australia-kadal-payanam

ஆபத்துக்களுக்குள்ளால் அவுஸ்திரேலியப் பயணங்கள்!

இலங்கையில் வானொலியைத் திறந்தாலோ அல்லது தொலைக்காட்சியை இயக்கினாலோ அடிக்கடி வெளிவரும் விளம்பரம் ஒன்றுண்டு.

“ஆபத்தான படகுப் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு போகாதீர்கள். அங்கு உங்களுக்கு அகதி அந்தஸ்தோ வேலைவாய்ப்போ வழங்கப்படமாட்டாது”, இது அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுக்கும் அறிவித்தல்.

இப்படியான விளம்பரங்கள் வாராவாரம் பத்திரிகைகளிலும் வருவதுண்டு.

எனினும் அடிக்கடி படகுகள் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் சில அந்த நாட்டைச் சென்றடைவதும், சில விபத்துக்களில் அகப்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் அண்மையில் கெவின் ரட் பிரதமராகப் பதவியேற்றதுமே இக் குடியேறிகள் தொடர்பாக ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி அவுஸ்திரேலியாவில் இனி யாரையும் அகதிகளாகக் குடியமர்த்துவதில்லை எனவும் அங்கு சட்டவிரோதமாக வருபவர்கள் பப்புவாயநியுக்கினிக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அங்கு வைத்து அவர்கள் விசாரிக்கப்பட்டு அகதி அந்தஸ்துக்குத் தகுதியுள்ளோர் அங்கேயே குடியேற்றப்படுவர் எனவும் ஏனையோர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சட்டம் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் பசுமைக்கட்சி தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அதேவேளையில் சர்வதேச மன்னிப்புச் சபையும் உலகின் மிகவும் நலிவடைந்த மக்களை அவுஸ்திரேலியா கைவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பிவிட்டது எனக் கண்டனம் செய்துள்ளது. எனினும் கூட இச்சட்டம் துரித கதியில் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பதுடன் கடுமையான முறையில் அமுல்ப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான புதிய நெருக்கடிகள் இப்படகில் பயணிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆபத்தான பாதுகாப்பற்ற கடற்பயணங்கள் அவுஸ்திரேலியாவை நோக்கி இடம்பெற்ற வண்ணமே உள்ளன.

ஒரு படகு அவுஸ்திரேலியாவை அண்மித்த வேளையில் விபத்துக்கு உள்ளானதாகவும் அதில் 90 பேர் பயணம் செய்ததாகவும்  நான்கு பேர் உயிரிழக்க மிகுதிப் பேர் காப்பாற்றப்பட்டு விட்டதாகச் சில செய்திகள் தெரிவிக்கின்றன. கடைசியாக 250 பேர் பயணம் செய்த ஒரு படகு இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு அண்மையில் விபத்துக்கு உள்ளாகி அதில் 13 பேர் இறந்துவிட்டதாகவும் 180 பேர் தப்பிவிட்டதாகவும் மிகுதிப் பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியாதெனவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் திருகோணமலையிலிருந்து புறப்பட்ட ஒரு படகு இலங்கையிலிருந்து 230 கடல் மைல்கள் தொலைவில் பழுதடைந்து தத்தளித்ததாகவும் அதில் பயணம் செய்தவர்கள் வர்தகக் கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்டு விட்டதாகவும் இலங்கை கடற்படையின் செய்திகள் தெரிவித்தன.

உயிராபத்தான இடர்கள் மிகுந்த பயணம் என்பது தெரிந்திருந்தும், அப்படிப் பயணத்தில் தப்பிப் பிழைத்து அங்கு போய்ச் சேர்ந்தாலும் ஒரு வளமான வாழ்வு கிடைக்காது என்பது தெரிந்தும் எமது மக்கள் ஏன் அங்கு போகிறார்கள் என்பது தான் எழும் முக்கியமான கேள்வியாகும்.

படகில் வருவோரை ஏற்றுக்கொள்வதில்லை என்ற அவுஸ்திரேலியாவின் சட்டம் பற்றி அந்நாட்டினந் பிரதமர் கருத்து வெளியிடும் போது மக்களின் மரணங்களை வியாபாரமாக்குபவர்களுக்கு இது நல்ல பதில் எனத் தெரிவித்துள்ளார். அவர் அப்படிக் குறிப்பிடுவது சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களையே தான்.

இங்கு ஒரு முக்கியமான அச்சத்தை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். இச் சம்பவங்களின் போது மரணமடைபவர்களோ அல்லது அவுஸ்திரேலியாவில் புகலிடம் வழங்கப்படாது இன்னல்களுக்கு உள்ளாவது தங்கள் நாட்டில் வாழ முடியாது நாட்டை விட்டு வெளியேறும் அப்பாவிப் பொதுமக்களே தவிர சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களல்ல. அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு உல்லாச வாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

எனவே இச்சட்டம் அவர்களை எதுவுமே செய்துவிடப்போவதில்லை. அவர்கள் எவ்விதத்திலும் தண்டிக்கப்படப் போவதுமில்லை. ஆனால் அவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி நம் மக்கள் புறப்படுகிறார்கள் என்றால் அவர்கள் உயிர் அச்சுறுத்தலின்றி, நிம்மதியாகச் சொந்த நாட்டில் வாழ முடியாத கொடிய நிலை தான் காரணம் என்பது உணரப்படவேண்டும்.

இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிருந்து தான் அவுஸ்திரேலியா நோக்கி மக்கள் செல்கிறார்கள் என்றால் அந்த நாடுகளில் நிலவும் உயிர் வாழ முடியாத அச்சுறுத்தலே காரணமாகும்.

இலங்கையில் அமைதியம் சமாதானமும் நிலவுவதாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட வழக்கு – கிழக்கு துரிதமாக அபிவிருத்தி செய்யப்படுவதாகப் புள்ளிவிபரங்கள் முன் வைக்கப்படுகின்றன.

முதலில் இப்படியான பிரசாரங்களை முன் வைப்பவர் யார் என்பதை அவுஸ்திரேலிய அரச தரப்பினர்  பார்க்கவேண்டும்.

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் தூதுவர் திஸர பெரேரா, இவர் இலங்கையில் கடைசிப் போரை வழி நடத்தி பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராணுவத் தளபதிகளில் ஒருவர். இவர் தான் இலங்கை பற்றிய பார்வையை அவுஸ்திரேலியாவில் முன்வைப்பவர். இவர் தாங்கள் கடந்த காலங்களில் நடத்திய மனித வேட்டையையோ, தற்போதும் தொடரும் இன ஒடுக்குமுறைகளையும் ஒப்புக்கொள்வாரா? பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட ஒரு நாட்டில் எல்லா மக்களும் சமாதானமாகவும் அமைதியாகவும் அபிவிருத்தியின் பலன்களை  அனுபவித்து வருவதாகவும் ஒரு மாயத் தோற்றத்தை அங்கு ஏற்படுத்துவதிலேயே முனைப்புக் காட்டி வருகிறார்.

இன்று தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை இவர் சர்வதேச சமூகத்தின் முன் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?

இது மட்டுமன்றி இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகராக இருப்பவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா. இவர் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்தவர்களைப் படுகொலை செய்தமை, சரணடைந்த ஆண், பெண் போராளிகளை நிர்வாணப் படுத்தி சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு தலைமை வகித்தவர். இவ்வாறே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தூதுவராக இருப்பவரும் இந்த இறுதிப் போரில் முக்கிய பங்காற்றிய ஒரு இராணுவ அதிகாரியான ரவிநாத் ஆரியசிங்க.

இவர்கள் இலங்கையில் நிலவும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்தின் முன்பு முன்வைப்பார்களா? அப்படி முன் வைத்து தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்வார்களா?

வடமாகாண சபையின் ஆளுநர், கிழக்கு மாகாண சபையின் ஆளுநர், திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஆகியோரும் இராணுத்தின் தளபதிகள் மட்டத்திலுள்ள அதிகாரிகளே. இப்படியான நிலையில் வலி.வடக்கில் 28,000 குடும்பங்களின் காணிகள் அரசால் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சம்புரில் 4,000 குடும்பங்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. இவை விவசாய விளைநிலங்களையும், முக்கிய மீன்பிடி மையங்களையும் கொண்ட பகுதிகளாகும். இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்தது மட்டுமன்றி தங்கள் தொழில்களையும் இழந்து அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் அவலங்களை அனுபவிக்கின்றனர். கொக்கிளாய், மணலாறு ஆகிய பகுதிகளிலும் இதே நிலைமையே. இதே போன்று மன்னார் மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் நிலப் பறிப்புக்களும் தொழில் செய்ய முடியாத நிலைமையும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதேவேளையில் அரசாங்கம் வீதிகளை அகலித்து விட்டுச் சுற்றுலா மையங்களையும் பெரும் சுற்றுலா விடுதிகளையும் கட்டிடங்களையும் அமைத்துவிட்டும் வடக்கு – கிழக்கு துரித கதியில் முன்னேறுகிறது எனப் புள்ளவிபரங்களைக் காட்டுகிறது. இப்படியான உட்கட்டமைப்புக்களுக்கான தொழில்நுட்பவியலாளர்கள் முதல் கொண்டு கூலித் தொழிலாளர்கள் வரை தென்னிலங்கையிலிருந்தே கொண்டுவரப்படுகின்றனர்.

இப்படியான ஒரு இன ஒடுக்குமுறை, இன அழிப்பு நிலவும் ஒரு நாட்டிலிருந்து மக்கள் அகதிகளாக வெளியேறுவதைத் தவறென்று சொல்லிவிடமுடியுமா?

எனவே சர்வதே சமூகம், அவுஸ்திரேலிய அரசும் மேற்படி உண்மை நிலைமைகளைப் புரிந்து கொண்டு படகுகள் மூலம் வரும் அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே வேளையில் இலங்கை அரசு, தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் கொடிய இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி, தமிழ் மக்களின் நியாய ரீதியான உரிமைகளை வழங்க சர்வதேசம் கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்பதே இலங்கை வாழ் தமிழர்களின் கோரிக்கையாகும்.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*