tna7

முரண்டுபிடிக்கிறது தமிழரசுக்கட்சி; தனி வழி நோக்கி கூட்டுக்கட்சிகள்?!

சர்வதேசம் எதிர்பார்த்திருந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவினை எதிர்பார்ப்பினையும் மீறி தமிழ்மக்கள் வழங்கிவிட்டார்கள். தொடருந்து, வீதி, மின்சாரம், வேலை வாய்ப்புக்கள், வீட்டுத்திட்டம், வாக்குறுதிகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து வாக்களிப்பு மூலம் கூட்டமைப்பை வெல்ல வைத்ததன் மூலம் மிகத் தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள்.

நாங்கள் தனியான இனம், எமக்கு தனியான நிர்வாகம் வேண்டும், எம்மை நாங்களே ஆட்சி செய்யவேண்டும் என்பதே  அந்தச் செய்தி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டுக்கட்சிக்கு வாக்களித்தார்கள், கூட்டமைப்பின் கொள்கைக்காக வாக்களித்தார்கள், கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்காக வாக்களித்தார்கள் என்றெல்லாம் யாராவது கருத்துச் சொல்ல முற்பட்டால் அது முட்டாள் தனமான விவாதமாகும்.

உதாரணமாக கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாகாண சபை உறுப்பினர்களில் எத்தனை பேருக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பிலான முழுமையான தெளிவு இருக்கும் என்று கேட்டால் அதற்கான பதில் மிக மோசமாகவே இருக்கும் என்பதே வெளிப்படை. இந்த நிலையில் எமது மக்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தினையோ கூட்டமைப்பின் கொள்கையினையோ ஏற்றுக்கொண்டு தான் வாக்களித்தார்கள் என்ற வாதத்தினை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?

ஆக, இந்தத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் அளித்த வாக்கு மழையின் ஊடான செய்தியை இலங்கை அரசாங்கம் அல்லது சர்வதேசம் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்கு அப்பால் அந்த வெற்றியின் தார்ப்பரியத்தை தமிழரசுக்கட்சி புரிந்துகொள்ளவேண்டும் என்று எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையையிட்டு மனம் வருந்தத்தான் முடிகிறது.

வடக்கு மாகாண சபையின் பிரமாண்ட வெற்றி மூலம் எதிர்காலத்தில் தாயக மக்கள் பலத்த நெருக்கடியினை சந்திக்கக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குள் தோண்டிக்கொண்டிருக்கும் படுகுழி தமிழ் மக்களின் உணர்வுகளை மிக மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்ற நிலை தொடர்பிலான கவலை தரும் விடயங்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டுக்கட்சிகளைக் கொண்டு செயற்பட்டுவந்தாலும் ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியான நிலைப்பாட்டினைக் கொண்டே பயணிக்கின்றன. ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக எதிர்க்கட்சிகள் போன்று செயற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே கூட்டமைப்பினை தனிக்கட்சியாக பதிவு செய்யவேண்டும் என தேசிய நலன் விரும்பிகளால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுவந்திருந்தது.

இந்த நிலையில் தேர்தலின் பின்னர் மீண்டும் கட்சி  அரசியல் கூட்டமைப்புக்குள் தலை தூக்கியுள்ளது. தமிழரசுக்கட்சி மீண்டும் தனது தனித்துவமான கடும்பிடி அரசியல் தனத்தினை கையிலெடுத்திருக்கிறது.

கூட்டமைப்பில் அங்கம்பெறுகின்ற ஏனைய கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்களில் பெருமளவானவர்கள் குறித்த கட்சிகளில் ஏலவே அங்கத்துவம் பெற்றிருந்தவர்கள் அல்ல என்பது முக்கியமான விடயம். ஏதாவது ஒரு கட்சியின் ஊடாகவே தேர்தலில் நிற்க முடியும் என்பதால் அவர்கள் கட்சிகளின் தயவினில் தேர்தலை எதிர்கொண்டார்கள். இறுதியில் அவர்களையும் அந்த அந்தக் கட்சிகளின் பெயர்களின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்டு தேர்தல் வேளைகளில் ஓரங்கட்டப்பட முயற்சிக்கப்பட்டது. மீண்டும் தமிழரசுக்கட்சி தனது கட்சியை ஆதிக்க சக்தியாக காட்டுவதற்கு முற்பட்டதன் தொடராக தற்போது ‘அமைச்சு’ என்ற விடயம் கூட்டமைப்பு கட்சிகளிடையே பிணக்கினைத் தோற்றுவித்துள்ளது.

மாகாண சபையில் முதலமைச்சர் தவிர்ந்த நான்கு அமைச்சுக்களை நியமிக்க முடியும் என்ற நிலையில் வடக்கு மாகாண சபைக்கான நான்கு அமைச்சுக்களுக்கான பங்கீடுகள் தொடர்பில் பிடுங்குப்பாடுகள் தலை தூக்கியுள்ளன.

சுகாதாரம், கல்வி ஆகிய இரண்டு அமைச்சுக்களையும் தாமே பெற்றுக்கொள்வோம் என்றும் ஏனைய இரண்டு அமைச்சுக்களையும் விரும்பும் கட்சிகளுக்கு பங்கிட முடியும் என்று தமிழரசுக்கட்சி முடிவெடுத்திருப்பதாக தெரியவருகின்றது. இந்த விடயத்தின் அடிப்படையிலேயே கட்சிகளுக்கு இடையில் பிணக்கு வலுப்பெற ஆரம்பித்திருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடிப்படையில் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சுக்களுக்கு மாத்திரமே வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஏனைய அமைச்சுக்கள் இரண்டும் பெயரளவிலேயே அமைச்சுக்களாக விளங்கும் என்றாலும் அவற்றின் ஊடாக எந்தவித ஆரோக்கியமான அபிவிருத்தித் திட்டங்களையும் மக்களுக்காக வழங்க முடியாது என்பது ஏனைய கட்சிகளின் வாதம்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் அமைச்சுத் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. புளொட்டுக்கு சபைத் தலைவர் என்ற பதவியினை வழங்கிவிட்டு ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகளுக்கு அமைச்சுக்களை வழங்கத் தயார் என்று சம்பந்தன் தரப்பு தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதனை அடுத்து தமக்கும் ஒரு அமைச்சு வேண்டும் என்றும், நான்கு கட்சிகளுக்கும் ஒவ்வொரு அமைச்சினை பங்கீடு செய்வதன் அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் புளொட் போர்க்கொடி தூக்கியிருப்பதாக தெரியவருகின்றது.

துறை சார் அனுபவம் உள்ளவர்களே அமைச்சுக்களுக்கு தம்மால் நியமிக்கப்படுவதாக தமிழரசுக்கட்சி கூறிவருகின்ற போதிலும் வவுனியாவில் தமிழரசுக்கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளவரை விடவும் மருத்துவத் துறையில் உயர் நிலையில் உள்ள ஒருவர் ஈபிஆர்எல்எப் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்களும் உள்ளன. எனவே இந்த இடத்தில் தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக அல்லது தான்தோன்றித்தனமாக செயற்படுவது தெளிவாகியிருக்கின்றது.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு அமைச்சினை பகிர்ந்தளிப்பதன் ஊடாக பிரச்சினைகளுக்கு இலகுவான தீர்வினை எட்டிவிடுவதற்கான சாத்தியம் உள்ளது என்பதை கூட்டமைப்பின் தலைமை ஏன் புரிந்து கொண்டு நடக்கவில்லை?. இலங்கையில் ஒரு பிரச்சினை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு ஆதிக்க சக்திகளிடம் உள்ளமை போன்று கூட்டுக்கட்சிகளிடம் பிணக்குகள் தொடரவேண்டும் என்ற நிலைப்பாடு கூட்டமைப்பின் தலைமையிடமும் இருக்கின்றதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

மிகப் பெரிய பெறுமதியான மக்கள் ஆணையை மிகச் சாதாரணமாக சிதைக்கும் நடவடிக்கையை சம்பந்தன் முன்னெடுப்பாரா? மிகச் சிறந்த இராஜதந்திரியாக சொல்லப்படுகின்ற சம்பந்தன், இந்த விடயத்தில் இவ்வாறு நடந்து கொள்வது ஏன்? என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்பட்டுவருகிறது.

அதேவேளை ஈபிஆர்எல்எப் கட்சிக்கு வழங்கப்படும் எனச் சொல்லப்படுகின்ற அமைச்சுப் பதவியினை சுரேஷ் பிறேமச்சந்திரன் தனது சகோதரனான சர்வேஸ்வரனுக்கு வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் ரெலோவின் ஊடாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திய கலாநிதி குணசீலன், கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு உறவினர் என்பதால் அவருக்கும் ரெலோவுக்கு ஒதுக்கப்படும் அமைச்சு வழங்கப்படும் என்றும் கருத்துக்கள் உலாவ விடப்பட்டுள்ளன.

மிக நீண்ட விடுதலைப்போராட்டத்துடன் பயணித்த குறித்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் மக்கள் போராட்டத்தின் கனதியையும் போராட்டத்தின் வீரியத்தினையும் நன்குணர்ந்தவர்கள் என்பதுடன் அது தொடர்பிலான மிகத் தெளிவான பார்வை உள்ளவர்கள் என்பதாலும் இவ்வாறான குடும்ப அரசியல் சுழிகளுக்குள் அவர்கள் அமிழ்ந்துவிடமாட்டார்கள் என்பதை தமிழ் உணர்வாளர்கள் நன்குணர்வர். இவ்வாறான பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் நோக்கம், தாம் முன்னெடுக்கும் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கானதாகவே கருத முடிகிறது.

இந்த நிலையில் இறுதியாக வெளியாகியுள்ள தகவல் ஒன்றின் அடிப்படையில் தமிழரசுக்கட்சி அமைச்சுப் பங்கீடு தொடர்பில் கொண்டிருக்கின்ற பார பட்சம் காரணமாக தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அமைச்சுக்களை பொறுப்பேற்பதைக் கைவிட்டு தனியான நிலைப்பாடு எடுத்து கூட்டமைப்புக்குள் ஒரு எதிர்க்கட்சியாகப் பயணிக்கும் அபாய நிலையினை நோக்கி சிந்தித்துவருவதாக அறிய முடிகிறது. மிக மோசனமான பதவி மோகம் சர்வதேசம் தமிழ் மக்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையினை ஒருவாரத்திலேயே போட்டுடைக்கும் நிலையினை இட்டுச் செல்வதாகவே கருத முடிகிறது.

எமக்கான விடுதலைப் பயணம் மிக நீண்டது, அளவு கடந்த தியாகங்களால் கட்டி வளர்க்கப்பட்டது. எமது போராட்டம் சர்வதேச அரங்கில் முதன் நிலையினை எட்டியிருக்கின்றது. விரைவில் ஒரு அரிய பதிலை சர்வதேசம் வழங்கும் சூழல் தென்படுகிறது. இந்த நிலையில் இவ்வாறான அற்ப சொற்ப சலுகைகளை கட்டிப்பிடித்துக்கொண்டு தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக செயற்படுவதை விடுத்து அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து பங்கீடு செய்து அரவணைத்துச் செல்வதன் மூலம் தாய்கட்சி என்று சொல்வதற்கான தகுதியையும் தமிழ் மக்களின் தலைமைக் கட்சி என்ற பதத்தினையும் பெருமையுடன் தனதாக்கிக் கொள்ளலாம். அதுவே வலுவான சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிபலிக்கும் என்பதே உண்மை.

 தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*