leadereditorialmahinda-vikki-sampanthan

மஹிந்தவின் பரிசோதனைக் கருவியாக விக்கி; சலுகைக்காக தலையாட்டினார்களா சுரேஷ், செல்வம்?!

மிக நீண்டகாலக் கனவுகளுக்கும் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்புக்களுக்கும் சி.வி.விக்கினேஸ்வரனை முதன்மை வேட்பாளராகத் தெரிவித்து அறிவித்தல் விடுத்ததன் மூலம் முற்றுப்புள்ளிவைத்திருக்கின்றார் இராஜவரோதயம் சம்பந்தன்.

மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிறேமச்சந்திரன், சுமந்திரன், சரவணபவன், வித்தியாதரன் எனப் பலர் முதலமைச்சர் கனவு சுமந்தபோதிலும் இறுதியில் எவரும் எதிர்பார்க்காத வகையில் தனிப்பட்ட விடாமுயற்சியாக சுமந்திரனுக்கு அடுத்ததாக சி.வி.விக்னேஸ்வரனை கட்சிக்குள் உள்வாங்கியிருக்கிறார் சம்பந்தன்.

கொண்ட கொள்கையில் இருந்து வளைந்துகொடுக்காதவர், நேர்மையானவர் என்று பரவலாக குறிப்பிடப்படுகின்ற சி.வி.விக்னேஸ்வரன், கல்வியாளர், சட்ட நுணுக்கம் தெரிந்தவர் போன்ற விடயங்களை முதன்மைப்படுத்தி அவருக்கான நியாப்பாடுகளை சம்பந்தன் முன்வைக்கின்ற போதிலும் குறித்த தெரிவின் பின்னால் இருக்கக் கூடிய மிக மோசமான முரண்நிலைகள் தொடர்பில் ஆராய முற்படுகின்றது தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்.

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர தீர்வை பெற்றுத்தரப்போவதாக மார்தட்டி வருகின்ற இரா.சம்பந்தன், ஈழத்தமிழர்களின் வலிகளை புரிந்துகொள்ள முடியாத வாழ்க்கை வாழ்ந்த சுமந்திரன் என்கின்ற ஒரு சட்டத்தரணியை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற வைத்தது மட்டுமன்றி தனது பிரத்தியேக செயலாளர் ஆகவும் ஆக்கிக் கொண்டிருந்தார்.

சுமந்திரன் கட்சிக்குள் வந்தபோது பெரிய அளவிலான எதிர்ப்பு இல்லாத போதிலும் கால ஓட்டத்தில் சுமந்திரன் தன்னை வெளிப்படுத்திய விதம், தமிழ்த் தேசியம் தொடர்பிலான அவரது போக்கு என்பன அவருடைய உண்மை முகத்தினை வெளிப்படுத்திவிட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் கொழும்பு வாழ்க்கைக்குள் கொழும்புச் சூழலுக்குள் வாழப் பழகிக் கொண்ட, நீதிகடந்த அக்கிரமங்களை நிகழ்த்திக் குவித்த சிங்கள பேரினவாத அரச உயர் நீதிமன்றின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை வடக்கு மாகாண சபையின் முதன்மை வேட்பாளராக அறிவித்திருக்கின்றார் இரா.சம்பந்தன். இன ஐக்கியத்தை முன்னிறுத்தி வலியுறுத்திவருகின்ற சம்பந்தன், அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் சம்பந்தியான சி.வி.விக்கினேஸ்வரனை நியமித்ததன் மூலம் தனது நிலைப்பாட்டினை பகிரங்கமாக வெளிப்படுத்துவதாக கருத முடியும்.

ஆனாலும் இதுகால வரையில் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமாறு அரசாங்கம் விடுத்த கோரிக்கைகளை நிராகரித்துவந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திடீரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்தன் நோக்கம் என்ன? இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் மஹிந்தவைச் சந்தித்திருந்தார். அதே நாளே பேச்சுக்கு வருமாறு தமக்கும் அழைப்புவிடுத்திருந்ததாக சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். மஹிந்தவின் ஒரு தொலைபேசி அழைப்பினை அடுத்து விழுந்தடித்துச் சந்தித்த சம்பந்தன் என்ன பேசியிருப்பார்? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனாலும் வடக்குத் தேர்தல் நீதியாக நடைபெறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றிபெறும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மிடம் உறுதி அளித்ததாக இரா.சம்பந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்.

கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் தெரிவு சூடு பிடித்திருந்த நிலையில் சம்பந்தன் – மஹிந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. வழமையான பாணியில் தனியாகவே அன்றைய சந்திப்பிலும் சம்பந்தன் கலந்துகொண்டிருந்தார். 1990களில் லக்ஷ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றவர்களுக்கு நிகராக இன்றுவரையில் சிங்கள பேரினவாத அரசினால் மதிக்கப்படுகின்ற இரா.சம்பந்தன், கடந்த வாரம் வரையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தத் தவறவில்லை. விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் தனது பெயரும் இருந்ததாகத் தெரிவிக்கும் அவர் ஆயுதப் போராட்டத்தினை தொடர்ந்தும் இழிவுபடுத்தியே வந்திருக்கின்றார்., மஹிந்த ராஜபக்ஷவுடனான தனிப்பட்ட சந்திப்பில் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி மட்டும் தான் பேசியிருப்பாரா? என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகச் சொல்லிக்கொள்கின்றன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இதுவரையில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பிலான இறுதி செய்யப்பட்ட திட்டம் எதுவும் இல்லை. தேர்தல் காலங்களில் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பக்கம் பக்கமாக தயாரிக்கப்படுமே தவிர வெற்றியின் பின்னர் அது குறித்து எவரும் திரும்பிப் பார்ப்பதுமில்லை. இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு அரசாங்கமும் சம்பந்தன் தரப்பும் கொடுக்கின்ற முக்கியத்துவத்தின் பின்னால் சில காரணங்கள் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. சர்வதேசத்தின் மத்தியில் எழுந்துவருகின்ற நெருக்கடிகளை சமாளிப்பதற்காக அல்லது அந்த நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக எதுமே இல்லாத ஒரு தீர்வுப் பொதியினை தமிழ் மக்களின் தலையில் கட்டியடிக்க ஆளுந்தரப்பு திட்டமிட்டுவருகின்றது. அவ்வாறான தீர்வு வடக்கினை மட்டும் மையப்படுத்தியதாக முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகளே காணப்படுகின்றன. கிழக்கு மாகாண சபையினை இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையினைக் கைப்பற்றும் சாத்தியமிருப்பதால் அதனை தமக்குச் சாதமாக பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் எண்ணிக்கொள்வதாகவே தெரிகிறது.

இந்த இடத்தில் மாவை சேனாதிராஜவை விடவும் விக்கினேஸ்வரனே பொருத்தமானவர் என்பதற்காக சம்பந்தன் தெரிவித்திருக்கின்ற காரணங்கள் இரண்டைச் சுட்டிக்காட்டமுடியும்.
1. தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சர்வதேசம் தமிழ் மக்களின் தலைவராக பார்த்த நிலையில் தற்போது விக்கினேஸ்வரன் நியமிக்கப்பட்டால் அவரை ஒரு வித்தியாசமான தலைவராக சர்வதேசம் பார்க்கும் என்று சம்பந்தன் குறிப்பிட்டிருக்கின்றார்.
2. ஆங்கில மொழிப்புலமை குறைந்த மாவைசேனாதிராஜாவினால் பான்கீ மூனுடன் எவ்வாறு பேச முடியும்?
இந்த இரண்டுவிடயங்களின் பின்னாலும் எழுகின்ற கேள்விகளுக்கு சம்பந்தனிடம் பதிலிருக்கலாம். கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களிடமோ, அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ பதிலிருக்குமா?

வடக்கு முதலமைச்சர் பதவி என்பது ஒரு நிர்வாக அதிகாரி என்பது மட்டுமே என்பது அனைவரும் அறிந்த விடயம். இந்த நிலையில் சி.வி.விக்னேஸ்வரனை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் ஒப்பிட்டு சம்பந்தன் கதைவிடுவது, தமிழ் மக்களின் எதிர்காலத்தலைவராக அவரே திகழப்போகின்றாரா? அல்லது அவர் தான் தலைவர் என்று தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு சம்பந்தன் முற்படுகின்றாரா?

இரண்டாவது கேள்வி வடக்கு முதலமைச்சர் ஐ.நா செயலருடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலை ஏற்படும் என தெரிவிப்பதிலும் ஒரு விடயம் தென்படுகின்றது. விக்னேஸ்வரன் தெரிவின் ஊடாக மிக முக்கிய நிலைப்பாடுகளை அரசாங்கமும் சம்பந்தனும் கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றும் வகையில் குறித்தவிடயங்களும் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற முக்கியத்துவமும் அமைந்திருக்கின்றன.

வடக்கு மாகாண சபைக்கு அதிகாரம் அற்ற அதிகாரங்களை மட்டும் வழங்குவதுடன் அனைத்தும் முடிந்துவிட்டதாகக் காட்டுவதே சிங்களப்பேரினவாதத்தின் நிலைப்பாடாக அமைந்திருக்கின்றது. அவ்வாறான ஒரு தீர்வு வழங்கப்பட்டால் தமிழ் மக்களின் பிரதிநிதியாக விக்னேஸ்வரனே இருப்பார். அவரே தமிழ் மக்களின் தலைவராக பான்கீ மூன் உட்பட்ட சர்வதேச பிரதிநிதிகளைச் சந்திப்பார் என்பதே சம்பந்தனின் நிலைப்பாடாக இருக்கலாம்.

இந்த இடத்தில் தான் ஒரு சந்தேகம் எழுகிறது, மிக ஆபத்தான ஒரு கட்டத்திற்கான அடித்தளம் தான் சி.வி.வி தெரிவு என்பதற்கு மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. இந்த திட்டத்தினை வகுத்துக்கொடுத்தது சம்பந்தனா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதேவேளை அவ்வாறான தீர்வு வழங்கும்பட்சத்தில் அதிகாரத்தில் இருப்பவர் போர்க்குணம் அற்றவராக, மக்களின் வலிகளைப் புரிந்துகொள்ளாதவராக, ஆன்மீக வாதியாக இருப்பதன் ஊடாக எதிர்காலத்தில் தமிழ் மக்களை ஒரு பதாதைகூடத் தூக்கி ஆர்ப்பாட்டம் செய்யக்கூட முடியாத அளவிற்கு மிக மோசமான கோழைகளாக ஆக்கிவிடுவதும் ஒரு பக்க நோக்கமாக இருந்திருக்கலாம்.

விக்கினேஸ்வரன் தெரிவு அரசாங்கத்தின் பரிசோதனை முயற்சி என்று நாங்கள் குறிப்பிட்டமை தொடர்பிலான விடயங்களை இந்த இடத்தில் ஆராயலாம்,

தீர்வு விடயத்தில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினையே நாங்கள் பெற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துவருகின்ற சம்பந்தன் சிங்கள கடும்போக்குவாதிகளும் விரும்பக்கூடிய தீர்வினையே பெற்றுக்கொடுப்பார் என்பதில் சிங்களப் பேரினவாத அரசுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையிருக்கும். அந்த நிலையில் அவ்வாறான தீர்வு முயற்சி முன்னெடுக்கும் போது சம்பந்தன் அதனை எவ்வாறு எதிர்கொள்வார் என்பதை பரிசீலித்துப் பார்த்திருப்பதாகவே தெரிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட எவருடைய கருத்தினையும் இம்மியளவேனும் சம்பந்தன் செவிமடுக்கவேயில்லை என்றும் சம்பந்தன் மிக இறுக்கமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு கூட்டமைப்பில் இருந்த ஏனையவர்கள் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போனதாகவும் தெரிகிறது. சாதாரண ஒரு முதன்மை வேட்பாளர் தெரிவு விடயத்திற்காக போராடி சாதிக்கத் திராணியற்றவர்கள் இறுதித்தீர்வு விடயத்தினை சம்பந்தன் கையிலெடுத்து இரண்டு வார்த்தைகள் உரக்க கூச்சலிடுவதுடன் எல்லாமே முடிந்துவிடும் நிலையே காணப்படுகின்றது. முப்பது ஆண்டுகளாக தமிழன் சிந்திய இரத்தத்தின் விலை மஹிந்தவிடம் விலைபோன ஒரு சாதாரண நபரின் வார்த்தைகளுடன் முடிந்துவிடப்போகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. கூட்டமைப்பில் இருக்கக் கூடிய ஏனைய கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களை நம்பி விடுதலை இயக்கங்களுடன் நின்ற பல்லாயிரம் இளைஞர்கள் உயிர்பிரிந்த சம்பவங்கள் அவர்களிடம் இல்லாமல் போய்விட்டதோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

விக்கினேஸ்வரன் தெரிவு நடைபெற்றபோது நடைபெற்ற சம்பவங்கள் தாயகத்தில் உலாவரத் தொடங்கியிருக்கின்றன. தெரிவுகளுக்காக சம்பந்தன் பேரம்பேசல்களை மேற்கொண்டதாக ஒரு தரப்பு விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றது. ஈபிஆர்எல்எப் கட்சியின் பொதுச் செயலாளர் சுரேஷ் பிறேமசந்திரன் தனது சகோதரனுக்கு மாகாண சபையில் அமைச்சுப்பதவியினை பெற்றுக்கொள்வதற்காக உடன்பட்டதாகவும் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமக்கு நெருக்கமானவர்கள் மேற்கொண்ட போதைப்பொருட் கடத்தல் சம்பவங்களில் இருந்து சட்டரீதியாக அணுகி வெளியேறுவதற்கு சுமந்திரன் உடன்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்த விடயங்கள் தொடர்பிலான உண்மைத் தன்மைகள் தொடர்பில் எதிர்காலமே பதில் சொல்லும்.

இதேவேளை மாவை.சேனாதிராஜா தமது முயற்சிகளுக்கு உடன்படவில்லை என்று கூட்டுக்கட்சிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றன. மாவை சேனாதிராஜாவா விக்னேஸ்வரனா என்ற அடிப்படையில் விவாதங்கள் நடைபெற்றபோது ரெலோவின் முக்கியஸ்தர் சிறீகாந்தா காரசாரமாக மாவை சேனாதிராஜாவுக்கு சாதகமாக வாதாடியிருக்கின்றார். உடனடியாக தலையிட்ட மாவை சேனாதிராஜா தன்னை வைத்து கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்படுவதை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். உளவியல் ரீதியாக மாவை சேனாதிராஜா ஓரங்கட்டப்பட்டதாக கூட்டமைப்புக் கூட்டுக்கட்சிகள் தெரிவித்திருக்கின்றன.

இந்த இடத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சி தாம் தனித்துப் போட்டியிடப்போவதாத் தெரிவித்து சில ஊடகங்களுக்கு கதை சொல்லியிருந்தது. அதன் தொடராக உடனடிக்கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இறுதி நேரத்தில் அது கைவிடப்பட்டதாகவும் தெரியவருகின்றது. ஆக, அவர்களின் அந்த முயற்சியும் முற்றுப்பெற்றுவிட்டதாகவே எண்ணத்தோன்றுகின்றது.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்து வலுவான சக்தியாக பயணிக்க முன்வரவேண்டும் என பலத்த குரல்கள் எழுந்தன. அதனை முன்னெடுக்கப்போவதாக சிலர் தோற்றங்காட்டினாலும் சில சலுகைகளுக்கான பேரம்பேசல்களுடன் அடங்கிக்கொண்டனர். தமிழரசுக்கட்சி பதிவு விடயத்தினை முற்றுமுழுதாக பகிரங்கமாக நிராகரித்திருந்தது. இந்த நிலையில் தனிப்பட்ட ஒரு சம்பந்தன் தான் நினைத்த நபரை முன்னிறுத்துவதை தமிழரசுக்கட்சியினால் தடுத்துநிறுத்த முடியவேயில்லை. நான்கு அறிக்கைகளுடன் அவர்களின் எழுச்சியும் அடங்கிப்போனது.

விக்னேஸ்வரனும் புகழையோ பதவியையோ விரும்பியிருக்காவிட்டால் தனது தெரிவு தொடர்பிலான இழுபறி நிலை ஏற்பட்டபோது தானாக பின்வாங்கியிருப்பதற்கான சாத்தியப்பாடுகளே உள்ளன. இந்த நிலையில் இவ்வளவு நெருக்கடிகளையும் கடந்து அவர் உள்ளே வந்திருப்பது ஒன்று சுயநலம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது ஆளுந்தரப்பின் ஏற்பாடாக இருக்கலாம் என்றே கருத முடியும். ஆனாலும் ஒட்டுமொத்தத்தில் எல்லாரும் கையறு நிலையினை அடைந்திருக்கின்றார்கள். தெரிவினைத் தொடர்ந்து சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இருவர் கொழும்பில் சந்தித்திருப்பதாக தெரியவருகின்றது.

எமது இனத்தை விலை பேசுவதற்கோ எமது இனத்தின் கடந்தகால மீளாத்துயரை தூக்கி எறிவதற்கோ தமிழ் மக்களின் வாக்குகளை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் முன்னிற்பதை வரலாறு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்வாறானர்கள் தான் எமது மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறார்களா? இவர்கள்தான் எம்மை ஆட்சி செய்யத் தகுதியானவர்களா? போன்ற கேள்விக்கான பதில்களை மக்களே சொல்லியாகவேண்டும். இன்னும் சில தேர்தல்களுடன் கூட்டமைப்பு என்கின்ற ஒரு கட்சி அரசியல் அத்தியாயத்தில் இருந்து அற்றுப்போகும் என்பதே எமது பார்வை.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*