leader

போர்க்குற்றவாளியின் தலைமையில் நீதி விசாரணை! – விகர்ப்பன்

இலங்கையை ஆசியாவின் அதிசயமாக மாற்றுவது என்பது ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஷவின் சூளுரை! ஆனால் சில சந்தர்ப்பங்களில் இலங்கை உலகின் ஆச்சரியமாக மாறிவிடுவதுமுண்டு.அப்படியொரு உலக ஆச்சரியம் இப்போது அரங்கேறியுள்ளது.

வெலிவேரியாவில் சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் செய்த பொதுமக்கள் மீது படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு கொலை வெறியாட்டம் நடத்தி மூன்றுவாரங்களாகிவிட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துடன் சம்பந்தப்படாத 2 மாணவர்களும் தொழிலுக்காக செல்ல பேருந்துக்காகக் காத்திருந்த ஒரு தொழிலாளியும் கொல்லப்பட்டனர். 56 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

வழமைபோலவே இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் பாதுகாக்க அமைச்சர்களும், அரச தரப்பினரும் பொதுமக்களே துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். பெற்றோல் குண்டுகளை வீசினர் எனவும் மூன்றாவது தரப்பே அசம்பாவிதங்களை மேற்கொண்டது எனவும் கூறி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

எனவே வெலிவேரியா படுகொலைகள் பற்றி ஆராய ஒரு இராணுவ அதிகாரிகளைக் கொண்ட மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்படுவது இராணுவம்! விசாரணை நடத்தியது இராணுவம்!

குற்றம் சாட்டப்பட்டவர்களே நீதிபதிகளாவது உலகில் அதிசயமாய் இருக்கலாம்! இலங்கையில் இது வழமையான விஷயம் தான்!

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக ஒரு இராணுவ விசாரணைக் குழு அமைக்கப்பட்டதும், இங்கு எவருமே காணாமல் போகவில்லை எனத் தீர்வு வழங்கியதும், பாதுகாப்புச் செயலர் அதை உறுதிப்படுத்தியமையும் மறந்துவிடக் கூடியவையா?

தற்சமயம் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான விசாரணைக் குழு தன் அறிக்கையை இராணுவத் தளபதியிடம் கையளித்த நிலையில் எதிர்வரும் திங்கள் கிழமை குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஒரு சர்வதேச் செய்தி! அது ஆச்சரியமுமல்ல! அதியசமுமல்ல! ஆனால் இலங்கை அரசுக்கு அது அதிர்ச்சி செய்தி!

நியூஸ்லாந்தில் இடம்பெறவுள்ள அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்திய பயிற்சி நடவடிக்கைகளில் பங்கு கொள்ள இலங்கை அரசு மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸை அனுப்ப முடிவு செய்தது.

விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர் என்ற காரணம் காட்டப்பட்டு அவர் பங்பற்ற அனுமதி மறுக்கப்பட்டது!

போரின் இறுதிக் கட்டத்தின் போது மனிதாபிமான நடவடிக்கை என்ற பேரில் பல ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த 57 வது படையணியின் கட்டளைத் தளபதியாக வழி நடத்தியவர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ்.

அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய பயிற்சி நடவடிக்கைகளில் அமெரிக்கா பகிரங்கமாகவே அவரை நிராகரித்துவிட்டது.

சர்வதேச அளவில் ஒரு போர்க்குற்றவாளியாக நிராகரிக்கப்படும் ஒருவர் இலங்கையில் ஒரு நீதி விசாரணைக்குப் பொறுப்பு வகித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

சில சமயங்களில் அந்த அறிக்கையில் வெலிவேரியா படுகொலைகள் கூட ஒரு மனிதாபிமான நடவடிக்கை என முடிவு செய்யப்பட்டிருக்கக் கூடும்!

பல விடயங்களில் இலங்கையின் அகராதி வித்தியாசமானது தான்!

எப்படியிருப்பினும் சர்வதேச அளவில் ஒரு போர்க்குற்றவாளியாக ஒதுக்கபப்டும் ஒருவரின் தலைமையில் இலங்கையில் நீதி விசாரணை மேற்கொள்ளப்படுவது உலகின் ஆச்சரியம் தான்!

அது மஹிந்த சிந்தனையின் மகத்துவம்.

தமிழ்லீடருக்காக விகர்ப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*