leader

‘சம்பிக்கவின் போர்ப்பிரகடனம்’ – மாரீசன்

“சிங்கள மக்களும் இராணுவமும் மூன்றாம் கட்டப் போருக்கு தயாராக வேண்டும். நாம் இன்னுமொரு நந்திக்கடலைச் சந்திக்கவும் தயாராகவுள்ளோம்”,இப்படியொரு போர்ப்பிரகடனத்தை வெளியிட்டிருப்பவர் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலரும் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க.

இப்படியான இனவெறிக் கோஷங்களைத் தமிழினம் காலம் காலமாகவே சந்தித்து வந்துள்ளது. போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் சிங்கள மக்களை இனவெறியர்களாகவே தக்க வைப்பதில் சளைத்துப் போகாது செயற்பட்டுவரும் மூன்றாம் தர அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.

தமிழர்களின் தோலை உரித்து கால் செருப்பு தைக்கப்போவதாகச் சவால் விட்ட கே.எம்.பி.ராஜரத்தினா அரசியலில் காணாமலே போய்விட்டார். தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கி வடக்கு – கிழக்கில் இருந்த சீமெந்து தொழிற்சாலை, இரசாயனத் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை என்பவற்றை மூடி பல்லாயிரம் தமிழர்களை வேலையிழக்கச் செய்த சிறில மத்தியூ கவனிக்கப்படாத மனிதராகக் காலமானார். இனவெறியின் உச்சியில் ஏறி நின்று தமிழ் மக்களுக்கு எதிரான போரை விரிவுபடுத்திய அத்துலத் முதலி ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்தே தூக்கி வீசப்பட்டார். ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ஆரம்பித்த கட்சியும் அத்துடன் அழிந்துபோனது.

இப்படியான வீரவிதானய, பூமிபுத்திர என எத்தனையோ இனவெறி அமைப்புக்கள் உருவாகித் தமிழர்களின் குருதி குடிக்கப் பேயாய் அலைந்தன.

ஆனால் காலம் அவைகளையும் அவைகளுக்குத் தலைமையேற்று துள்ளிக்குதித்தவர்களையும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தொடர்ந்து தூக்கி வீசிக்கொண்டே தான் இருக்கிறது. எனினும் இவர்கள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பெயர்களின் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

அவ் வகையில் இன்று தமிழர்களுக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவும் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவும் முன்னரங்கில் நிற்கின்றன.

சிறுபான்மையினரை வேட்டையாட விசேட வரம்பெற்ற இவர்கள் எவ்வளவு கொரூரமான வன்முறையில் ஈடுபட்டாலும் இவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. குற்றவியல் சட்டங்கள் இவர்களிடம் சரணடைந்துவிடும். இவர்கள் பொலிஸார் முன்னிலையிலேயே எவ்வித சட்டவிரோத நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்.

இப்போது வட மாகாண சபைத் தேர்தல் காலம்! அரசாங்கம் பல்வேறு மாயமான்களை உலவவிட்டு ஒரு புறம் தமிழ் மக்களை மருட்டும் நடவடிக்கைகளில் இறங்கிவருகிறது! இன்னொரு பக்கம் இனவாதிகளை முன்னால் விட்டுமிரட்டும் கைங்கரியங்களையும் மேற்கொண்டு வருகிறது.

எனவே இப்போது ஜாதிக ஹெல உறுமய முன் தள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தம்பங்கை திறம்பட ஆற்ற ஆரம்பித்துவிட்டனர்.

கே.எம்.பி.ராஜரத்தின தொடக்கம் இன்றுவரை எத்தனையோ இனவெறி அரசியல்வாதிகள் அரங்கேறி அடையாளம் அழிந்து காணாமற் போய்விட்டனர். ஆனால் ஒருவர் மாறி ஒருவர் சிங்கள பௌத்த இனவெறியையும் தமிழ் மக்கள் மீதான குரோதத்தையும் இளமை குன்றாமல் பாதுகாத்துவருகின்றனர். அதற்கு எக்காலத்திலும் ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் நேரடி மறைமுக ஆதரவு உண்டு.

இப்போது போர்க்கொடி ஜாதிக ஹெல உறுமயவின் கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதல் நடவடிக்கை –

ஜாதிக ஹெல உறுமய இனப்பிரச்சினை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இனிப் பங்குகொள்வதில்லை என அறிவித்துவிட்டது. அதாவது தாங்கள் மாகாண சபைகளிடமிருந்து காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 5 அம்சங்களை இல்லாமல் செய்யக் கோரியதாகவும் அது சாத்தியமில்லை எனத் தெரிவதால் அதிலிருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன் அடுத்த கட்ட நடவடிக்கைதான் தமிழர்கள் மீதுான மூன்றாம் கட்டப் போர். இப்போது அந்தப் போரை ஆரம்பிக்கவும் நந்திக்கடலில் மீண்டும் இரத்த ஆறு ஓடவிடவும் ஜாதிக ஹெல உறுமயவினர் சிங்கள மக்களுக்கும் படையினருக்கும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது தமிழ் மக்களின் முதலாம் கட்டப் போர் அஹிம்சை வழியில் தொடங்கியது. அது தொடர்ந்து இரண்டு தசாப்தங்களாக ஆயுத வன்முறை மூலம் அடக்கப்பட்ட போது தவிர்க்க முடியாமல் ஆயுதப் போர் வெடித்தது. 2009இல் சர்வதேச உதவியுடன் ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

எனவே இப்போது மூன்றாம் கட்ட சர்வதேச அனுசரணையுடனான ஜனநாயக வழியிலான போர் ஆரும்பமாகியுள்ளது. இது ஒரு ஜனநாயகப்போர்.

எமது உரிமைகள் எட்டப்படும் வரை வடிவங்கள் மாறினாலும் எமது உரிமைப்போராட்டம் தொடரும்.

இந்த ஜனநாயகப் போருக்கு நந்திக்கடலில் மீண்டும் குருதி ஓடவிட்டுப் பதிலளிக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு சிங்கள மக்களுக்கும் இராணுவத்திற்கும் அறைகூவல் விடுக்கிறார்.

இவர்கள் மஹிந்த அரசில் ஒரு அங்கம்! ஜாதிக ஹெல உறுமய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஒரு பங்காளி.

இது மஹிந்த ராஜபக்ஷ அரசின் மிரட்டி அடிபணிய வைக்கும் சண்டியன் அரசியலின் ஒரு அம்சம் என்பதைத் தமிழ் மக்கள் நன்கறிவர்.

நாம் பல்லாயிரம் மக்களின் உயிர்களைப் பலிகொடுத்துப் புடம்போடப்பட்டவர்கள். நாற்பதனாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் இலட்சியக்கனவுகளைச் சுமப்பவர்கள்;

வரலாற்றின் குப்பைத் தொட்டியுள் காணாமல் போகவுள்ள இனவெறியரோ அவர்களை வழி நடத்துபவர்களோ எமது இலட்சியப் பயணத்தை முடக்கிவிட முடியாது.

எமது மூன்றாம் கட்டப்போரின் வெற்றி இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் என்பது மட்டும் மறுக்கப்பட முடியாத உண்மை.

தாயகத்திலிருந்து தமிழ்லீடருக்காக மாரீசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*