norther province council election

வடக்குத் தேர்தல்:தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்!?

“எதிரிகளுக்கும் எமது தரப்புக்குமிடையே ஒரு போர் நடக்கும் போது நாம் எமது தரப்புக்குமிடையே ஒரு போர் நடக்கும் போது நாம் எமது தரப்புக்கு ஆதரவு வழங்கினால் எம்மை நாம் பலப்படுத்துகிறோம் என்று அர்த்தம்! இப்போரில் நாம் பங்கு கொள்ளாது ஒருங்கி நின்றால் எம்மை நாமே பலவீனப்படுத்தி எதிரிக்கான வாய்ப்பை வழங்குகிறோம் என்று அர்த்தம்!

அன்புக்குரிய தமிழ் மக்களே!

வடமாகாண சபைத் தேர்தல் என்பது அச் சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுடன் மட்டுப்படுத்தப்படும் ஒரு விஷயமல்ல! இது பலமுனைகளிலும் எம் மீது ஒரு கொடிய இன அழிப்பை ஏவி விட்டிருக்கும் பலம் வாய்ந்த எமது எதிரிக்கும் எமது மண்ணில் எமது நியாயமான உரிமைகளை நிலைநாட்ட எல்லாவித இழப்புக்கள் மத்தியிலும் போராடிக்கொண்டிருக்கும் எமக்கும் இடையேயான தர்மயுத்தம்!

இந்த ஜீவமரணப்  போராட்டத்தில் நாம் ஒரு கணம் ஓய்ந்தாலும் எதிரி பலகாதம்  முன்னேறி விடுவான். எமக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடுவான். இன்ற எமது போர்க்களம் மாகாண சபைத் தேர்தலில் மையங்கொண்டுவிட்டது! எதிரி நால்வகைப் படைகளையும் ஏவி விட்டு வெறியாட்டம் போடுகிறான்! எம்மிடம் இருப்பது இலட்சிய உறுதி என்ற பிரமாஸ்திரமும் ஐக்கியம் என்ற காண்டீபமும் மட்டுமே! காண்டீபம், பிரமாஸ்திரம் இதில் எது பலவீனமடைந்தாலும் நாம் பெரும் பின்னடைவுக்குள் தள்ளப்பட்டுவிடுவோம்!

எமது உரிமை வேட்கை என்ற கீதாபதேசம் எமது சகல சலனங்களையும் களைந்து எம்மை நிமிர்ந்து நிற்க வைக்கும். காண்டீபமும் அஸ்திரமும் கைகளில் ஏறும்!
எமது தர்ம யுத்தம் வெற்றியை நோக்கி வீறு நடைபோடும்.

இன்று, அரச தரப்பினர் காப்பெற் வீதி போட்டோம், மின்சாரம் வழங்கினோம், வேலை வாய்ப்புக்களை வழங்கினோம் எனத் தம்பட்டம் அடிக்கின்றனர். வெள்ளையர்களும் வீதிகளை அமைத்தார்கள். மின்சாரத்தை அறிமுகப்படுத்தினர். புகைவண்டிப் பாதை போட்டனர், வேலை வாய்ப்புக்களை வழங்கினர். அதனால் எமக்கு சுதந்திரம் வேண்டாம், வெள்ளையனே வெளியேறாதே என்று கேட்டோமா?

போடப்படும் வீதிகளின் பின்னால் எமது பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுவதை நாமறிவோம்! கட்டப்படும் துறைமுகம், தொழிற்சாலை என்பவற்றின் பின்னால் அவற்றில் பணியாற்றவென சிங்களவர்கள் கொண்டுவரப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்படும் என்பதை நாமறிவோம். படையினரின் குடும்பங்களுக்கு வீடுகள் என்ற பேபரில் எங்கள் மண் சிங்கள் குடியேற்றங்களால் விழுங்கப்படுவதை நாம் அறிவோம்! மின்சாரம், நீர் வழங்கல் என்ற பேரில் எமது நாளாந்த தேவைகளைக் கூட கொழும்பு தீர்மானிக்கும் நிலை உருவாக்கப்படுவதை நாமறிவோம்! இனி மத சமத்துவம் என்ற பேரில் வடக்கு எங்கும் புத்தர் சிலைகளும் விகாரைகளும் அமைக்கப்படுவதை நாமறிவோம்.

அபிவிருத்தி, பாதுகாப்பு என்ற பேரில் எங்கள் இனத்தின் தனித்துவம் அழிக்கப்படுகிறது! எங்கள் சொந்த நிலம் பறிக்கப்படுகிறது! எங்கள் மூல வளங்கள் அழிக்கப்படுகின்றன. இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என சர்வதேசத்தை நம்ப வைக்க இத் தேர்தலை அரச தரப்பினர் பயன்படுத்தமுனைகின்றனர். அதற்கென வன்முறைகள் உட்பட சகல தந்திரங்களையும் பாவிக்கின்றனர்; சில அடிவருடிகளும் அவர்களுக்குத் துணைபோகின்றனர்;

எனவே அரச தரப்பில் அதாவது வெற்றிலைச் சின்னத்தில் ஒருவர், இருவர் வெற்றி பெற்றால் கூட அரசின் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் இன அழிப்புக் கொடுமைகளையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர் என்ற பிரசாரத்தை அரசு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கிய தவறைச் செய்தவர்களாகிவிடுவோம்!

நாம் ஒரு சுயநிர்ணய உரிமை உள்ள ஒரு இனம். நாம்  எமக்கென ஒரு மொழி, கலாசாரம், தாயகம், நிலம், பொதுப் பொருளாதாரம் என்பவற்றைக் கொண்டவர்கள் – எமது பிரச்சினைகள் தொடர்பான தீர்மானங்களை நாமே மேற்கொள்ளவேண்டும்.

நாம் ஐக்கியம் என்ற காண்டீபத்தில் இலட்சியம் என்ற அம்பை ஏற்றவேண்டும். மாகாணசபைத் தேர்தலில் நாம் ஒவ்வொருவரும் வாக்களிக்கவேண்டும். ஒருவர் கூட ஒதுங்கி நிற்கக் கூடாது. நாம் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும். அரச தரப்பில் ஒருவர் கூட வெற்றிபெறக்கூடாது!

“நாம் அனைவரும் எமது உரிமைக் குரலை
ஒரே தளத்தில் நின்று ஓங்கி ஒலிக்கவேண்டும்”

இது எங்கள் இனத்துக்கான கடமை! இது எமது தேசியத்துக்கான கடமை! எமது விடிவுக்கான கடமை!

புலம் பெயர் உறவுகளே!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை உங்கள் தாயக உறவுகளுக்கு தெளிவுபடுத்துங்கள். ஒதுங்கி நிற்பதன் ஆபத்தை புரியவையுங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே!

இம்முறை வடமாகாண சபைத் தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறுவது உறுதி. உங்கள் தோள்களில் பாரிய கடமை சுமத்தப்பட்டுள்ளது. எமது உரிமைப் போராட்டத்தை துணிச்சலுடனும் நேர்மையுடனும் இலட்சிய உறுதியுடனும் அர்ப்பண உணர்வுடனும் முன்னெடுக்கும்படி எமது மக்கள் உங்களுக்கு ஆணையிட்டுள்ளனர். சகல குழப்பங்களையும் தூக்கி தூர வீசி விட்டு முன் செல்லுங்கள், எங்கள் மக்கள் தங்கள்  ஆதரவினை உங்களுக்கு மீண்டுமொரு முறை பறைசாற்றுகிறார்கள்.

உங்களில் எவராவது தடம் மாறிப் பயணிக்க முற்பட்டால் அவர்களைத் தமிழ் மக்கள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியத் தயங்கமாட்டார்கள்.
மிக நீண்ட இலட்சியப் பயணத்தின் இலக்கு மாகாண சபை என்பதல்ல என்பது உலகறிந்த உண்மை. மாகாண சபை வெற்றியை ஒரு படிக்கல்லாக் கொண்டு எமது இறுதி இலட்சியம் நோக்கிய பயணத்தை முன்னெடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு உங்களைச் சேர்ந்திருக்கிறது.

மாகாண சபை வெற்றியில் காலூன்றி எமது உரிமைப் போரின் வெற்றியை நோக்கி முன் செல்வோம்.

-தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*