viknesh

தடம்புரளும் தலைமை வேட்பாளர்!

“இலங்கையில் காணப்படுகின்ற நிலைமை கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சினை போன்றது. இருவரும் மோதிக்கொள்கின்ற போதும், சில சமயங்களில் சமரசமாவதுண்டு. ஆனால் பக்கத்து வீட்டார் யாரும் கணவன் மனைவியை விவாகரத்து செய்துக் கொள்ளுமாறு வலியுறுத்துவது நியாயமில்லை. இலங்கை விடயத்தை தமிழக அரசியல் கட்சிகள் டென்னிஸ் மைதானத்தில் விளையாடப்படும் பந்தினை போல பயன்படுத்துகின்றன, அவ்வாறு அடித்து விளையாடுவதால், இலங்கை தமிழ் மக்களே தொடர்ந்தும் பாதிப்படைகின்றனர்”இப்படிச் சொன்னவர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அல்ல; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுமல்ல; அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுமல்ல!

இனிய வார்த்தைகளை அள்ளிக்கொட்டி எம்மை இன ஒடுக்குமுறையாளர்களுக்கு இரையாக்க முயலும் இவர்களில் எவராவது சொல்லியிருந்தால் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

ஆனால் இப்படிச் சொன்னவர் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் சி.வி.விக்னேஸ்வரன்.

நம்பமுடியவில்லைத்தான்! மஹிந்தவினதும், டக்ளசினதும் மன விருப்பங்களை இவர் வார்த்தைகளாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘த இந்து’ என்ற பத்திரிகைக்கு வழங்கியுள்ளார்.

இப்படியான கருத்துக்கள் இலங்கை அரச தரப்புக்கு இனிமையானவை. இலங்கைத் தமிழ் மக்களை அவர்களின் ஆதரவு சக்திகளிடமிருந்து தனிமைப்படுத்தி அழிக்கும் அபாயகரமான அவர்களின் நோக்கத்திற்கு இக்கருத்து அனுசரணையானது;

ஆனால் தொடர்ந்தும் கொடிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் இலங்கைத் தமிழினம் இன்று சர்வதேச ஆதரவுடன் எமது உரிமைகளை வென்றெடுக்க நடத்தும் மூன்றாம் கட்டப் போருக்கு இக்கருத்துக்கள் ஊறுவிளைவிப்பவை. சர்வதேச ஆதரவின் ஒரு பகுதியான தமிழக ஆதரவை பலவீனப்படுத்தும் ஆபத்து மிக்கவை!

முதலமைச்சர் வேட்பாளர் மட்டுமல்ல எவருமே எமது போராட்டத்தை பலவீனப்படுத்துவதை தமிழ் மக்களாகிய நாம் அனுமதிக்கப்போவதில்லை;

தமிழகத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் தமது சொந்த அரசியலுக்கு எமது பிரச்சனையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் எல்லோருமல்ல என்பது தான் முக்கியம்.

ஆனால் அவர்கள் நடத்தும் போராட்டங்களைக் கூட எமக்குத் தேவையற்றவை என்று ஒதுக்கிவிட முடியாது;

இந்திய மத்திய அரசு தமிழர்கள் பிரச்சினையில் கரிசனை காட்டுவதாகக் கூறிக்கொண்டு எல்லாவகைகளிலும் எல்லாவழிகளிலும் இலங்கை அரசுக்கு தோள் கொடுத்துவருகிறது.

இலங்கை அரசின் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு மறைமுக ஆதரவு வழங்கிவருகிறது.

இந்திய அரசின் இந்த நயவஞ்சகப்போக்கைக் கட்டுப்படுத்துவதில் தமிழகக் கட்சிகள் வழங்கும் அழுத்தத்தின் பெறுமதியை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது;

குறிப்பாக ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்த போது அதற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தமிழகமே ஏற்படுத்தியது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. தமிழகத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டங்கள் இந்திய மத்திய அரசின் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளில் கணிசமான தாக்கத்தை செலுத்துகின்றன.

தமிழகக் கட்சிகளின் பின்னால் நிற்கும் கோடிக்கணக்கான தமிழ்மக்கள் ஈழத்தமிழர் மக்களுக்காக திறந்த மனதுடன் கைகோர்த்து நிமிர்ந்து நிற்கிறார்கள் என்ற உண்மையை ஏன் விக்னேஸ்வரனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவற்றைவிட தமிழக மக்கள் தமிழ் உணர்வாளர்கள் எமக்காதரவாக நடத்தும் போராட்டங்களின் வலிமையைச் சாதாரணமாக எடுத்துவிட முடியுமா?

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய பெரும் போராட்டங்கள் முழு இந்தியாவையுமே அதிர வைக்கவில்லையா? வழக்கறிஞர்கள், மாதர் அமைப்புக்களின் போராட்டங்கள் எமது உரிமைப் போரின் நியாயத்தை உலகெங்கும் கொண்டு செல்லவில்லையா?

தியாகி முத்துக்குமரன் தொடக்கம் வீராங்கனை செங்கொடி உட்பட ஈகையாளர்கள் எமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தம்மைத் தாமே தீயிட்டு உயிர்த்தியாகம் செய்ததன் மூலம் ஈழவிடுதலை தொடர்பில் தமிழக மக்கள் கொண்டிருக்கும் உயர்வான உணர்வெழுச்சியை உலகிற்கு முரசறைந்திருக்கிறார்கள். அவர்களில் பெருமளவானவர்கள் ஏதோ ஒரு கட்சியின் பின்புலத்தை உடையவர்கள் தான் என்பதை சுட்டிக்காட்ட முடியும். குறிப்பாக அவர்கள் எவரும் பணத்துக்காகவோ யாரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ தங்கள் உயிர்களை பிய்த்தெறியவில்லை என்பதை அவர்களின் தனிப்பட்ட பக்கங்களை புரட்டிப்பார்ப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

தமிழக மக்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள்!

எங்கள் தலையில் அடிவிழுந்தால் அவர்கள் இதயத்தில் உதிரம் வடியும்!
எங்களுக்காக அவர்கள் துடிப்பதை, எங்களுக்காக அவர்கள் கொதிப்பதை, எங்களுக்காக அவர்கள் எழுவதை எவரும் தடுக்க முடியாது! அது பற்றி கேள்வி எழுப்ப எவருக்கும் உரிமையில்லை!

தன் சகோதரி கொடுமைப்படுத்தப்படும் போது சகோதரன் அடுத்த வீட்டில் மட்டுமல்ல அடுத்த உலகில் இருந்தாலும் ஓடிவந்து தட்டிக்கேட்பான்.

இலங்கை ஆட்சியாளர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே நிலவுவது விக்னேஸ்வரன் பார்வையில் கணவன் – மனைவி உறவென்றால், அந்த உறவில் 60 வருடங்கள் நாம் இழந்தவற்றை எண்ணிக் கணக்கிட முடியுமா?

60 வருட காலத்தில் கொல்லப்பட்ட 2 இலட்சதிற்கும் மேற்பட்ட மக்களுக்கும் போரின் கடைசி நாட்களில் கொல்லப்பட்ட 40ஆயிரத்துக்கும் மேற்பட்டமக்களுக்கும் விடுதலை வேண்டி போராடி மாவீரர்களான நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளுக்கும் பல்லாயிரக்கணக்கில் ஊனமுற்றவர்களுக்கும் கோடிக்கணக்கில் இழக்கப்பட்ட சொத்துக்களுக்கும் கணவன் – மனைவி உறவின் சாட்சியங்களா?, இந்த அநியாயங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் இரத்த உறவுகள் அந்நியர்களா?

இலங்கைத் தமிழர்கள் தனிப்பட்டவர்களல்ல! அவர்களுக்கு இன்னல் நேர்ந்தால் 7 கோடி தமிழக மக்களின் கைகள் உயரும் எனப் பிரகடனம் செய்பவை தமிழக மக்களின் போராட்டங்கள்;

இலங்கைத் தமிழ் மக்களை தமிழக மக்களிடமிருந்தும்  உலகத் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தும் மஹிந்தராஜபக்ஷவில் நயவஞ்சகத்தின் இன்னொரு குரலாக விக்கினேஸ்வரன் செயற்பட்டால் அவர் தன்னைத் தானே தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நிலையே ஏற்படும் என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கிறோம்.

குறிப்பு – மேற்படி கருத்து இந்து பத்திரிகையால் வேண்டுமென்றே பொய்யாகவோ திரிவு படுது்தப்பட்டோ பிரசுரிக்கப்பட்டிருந்தால், இது தொடர்பில் விக்னேஸ்வரன் தனது விளக்கத்தினை உடனடியாக வெளியிடுவதன் மூலம் தமிழக உணர்வாளர்களின் அதிர்ப்தியினைத் தணித்துக் கொள்ளலாம். 

தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*