goth-1024x682

எலும்புக்கூடுகளின் வாக்குமூலம் – மாரீசன்!

இப்போதெல்லாம் எலும்புக்கூடுகள் பேச ஆரம்பித்துவிட்டன. மனிதக் குரல்கள் அடக்கியொடுக்கப்படும் அகோர நாட்களில் நியாயத்தின் குரலாக, உண்மையின் குரலாக மறைக்கப்பட்ட அநியாயங்களைக் கேள்விகளால் அம்பலப்படுத்தும் குரலாக எலும்புக்கூடுகள் மண்ணைப் பிளந்து கொண்டு எழுந்து நிற்கின்றன.அண்மையில் புத்தூர் வாதரவத்தையில் இராணுவக் காவலரண் ஒன்று அமைந்திருந்த பகுதிக்கு அண்மையில் ஒரு பற்றைக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட தலைமுடியும் அருகே கிடந்த ஆபரணங்களும் ஆடைகளும் மூலமாக அந்த எலும்புக்கூடு தான் ஒரு பெண் என்பதை சொல்லிவிட்டது. அது மட்டுமல்ல அது கிடந்த இடத்தினூடாக உரும்பிராயில் ராஜிக்கு எனன் அவலம் ஏற்பட்டதோ செம்மணியில் கிருசாந்திக்கு என்னென்ன கொடுமைகள் இழைக்கப்பட்டனவோ அவை தான் தனக்கு ஏற்பட்ட அவலச்சாவுக்கும் காரணம் எனச் சொல்லிவிட்டது.

தட்டுத்தடுமாறி தயங்கி மருண்டு தடயவியல் நிபுணர்களின் அறிக்கைகள் வருவதற்கு முன்பாகவே அது பேசிவிட்டது.

அதேவேளையில் மாதகல் பகுதியில் மீள் குடியேறிய ஒருவர் மலக்குழியைச் சுத்தப்படுது்தும் போது அதற்குள்ளிருந்தும் இரு எலும்புக்கூடுகள் முளைத்துவிட்டன. அதே பகுதியில் ஒரு கிடங்கு வெட்டும் போதும் வேறு இரு எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

முப்பது வருடங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த அப்பகுதியில் காணப்பட்ட எலும்புக் கூடுகள் மட்டும் பேசாமல் இருந்துவிட முடியுமா?
அவையும் பேசின!

செம்மணிப் புதை குழிகள் அங்கு மட்டுமல்ல எங்கெங்கு இராணுவம் நிலை கொண்டிருந்ததோ அங்கெல்லாம் மனித எலும்புக்கூடுகள் உள்ளன என்பதை முரசறையாமலேயே பிரகடனம் செய்தன.

உயிரோடும் உடையோடும் நடமாடிய மனிதர்களை மண்ணடியில் புதைத்து எலும்புக் கூடாக மாற்றியவர்கள் யார் என்பதை அச்சமின்றி ஆணித்தரமாக எடுத்துரைத்தன.

நிபுணர்களின் நீண்டகால ஆய்விலும் அக்குவேறு ஆணிவேறாய் பிரித்து நடத்தும் விசாரணைகளிலும் கண்டுபிடிக்க முடியாதவற்றை அவை வார்த்தைகளின்றியே வெளிப்படுத்தவிட்டன.

எலும்புக்கூடுகள் இப்போது மட்டும் தான் பேசுகின்றன என்பதல்ல; அவை எப்போதோ பேச ஆரம்பித்துவிட்டன.

ஆனால் அவை கேட்கவேண்டிவர்களின் காதில் கேட்பதில்லை. ஏனெனில் கேட்க வேண்டியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றும் எடுபிடிகளே எலும்புக்கூடுகளை உருவாக்கியவர்கள்.

எனினும் சில எலும்புக்கூடுகள் பேசும் போது அந்தக் குரல் அண்ட சராசரங்களையும் அதிர்ந்து விடுவதுண்டு. அப்படித்தான் கிருஷாந்தியின் எலும்புக்கூடு பேசிய போது ராஜபக்ஷ என்ற படைச் சிப்பாய் மரணதண்டனைக் கைதியாக்கி நீதிமற்றில் நிறுத்தப்பட்டான்.

அவனை நோக்கி நீண்ட தூக்கு கயிறு அவனை பேச வைத்தது. அவன் பேசினான்.

அவன் பேசப் பேச செம்மணியில் பல எலும்புக்கூடுகள் மேலெழுந்தன.

தங்களுக்கு நடந்தவற்றை அவை திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன.

நீதி விசாரணைகள் நடந்தன; நடக்கின்றன; இன்னும் இன்னும் நடக்கப் போகின்றன;. எனினும் தீர்ப்புக்கள் வழங்கப்படவில்லை; வழங்கப்படப் போவதுமில்லை. ஆனால் எலும்புக் கூடுகள் எப்போதோ உண்மைகளை அம்பலப்படுத்திவிட்டன.

எப்படியிருந்த போதிலும் –

கட்டளையிட்ட அதிகாரிகள், படுகொலைகளின் பங்காளிகள் பதவி உயர்வு பெற்றுவிட்டனர்; சிலர் ஓய்வு பெற்றுவிட்டனர்; ஓரிருவர் கொல்லப்பட்டும்விட்டனர்.

ராஜபக்ஷ மட்டும் இன்னும் சிறையில்!

அவன் வெகுவிரைவில் வெளியில் வந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு அமைச்சராக வந்தால் அது அப்படியொன்றும் அதிசயமல்ல.

செம்மணி எலும்புக்கூடுகளைப் போன்றே மாத்தளை மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள ஒரு நிலப் பகுதியில் எலும்புக்கூடுகள் மேலெழுந்து பேச ஆரம்பித்துவிட்டன.

அவைகளின் குரல்கள் நீதிமன்றம் வரை போய்விட்டன. அவைகளின் குரல் அதிகார பீடங்களையே அதிரவைத்துவிட்டன.

மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டடம் ஒன்றை அமைக்க அத்திவாரம் வெட்டியபோது சில எலும்புக்கூடுகள் முளைத்தன. மேலும் மேலும் வெட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை எழுபதைத் தாண்டியது. மருத்துவ ஆய்வுகளின் படி அவை 1988 – 1990 காலப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த நாட்கள் –

ஜே.வி.பி. போராளிகள் ஆதரவாளர்கள் என்ற பேரில் எழுதினாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்ட காலம்.

மாத்தளை மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காணாமற் போயினர். காணாமல் போன இளைஞர்களின் பெற்றோர்கள் பொங்கியெழுந்தனர்.

விவகாரம் நீதிமன்றம் ஏறியது!

நாமல் ராஜபக்ஷ என்ற மனித உரிமை ஆர்வலரான சட்டத்தரணி விவாகரத்தை கையிலெடுத்தார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஊடகங்கள் வாய் திறந்தன.

அன்றைய காலப்பகுதியில் அப்பகுதியின் இராணுவப் பொறுப்பதிகாரியாக இருந்தவர் இன்றைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ.

விசாரணை செய்த நீதிபதிக்கு இடமாற்றம்!

விசாரணைக் குழுவினருக்கு பல்வேறு நெருக்கடிகள்! விசாரணைகளில் இழுபறிகள்!

இறுதியில் இவ்விவகாரம் பற்றி ஆராய ஜனாதிபதியால் ஒரு விசேட நிபுணர் குழு நியமனம்! இக் குழு தொடர்பான நம்பிக்கையீனத்தை மனித உரிமை ஆர்வலர் நாமல் ராஜபக்ஷ கடுமையான தொனியில் ஆட்சேபித்துள்ளார்.

விடயம் சடையப்பட்டுவிடும் என்பது காணாமல் போன இளைஞர்களின் உறவுகளின் அங்கலாய்ப்பு.

எனினும் எலும்புக்கூடுகள் பேசிக்கொண்டேயிருக்கின்றன.

குற்றவாளியைப் நோக்கி கோபக்குரல் எழுப்பிக் கொண்டேயிருந்தன.

மாத்தளை எலும்புக்கூடுகள் எழுப்பிய பேரொலியில் பல வருடங்களுக்கு முன்பு மண்டைதீவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் விழித்தெழுந்துவிட்டன.

கிணறுகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பேச ஆரம்பித்துவிட்டன. குற்றவாளிகளை நோக்கி விரல்களை நீட்ட ஆரம்பித்துவிட்டன.

அது யாழ்.குடாநாடு முழுமையாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம்.

தீவுப் பகுதியைக் கைப்பற்றும் நோக்குடன் ஒரு படையணி ஊர்காவற்றுறை ஊடாக முன்னேறியது. புங்குடுதீவு, வேலணை என முன்னேறிய இராணுவம் மண்டைதீவை ஒரு பெருஞ்சமரின் பின் கைப்பற்றுகிறது.

மண்டைதீவில் கண்ணில் காணப்பட்ட மக்கள் அனைவரும் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அவர்களின் சடலங்கள் கிணறுகளுக்குள்ளும் குழிகளிலும் வீசப்படுகின்றன.

அப்படையெடுப்பின் பொறுப்பதிகாரி இன்றைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தான்! எனவே மண்டைதீவு எலும்புக் கூடுகளும் இப்போ குற்றவாளியை இனங்காட்டிவிட்டன.

எலும்புக்கூடுகளை நட்டநடு வீதியில் வைத்துப் படுகொலை செய்ய முடியாது; கடத்திக் காணாமல் போகச் செய்ய முடியாது. எனவே – எலும்புக்கூடுகள் துணிந்து பேசுகின்றன.

உயர் அதிகாரத்தில் உள்ளவர்களைக் குற்றம் சாட்டுகின்றன.

ஒட்டுமொத்தத்தில் அவை துணிந்து உண்மையைப் பேசுகின்றன.

அது மட்டுமல்ல –

இலங்கையின் போர்க்குற்றங்கள் மனித குல விரோத நடவடிக்கைகள் தொடர்பாக சாட்சியம் சொல்லவும் போகின்றன.

அதனால் தான் முள்ளிவாய்க்கால் எலும்புக்கூடுகளை அமிலத் திரவம் ஊற்றி அழித்தனர்.

அழிக்கப்பட்டாலும் எலும்புக் கூடுகள் பேசும்! நீதி கிட்டும்வரை அவை பேசிக்கொண்டே இருக்கும்.

தமிழ்லீடருக்காக தாயகத்தில் இருந்து மாரீசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*