mahinda-sinthanai-1024x682

அப்பாவி உயிர்களை பலியெடுக்கும் ‘மஹிந்த சிந்தனை’ – மாரீசன்

வெலிவேரியாவில் குடிநீர் நச்சுப் படுத்தப்படுவதற்கு எதிராக மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டனர். ஒருவர் மேலதிக வகுப்புக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த மாணவர்! மற்றவர் கடைக்குச் சென்ற தனது தாயாரைக் காணவில்லையெனத் தேடிச் சென்ற இன்னுமொரு மாணவர். அடுத்தவர் பியகமவில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குப் போவதற்காகக் காத்திருந்த ஒரு குழந்தையின் தந்தை!கொல்லப்பட்ட மூவருமே அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களல்ல! வழிப்போக்கர்கள்!

மேலும் 54 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். அதில் பெரும்பான்மையினர் இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அடைக்கலம் தேடி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு ஓடியவர்களும் சுடப்பட்டுள்ளனர்.

படையினரின் 93 துப்பாக்கிகளும், சுடப்பட்ட 90 தோட்டாக்களும் இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டத்துடன் சம்பந்தப்படாத மூவர் கொல்லப்பட்டது உட்பட அங்கு நடந்தேறிய சம்பவங்கள் அங்கு எப்படியான ஒரு இராணுவக் கொலை வெறியாட்டம் நடத்தப்பட்டன என்பதைத் தெரிவிக்கின்றன.

எனினும் இப்பிரச்சினை தொடர்பாக இராணுவத்தால் அமைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழுவே விசாரணை செய்கிறது. அரசாங்க தரப்பாலும் துப்பாக்கிப் பிரயோகம் மூன்றாம் தரப்பு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும், மக்கள் பெற்றோல் குண்டுகளைப் பாவித்தனர் எனவும் உணமைக் குற்றவாளிகளை மூடி மறைக்கும்  வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படப் போவதுமில்லை தண்டிக்கப்படப் போவதுமில்லை என்பதற்கு அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டன. கடந்த காலங்களில் அனுபவங்களும் அதையே உணத்துகின்றன.

பொதுவாகவே இப்படியான விசாரணைகள் மீது மக்கள் நம்பிக்கையோ எதிர்பார்ப்போ வைப்பதில்லை. விஷயங்களும் ஆறிய கஞ்சி பழங்கஞ்சியாகி அடங்கிப் போய் விடுவதுண்டு.

ஆனால் இச்சம்பவம் தற்செயலாக இடம்பெற்ற ஒரு போராட்டமும் அதை முறியடிக்க எடுக்கப்பட்ட முயற்சியுமா அல்லது ஒரு நீண்ட பின்னணியையும் பரந்த எதிர்காலத்தையும் கொண்ட ஒரு நகர்வின் ஒரு பகுதியா எனச் சிந்திக்கவேண்டியவர்களாகவுள்ளோம்.

எனவே இச் சம்பவங்களின் மூலவேரைத் தேடுவது மிகவும் முக்கியமான ஒரு தேவையாகும்.

கம்பஹா ரஸ்பெத்வவே பகுதியில் ஒரு இறப்பர் கையுறை செய்யும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அதிலிருந்து வெளியேறும் கழிவுகள் காரணமாக அப்பகுதியின் குடிநீரில் நஞ்சு கலப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டது, இதன் காரணமாக குடிநீர்த்திட்டம், கிணறுகள் என்பவற்றின் நீர் மாசுபடுத்தப்பட்டது. அதன் காரணமாக வெலிவேரியாவில் உள்ள 12 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நீரின் நச்சுத்தன்மை காரணமாக ஒரு சிறுமி உயிரிழந்ததாகவும் பலர் நோய் வாய்ப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

அதன் காரணமாக மக்கள் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இறுதியில் அத் தொழிற்சாலை மூடப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

எனினும் குறித்த காலக்கெடுவில் அந்த நிறுவனம் மூடப்படவில்லை. எனவே மக்கள் ஜனநாயக வழியில் போராட்டத்தில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாக வெலிவேரியா சந்தியில் கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெற்ற வீதி மறிப்புப் போராட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க வேண்டுமாயின் முதலில்  பொலிஸாரால் எச்சரிக்கை விடப்படவேண்டும். அதற்கு கட்டுப்படாத பட்சத்தில் தடியடி கண்ணீர்ப்புகைப் பிரயோகம் என்பன இடம்பெறும். அவற்றால் நிலைமை கட்டுப்படுத்த முடியாவிடில் ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம், அப்படியும் கூட பொலிஸாரால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையென்றால் இராணுவம் அழைக்கப்படும்.

அங்கு இராணுவத்தை அழைக்கும் அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கே உண்டு.

ஆனால் இங்கு அப்படி எதுவுமே இடம்பெறாது நேரடியாக இராணுவம் களமிறங்கியுள்ளது.

இத் தாக்குதலுக்கு நேரடியாகக் கட்டளை பிறப்பித்து அதை நடத்தியவர் பிரிகேடியர் தேசப்பிரிய என்ற இராணுவ அதிகாரியே என ஒரு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பிரிகேடியர் தேசப்பிய தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டாரா அல்லது பாதுகாப்புச் செயலரின் கட்டளையின் பேரில் செயற்பட்டாரா, அந்த இறப்பர் கையுறைத் தொழிற் சாலை உரிமையாளர்களுக்கும் இவர்களுக்குமிடையே பிரத்தியேக உறவுகள் உண்டா எனப் பல கேள்விகள் எழுகின்றன.

93 துப்பாக்கிகள் பாவிக்கப்பட்டன என்றால் 90 ரவைகள் சுடப்பட்டன என்றால் அதை ஒரு சிறிய விஷயமாகப் பார்க்க முடியாது. அங்கு ஒரு போர்க்களம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றே கொள்ள வேண்டும்.

மக்கள் உரிமைகளைக் கோரிப் போராடவில்லை. அரசியல் அதிகாரம் கோரிப் போராடவுமில்லை. தங்கள் குடிநீர் நச்சுப்படுத்தப்படும் அநியாயத்தைத் தடுக்கவே போராடினர்.

ஆனால் அரசும் அரச படைகளும் குடிநீரை அசுத்தப்படுத்துபவரின் பக்கம் நின்று மக்களுக்கு விரோதமாகத் தாக்குதல் நடத்தினர்.

அதாவது அரசாங்கத்துக்கு பொது மக்களின் ஆரோக்கியத்தையும் உயிரையும் விட ஒரு தனிப்பட்ட ஆலை உரிமையாளரின் நலனே முக்கிய விஷயமாகியுள்ளது.

இங்குதான் மஹிந்த சிந்தனையின் அபிவிருத்தியின் மர்மம் புதைந்து போயுள்ளது.

இறப்பர் கையுறைகளை உள் நாட்டில் உற்பத்தி செய்யும் போது அவற்றை இறக்குமதி செய்யப் பயன்படும் அந்நியச் செலவாணி மீதமாகும். அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலவாணி வருமானமும் கிடைக்கும். நாட்டுக்கு இது நன்மை பயக்கும் என்பதுடன் பொருளாதார வளர்ச்சியில் சுட்டெண்ணை அதிகரித்துக் காட்டவும் உதவும். இந்த நல்ல அம்சத்தை எவரும் மறுத்துவிட முடியாது.

ஆனால் இத் தொழிற்சாலையைக் கழிவுகளால் மக்களுக்கு புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற பல நோய்கள் உருவாகும் வாய்ப்புக்கள் உண்டு. எனவே இவற்றுக்குச் சிகிச்சையளிக்க பெருந்தொகையில் மருந்துகளுக்காக அந்நியச் செலவாணியைச் செலவிட வேண்டும்.

இதன் காரணமாக ஆலை உரிமையாளர்களும் மருந்து இறக்குமதியாளர்களும் பெரும் இலாபம் ஈட்டுகின்றனர். மக்களோ நோய்களையும் உயிரிழப்புக்களையும் எதிர்கொள்கின்றனர்.

ஆனால் இக் கழிவுகளை சுத்தப்படுத்தி மறுசுழற்சி செய்வதன் மூலம் நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தவிர்க்க முடியும். ஆனால் இலாபம் குறைந்துவிடுமென்பதால் உற்பத்தியாளர்கள் அதைச் செய்வதில்லை. அரசாங்கமும் அதை பொருட்படுத்துவதில்லை.

அனுராதபுர மாவட்டத்தில் நெல்லுற்பத்திக்குரிய உரப்பாவனை காரணமாக மூன்றில் ஒரு பகுதி மக்கள் சிறுநீரகப் பாதிப்புக் குள்ளாகியுள்ளனர் என்ற தகவல் வெளிவந்தது. இறக்குமதியாளர்கள் பெருந்தொகை இலாபத்தை ஈட்ட மலிவான விலைக்கு ஆபத்தை ஏற்படுத்த வல்ல உரவகைகளை இறக்கி விநியோகம் செய்தனர். அரசாங்கமும் பெருமளவில் மானியம் வழங்கி அதை ஊக்குவித்தது. விவசாயிகளும் அதிக விளைச்சலை எதிர்பார்த்து பசளைகளை அதிகமாகப் பாவித்தனர். இயற்கை பசளைகளை முற்காகவே கைவிட்டனர்.

இதனால் இலாபமடைந்தது அந்நிய உர உற்பத்தி நிறுவனங்களும் உள்ளுர் இறக்குமதியார்ளகளும் தரகர்களுமேயாகும்! மக்கள் நோயாளிகளாகினர்!

அரசு, உற்பத்தியில் தன்னிறைவு கண்டு விட்டதாகப் பெருமையடித்துக் கொண்டது.

கடந்த காலத்தில் தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகப்பட்டதில் ஏராளமான வாககனங்கள் பழுதடைந்தமையை மறந்துவிட முடியாது.

இவ்வாறே உயர்குருதி அமுக்கத்திற்கான மருந்துகள், சேலைன், பால்மா வகைகள் இன்னும் எம்மிடையே விநியோகிக்கப்படுகின்றன.

இப்படியான உற்பத்தியாளர்களின் அப்பட்டமான சுய நலம் மூலமும் இறக்குமதியாளர்களின் இலாப வேட்டை காரணமாகவும் நாடு ஒட்டுமொத்தமாக பொருளாதார அபிவிருத்தி அடைவதாக ஒரு தோற்றப்பாடு எழுகிறது.

இப்படியான உற்பத்திகளாலும் இறக்குமதி ஏற்றுமதிகளாலும் தனிப்படட் நபர்கள் பெருந்தொகையை இலாபமாகவும் தரகப்பணமாகவும் ஈட்டுகின்றனர். ஆனால் மக்களோ பாதிப்புக்குள்ளாகின்றனர்.

மக்கள் நோயாளிகளாகவும் மருந்துச் செலவுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியும் உள்ள நிலையில் மருந்துகள் இறக்குமதிக்கு மக்களின் வரிப்பணமே செல்கிறது. அதிலும் இறக்குமதியாளர்கள் இலாபமீட்டுகின்றனர்.

எனவே அரசாங்கமோ வேறு யாருமோ அது பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் நோயிலும் வறுமையிலும் தள்ளப்படுபவர்கள் சாதாரண பொதுமக்களே!

இதுதான் மஹிந்த சிந்தனை! அபிவிருத்தியின் அடிப்படை உண்மை!

வெலிவேரியா சம்பவம் கூட மஹிந்த சிந்தனை என்ற நிண்ட நோக்கின் ஒரு வெளிப்பாடு தான்! இப்படியான சம்பவங்கள் மேலும் மேலும் தொடரும்!

தமிழ்லீடருக்காக தாயகத்திலிருந்து மாரீசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*