viki-tamilnadustudents

விக்னேஸ்வரனை நோக்கி; தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு மடல்!

மதிப்புக்குரிய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும், விக்கினேஸ்வரன் ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வணக்கம்!

இக்கரையிலிருந்து எழுதப்படும் முதல் மடல். தமிழக மாணவர்களின் மொத்தக் குரலாகவும் ஈழ விடுதலை மாறியிருக்கின்ற நிலையில், அந்த வேட்கை மீது வீசப்பட்ட கல்லெறிக்கு காரணம் கேட்கும் உரிமை மடல்.2009 ஆம் ஆண்டில் ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான படுகொலை இந்த நூற்றாண்டின் மீதே கறை வீசி போயிருக்கிறது. ஜனநாயகம், மனித உரிமை, மனித நேயம் பேசும் ஒவ்வொருவரினது எலும்புக் கூட்டையும் இயலாமை என்ற பலயீனம் மோசமாய் தாக்கியிருக்கிறது. அந்த அவமானத்திலிருந்து மீண்டுவர அல்லது குற்றவுணர்விலிருந்து தப்பித்துக் கொள்ள உலகத்தவர் பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவும், ஐ.நாவும், நவநீதம்பிள்ளையும் இந்தப் படுகொலைக்காக எதோ ஒரு பிரதிபலனைத் தேடிக்கொள்ள அலைகின்றனர்.

இந்த அவமானத் தலைகுனிவை அவர்களை விட அதிகம் அதிகமாய் நாம் உணர்கிறோம். வலி தாங்காமலும், மௌனித்துக் கிடந்த உலகச் செவிப்பறையை கிழிக்கவுமே எங்கள் அண்ணன்களும், அக்காள்களும் தீயில் கருகினர். அதனை வெற்றுணர்ச்சி என்று கொச்சைப்படுத்தவியலாது. ராஜபக்ஷேக்களின் கொலைவெறியில் செத்து விழுந்தவர்கள் எம் உறவுகள். இரத்தத்தாலும், உணர்வாலும், சிந்திப்பாலும் இரண்டறமானவர்களாக நாங்களும், நீங்களும் இருந்திருக்கின்றோம். இடையில் குறுக்கிட்ட கடல் மட்டுமே நம்மை பிரித்திருக்கின்றது. அது உடைத்தெறிந்துவிட முடியாத பிரிப்பல்ல. இந்த நம்பிக்கையின் வெளிச்சத்தில்தான் நாம் உங்களை அடைகின்றோம். நீங்கள் எங்களை தழுவிக் கொள்வதாக நம்புகின்றோம்.அந்த ஆத்ம உறவு இன்னும் பலகோடி ஆண்டுகள் நிலைக்க புதிய வழித்தடங்களை கீறிக் கொண்டிருக்கிறோம். அதில் எந்த வல்லுறுகளும் கழிவைக் கொட்டிவிட இயலாது. அப்படியானதொரு கழிவு கொட்டலுக்கும், நம் உறவுச் சிதைவிற்கும் நீங்களோ, நாமோ இடமளிக்கவும் கூடாது. ஏனெனில் நாம் நூற்றாண்டுத் தொன்மைகொண்ட பேரினம்.

ஆனால் ஈழத்தில் தற்போது அடிக்கும் அரசியல் சூறையில் நாம் அடியுண்டு திசைமாறிப் போய்விடுவோமோ என்ற பயம் எம் மத்தியில் எழுந்திருக்கின்றது. சர்வதேசத்துக்கும், உப்புச் சப்பற்ற அரசியல் ஆய்வுகளுக்கும், அதன் வழிநடத்துநர்களுக்கும் உதாரணப்படுத்துவதற்காக ராஜபக்ஷேக்கள் வைத்திருக்கும் “மாகாண சபை தேர்தல்” என்ற பொறி அபாயரகமானதாக மாறியிருக்கின்றது.

அதில் வெல்லப்போவது நீங்களேயாயினும் அதில் ஈழத்தமிழர்களுக்கும், அதில் அரசியல் நடத்தப்போகும் தங்களுக்கும் கிடைக்கப்போகும் இலாபத்தைவிட படுகொலையாளர்களும், போர்க்குற்றவாளிகளுமே மேலும் கொழுக்கப்போகின்றனர். அதிகார நீக்கம்செய்யப்பட்ட வெற்றுக் கதிரைகளுக்கான அற்பப் போட்டியில் நீண்டகால கனவுகளை கபளீகரப்படுத்திவிட முடியாது.

எங்கள் தலைமுறையினரிடமும், உங்களிடமும் பெருங்கனவொன்றிருந்தது. தமிழீழம். நாமும், நீங்களும் உரிமைகொள்வதற்கான ஒரு நாடாக அதைப் பார்த்தோம். அதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழுயிர்களை தியாகித்தோம். வாழவேண்டிய இளைஞர்களும், யுவதிகளும் நீங்கள் பேசுகின்ற சத்தியாக்கிரக யுகமொன்றின் முடிவில்தான் ஆயுதம் எடுத்தார்கள். உலக வல்லாதிக்கத்தையே எதிர்த்துக் களமாடினார்கள்.

அவர்களின் மௌனிப்பு தோல்வியல்ல. பிந்திய உலகமய சூழலில் போராடும் இனங்கள் கற்றுக்கொள்ள கொடுக்கப்பட்ட மிகப்பெரும் வரலாற்றுப் பாடமே விடுதலைப்புலிகளின் மௌனிப்பும், மறைவும். அதனை தோல்வி என்ற முயற்சியற்ற சொல்லினுள் அடக்கிவிடமுடியாது. அதுபோலவே தமிழீழம் என்ற பெருங்கனவும் சிதைக்க முடியாதது. ஏழுகோடி தமிழர்களின் மனதிலும் பதிந்துவிட்ட நிரந்தர வரைபடமாக அந்தக் கனவு தேசம் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் இன்னும் பிரகாசமாக அது ஒளிரும். காரணம், அதற்க்குக் கொடுத்த விலை மிக மிக அதிகம்.

ஆனால் அற்ப கதிரைகளுக்காகவும், சில வருடங்களில் முடியக்கூடிய அதிகார இலக்கிற்காகவும் தமிழீழம், தனியாட்சி கோரவேயில்லை என மேடைக்கு மேடை முழங்குகின்றீர்கள். நீங்கள் இன்னும் தலையில் அடித்து சத்தியமும், கையெழுத்திட்ட ஒப்பந்தமும் மட்டுமே அது குறித்து ராஜபக்ஷேக்களுடன் செய்யவில்லை. தமிழ் ஈழம் என்ற பெருங்கனவை தலைமுழுக்குப் போட நீங்கள் யார்? ஐந்து வருடத்துக்கு ஒரு முறை சிங்களப் பாராளுமன்றத்துக்குப் போவதற்காக ஈழ மக்களிடம் வரும் உங்களுக்கு மாவீரத்தியாகங்களும், போராளிகளின் ஈகங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். உங்கள்  பட்டுவேட்டி கனவுகளுக்காக தமிழீழத்தை தலைமுழுகாதீர்கள். யாருக்கும் தாரைவார்க்காதீர்கள். சாத்தியத்துக்கு அருகில் எங்கள்  தலைவன் அண்ணன் பிரபாகரன் சுமந்துபோன தமிழீழம் இன்னமும் அப்படியேதான் நிற்கிறது. அதற்கான உலக சாத்தியங்களும், ஆதரவாக நாமும் மௌனித்து நிற்கிறோமே தவிர, கொள்கை மாற்றவும், விட்டு ஓடவுமில்ல. வெறும் அரசியல்வாதிகளிடம் மட்டுமே கொள்கையிலிருந்து விலகியோடலும், திசைமாற்றிக் கொள்ளளும் சாத்தியமாகும். நாங்கள் 2009க்குப் பின்னர் சாதாரண அரசியல்வாதிகளாக உங்களை பார்க்கவில்லை. உங்கள் ஒவ்வொரு உறுப்பினர் மீதும் விழுந்த ஆதாரபூர்வமான விமர்சனங்களையும் அறிந்திருந்தும், நேர்கொண்ட அரசியல் நகர்த்தலுக்கான தூண்களாக பார்த்தோம்.

ஆனால் இப்போது அந்த நம்பிக்கை கொஞ்சம் சிதையத் தொடங்கியிருக்கிறது. ராஜபக்ஷேக்களின் நிரலில் பிந்திவருபவர்கள்தான் நீங்களோ என சிந்திக்க வைத்துள்ளது.

அண்மையில் மாகாண சபை முதலமைச்சர், உங்களுக்காக நாம் கொடுக்கும் ஆதரவை இந்து பத்திரிகைகையின் ஊடாக விக்னேஸ்வரன் ஐயா கொச்சைப்படுத்தியிருந்தார்.. எம் ஒவ்வொருவர் மனதையும் மோசமாக பாதித்தது உங்களின் வார்த்தைகள். மனவேதனையும், அவமானமும் அடைந்தோம்.

கணவன் – மனைவிக்கிடையிலான போரிலா பாலச்சந்திரன்கள் கொலையானார்கள்?

கணவன் – மனைவிக்கிடையிலான போரிலா இசைப்பிரியாக்கள் கிழித்தெறியப்பட்டார்கள்?

கேள்விகளும், அதற்கான விடைகளும் உங்கள் ஒவ்வொருவரின் பின்னணியும் பற்றிய கற்றலை ஆழப்படுத்தியது. உங்கள் முகத்திரைகள் கிழியத் தொடங்குகையில் திரு. விக்கினேஸ்வரன், ஐயா இந்து பத்திரிகைக்கு அப்படி சொல்லவேயில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றீர்கள். அது வரவேற்கத்தக்கதாயினும், உங்களின் குழப்பமான, மழுப்பலான, சொதப்பலான ஊடகப் பதிலை ஆழமாக கேட்டபோது அதிலும் உட்குத்தல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

ஊடக விழுமியம் சார்ந்த கேள்வியை இந்துவிடம் கோரியிருக்கவேண்டியதே உங்களின் முதலாவது பணியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியான எந்த முனைப்புக்களிலும் நீங்கள் கரிசனை கொண்டதாககத் தெரியவில்லை.

ஈழப் பிரச்சினையில் இந்து பத்திரிகை வைத்திருக்கும் “அபிமானம்” என்னவென்று ஒவ்வொரு தமிழனும் படித்து வைத்திருக்கின்றான். அப்படியாக நம்மை புறக்கணிக்கும் ஒரு பத்திரிகையில் தமிழ்நாடு குறித்த உங்கள் தனிப்பட்ட, அல்லது உங்கள் சேர்க்கையாளர்களின் எண்ணத்தை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த கேள்விகளும், எண்ணங்களும் யதார்த்தமானவை. இதனை நீங்கள் புறக்கணிக்கவியலாது. இதிலிருந்து நாம் கற்றுக் கொண்டது என்னவெனில், நீங்கள் ராஜபக்ஷேவின் பாதையில் இயங்குகின்றீர்கள் என்பதைத்தான். ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கமுதலே நீங்கள் எடுத்திருக்கும் இந்த அவதாரம் ஆரோக்கியமானதாக இல்லை. கடந்த காலத்தை தொட்டுணர்ந்தவர்கள் என்ற வகையில், கணவனுக்கு உதாரணமாகவும், மனைவிக்கு உதாரணமாகவும் யாரைக் குறிப்பிட்டீர்கள் என்று சொல்லுங்கள். இரண்டாம் தடவை சொல்லப்பட்ட மறுப்பில் அதற்கான பதிலை மழுப்பியிருக்கிறீர்கள்.

ஈழப் பிரச்சினை விடயத்தில் எந்த அரசியல் கட்சிகளையும் தவிர்க்க முடியாது. ஒவ்வொரு  கட்சியும் தன்னல அரசியலுக்காக ஈழத்தை அணுகினாலும் இப்பிரச்சினை மக்கள் மயமாதல் என்ற நன்மை விரூட்சமடைந்தே செல்கின்றது. வைகோவும், சீமானும், பழ. நெடுமாறன் ஐயாவும் ஈழப்பிரச்சினையை எமக்கு தெளிவுபடுத்தியதாலேயே நாம் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கினோம். போராடிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கான எம் எல்லா தியாகங்களையும் வார்த்தைகளில் வேதனைப்படுத்தியுள்ளீர்கள். ஆனாலும் உங்கள் இலட்சியம் உண்மையாக இருந்தால் உங்களுக்காகவும் குரல் கொடுப்போம். நீங்கள் சிங்கள இனக்கலப்புள்ளவராக இருந்தாலும், நீங்கள் கதிரையேறப்போவது தூய தமிழனித்தின் வாக்குகளால் என்பதால் உங்களையும் ஆதரிப்போம்.

பிரிக்க முடியாத ஈழத்து உணர்வுகளுடன்

தமிழக மாணவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*