vikkileader

ஈழப் போராட்டத்தை விமர்சிக்கும் விக்னேஸ்வரனுக்கு திறந்த மடல்!

பெருமதிப்புக்குரிய விக்னேஸ்வரன் அவர்களுக்கு,
முதலில் தங்களுக்கு எங்கள் வணக்கத்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது இனத்தின் விடுதலைக்கான போராட்டம் 60 ஆண்டுகளுக்கு மேலாக பல வெற்றிகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தபோதிலும் பரிணாம வளர்ச்சி ஊடாக ஒரு உயரிய இலக்கை நோக்கி நகர்ந்தது!
எனினும் பல முனைகளிலும் விரிக்கப்பட்ட சதி வலைகள் காரணமாக இன்று நாம் ஒரு பின்னடைவுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
நீதி நிர்வாகத்துறையில் நீண்ட கால அனுபவமும் ஆற்றலும் நிரம்பிய தாங்கள் எமது உரிமைப் போரில் மாகாண சபைக்கு ஊடாக ஒரு தலைமைப் பங்காளியாக வந்துள்ளமைக்காக எங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். தங்கள் ஆற்றலும் ஆளுமையும் இன ஒடுக்குமுறையாளர்களின் ஈனத்தனமான, நயவஞ்சகமான முன்னெடுப்புக்களை உடைத்தெறிய முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்பதுடன் மாகாண சபை என்ற குறுகிய வட்டத்துக்குள் தமிழ் இனத்திற்கான இறுதித்தீர்வு அமைந்துவிடும் என்று நீங்கள் கருதமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
ஒரு உரிமைப் போராட்டத்தில் விடாப்பிடியான இலட்சிய உறுதி எவ்வித தியாகத்திற்கும் தயாரான மனப்பாங்கும் அடைப்படைக் கொள்கைகளிலிருந்து பிறளாத தந்திரோபாய நகர்வுகளும் முக்கியமானவை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.
ஒரு மலையேறுபவனைப் போலவே ஒரு சிறு சறுக்கல் கூட எம்மை நீண்ட தூரம் பின்தள்ளவோ அதல பாதாளத்தில் வீழ்த்தி விடவோ கூடும். எனவே எங்களதும் உங்களதும் பொறுப்பு எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று கருதுகிறோம்.
அண்மையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பல நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் மத்தியிலும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டமையும் அக் கூட்டம் மாவீரர் வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டமையும் எமது இலட்சியத் தீயை எப்போதும் எவராலும் அழித்துவிட முடியாது என்று எமது மக்கள் எண்ணிக்கொள்ளும் அளவிற்கு அமைந்திருந்தது. எமது நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் வேட்பாளர்களினதும் பேச்சுக்கள்  நம்பிக்கை தருவனவாகவே அமைந்திருந்தன. தேர்தலுக்கான வெற்றுக்கோசங்களாக அவை அமைந்துவிடாது என்ற நம்பிக்கை இன்னமும் எங்களுக்குள் இருக்கிறது.
vikkinews
ஆனால் தாங்கள் உரையாற்றும் போது தாங்கள் குறிப்பிட்ட சில கருத்துகள் எமது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்பதையும் எமது மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்தவை என்பதையும் நாம் இங்கு மிகவும் மனவருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இன்றை தமிழ் மக்களின் அவல நிலைக்கு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்றவர்கள் கொல்லப்பட்டமையே காரணம் எனத் தாங்கள் தெரிவித்த கருத்து உயிர்த்தியாகமும் அர்ப்பணிப்பும், இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் நிறைந்த எமது ஆயுதப் போராட்ட வரலாற்றையே கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
வடக்கு மக்களை நிர்வகிக்கப் போகும் நீங்கள், எமது அவலத்துக்கு காரணமான சிங்கள பௌத்த பேரினவாதிகளை விட்டுவிட்டு எமது விடுதலைப் போராட்டம் மீது பழியைப் போடும் வகையில் கருத்துத் தெரிவித்திருக்கிறீர்கள். இதன் அடிப்படையில் எமது மக்களின் எதிர்காலம் நோக்கி சிந்திக்கையில் ஒருவித அச்சம் கலந்த பதற்றமான எண்ண ஓட்டம் எமக்குள் எழுகிறது என்பதை பகிரங்கமாகவே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
சில சமயம் நீங்கள் அமிர்தலிங்கம் மீதும்  நீலன் மீதும் வைத்திருக்கும் மரியாதை காரணமாக அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவ் வார்த்தைகளின் பின்னாலுள்ள அர்த்தங்கள் மிகவும் பாரதூரமானவை என்பது உணரப்பட வேண்டும்.
விடுதலைப்போராளிகள் தனி மனிதப் படுகொலைகளை விரும்பும் மனநோயாளிகளல்ல. ஆனால் ஒரு தனிமனிதன் தனக்கும் தன் இனத்துக்கும் துரோகம் செய்து இலட்சியப் பயணத்தின் தடைக்கல்லாக எழும் போது விரும்பத்தகாத சம்பவங்கள் தவிர்க்கப்பட முடியாததாகின்றன.
1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அதில் தனித் தமிழீழமே முடிந்த முடிவு எனப் பிரகடனம் செய்யப்பட்டது.
யாழ்.முற்றவெளியில் 1977இல் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் அடுத்த மேதினம் தமிழீழத்தில் எனப் பிரகடனம் செய்யப்பட்டது. 1977இல் தமிழீழத்திற்கு ஆணைகேட்டுப் போட்டியிட்ட பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 90வீதம் மக்கள் ஆதரவளித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை பெரு வெற்றி பெறச் செய்தனர். அதன் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகியது. அத்துடன் தமிழீழத் தீர்மானம் தமிழர் விடுதலைக் கூட்டணியால் கைவிடப்பட்டது.
ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி மூட்டிவிட்ட தனி நாட்டுக் கோரிக்கைத் தீ பெரு நெருப்பாக கொழுந்துவிட்டெரிந்து ஆயுத அமைப்புக்களை உருவாக்கியது.
தமிழர் விடுதலைக் கூட்டணி தனது எதிர்க்கட்சித் தகைமையை முழுமையாகப் பயன்படுத்தி தமிழீழப் போராட்டத்தை ஜனநாயக வழியில் தொடர்ந்திருந்தால் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டத்துடன் சமாந்தரமாக வலிமையுடன் முன்சென்றிருக்க முடியும்.
ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியோ இந்தியாவின் ஆலோசனையின் பேரில் இன ஒடுக்குமுறையாளர்களுடன் சமரசம் செய்து போலிப் பேச்சுக்களை நடத்திக் காலத்தைக் கடத்தியது.
தமிழீழக் கோரிக்கை முன் வைக்கப்பட்டதும் அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கொலை செய்யப்படுவதற்கு இளைஞர்களையும் தூண்டிவிட்டதும் தமிழர் விடுதலைக் கூட்டணி தமது தேர்தல் வெற்றி ஒன்றுக்காகவே என்பதை இளைஞர்கள் புரிந்து கொண்டனர்.
எனவே துரோகியாக தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் சுட்டிக்காட்டப்பட்ட அல்பிரட் துரையப்பா சென்ற பாதையில் அவர்களும் போன போது அவருக்கு ஏற்பட்ட அதே கதி அவர்களுக்கும் ஏற்பட்டது.
திருநெல்வேலியில் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கா பல்கலைக்கழகம் திறக்க அதை எதிர்த்து சத்திரச் சந்தியில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் தான் தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று நடத்திய போராட்டம்.
அன்று பல இன்னல்கள் மத்தியில் முனைப்புப் பெற்ற விடுதலைப் போராட்டத்தை சீர் குலைக்க முயன்ற அமிர்தலிங்கத்தினையும் சகாக்களையும் இளைஞர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை.
நீலன் திருச்செல்வம் ஒரு நல்ல அறிவாளி என்பதையும் திறமைசாலி என்பதையும் எவரும் மறுத்துவிட முடியாது. ஆனால் தமிழ் மக்கள் மீதும், விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட சந்திரிகா அம்மையாரின் ஆலோசகராக விளங்கினார். அது மட்டுமன்றி தனக்கு அமெரிக்காவில் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சர்வதேசத்தை தீர்மானிக்கும் வல்லமை பெற்ற அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்வதற்கு பிரதான சக்தியாக விளங்கியிருந்ததை மன்னிக்க முடியுமா?
இப்படியான ஒரு நிலையில் அமர்தலிங்கமும் நீலனும் கொல்லப்பட்டமை தான் இன்றைய தமிழ் மக்களின் அவல நிலைக்குக் காரணம் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது?
எமது விடுதலைப் போராட்டத்தில் அர்ப்பணமான மாவீர்களையும் கரும்புலிகளையும் மக்களையும் கொச்சைப்படுத்துவதை எமது மக்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா?
மதிப்புக்குரிய விக்னேஸ்வரன் ஐயா அவர்களே!
இன்று சர்வதேசம் எமது பிரச்சினைகளில் தீவிரமான அக்கறை காட்டுகின்றதென்றால் எமது விடுதலைப் போராட்டமும் எமது தியாகங்களும் தான் என்பைத் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.
முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் இன விடுதலைக்கான அடுத்தகட்டத்தை கொண்டு செல்லவேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உள்ளது. தமிழ் மக்கள் வாக்களிப்பது அதிகாரமற்ற அதிகாரங்களுக்காகவல்ல. மாறாக எமது உரிமைப் போராட்ட இலக்கினை எட்டுவதற்கான படிக்கற்களைக் கடந்து செல்வதற்காக என்பதை தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். இன்றைய நிலை என்பது ஆகாயத்தில் இருந்து வழங்கப்பட்ட வரமல்ல! ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி!
ஐயா!
தங்கள் பொறுப்பும் கடமையும் மிகப்பாரியது.. எமது விடுதலைப் போராட்டம் தவறானது என்று சொல்லும் வேலையை சிங்களப் பேரினவாதம் பார்த்துக் கொள்ளும். அதற்காக உங்கள் நேரத்தை நீங்கள் வீணடிக்கவேண்டியதில்லை. முடிந்தால், எங்கள் விடுதலைப் போராட்டத்தில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்கள் ஒவ்வொருவரினதும் உயிர்விலைகள் எவ்வாறு நிகழ்ந்தன. அவற்றின் தியாகங்கள் எவ்வாறு அமைந்தன போன்ற விடயங்களை தேடிப்படித்துப் பாருங்கள். மிகப் பிரமாண்ட கேள்விகளுக்கான விடைகளெல்லாம் அவற்றின் ஊடே உங்களுக்குப் புரியவாய்ப்புள்ளது என்ற நம்புகிறோம்.
தங்கள் வார்த்தைகள் எமது மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பவையாகவும் இலட்சியங்களை உறுதியாக முன்னெடுக்கும் வகையிலும் அமையவேண்டும் என்பதே எமது உரிமையுடனான கோரிக்கை!
தாங்கள் தடம் மாறும் போது தட்டிக் கேட்கும் உரிமையுடனும் தடுத்து நிறுத்தும் வலிமையுடனும் என்றும் எமது ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உங்களுக்கும் உண்டு.
நன்றி..
தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*