sampanthan-4-1024x682

உரிமைகளா? பதவிகளா? – மாரீசன்

வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் களம் சூடேறிவிட்டது.  ஒருபுறம் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றினால் தனிநாடு அமைப்பதற்கான அத்திவாரமாக அமைந்துவிடும் என்பது சிங்களக் கடும் போக்குவாதிகளன் பிரசாரம்!

மறுபுறும் வடமாகாண சபையின் முதலமைச்சராக, தான் தெரிவு செய்யப்பட்டால் 13வது திருத்தச் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட முழுமையான அதிகாரங்களுடன் ஆட்சி நடத்தப்போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சூளுரை!

இன்னொருபுறம் ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் என்பன தனித்தனியாக குழுக்களை வடமாகாண சபைத் தேர்தலில் நிறுத்தப்போவதாக அறிவிப்பு!

இப்படி வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகப் பல்வேறு அரசியல் சக்திகளும் பல்வேறு முனைகளில் திட்டங்களை வகுக்க, தமிழ்மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழ் மக்களின் தலைமை சக்தியாக தமிழ் மக்களாலும் சர்வதேச மட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவிகள் தொடர்பாக இழுபறிகளுக்குள் சிக்கிச் சீரழிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய முரண்பாடுகளும் மோதல்களும் சர்ச்சைகளும் தோன்றிப் பல விதமான குழப்பங்களை ஏற்படுத்தின. சில பகிரங்க அறிக்கைகள் கூட வெளியிடப்பட்டன. இறுதியில் ஒருவாறு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியை முதன்மை வேட்பாளராக நியமிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் அது தொடர்பான குழப்பங்களும் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த நம்பிக்கையீனங்களும் இன்னும் தொடர்கின்றன. மழைவிட்டாலும் தூவானம் விடாத கதையாக!

இப்படித் தூவானம் விடாத நிலையில் அடுத்த மழை ஆரம்பித்துவிட்டது. வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பிரச்சினை தான் அது. விவாதங்களும் கருத்துமோதல்களும் தொடர்ந்த நிலையே காணப்படுகின்றது. இப்படியான நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமைகளுக்காகப் போராடுவதையா அல்லது பதவிகளுக்காகப் போராடுவதையா கொள்கையாகக் கொண்டுள்ளது, என்ற பெருங்கேள்வி எழுந்துள்ளது.

ஜனநாயக ஆட்சியில் சில சேவைகளைச் செய்வதற்கு பதவிகள் தேவை என்பது உண்மைதான். ஆனால் உரிமைப்போரில் பதவி முக்கியமானது தான் என்றாலும் அது தான் முடிவானதல்ல. ஒரு கட்சியைச் சேர்ந்தவர் ஒரு பதவியை வகித்தால் அவர் கட்சியின் முடிவை அமுல்ப்படுத்த வேண்டிய கடப்பாடு உடையவர். அதை மீற அவருக்கு எவ்வித உரிமையுமில்லை. அப்படியாயின் ஏன் இந்தப் பதவிப் போட்டி?

பதவிக்காக ஒருவருடன் ஒருவரும், கட்சியுடன் கட்சியும் மோதுகின்றன என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த அர்ப்பணமான கொள்கைப் பற்றும் இல்லை என்பது தான் அர்த்தம். ஒரு ஐக்கியப்பட்ட செயற்பாட்டுக்குப் பதிலாக ஒருவரின் மேல் ஒருவர் நம்பிக்கையற்றிருக்கும் நிலை நிலவுகிறது என்பதே அதன் அர்த்தமாகும்.

தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த அதிகாரம் கொண்ட சிலர் தமது முடிவுகளை ஏனைய அமைப்புக்கள் மேல் திணிக்க முயல்வதாக ஒரு குற்றச்சாட்டு ஏற்கனவே நிலவி வந்தது. அண்மையில் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் தனது முடிவை ஏனைய அமைப்புக்களிடம் மட்டுமன்றி தமிழரசுக்கட்சியினரிடம் கூடத் திணித்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் பதவியில் இருப்பவர்கள் மூலம் கட்சிகளின் முடிவுகளைச் செயல்படுத்த முடியுமா என்பதில் நம்பிக்கையீனம் ஏற்படுவது இயல்பே! இதுவே கூட்டமைப்புக்குள் எழும் பதவிப் போட்டிகளுக்கான காரணம் என நம்பும் நிலையே உருவாகின்றது.

முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களோ, அல்லது ஆதரவாளர்களோ முன்னிலைப்படக்கூடாது என இந்தியா அழுத்தம் கொடுப்பதாகவும் அதற்கமைவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் தலைமைப்பீடம் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பாக முடிவுகளை எடுக்க முயல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வடிப்படையிலேயே குழப்பங்களும் முரண்பாடுகளும் தோன்றுகின்றன எனவும் கூறப்படுகிறது.

இன்று தமிழ் மக்கள் படு கொடூரமான ஒடுக்கு முறைக்களுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் நில உரிமை, கடல் உரிமை என்பன கூட ஒவ்வொரு நாளும் பறிக்கப்படுகின்றன.

எனவே நாம் எமது உரிமைகளுக்காக அர்ப்பண உணர்வுடன் போராடவேண்டியவர்களாகியுள்ளோம். பதவிகளுக்காகவல்ல! எமது உரிமைப்போரில் பதவிகள் ஒரு ஆயுதம் மட்டுமே! நேர்மையும் தியாகமும் இலட்சியப் பற்றுறுதியுமே தீர்க்கமானவை.

எமது தலைமைச் சக்தியை நாமே தீர்மானிக்க வேண்டும். வேறு எந்த ஒரு நாடோ அல்லது உளவு நிறுவுனமோ அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஏற்கனவே வி.நவரத்தினம், மன்சூர் மௌலானா, எம்.எம்.ஏ.முஸ்தபா, செல்லையா ராஜதுரை போன்ற ஆரம்பகாலத் தலைவர்களையும் விசுவாசமான தொண்டர்களையும் புறமொதுக்கிவிட்டு இறக்குமதித் தலைவர்களை உச்சியில் தூக்கிவைத்தமையே தமிழரசுக்கட்சி பலவீனமடைந்தமைக்கும் வீழ்ச்சியடைந்தமைக்கும் காரணம் என்ற வரலாற்று உண்மையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கற்றுக்கொள்ள மறுப்பது பெரும் துரதிஷ்டமே.

அவ்வாறே இந்தியாவின் வழிநடத்தலின் படி உரிமைப்போராட்டத்தை மழுங்கடித்தமையே தமிழர் விடுதலைக் கூட்டணியின் அழிவுக்குக் காரணம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை தமிழர் விடுதலைக்கூட்டணி என்கிற மிகப்பெரிய தமிழ்கட்சிகளின் கூட்டணி ஒருங்கிணைக்கப்பட்டபோது வன்னியில் பலம்பெற்றிருந்த தமிழரசுக்கட்சியின் செல்லத்தம்பு, காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர் சிவசிதம்பரம் ஆகியோருக்கு பதவி வழங்குவதற்கு ஏற்பட்ட நெருக்கடியை சமாளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முட்டாள்தனமான நடவடிக்கை மூதூரில் சேருவில என்ற ஒரு சிங்களத் தொகுதி உருவாகுவதற்கு வழிசமைத்ததும் வரலாற்றின் கசப்பான சம்பவங்களில் ஒன்றாகும்.

வவுனியா என்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவதில் செல்லத்தம்பு – சிவசிதம்பரம் ஆகியோரில் யாருக்கு பங்கீடு என்ற இழுபறி நிலைகாணப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தினை உணர்ந்த அன்றைய சிறீமா பண்டாரநாயக்க அரசு இதற்கு மாற்றீட்டுத் திட்டம் என்ற பெயரில் சதி முயற்சி ஒன்றை மேற்கொண்டு அதில் வெற்றியும் ஈட்டியது. வவுனியா தொகுதியை முல்லைத்தீவு – வவுனியா என்ற இரு தொகுதிகளாக பிரிப்பதற்காக தாம் இணங்குவதாகவும் அதன் மூலம் செல்லத்தம்பு, சிவசிதம்பரம் ஆகிய இருவருக்கும் சந்தர்ப்பம் வழங்க முடியும் என்றும் தெரிவித்த அன்றைய அரசு அதற்கு மாற்றீடாக மூதூர் தொகுதியை இரண்டாகப் பிரிப்பதற்கு இணங்குமாறு கேட்டபோது, சேருவில தொகுதியை உருவாக்க அன்றைய தமிழ்த் தலைவர்கள் உடன்பட்டனர்.

அதன் பிரதிபலனே இன்று திருகோணமலையில் தமிழ்மக்களின் இருப்புக்கு மிகுந்த நெருக்கடியை கொடுக்கும் நிலையில் பிரமாண்டம் பெற்றுள்ள சேருவில சிங்கள தொகுதியாகும்.

இவ்வாறான, வரலாற்றுத் தவறுகளை பாடங்களாக இன்றுவரையில் தமிழ்த் தலைவர்கள் கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகிறது.

ஆயுதப் போராளிகளையும் இப்போராட்டத்தில் அர்ப்பணமான ஏராளமான தமிழ் மக்களையும் எவராவது அலட்சியம் செய்தாலோ, கீழ்மைப்படுத்தினாலோ அவர்கள் தமிழ் அரசியல் அரங்கிலிருந்து தூக்கி வீசப்படுவது நிச்சயம்.

– தமிழ்லீடருக்காக மாரீசன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*