leader

தேர்தல் வெற்றிக்காக சாம,பேத,தான,தண்டம்..! – புருஷோத்மன்

கடந்த முறை மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறவிருந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் உட்படப் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஒவ்வொன்றாக உயர்த்தப்பட்டன. இது மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர்களுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்திவிட்டது. விலைவாசி உயர்வுப் பிரச்சினையைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் தங்களைத் தோற்கடித்துவிடுவார்களோ எனப் பயந்தனர். எனவே அவர்கள் ஓடிப்போய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விலைவாசி உயர்வால் தேர்தலில் தங்களுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகள் பற்றி முறையிட்டனர்.அவர்களின் முறைப்பாடுகளை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ஜனாதிபதி “தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது எனக்குத் தெரியும்! நீங்கள் போய் பிரசாரம் செய்யுங்கள்” என்றுவிட்டு எழுந்து போய்விட்டாராம். வேட்பாளர்களும் குழம்பத்துடன் வெளியேறிவிட்டனர்.

போட்டியிட்ட சகல மாகாணசபைகளிலும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிலைச் சின்னத்தில் அமோக வெற்றி பெற்றது. இலங்கையில் தேர்தல்களைப் பொறுத்தவரை அவற்றை எப்படி வெல்ல வைப்பது என்பது பற்றியும் வென்றவர்களை எப்படி விலைக்கு வாங்கித் தன் வலையில் விழுத்துவது என்பது பற்றியும் மிகத் தெளிவாகவே புரிந்து வைத்திருப்பவர் மஹிந்தராஜபக்ஷ. சாம, பேத, தான, தண்டம் எனப் பல வழிகளையும் பாவித்து எப்படி வெற்றி பெறுவது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இலங்கை அரசியல்வாதிகளின் பலம், பலவீனங்களைச் சரியாக எடை போட்டு அவற்றை பொருத்தமான நேரத்தில் பாவிப்பதும் சிங்கள மக்களைத் தொடர்ந்து ஒரு மாயைக்குள் வைத்து அவர்களின் ஆதரவை தக்க வைப்பதிலும் அவர் வல்லவர்.

ஆனால் தமிழ் மக்களிடம் தான் அவரது பருப்பு வேக மறுத்துவருகிறது. ஆனால் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கொலைக் களத்தில் தலையை நீட்டிக்கொடுக்கும் ஆடுகள் போல் அடங்கிப் போயிருப்பது பரிதாம்தான்!

பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டாலும் புனித குர் ஆன் வீதியில் தூக்கி வீசப்பட்டாலும் பள்ளிவாசலுக்குள் தொழுகையில் ஈடுபடுவோரைப் பிக்குகள் விரட்டி விரட்டி பிரித் ஓதினாலும் குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படுகிறோம் எனச் சமாதானம் சொல்லி மனம் ஆறுமளவுக்கு சில முஸ்லிம் தலைவர்கள் மஹிந்தராஜபக்ஷவால் ஆட் கொள்ளப்பட்டுவிட்டனர்.

இப்படியான ஒரு நிலையில் தான் மத்திய மாகாண சபை, வடமேல் மாகாண சபை, வட மாகாண சபை என்பவற்றுக்கான தேர்தல் காலம் ஆரம்பமாகிவிட்டது.

தேர்தல் விதிமுறைகளை மீறுதல், வன்முறைகளில் ஈடுபடல் என வழமையான சலக கூத்துக்களும் சமாந்தரமாகவே ஆரம்பமாகிவிட்டன.

அரச வாகனங்கள், அரச அதிகாரிகள் என அரச வளங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பால் பயன்படுத்தப்படுதல், அரச விழாக்களைத் தேர்தல் மேடைகளாகப் பயன்படுத்தல், மிரட்டல்கள், வன்முறைகள், எதிர்தரப்பு வேட்பாளர்கள் மீதான ஆயுதப் படையினரின் அச்சுறுத்தல் என்பன தாராளமாகவே இடம்பெற ஆரம்பித்துவிட்டன.

அரச, அரச சார்பு ஊடகங்களும் வெவ்வேறு விதமான நிகழ்ச்சிகள், பேட்டிகள், கலந்துரையாடல்கள் என்பன மூலம் தமது மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவாகவும் எதிர்த்தரப்பினருக்கு எதிராகவும் தமது பணியை முடுக்கிவிட்டன.

இதுவரை தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான கபே, பவ்ரல் என்பவற்றுக்கு நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பட்டியலிடப்பட்டு அறிக்கை வெளியிடப்பட மட்டுமே உதவும். அதற்கு மேல் அவை எதையும் சாதித்ததாக இதுவரை வரலாறு இல்லை.

எப்படியிருந்த போதிலும் தேர்தல் காலத்தின் இறுதிக்கட்டத்தில் அதிகார மட்டத்தினரின் பிரதான ஆயுதமாகப் பாவிக்கப்படுவது வன்முறைகளும், கள்ள வாக்குப் போடுதல்களுமாகும். சாதாரண மக்கள் வாக்களிக்கும் போது ஆளடையாளத்தை நிரூபிப்பது கட்டாயமாக்கப்பட்டிருப்பினும் கள்ள வாக்குப் போடுபவர்களிடம் அது விலகிக் கொடுத்துவிடும்.

அப்படியான முறை மீறல்களில் சாதாரண மக்கள் ஈடுபடத் துணியமாட்டார்கள். ஆனால் பாதாள உலகக் குழுவினர்கள், அரசியல் வாதிகளின் அடியாட்களே இந்த வீரதீரச் செயல்களின் நாயகர்களாக இருப்பர்.

எனவே பல அதிகாரத் தரப்பு வேட்பாளர்கள் அதற்கான பணிகளை இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.

அதாவது விலைவாசி உயர்வு, அரசின் சர்வாதிகாரப் போக்கு, பிரதேச சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் அடாவடித் தனங்கள் என்பன காரணமாக சாதாரண மக்கள் அரசின் மீது வெறுப்புற்றுள்ளனர். அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராகவே வாக்களிப்பார்கள்.

எனவே அப் போக்கைத் தடுத்து நிறுத்தவும் தேர்தல் முடிவுகளைத் தமக்குச் சாதமாக மாற்றியமைக்கவும் பெருந்தொகையான ‘சண்டியர்கள்’ தேவை.

எனவே சில வேட்பாளர்கள் இப்போது புதிய பாதையில் இறங்கிவிட்டனர். அதற்காக அவர்கள் தெரிவு செய்தவர்களும் மிகமிகப் பொருத்தமானவர்களே!

அதாவது நீதிமன்றங்களால் குற்றம் காணப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு அதைக் காட்ட முடியாமல் சிறைவாசம் அனுபவிப்பவர்கள் தான் அவர்கள். இப்போது பல வேட்பாளர்கள் அவர்களின் தண்டப்பணத்தைக் கட்டி, அக் குற்றவாளிகளை வெளியே எடுத்துவிடுகின்றனர்.

அவர்கள் ஏற்கனவே களவு, கொள்ளை, போதைவஸ்து தொடர்பான குற்றங்கள், ஆட்கடத்தல் என்பவற்றில் மிகவும் அனுபவம் பெற்ற குற்றவாளிகள்! பொலிஸாருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள்.

அவர்கள் களத்தில் இறங்கிவிட்டால் வன்முறைகள், மிரட்டல்கள், பணப்பரிமாற்றம், கள்ள வாக்களிப்பு என்பன எவ்வித தட்டுத் தடங்கல்களுமின்றி நிறைவேறும்.

எவராவது அவற்றிற்கு இடை ஊறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டால் கழுத்தும் போகலாம் ஆளும் காணாமல் போகலாம்.

இது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியில் ஜனநாயகத் தேர்தலின் இலட்சியம்.

வடமாகாண சபைத் தேர்தலில் கைதிகளை விடுவிக்க வேண்டிய தேவை எதுவும் வன்முறை மூலம் வெற்றி பெற முனையும் வேட்பாளர்களுக்கு கிடையாது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு, ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துதல், கப்பம் கோரி ஆட்கடத்தல் போன்ற வன்முறைகளில் ஈடுபடுவர்கள் ஏற்கனவே இனம் தெரியாதவர்கள் என்ற பேரில் இங்கு சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.

தவிர்க்க முடியாமல் கைது செய்யப்படும் இவர்களில் சிலரும் பிணையில் வெளி வந்துவிடுவார்கள்.

எனவே வட பகுதியில் பணம் கட்டி சிறை மீட்கவேண்டிய தேவையில்லை. அவர்கள் ஏற்கனவே வெளியில் உலவி அரசியல் வன்முறையிலும் தனிப்பட்ட வன்முறைகளிலும் சுதந்திரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

வடக்கில் எவ்வளவு தான் இவர்கள் முறை மீறல்களில் ஈடுபட்டாலும் ஏமாற்றுக்கள் பயமுறுத்தல்கள் எனப் பல வழி முறைகளைக் கையாண்ட போதிலும் கடந்த காலங்களில் இவர்கள் தங்கள் நோக்கங்களில் வெற்றி பெற முடியவில்லை; இனியும் வெற்றி பெறவும் முடியாது!

ஏனெனில் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் அவர்களின் அடிவருடிகளினதும் ஆட்சியதிகாரம் தொடர்பாக இரத்தம் சிந்தி, உயிர்விலை கொடுத்து, உடல் ஊனமுற்று, சொத்துக்களை இழந்து, இடப்பெயர்வின் அவலங்களை அனுபவித்து, தங்கள் சொந்த நிலங்களில் குடியேற முடியாது சொந்தத் தொழில்களைச் செய்ய முடியாது அனுபவங்களைக் கற்றுக்கொண்டவர்கள் அடிப்படை உரிமைகளைப் பெற்று சுதந்திரமாக வாழ்வதையே இலட்சியமையாகக் கொண்டவர்கள்.

மத்திய மாகாணத்திலோ, வடமேல் மாகாணத்திலோ குறுக்கு வழிமூலம் தேர்தல் வெற்றியைப் பெறும் வன்முறை வழிகள் வெற்றி பெறவும் கூடும். தோல்வியும் அடையலாம்.

ஆனால் வடக்கில் எந்தவிதமான குறுக்கு வழியும் செல்லுபடியாகாது என்பதை ஏற்கனவே தமிழ் மக்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்; இனியும் கற்றுக் கொடுப்பார்கள்.

தாயகத்திலிருந்து தமிழ்லீடருக்காக புருஷோத்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*