருங்கிவரும் வேளைகளில் மாத்திரம் தமிழீழ தேசியத்தலைவர், மாவீரர்கள், போராளிகள், துயிலும் இல்லங்கள் என வீரவசனங்கள் வானை எட்டித்தொடுவதுண்டு. இந்தத் தேர்தலிலும் அவை தீவிரம் பெற்றிருந்தன. அந்த வீரவசன கர்த்தாக்கள் எவரும் மஹிந்த முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்வது தொடர்பில் வாய் கூடத்திறக்கவில்லை என்றும் தெரியவருகிறது. தேர்தலில் வெல்வதற்கு பயன்படுத்தினோமே என்ற ஒரு சிறு தாழ்வு உணர்வு கூட அவர்களைத் தொடவில்லையா? என்ற ஏக்கம் தலைவிரித்துள்ளது.

மஹிந்த முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தவன் மூலம் சர்வதேசத்தில் இருந்து எமது விடுதலையை தூரக் கொண்டுசெல்வதற்கான அபாயமும் உணரப்பட்டுள்ளது.

மேற்குலகும் ஐ.நாவும் எமது பிரச்சினை தொடர்பில் கொண்டுள்ள கரிசனை தொடர்பிலான தீராத காழ்ப்புணர்வு சிங்களப் பேரினவாதிகளிடம் தீவிரமாகக் காணப்படுகின்றது. சர்வதேசம் மேற்கொள்கின்ற முன்னெடுப்புக்கள் எவற்றினையும் சிங்கள அரசு ஏற்றுக்கொள்ளத்தயாரில்லை. மனித உரிமை ஆணைக்குழு கொண்டுந்த தீர்மானங்கள் அனைத்தையும் உடனடியாகவே சிங்கள அரசு நிராகரித்திருக்கின்றது. இந்த நிலையில் எமது மக்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேசம் மேற்கொள்ளும் முனைப்புக்களை பகிர்ந்து கொள்வதற்கோ அல்லது அது சார்ந்து ஆலோசிப்பதற்கோ தமிழ்ப் பிரதிநிதிகளை சர்வதேசம் நாடுவதற்கான சாத்தியப்பாடுகள் முழுமையாக உள்ளன. இந்த நிலையில் மஹிந்த அரசின் எடுபிடிகளாக கூட்டமைப்பினர் நடந்து கொள்ளத்தலைப்பட்டால் சர்வதேசம் அனைத்து விடயங்களிலும் கூட்டமைப்பினருடன் வெளிப்படையாக நடந்து கொள்ளாமல் விடுவதற்கான அபாய நிலையே உள்ளது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்பாக கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தமை நினைவிருக்கலாம். குறித்த பயணத்தின் போது அமெரிக்கா வெளியிட்ட கருத்துக்களில் பெருமளவானவை சம்பந்தன் தரப்பினர் ஊடாகவே மஹிந்த அரசினைச் சென்று சேர்ந்ததாகவும் அதனை அடுத்தே அந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டியதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர் கட்சியின் ஏனையவர்களின் கருத்துகளைச் செவிமடுக்காமல் ‘நான்’ என்ற எண்ண ஓட்டத்தில் செயற்படுவது தமிழினத்தினைக் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும். குறிப்பாக மஹிந்தவுடன் இடம்பெறும் சந்திப்புக்கள் ஒவ்வொன்றின் போதும் தனித்தனியாகவே சம்பந்தன் செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இது மோசமான விமர்சனங்களையே வெளிப்படுத்தும் என்பது உண்மை.

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு இடம்பெற்றிருந்த வேளை மாவை சேனாதிராஜா – விக்னேஸ்வரன் என கூட்டமைப்புக்குள் பிடுங்குப்பாடு நிலவியது.

அந்தச் சந்தர்ப்பத்திலும் அவசரமாக மஹிந்தவைச் சந்தித்திருந்தார் சம்பந்தன். அதேபோன்று கூட்டமைப்பினரின் அமைச்சரவை பிடுங்குப்பாடு – பதவி ஏற்பு ஆகிய விடயங்கள் தொடர்பிலும் இழுபறி நிலவும் நிலையிலும் சம்பந்தன் அவசரமாக மஹிந்தவைச் சந்திக்கிறார். அதேபோன்று ஜெனீவாவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற சந்தர்ப்பங்களிலும் சம்பந்தன் மஹிந்தவைத் தனியாகச் சந்தித்திருக்கிறார்.

இவ்வாறான தொடரான சந்திப்புக்கள் குறிப்பாக நெருக்கடியான நேரங்களில் மேற்கொள்ளப்படுவதன் அடிப்படையில் பார்க்கின்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைத் தீர்மானிப்பது மஹிந்த ராஜபக்ஷவா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற பெருமளவானோரின் கடும் எதிர்ப்பினையும் மீறி சம்பந்தன் தரப்பு மஹிந்த முன்னிலையில் பதவிப்பிரமாணம் மேற்கொள்ள முற்படுவதன் உள்நோக்கம் என்ன? மாவை சேனாதிராஜா முதல் சித்தார்த்தன் வரையில் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பே வெளியிட்டிருக்கின்றனர்.

நடைபெற்ற தேர்தலில் கூட்டமைப்பினரைத் தோற்கடிப்பதற்கு அரச இயந்திரம் மிகத்தீவிரமாகச் செயற்பட்டிருந்தது, கூட்டமைப்பினர் மீது தொடர் குற்றச்சாட்டுக்கள், கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார், கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது கொலை முயற்சித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அரச ஊடகங்கள் தொடர்ந்து வசைபாடின, கூட்டமைப்பு பிரிவினையைத் தோற்றுவிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. மஹிந்த முதல் மஹிந்த அரச விசுவாசிகள் வரையில் முடியுமானவரையில் கூட்டமைப்பினருக்கு எதிராக செயற்பட்டனர். எந்த இடத்திலும் கூட்டமைப்பு வென்றிடக் கூடாது என்பதில் மஹிந்தவின் அரச தரப்பு தீவிரமாக செயற்பட்டுவந்தமை நடைபெற்று இன்னும் இரு வாரங்கள் கூட ஆகவில்லை. ஆக மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முற்றாக ஒழிக்க மேற்கொண்ட முயற்சியிலிருந்து கூட்டமைப்பினை தூக்கி கைகளில் ஏந்தி தமது ஆதரவை தமிழ் மக்கள் காட்டியிருந்தனர். இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் மஹிந்த முன்நிலையில் சம்பந்தன் வடக்கு முதல்வரையும் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களையும் பதவிப்பிரமாணம் செய்யவைக்க வேண்டும் என்று தீவிரம் காட்டுவது எதற்காக? தமிழினம் சிங்களப் பேரினவாதிகளின் காலடியில் தான் கிடக்கிறது என்று காட்ட முற்படுகின்றாரா?

மஹிந்த முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்வதன் மூலம் அரச தரப்பிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சம்பந்தன் நியாயம் கற்பிப்பதாகவும் தெரியவருகிறது. மிகத் தெளிவான ஒரு கருத்தினை மிக மூத்த ஒரு இராஜதந்திரியாக கூறப்படுகின்ற சம்பந்தனுக்கு சுட்டிக்காட்டலாம். அபிவிருத்திக்காகவோ சலுகைக்காகவோ எமது மக்கள் வாக்களிக்கவில்லை. அவ்வாறு தான் அவற்றைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தால் சுதந்திரக் கட்சிக்கோ ஈபிடிபியினருக்கோ அவர்கள் வாக்களித்திருக்கமுடியும். சிங்களப் பேரினவாத அரசினை நிராகரிக்கிறோம் என்பதையே தமிழ் மக்கள் புலப்படுத்தியிருக்கிறார்கள். சரணாகதி அரசியலை அவர்கள் எந்த வேளையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே முப்பது ஆண்டுகாலமாக அவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். அன்றிருந்த அதே உணர்விலேயே இன்றும் இருக்கிறார்கள். சரணாகதி அரசியல் எமது இனத்தினை படுபாதாளத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை சம்பந்தன் தரப்பு ஏற்றுக்கொள்ளுமா?

வடக்கு மாகாண சபைக்கான ஆணையை மக்கள் வழங்கிவிட்டார்கள். வடக்கில் கிடைக்கும் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டு நான்கு அமைச்சுக்களுக்கு கிடைக்கும் சிறு தொகை பணத்தினை பங்கீடு செய்து குளிரூட்டிய வாகனங்களில் பயணிப்பதுடன் அறுபது ஆண்டுகால இனப்பிரச்சினை முற்றுப்பெற்றுவிடும் என்று கருதிவிடக் கூடாது.

குறிப்பாக இந்தவிடயத்தில் முதல்வரும் அக்கறை செலுத்தவேண்டும். மாகாண சபைக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற ஆணையை வைத்துக்கொண்டு சர்வதேசத்துடன் கை கோர்த்து எமது மக்களுக்கான நிரந்தரத் தீர்வினை நோக்கி அடி எடுத்துவைக்க முற்படவேண்டுமே தவிர, மஹிந்த அரசின் காலடியை இறுகப்பற்றிக்கொண்டு அவர்கள் கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கான பிராயச்சித்தங்களைத் தேடிப் பெற்றுக்கொடுக்கவேண்டாம்.

சர்வதேசத்தில் உள்ள தமிழ் மொழியே புரியாத எத்தனையோ உயிர்கள் எமது இனத்திற்காக நியாயம் கேட்டு குரல் கொடுக்கும் நிலையில், சர்வதேச அரங்கில் நிறுத்தப்பட்டுள்ள எமது இன விடுதலையை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லவேண்டாமா?

– தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*