new

கூட்டமைப்பின் முன்னால் விரிந்து கிடக்கும் கடமைகள்!

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு இலட்சத்து பதின் மூவாயிரத்து தொளாயிரத்து ஏழு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது.  இது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளை விட ஆறு மடங்கு அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.இது ஒரு சாதாரண வெற்றியல்ல!

வட மாகாண சபையின் 38 ஆசனங்களில் முப்பதைக் கைப்பற்றி ஒரு உறுதியான மாகாணசபையை உருவாக்கிக் கொண்ட வெற்றி!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் பதவிகள், அதிகாரங்கள், மிரட்டல்கள் எனப் பல்வேறு திருகுதாளங்களைப் பிரயோகித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்க்கட்சிகளை உடைத்து உருவாக்கிக்கொண்டது. வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்றில் இரண்டுக்கு அதிகமான பலத்தை மக்கள் தங்கள் வாக்களிப்பு மூலமே வழங்கியுள்ளனர்.

பிரமாண்டமான பேரணிகள், அபிவிருத்தி நாடகங்கள், தாக்குதல்கள் உட்பட்ட வன்முறைகள், ஆயுதப் படையினரின் தலையீடுகள், வாக்குறுதிகள் எனப்பலவிதமான அட்டகாசங்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வடக்கின் தேர்தல் களத்தில் இறங்கியது.

ஆனால் தமிழ் மக்கள் அத்தனை மாயாயாலங்களையும் நிராகரித்து இன ஒடுக்குமுறைக்கான தமது ஆவேசத்தை உரிமைப் போராட்டத்தின் மீதான உறுதியை மீண்டும் ஒரு முறை திட்டவட்டமாக வெளிப்படுதியுள்ளனர்.

இந்த வெற்றியானது மகாணசபை அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற எல்லைக்கப்பால் களம் பரந்து விரிந்து கிடக்கிறது என்ற ஆணையைத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளது.

எமது மக்கள் உரிமைப்போரின் மேலான சளையாத வீச்சையும் என்றும் சிதறவிடாத ஐக்கியத்தையும் ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ளனர். அந்த ஆணையைத் தோள் சுமந்து தலைமையேற்று முன் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு போராட்டத்திலும் கொள்கைகளும் தந்திரோபாயங்களும் மிகவும் முக்கியமானவை. சரியான கொள்கைகளுக்குப் பொருத்தமான தந்திரோபாயம் வகுக்கப்படாவிட்டால் பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடலாம்! அதேவேளை தந்திரோபாயங்களுக்காகக் கொள்கைகளை விட்டுக்கொடுத்தால் எமது இலட்சியப்பயணமே திசைமாறிவிடும்.

நாம் ஒரு சிறு உரிமையைக் கூட வழங்கத்தயாரற்ற ஒரு கொடிய ஒடுக்குமுறையாளர்களுடன் எங்கள் ஜனநாயகப் போரைத் தொடர்கிறோம். இது ஒரு தர்மயுத்தம். இங்கு தடுமாற்றத்துக்கோ, தடம்புரளலுக்கோ இடமில்லை! நெருக்கடிகளுடாகவே தொடரப்பட வேண்டியது எமது நெடும்பயணம்.

எமது இலட்சியப் பற்றுறுதி, ஐக்கியம் என்ற மையத்தைச் சுற்றி தேசிய, சர்வதேச ஆதரவைத் திரட்டி முன் செல்லும் வகையில் எமது தந்திரோபாயம் வகுக்கப்படவேண்டும். இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு நாம் பல முனைகளிலும் கொடுக்கும் அழுத்தங்களே எமக்குச் சாதகமான வாய்ப்புக்களை உருவாக்கும்.

நாம் மாகாண சபையின் அதிகாரங்களைப் பிரயோகிக்க முனையும் போது நிச்சயமாக அரசு அதை அனுமிக்கப்போவதில்லை. எனவே கிழக்கு மாகாணசபை உட்பட ஏனைய மாகாண சபைகளின் ஆதரவைத் திரட்டும் வகையிலான தந்திரோபாயங்கள் வகுக்கப்படவேண்டும். அதாவது ராஜபக்க்ஷ குடும்பத்தின் மைய அதிகாரத்துக்கு எதிரான ஒரு பரந்த போராக அது வெடிக்க வேண்டும்.

எம்மை ஏனைய சக்திகளிடமிருந்து தனிமைப்படுத்தும் தந்திரோபாயத்தை உடைத்து எதிரியைத் தனிமைப்படுத்தும் பாதையில் நாம் பயணிக்கவேண்டும்.

இது மூன்றாம்கட்டப் போர் என்பது வெறும் வீர வசனமாக மாறிவிடக்கூடாது. இந்த ராஜதந்திரப் போரில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தீவிரமாக இறங்கவேண்டும்.

எமது போராட்டத்துக்கு இந்தியா உட்பட சர்வதேச சக்திகளின் ஆதரவு தேவை. ஆனால் ஆதரவு தேடல் என்ற போர்வையில் அவர்களால் வழிநடத்தப்படும் அபாயத்துக்குள் விழுந்துவிடக்கூடாது.

ஜனநாயகப் பாதையில் மக்களின் ஆணையென்பது மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதம். அந்த ஆயுதத்தை எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையில் வழங்கியுள்ளனர். எவராவது அந்த ஆயுதத்தை தவறாகப் பிரயோகிக்க முனைந்தால் அது அவர்களையே அழித்துவிடும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதிகாரம், பதவிகள் என்பன எவ்வளவு ஆபத்தானவை என்பதை நாமறிவோம்! எனவே மாகாண சபையின் அதிகாரங்கள் எமது உரிமைப் போராட்டத்தின் ஒரு ஆயுதம் மட்டுமே என்ற தெளிவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புடன் தலைமையேற்று முன் செல்லவேண்டும்.

இது தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய திட்டவட்டமான ஆணையாகும்.

 – தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*