vikneshwaran

விடுதலைப்புலிகளை கூண்டில் ஏற்ற ஆணை கேட்கிறது கூட்டமைப்பு!?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளது. அதாவது அவ் அமைப்பு தனது கொள்கைகளையும் எதிர்கால வேலைத்திட்டங்களையும் முன் வைத்து தமிழ் மக்களிடம் அவர்களின் ஆணையைக் கோரியுள்ளது.தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இன்றைய போராட்டத்தின் தலைமை சக்தியாகவே எதிர்பார்க்கின்றனர்.

அவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு நகர்வும் இலட்சிய உறுதி கொண்டதாகவும், நேர்மையானதும் தூய்மையானதுமாக இருக்கவேண்டியது ஒரு கட்டாயமான தேவையாகும்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு முக்கியமான தமிழ் மக்களால் என்றுமே ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு விஷயத்தை நாம் மிகவும் வேதனையுடனும் அவ்வேளை மிகுந்த அதிருப்தியுடனும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

“யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியமை பற்றிய இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு, உண்மையும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் நிலைநாட்டப்படுவதோடு, இழப்பீடுகள் அடங்கலான நிவாரணங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்;”

குறிப்பிடப்பட்டுள்ள அம்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகப் பல கேள்விகளை எழுப்புகின்றது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளையும் அரசாங்கத்தையும் ஒரே தராசில் போட்டு சம அளவில் எடைபோடுகிறதா, அப்படியான ஒரு முனைப்புக்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தைக் கேட்கிறதா?

எமது இனம் கடந்து வந்தது ஒரு மகத்தான விடுதலைப் போராட்டம் – எமது போராளிகள், எமது மக்களைக் கொன்று குவித்த படையினருக்கெதிராகவும் அவர்களிடம் இருந்து எமது மக்களையும் மண்ணையும் பாதுகாக்கவுமே ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். எதிரிகளின் கையாட்களாக இருந்து, மிகப்பெரிய இனவிடுதலைப் போராட்டத்தினை காட்டிக்கொடுத்த துரோகிகள் அழிக்கப்பட்டார்கள்.

இது எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் தவிர்க்கப்பட முடியாத தேவை! இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனித உரிமை மீறல் என்று கூறுகிறதா? இதை மனித உரிமை மீறல் எனத் தமிழ் மக்கள் அங்கீகரிக்கவேண்டுமா? இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் அளப்பரிய உயிர்த்தியாகங்களும் நிறைந்த எமது புனிதமான விடுதலைப் போராட்டம் மனித உரிமை மீறலா?

தன்னைக்கொல்ல வரும் பசுவையும் கொல்வது தர்மம் என எமது முன்னோர்கள் போதிக்கவில்லையா?

ஒரு விடுதலைப் போராட்டம் என்பது மாலை நேரப் பொழுதுபோக்கோ, ஒரு இரவு நேர விருந்துபசாரமோ அல்ல. அது அவ்வளவு மென்மையானதாக, நூறுவீதம் பண்பானதாக இருக்க முடியாது. அது மரணங்களையும் தியாகங்களையும் கோர்க்கும் ஒரு இரத்தம் சிந்தும் நிகழ்வுத் தொடர். விடுதலைப் போரியலின் அடிப்படையிலேயே எமது போராளிகளின் துப்பாக்கிகளும் ஒடுக்குமுறையாளர்களுக்கும் துரோகிகளுக்கும் எதிராகத் திருப்பப்பட்டன. எமது மக்களையும் மண்ணையும் அவை பாதுகாத்தன. இது மனித உரிமை மீறலா?

விமானக் குண்டுகளாலும் எறிகணைகளாலும் துப்பாக்கி வேட்டுக்களாலும் எமது மக்கள் வேட்டையாடப்பட்டனர். முதியோர், குழந்தைகள், பெண்கள் கூடக் கொல்லப்பட்டனர். சித்திரவதைகளாலும் பாலியல் வல்லுறவுகளாலும் சின்னாபின்னப்படுத்தப்பட்டனர். இத்தகைய கொடிய மனித உரிமை மீறல்களையும் எமது போராட்ட நடவடிக்கைகளையும் ஒரே தராசில் போடுவது மன்னிக்கமுடியாத குற்றமாகும்.

1956இல் ஆரம்பித்த தமிழ் மக்களின் அஹிம்சை வழியிலான போராட்டம் ஆயுத வன்முறை மூலம் ஒடுக்கப்பட்ட போது ஆயுதப் போராட்டம் வெடித்தது. 2009இல் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்பு ராஜதந்திரப் போர் விரிந்தது.

ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சி தான் இன்றைய ராஜதந்திரப் போர் என்பதும் அதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை தாங்குகிறது என்பதும் உணரப்படவேண்டும்.

எமது ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் எந்த ஒரு வார்த்தைப் பிரயோகமும் மன்னிக்க முடியாத குற்றம் என்றே கருதமுடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது கொழும்பில் இருந்தோ இந்தியாவில் இருந்தோ இறக்குமதி செய்யப்பட்டதல்ல. அது காலத்தின் தேவையை ஒட்டி விடுதலைப்புலிகளால் வலுவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பேராதரவை பெற்றுள்ளது என்றால் அதற்கு விடுதலைப்புலிகளின் இலட்சியப்பற்றும் அர்ப்பண உணர்வும் மாவீரர்களினதும் எமது மக்களினதும் உயிர்த்தியாகங்களும் தான் காரணம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது.

விடுதலைப்புலிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுட்டார்கள் என்ற எதிரியின் குரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரொலித்தால் தமிழ் மக்களால் ஓரங்கட்டப்படும் நிலையே உருவாகும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

விடுதலைப்புலிகளிடமும் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத் தீர்மானத்தை கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற முன்னர் ஆயுதம் தூக்கியவர்களும் அங்கீகரித்திருப்பது ஆச்சரியமடையவைக்கிறது. தமிழின விடுதலைக்காக போராடிய ஆயுதக் குழு ஒவ்வொன்றுக்கும் விடுதலைப் பாதையின் கடினம் புரியும். அவ்வாறிருந்தும் இந்த முடிவுக்கு வந்திருப்பதன் உள்நோக்கம் விடுதலைப்புலிகளைப் பழிவாங்குவதா? என்ற கேள்வியையும் கேட்க முடியாமல் இல்லை. விடுதலைப்புலிகளிடம் விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற முன்னாள் ஆயுதக் குழுக்கள் விதிவிலக்காக முடியுமா?

இந்த விடயத்தினை கையிலெடுத்திருக்கும் இன்னொரு நோக்கமாக, விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு இனி எந்தக் காலத்திலும் தலை தூக்குவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவாக வெளிப்படுத்துவதாகவே கருதமுடிகிறது. நடைபெறப் போகும் மாகாண சபைத் தேர்தலில் பெறப்படும் வெற்றியை, விடுதலைப்புலிகளுக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள் எனக் காட்டுவதற்கு கூட்டமைப்பு தயங்காது என்பது இதன் மூலம் பட்டவர்த்தனமாகியுள்ளது.

ஆக, இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீனமான, சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கூற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து மாற்றியமைக்க வேண்டுமென உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த விடயம் தாயக மக்கள் மத்தியில் வேகமாக காட்டுத்தீ போல பரவி வருவதாகவும் மக்கள் மத்தியில் ஒருவித விரக்தி நிலையினை ஏற்படுத்திவருவதாகவும் அறிய முடிகிறது. இந்த விடயம் ஆளுந்தரப்புக்கு ஒரு சாதகமான நிலையினை ஏற்படுத்தும் அபாயம் உணரப்பட்டுள்ளது.

இதனை அசண்டையாக கையாளும் பட்சத்தில் மிக மோசமான எதிர்விளைவுகளை கூட்டமைப்பு எதிர்நோக்கவேண்டி ஏற்படலாம் என்பதையும்.. இன விடுதலைக்கான பார்வையில் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள் என்பதை உரியவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

– தமிழ்லீடர் ஆசிரியர்பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*